Search This Blog

Tuesday, August 24, 2010

பொய்களைத் திணிக்காதீர்கள் - ஞானியின் "ஒ" பக்கங்கள் - கல்கி 21.8.2010

அண்மையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி உமாசங்கரை கருணாநிதி அரசு தற்காலிக நீக்கம் செய்து அவர் மீது சாதிச் சான்றிதழ், சொத்துக் குவிப்புக் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பதை பலரும் கண்டித்தார்கள். ஜெயலலிதாவும் கண்டித்தார். தன் ஆட்சியின் சுடுகாட்டுக் கூரை ஊழலை வெளிக் கொண்டு வந்த உமாசங்கரை ஜெயலலிதா நேர்மையானவர் என்று ஒப்புக் கொள்வது தன் ஆட்சியின் குற்றத்துக்கே ஒப்புதல் வாக்குமூலம் தருவதற்கு சமம்தான்.

ஜெயலலிதாவின் கண்டனத்துக்கு பதில் சொன்ன தமிழக அரசு உமாசங்கரே எழுப்பியுள்ள பிரச்சினைகளுக்கு பதில் சொல்லவில்லை.. தன் மீதான அரசு நடவடிக்கைகளுக்கு தடை கோரி அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். எனவே அந்த விவரங்களுக்குள் நாம் போக வேண்டியதில்லை.

அதே சமயம் உமாசங்கர் தேசிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையத்திடம்  தமிழக முதலமைச்சர், அவரது குடும்பத்தினர் ஆகியோரிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு கேட்டு புகார் கொடுத்திருக்கிறார். அந்தப் புகாரில் அவர் தெரிவித்திருக்கும் விஷயங்கள் பொய்யாக இருந்தால் அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது (தன் மீது தானே!) நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
உமாசங்கர் சொல்லியிருக்கும் விஷயங்களின் அடிப்படையில் கீழ்க் கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை முதலமைச்சருக்கு இருக்கிறது.

கேள்வி 1: .தி.மு.க ஆட்சியின்போது நடந்த சுடுகாட்டுக் கூரை ஊழலில் உமாசங்கர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் சி.பி.ஐ விசாரனைக்கு உத்தரவிட்டது. ஏன் இதுவரை அந்த ஊழலில் சிக்கியவர்கள் மீது தி.மு.க அரசு தொடர் நடவடிக்கை எடுக்கவில்லை ?

கேள்வி 2: 1996ல் தி.மு.க ஆட்சியில் உமாசங்கர் ஜாய்ண்ட் விஜிலன்ஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் பல ஊழல்கள் பற்றி உயர் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி அறிக்கைகள் கொடுத்திருக்கிறார்
1.) சவுத் இந்தியா ஷிப்பிங் கார்ப்பரேஷன் பங்குகள் விற்பனையில் 200 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட விவகாரம்
2.) கிரானைட் சுரங்க குத்தகைக்கு கொடுத்ததில் 1000 கோடி ரூபாய் இழப்பு
3.) தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரிய மனைகளையும் வீடுகளையும் கற்பனையான பெயர்களில் ஒதுக்கீடு செய்த விவகாரம்
4.)கோவை மருத்துவக் கல்லூரியின் 20 ஏக்கர் நிலத்தை மகளிர் குழதை நலம் என்ற போலி சாக்கில் தனியார் க்ளப்புகளுக்குக் கொடுத்த விவகாரம்
5.) மேகமலை வனப்பகுதியில் 7106 ஏக்கர் நிலத்தை ஒரு குடும்பத்துக்கு சட்ட விரோதமாக பட்டா போட்டுக் கொடுத்தது. இந்த முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் என்று முன்னாள் தலைமைச்செயலாளர் உடபட பல ஐ..எஸ் அதிகாரிகள் மீது உமாசங்கர் அறிக்கை கொடுத்திருக்கிறார். ஒன்றின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் ?

கேள்வி 3: மறுபடியும் 2006ல் தி.மு.க ஆட்சியில் உமாசங்கர் தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அப்போது அவரை தன் ஆழ்வார்பேட்டை அலுவலகத்துக்கு வந்து சந்திக்கும்படி முதலமைச்சரின் துணைவி ராஜாத்தி அம்மாள் தெரிவித்ததாகவும், இரு முறை சந்தித்ததாகவும் உமாசங்கர் தெரிவிக்கிறார். அப்போது மீனவர்களுக்கான 45 ஆயிரம் வயர்லெஸ் செட்டுகள் வழங்கும் ஒப்பந்தத்தை தான் சொல்பவர்களுக்குத் தருமாறு ராஜாத்தி அம்மாள் வற்புறுத்தியதாகவும் தான் அதற்கு உடன்பட மறுத்துவிட்டதாகவும் உமாசங்கர் கூறியிருக்கிறார். அரசு அதிகாரிகள் யார் யாரை சந்திக்கலாம், எங்கே சந்திக்கலாம் என்று விதிகள் உண்டா? சந்திப்புகளுக்கு பதிவுகள் உண்டா? இந்த சந்திப்புகள் பற்றி அரசு கார் லாக் ஷீட்டுகளில் பதிவுகள் உண்டா? உளவுத்துறை, காவல் துறையிடம் தினசரி முதலமைச்சரை, அவரது நெருங்கிய உறவினர்களை அரசு அதிகாரிகளோ பிறரோ சந்திப்பது பற்றிய பதிவுகள் உண்டா? உமாசங்கர் - ராஜாத்தி அம்மாள் சந்திப்பு பற்றி அரசின் நிலை என்ன ?

கேள்வி 4: தமிழக அரசுக்கு சொந்தமான் எல்நெட்டின் தலைவராக உமாசங்கர் இருந்தபோது எல்நெட்டுக்கு சொந்தமான 700 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள ஈடிஎல் நிறுவனம் திடீரென்று வேறு தனியார் கைக்கு சட்டவிரோதமாக மாறியதை வெளிப்படுத்த உமாசங்கர் நடவடிக்கை எடுத்தபோது அவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டதாக சொல்லுகிறார். .டி.எல் நிறுவனம், எல்காட் கை விட்டுப் போனது எப்படி, ஏன், யாரால் என்பதை அரசு தெரிவிக்குமா?

கேள்வி 5: அடுத்தபடியாக 2008ல் அரசு கேபிள் டி.வி கார்ப்பரேஷனைத் தொடங்கியபோது உமாசங்கரை அதன் நிர்வாக இயக்குநராக முதலமைச்சர் நியமித்தார். முன்னர் ஈஎல்டி முறைகேட்டில் தொடர்புடைய  ஐ..எஸ் அதிகாரி இங்கே தனக்கு மேலதிகாரியாக இருப்பதால், அவர் கீழ் தான் பணியாற்ற முடியாது என்று முதல்வரிடமே உமாசங்கர் சொன்னதாகக்க் கூறுகிறார். இந்த கோரிக்கையை ஏற்று, அந்த அதிகாரியை வேறு பொறுப்புக்கு மாற்றிவிட்டு உமாசங்கரை கேபிள் கார்ப்பரேஷன் பொறுப்பை முதல்வர் ஏற்கச் செய்ததாகவும் குறிப்பிடுகிறார். இது பற்றி அரசின் நிலை என்ன ?

கேள்வி 6: கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் பொறுப்பில் தான் இருந்தபோது, அரசுக்கு சொந்தமான கேபிள்களை வெட்டி நாசமாக்கி கிரிமினல் செயல்களில் ஈடுபட்டதற்காக தனியார் கேபிள் டி.வி அதிபர்களான மாறன் சகோதரர்கள், அமைச்சர்  பொங்கலூர் பழநிச்சாமி ஆகியோர் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துக் கைது செய்யவேண்டுமென்று அரசுக்கு அறிக்கைகள் பல முறை அனுப்பியதாக உமாசங்கர் சொல்லியிருக்கிறார். அந்த அறிக்கைகள் மீது அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ?

இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் யாரோ ஒரு அரசியல்வாதியால் எழுப்பப்படவில்லை. முப்பது வருடங்களாக அரசுப் பணியில் இருந்துவரும் ஓர் ஐ..எஸ் அதிகாரியால் எழுத்துப்பூர்வமாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன்பு  வைக்கப்பட்டிருக்கின்றன. இது மிகவும் கவலைக்குரிய , நம் ஆழ்ந்த அக்கறைக்குரிய விஷயம். முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் அரசு மேலே எழுப்பப்பட்டிருக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் விரிவான நேர்மையான பதில்களை மக்களுக்கு அளிப்பது அவசியம்.

மூடப்பட்ட அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை மறுபடியும் தொடங்குங்கள் என்று கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் அண்மையில் கோரினார்.அதற்கு பதில் அறிக்கை அளித்த முதலமைசர் , மூடினால்தானே மறுபடியும் திறப்பதற்கு என்று கேட்டார். அரசு கேபிள் டி.வி நிறுவனம் , அது அரசு நிறுவனம் என்பதால் அடக்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சொன்னார். இதே அடக்கம் ஏன் அரசின் இதர நடவடிக்கைகளில் மட்டும் இல்லை என்பதை அவர்தான் விளக்கவேண்டும். தமிழில் அடக்கம் என்பதற்கு சமாதி என்றும் ஒரு அர்த்தம் உண்டு. முத்தமிழ் அறிஞர் என்பதால் சிலேடையாக சொல்லியிருக்கலாமோ என்னவோ...

அரசு கேபிள் டிவியிடம் மொத்தம் 50 ஆயிரம் இணைப்புகள் இருப்பதாகவும் சென்ற வாரம் முதலமைச்சர் தெரிவித்தார். இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை விட மோசமானது.   ‘தினமணிதினசரியின் பத்திரிகையாளர்  வி.அன்பழகன் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதே முதலமைச்சர் கீழ் இயங்கும் தமிழக அரசிடமிருந்து பெற்றிருக்கும் தகவல்கள் இதோ:

தஞ்சாவூர், கோவை, நெல்லை, வேலூர் ஆகிய நான்கு இடங்களில் அரசு கேபிள் டி.வி தொடங்கப்பட்டது. தஞ்சைக்கு ரூ 7.30 கோடி.கோவைக்கு: 6.78 கோடி. நெல்லைக்கு: ரூ 6.74 கோடி. வேலூருக்கு: ரூ 5.56 கோடி முதலீடுகள். இங்கெல்லாம் மாதாந்தர அலுவலக வாடகை: தஞ்சை- ரூ 57,730. கோவை: ரூ 38500. நெல்லை: ரூ 87358. நெல்லை: ரூ 42,450. நவம்பர் 10, 2009ல் இருந்த் நிலைப்படி, தஞ்சையில் எம்.எஸ்.ஓ எனப்படும் ஒரு சர்வீஸ் ஆபரேட்டர் கூட அரசு கேபிள் டிவியுடன் கிடையாது. தனி கேபிள் ஆபரேட்டர்கள் 32 பேர். மொத்த இணைப்புகள் : 7703. கோவையில் ஒரே ஒரு எம்.எஸ்.. ஆறு ஆபரேட்டர்கள். மொத்த இணைப்புகள் : 2300. நெல்லையில் எம்.எஸ்.ஓ இல்லை. மூன்று ஆபரேட்டர்கள். 351 இணைப்புகள். வேலூரில் எதுவும் இல்லை. ஆக மொத்தம் இணைப்புகள் வெறும் 10 ஆயிரத்து 354தான். எந்தக் காலத்திலும் 50 ஆயிரம் இணைப்புகள் அரசு கேபிள் டிவி வசம் இருந்ததே இல்லை. முதலமைச்சர் தெரிவித்த 50 ஆயிரம் என்பது முழுப் பொய் என்று அவருடைய அரசின் இன்னொரு துறையே நிரூபிக்கிறது.

இப்போதைய நிலை என்ன என்று அன்பழகன் துருவியதில் ஏப்ரலுக்குப் பின்னர் தஞ்சையில் எல்லாம் மூடப்பட்டுவிட்டன. சாதனங்களை சென்னை அலுவலகத்துக்கு அனுப்பியாயிற்று. நெல்லையிலும் எதுவுமில்லை. கோவையில் 3 ஆபரேட்டர்கள் . மொத்தம் வெறும் 600 இணைப்புகள். சென்ற வாரம் அரசு கேபிள் டி.வி நிறுவனத்திடம் இருக்கும் பனத்தை அரசுக்குத் திருப்பி அனுப்பும்படி உத்தரவு போயிற்றாம். சுமார் நூறு கோடி ரூபாய் வரை இதுவரையில் செலவழித்திருக்கும் நிறுவனம் 19 கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுத்திருக்கிறது.

முதல்வர் அவர்களே, உண்மைகளைச் சொல்ல விரும்பாவிட்டால், மௌனமாக இருங்கள். நாங்கள் புரிந்து கொள்கிறோம். தயவுசெய்து அரை உண்மைகளையும் முழுப் பொய்களையும் எங்கள் மீது திணிக்காதீர்கள்.

இந்த வார விருதுகள்

தமிழ் பண்பாட்டுக்கான கலைஞர் விருது முரசொலி இதழுக்கும் அதன் நிறுவனர் கலைஞர் கருணாநிதிக்கும் வழங்கப்படுகிறது. சதிகாரி, சண்டாளி, சூழ்ச்சிக்காரி, மொட்டைச்சி, முண்டை முதலிய சொற்களை அறிக்கையிலும் கட்டுரையிலும் பயன்படுத்தி இளம் தலைமுறைக்கு வழக்கொழிந்துவரும் பண்பாட்டுக் கூறுகளை கற்பிக்கும் மாபெரும் பணிக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

தினசரி சுமார் 30 கோடி ரூபாய்க்கு மது குடிக்கும் தமிழர்கள் ஒரு நாள் குடிக்காமல் இருந்து துயரக்கடலில் மூழ்கி இறந்து விடக் கூடாது என்ற தாயுள்ளத்துடன் டாஸ்மாக் ஊழியர் வேலை நிறுத்தத்தை காவல் துறை உதவியுடன் முறியடித்ததற்காக , குடி காத்த கோமான் விருது முதல்வர் கலைஞருக்கு வழங்கப்படுகிறது.

இந்த வார சந்தேகம்

தொடர்ந்து தமிழகம் முழுவதும் மணிக்கணக்கில் மின்வெட்டு அன்றாட வாழ்க்கையை பாதித்துக் கொண்டிருக்கும் வேளையில் உயர் நீதி மன்றம், நேப்பியர் பாலம், அண்ணா மேம்பாலம் முதலியவற்றுக்கு லட்சக் கணக்கான ரூபாய் செலவில் மின் அலங்காரம் செய்யும் ஆட்சியை நீரோவின் வாரிசுகள் என்று அழைத்தால் குற்றமா ? இந்த சமயத்தில் இதையெல்லாம் செய்யவேண்டாம் என்று  அமைச்சரிடத்தில் சொல்லும் துணிவு ஒரு ஐ..எஸ் அதிகாரிக்குக் கூட இல்லையா?

இந்த வாரப் பூச்செண்டு:

விபத்து இழப்பீட்டுக்குக் கணக்கிடும்போது ,வீட்டு நிர்வாகம், இதர இல்லப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் வருமான மதிப்பை கணவர் வருவாயில் மூன்றில் ஒரு பங்கு என்று நிர்ணயித்திருக்கும் அபத்தமான மோட்டார் வாகன சட்டப்பிரிவை திருத்தவேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கங்குலி, சிங்வி ஆகியோருக்கு இ.வா.பூ.

ஞானியின் ஒ பக்கங்கள்  - கல்கி 21.8.2010

No comments:

Post a Comment