போர், அந்த மூன்று மனிதர்களின் உடல் உறுப்புகளை மட்டும்தான் சிதைத்தது. உள்ளத்தின் உறுதியை ஒன்றும் செய்ய முடியவில்லை! அமெரிக்காவைச் சேர்ந்த இந்த முன்னாள் ராணுவ வீரர்களின் சாதனையைக் கேட்டால் கண்ணீரும் வருகிறது; கம்பீரமாகவும் இருக்கிறது.
ஆப்பிரிக்காவில் உள்ள மிகப் பெரிய மலை கிளிமாஞ்சாரோ. ('எந்திரன்' பாடல் கேட்டிருப்பீர்களே!) இதன் உயரம் 19 ஆயிரத்து 340 அடி. இது இமயமலை போன்று தொடர்ச்சியானது கிடையாது. எரிமலை வகையைச் சேர்ந்த இந்த மலையின் உச்சியை அடைவது மிகவும் கடினமானது. மிகவும் கரடு முரடான, ஆபத்தான பாதைகள், உயரம் செல்லச் செல்ல மாறும் வெப்ப நிலை போன்றவற்றால் ஆண்டுதோறும் மலையேறுபவர்களில் உயிர் இழப்பவர்களும் உண்டு. அந்த மலையின் உச்சியைத்தான் ஆறே நாளில் அடைந்துள்ளனர் கால்களை இழந்த இந்த ராணுவ வீரர்கள்.
நீல் டங்கன், டேன் நெவின்ஸ், கிரிக் பயூர் என்பது இவர்களின் பெயர்கள்!
ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் ஏற வேண்டும், எங்கு தங்க வேண்டும் என எல்லாவற்றையும் திட்டமிட்ட பிறகு, ஆகஸ்ட் 2-ம் தேதி இந்த குழுவினர் மலையேறத் தொடங்கினர். இவர்களுக்கு தான்சானியா நாட்டைச் சேர்ந்த குழுவினரும் உதவி புரிந்தனர். அந்த மலையில் ஏற ஆறேழு பாதைகள் உள்ளன. இதில் கொஞ்சம் எளிமையான 'ரோங்கை' பாதையைத் தேர்ந் தெடுத்தனர். முதல் நாள் எதிர்பார்த்தது போல மலையேறுதல் எளிதாக இருந்தது. ஒரே நாளில் 8,500 அடி உயரத்தை அடைந்தனர். கிட்டத்தட்ட 15 கிலோ எடைகொண்ட பொருட்களை சுமந்தபடி சென்றுள்ளனர். ஆனால், அடுத்தடுத்த நாட்களில் மலையேறுவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. கால்களில் வலி, செயற்கைக் கால் பொருத்தப்பட்ட இடத்தில் வீக்கம் என்று பிரச்னைகள் வந்தாலும் அவர்கள் மனம் தளரவில்லை. நிலை தடுமாறிக் கீழே விழுதல், சறுக்கி விழுதல், ஆங்காங்கே ஓய்வெடுத்து செயற்கை கால்களை சரிப்படுத்திக்கொள்ளுதல் என்று பயணம் தொடர்ந்தது.
கரடுமுரடான பாதையில் தொடர்ந்து பயணித்து, இரண்டாவது நாள் முடிவில் 11,800 அடி உயரத்துக்கு வந்தனர். இப்படி ஒவ்வொரு நாளும் திட்டமிட்டபடி பயணம் தொடர்ந்தது. மேலே செல்லச் செல்ல பயணம் மிகக் கடினமானது. கிட்டத்தட்ட 19 ஆயிரம் அடி உயரத்தை நெருங்கியபோது, கிரிக்கின் செயற்கைக் கால் பனியில் இறுகிவிட்டது. அதனால் அவரால் மேற்கொண்டு நடக்க முடியாத நிலை. டேன் நெவின்ஸுக்கு காய்ச்சல், தலை வலி, மூச்சுத் திணறல், உடலில் வெப்பம் குறைதல் என்று பிரச்னைகள். மேற்கொண்டு தொடர்வதா என்று அவர்களுக்குப் புரியவில்லை. அந்த பகுதியில் யாரும் தங்குவதற்கு அனுமதி கிடையாது. ஒன்று, தொடர்ந்து மேலே செல்ல வேண்டும், இல்லையென்றால், இறங்கியாக வேண்டும். ஆனால், இவர்களுக்கு தான்சானிய அரசு அளித்திருந்த சிறப்பு அனுமதியைக்கொண்டு அவர்கள் 19 ஆயிரம் அடி உயரத்தில் கூடாரம் அமைத்து தங்கினர்.
ஆகஸ்ட் 7-ம் தேதி காலையில் சூரிய உதயத்துக்குப் பிறகு மறுபடி நடக்கத் தொடங்கியவர்கள் சில மணி நேரங்களிலேயே உச்சியை அடைந்தனர். அங்கு சிறிய கொண்டாட்டம் மற்றும் போட்டோ எடுத்தலுக்குப் பிறகு வேகமாக கீழே இறங்க ஆரம்பித்தனர். குறிப்பிட்ட தூரம் வரை வந்ததும் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் டேன் நெவின்ஸை ஸ்டிரெச்சர் மூலம் கீழே கொண்டு சென்று, அவசரம் அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுபற்றி கிரிக் சொல்லும்போது, 'மாற்றுத் திறனாளி களால் முடியாதது எதுவும் இல்லை என்ற கருத்தை உலகத்துக்குச் சொல்வதே எங்கள் நோக்கம். அமெரிக்க தேசம் நடத்திய மூன்று வெவ்வேறு போர்களில் உடல்உறுப்புகளை இழந்தவர்கள் நாங்கள். ஒரே ஒரு காலுடன் மவுன்ட் கிளிமாஞ்சாரோ உச்சியை அடைந்துள்ளோம்!'' என்றார்.
மூவரில் மிகவும் இளையவர் நீல் டங்கன். இவருக்கு 27 வயதுதான். 2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது, குண்டு வெடித்ததில் படுகாயமடைந்தார். மிகவும் மோசமாக பாதிக்கப்படவே கால்கள் இரண்டையும் அகற்றிவிட்டனர். ஆரம்பத்தில் செயற்கைக் குழாய் மூலம் சுவாசித்து, பேச முடியாமல் அவதிப்பட்டு வந்தவர் மெள்ள மெள்ள தேறினார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, செயற்கைக் கால்கள் மூலம் நடக்கப் பழகினார். அமெரிக்காவில் ஊனமுற்ற ராணுவ வீரர்களுக்குத் தனியாக மறுவாழ்வு மையம் உள்ளது. நீல் அங்கு தங்கி சைக்கிள் ஓட்டுதல், கோல்ஃப் விளையாடுவது, படகு ஓட்டுவது என்று பல்வேறு பயிற்சிகள் பெற்றார். மேற்படிப்பையும் உற்சாகமாகத் தொடர்ந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதே கிளிமாஞ்சாரோ மலை ஏற முயற்சித்தார். அப்போது தோல்வியில் முடிந்தது. இப்போது கூட்டணி போட்டு வெற்றி பெற்றுவிட்டார்!
டேன் நெவின்ஸ் 14 ஆண்டுகள் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியவர். 2004-ம் ஆண்டு நவம்பரில் ஈராக்கில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது தாக்குதலுக்கு ஆளாகி, இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டன. வலது காலை டாக்டர்கள் அகற்றிவிட்டனர். 2007-ம் ஆண்டு மற்றொரு காலிலும் நோய்த் தொற்று ஏற்படவே, அதையும் நீக்கியாக வேண்டிய நிலை. ஆனாலும் மனம் தளராத நெவின்ஸ் ராணுவ வீரர்கள் மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து பல்வேறு பயிற்சிகளை பெற்றார்.
வியட்நாம் போரில் பங்கேற்றவர் கிரிக் பயூர்! குண்டு வீச்சில் ஒரு காலை இழந்துவிட்டார். அதன் பிறகு அமெரிக்காவின் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு அமைப்பில் சேர்ந்தார். 28 ஆண்டுகளாக அதன் செயல் இயக்குநராகவும் இருந்து வருகிறார். இதுதவிர சிறிய தன்னார்வத் தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
ஊனம் என்பது உள்ளத்தில் இருந்தால்தான் குறைபாடு என்பதை மறுபடி நிரூபித்திருக்கிறது இவர்களின் சாதனை. அதே சமயம், ''எங்களின் இந்த சாதனை அமெரிக்கப் போர் வீரர்களின் உற்சாகத்தைப் பல மடங்கு கூட்ட வேண்டும்!'' என்று இவர்கள் சொல்லியிருப்பது கொஞ்சம் யோசிக்கவைக்கிறது. வீரர்களுக்கு உற்சாகம் தருவதற்கு பதிலாக, அமெரிக்க அரசுக்கு வெறியைத் தந்து, மறுபடி ஏதேனும் ஒரு நாட்டின் மீதான போருக்கு அமெரிக்கா தயாராகிவிடக் கூடாதே!
No comments:
Post a Comment