''ஏற்கெனவே இருப்பதை அழிப்பதல்ல என் பணி; மாறாக, இருப்பதைப் புனர்நிர்மாணம் செய்வதே!
உலக நாடுகளின் சரித்திரங்கள் அனைத்திலும், ஒவ்வொரு
காலகட்டத்தில் ஒவ்வொரு மகாபுருஷன் அதன் தேசிய வாழ்வின் கேந்திரமாக
விளங்குவான். அந்த மகாபுருஷனது கருத்துக்கள் மக்கள் யாவர் மீதும்
சக்தியுடன் பாயும்.
என் சீடர்களாகிய நீங்கள் புத்திசாலிப் பிள்ளைகள்தான். ஆயினும், காரியத்தில் என்ன செய்திருக்கிறீர்கள்?
உங்களது ஒரு வாழ்வை மற்றுமுள்ள பலரின் வாழ்வுக்காக
நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும். வேதாந்தம் கற்பது, தியானம் செய்வது
முதலானவற்றை அடுத்த பிறவியில் பார்த்துக்கொள்ளலாம்!
'பிறருக்குப் பணி செய்வதிலேயே இந்த உடல் அழியட்டும்’
என்று நீங்கள் நினைக்கவேண்டும். அப்போதுதான், நீங்கள் என்னிடம் வந்தது
வீண்போகவில்லை என அறிந்துகொள்வேன்!''
'என்னை நீ விலக்கலாமா?’
'துறவியர்க்கு எல்லோரிடத்தும் எல்லாவற்றிலும் சம பாவம் இருக்கவேண்டும்’ என்று சுவாமிஜி உணர்ந்து கூறிய ஒரு நிகழ்ச்சி.
சுவாமிஜி அப்போது ஜெய்ப்பூரில், மன்னரின்
விருந்தினராகத் தங்கியிருந்தார். ஒருநாள் மாலையில், மன்னருக்காக ஒரு
நாட்டிய நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அதற்கு சுவாமி விவேகானந்தரையும்
அழைத்தார் மன்னர். ஆனால் சுவாமிஜியோ, நாட்டியப் பெண் ஒருத்தியின் கலை
நிகழ்ச்சிக்கு சந்நியாசி ஆகிய தாம் வருவதற்கில்லை என மறுத்துவிட்டார்.
இந்தச் செய்தி அந்த நாட்டியப் பெண்ணுக்குத் தெரிந்துவிட்டது. அம்பு பட்ட
வெண்புறா கதறுவதுபோல மிகவும் சோகத்துடன் பாடினாள் அவள். அந்தப் பாடலின்
கருத்து...
'பரமனே!
சமபாவம் என்பதையே இயல்பாகக் கொண்ட நீ, பாவம் செய்தவள் இவள் என்று என்னை
ஒதுக்கிட நினைக்கலாமா? இரும்புத்துண்டு ஒன்று, இறைவனின் பதுமையில் பஞ்ச
உலோகங்களில் ஒன்றுமாக அமைகிறது. பிறிதொரு இரும்புத் துண்டோ பிராணிகளைக்
கொல்லும் பாவியின் கை வாளாக பாதகம் புரிகிறது. ஆயினும், இரண்டும்
ரஸவாதியின் திறனால் மாசற்ற பொன்னாய் மாறுவதையும் நீ அறிவாய்! பாவம்
செய்தவள் இவள் என்று என்னை விலக்க நினைக்காதே!
சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ? காளிந்தி நதியின் புனித
நீரும், கழிகாலில் வழிகின்ற இழிநீரும் ஒரு நிலையில் இனிய கங்கையில்
இணைகின்றபோது ஏற்றம் பெறுவதை நீ ஏற்றுக்கொண்டவன் அன்றோ! பாவம் செய்தவள்
இவள் என்று என்னை விலக்க நினைக்காதே! பரமனே, சமபாவம் என்பதே நின்
இயல்பன்றோ?’
அவளது அந்த அற்புத கீதம் சுவாமிஜியின் காதில்
விழுந்தது. உள்ளத்தைத் தொட்டது. சுவாமிஜியின் இதயம் இளகியது. 'மாசு
நிறைந்தவள்’ என்று உலகத்தவர் யாவரும் கருதிய ஒரு பெண்தான் எவ்வளவு அழகாக
தனக்கு உயர்ந்ததொரு தத்துவத்தை உணர்த்திவிட்டாள்! பாவமும் புண்ணியமும்
இறைவனின் சந்நிதியில் ஏது? பரமனின் முன்பு யாவும் ஒன்றுதானே! மாயைக்கு
உட்பட்ட உலக மக்களுக்கு பேதங்கள் இருப்பது இயல்பு. ஆனால், மாயையைக் கடந்து,
பிரம்மத்தில் லயித்திருக்கும் சந்நியாசிக்கு சமபாவம்தானே இருக்கவேண்டும்?’
சுவாமிஜி உடனே நேராக நாட்டியம் நடைபெற்றுக் கொண்டிருந்த
இடத்துக்குச் சென்றார். இயல்பிலேயே ஒளிவீசும் அவரது கண்கள் கண்ணீரால்
பளபளக்க, பாடிய அணங்கை அன்னையைக் காண்பதுபோல் அன்புடன் நோக்கி, ''தாயே!
நான் குற்றவாளி ஆகிவிட்டேன். இங்கு வராமலே இருந்து உன்னை அவமதித்த
பாவத்துக்கு ஆளாகி இருப்பேன். ஆயினும் தாயே... அதிர்ஷ்டவசமாக உன் சங்கீதம்
என் அறிவை விழிப்புறச் செய்துவிட்டது!'' என்றார்.
'வேதங்களால் என்ன பயன்?’
சுவாமிஜி, பிரேமானந்தருடன் உலாவச் சென்றார். அது
1902-ம் ஆண்டு, ஜூலை 4-ம் தேதி, வெள்ளிக்கிழமை. அன்று மாலையில், பற்பல
விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே சென்ற அவர், வேதத்தைப் பிரசாரம்
செய்யவேண்டியதன் அவசியம் குறித்துச் சொன்னதுடன், வேதத்துக்காக ஒரு கல்லூரி
தொடங்க வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் வெளியிட்டார்.
''சுவாமிஜி, வேதத்தைப் படிப்பதால் என்ன விசேஷ பயன் கிடைக்கும்?'' என்று கேட்டார் பிரேமானந்தர்.
சுவாமிஜி பளிச்சென்று, ''மூடநம்பிக்கைகள் அழியும்'' என்றார்.
மடத்துக்குத் திரும்பிய சுவாமிஜி சாதுக்களுடன் பேசிக்
கொண்டிருந்தார். பற்பல நாடுகள் உன்னதமாக எழுந்ததையும், வீழ்ந்ததையும்
பற்றிக் கூறினார். ஆனால் இந்தியாவைப் பற்றி அவர் பேசுகையில், ''இந்தியா
அமரத்துவம் பெற்றது. ஆண்டவனைத் தேடுவதிலேயே ஈடுபட்டால், இந்தியா என்றும்
வாழும். மாறாக அரசியலையும், சமூக சச்சரவுகளையும் தேடிப் போனால், இந்தியா
செத்துவிடும்'' என்றார்.
இதுவே அவரது இறுதியான போதனை.
எத்தனையோ விவேகானந்தர்கள் வருவார்கள்!
தாம்
யார் என்று அறிந்து, அதுவாகவே சுவாமிஜி மாறப்போகும் அந்த இறுதியான நாளில்,
அதிகாலையில் எழுந்த சுவாமிஜி, சிறிது தேநீர் பருகிவிட்டு தியானத்தில்
அமர்ந்தார்.
வழக்கத்துக்கு மாறாக பூஜாகிருகத்தின் கதவுகளை எல்லாம்
மூடிவிட்டு, ஏகாந்தமாக தியானம் செய்யலானார். தியானத்தைவிட தியாகம் பெரிது
என்று வாழ்ந்திருந்த நாட்களெல்லாம் முடிந்துவிடப் போகும் தினம் அது
என்பதாலோ என்னவோ, சுவாமிஜி வெகு நேரம் தியான சமாதியில் ஆழ்ந்திருந்தார்.
தியானம் முடிந்து பூஜாகிருகத்தின் படிகளில் இறங்கி வந்த
சுவாமிஜி, தன்னையும் அறியாமல் அம்பிகையைப் பற்றிய கமலாகாந்தரின் அற்புதமான
பாடலைத் தமது அமுதமான குரலில் பாடினார். பேலூர் மடத்தினர் அந்தத்
தீஞ்சுவைக் குரலைக் கேட் டனர்- அதுதான் தாங்கள் கடைசியாகக் கேட்கும் குரல்
என்று அறியாமலே!
தம்மையறியாமலே பாடியதுபோல், பாடல் முடிந்ததும்
தம்மையறியாமலே பேசவும் செய்தார் சுவாமிஜி. ''காளியை மட்டும்தானா... இந்த
விவேகானந்தனையும்கூட யார் புரிந்துகொண்டார்கள்? அவன் என்ன செய்தான் என்று
யார் தெரிந்துகொண்டார்கள்? இன்னொரு விவேகானந்தன் இருந்தால், அவனால்தான்
புரிந்துகொள்ள முடியும். இன்னும் ஒரு விவேகானந்தன் என்ன... கால வெள்ளத்தில்
எத்தனையோ விவேகானந்தர்கள் தோன்றத்தான் போகிறார்கள்..!''
தொகுப்பு: கே.புவனேஸ்வரி
No comments:
Post a Comment