தன்னலம் பாராது பிறர்க்கென உடைமைகளை ஆக்கும் தியாகமே சநாதன வேத தர்மம்
வகுத்தளிக்கும் நமது வாழ்க்கைத் தருமம். அத்தியாகமே யாகம் எனப்படுகிறது.
‘யாகம்’ என்பது எல்லா
சிறந்த வஸ்துக்களையும் தனக்கென்றில்லாமல் தியாகமாக அக்னியில் அர்ப்பணித்து,
அத்தீக்கடவுளின் மூலம் அவை உலகப் பேரரசனான ஈசனின் அதிகாரிகளாக அவ்வுலகைப்
பரிபாலிக்கும் தேவர்களைச் சென்றடைந்து, அதற்குப்
பிரதியாக அவர்கள் ஜீவகுலம் முழுதற்கும் மேன்மை பொருந்திய இன்ப வாழ்வுக்கான
சகலத்தையும் அருளுமாறு செய்ய உதவும் வைதிகச் சடங்கே. மேநாட்டினரும் யாகம்,
அதன் அடிப்படையான
தியாகம் ஆகிய இவ்விரண்டையும் sacrifice என்றே கூறுவது கவனத்துக்குரியது.
இத்தியாக தர்மத்தைப் புரியவும் நாம் உயிரைக் காத்துக்கொண்டு வாழ்ந்தால்தான்
முடியுமாதலின், பிறர்க்களிப்பதை முக்கியமாகக் கொண்டு அதற்கு எஞ்சியதை
அத்தியாவசிய சுயநுகர்ச்சிக்கு நாமும் ஏற்பதாக
வெகு சிக்கன வாழ்க்கையை நடத்த வேண்டும். அவ்வாறு எஞ்சியதை, தேவர் உண்டு
மிகுதி வைத்த பிரசாதம் என்ற புனித எண்ணத்துடன் ஏற்றுப் புனித வாழ்வு வாழ
வேண்டும். இதுவே வேத தர்ம விதி. உ-ம்: உபநிஷத வரிசையில்
முதலிடம் பெறும் ‘ஈச’த்தின் முதல் மந்திரமே. ‘சொந்த நுகர்ச்சியால் ஒரு
பொருளிலிருந்து மனிதன் நிறைபயனைப் பெற வியலாது; பிறர்க்குத் தியாகம்
செய்தே, தியாகம் செய்த பொருளிலிருந்து பெறக்கூடிய நிறைபயனை அடைவாயாக!’ என்ற
கருத்தினைக்
கூறி, அதில் மாந்தரைச் செயற்படத் தூண்டும் ஒப்பற்ற மந்திரம். இவ்வாறு
ஈத்துவப்பதில் (ஈந்து உவப்பதில்) அன்னம் வழங்குதலே முதலிடம் பெறுகிறது.
ஏனெனில் அன்னத்தினால்தானே உயிர்கள்
உண்டாகி வளர்கின்றன?
இதுவே (கீதையில்) பகவான் கூறும் காரணவிளைவுத் தொடர்ச்சியில்
‘அன்னத்திலிருந்து உயிர்கள் உண்டாகின்றன’ என்ற வாசகம் முதலிடம் பெறுகிறது.
No comments:
Post a Comment