ஒவ்வொரு தானியத்திலும் கடவுளின் பெயர் எழுதப்பட்டு இருக்கிறது என்பார்கள்.
மத்திய அரசின் அலட்சியத்தால், அழுகி வீணாய்ப்போன கோடிக்கணக்கான தானியங்களில், அரசு மீதான குற்றச்சாட்டுகளும், பசியால் வாடும் மக்களின் கண்ணீர் ஓலங்களுமே எழுதப்பட்டு இருக்குமோ?
இந்தியா முழுக்க அரசின் உணவுக் கிடங்குகளில் தேங்கிக்கிடக்கும் உணவுப் பொருட்கள் ஒவ்வொரு வருடமும் மழையாலும் வெள்ளத்தாலும் சேதமாகி வீணாகிறது. இந்த உணவு தானியங்களை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என 2001-ல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் பி.யுசி.எல். அமைப்பின் ராஜஸ்தான் மாநிலத் தலைவர் கவிதா ஸ்ரீவஸ்தவா. இப்போது வந்திருக்கும் அதன் தீர்ப்பில், 'போதிய பராமரிப்பு இன்றி வீணாகும் உணவுப் பொருட்களை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்' என்று மத்திய அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், விவசாயத் துறை அமைச்சர் சரத்பவாரோ, 'அப்படி எல்லாம் இலவசமாகத் தர முடியாது' என்று சொல்லி இருக்கிறார்.
2003-ம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான கருத்தரங்கில், "48 மில்லியன் டன் உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கான வசதி மட்டுமே நம்மிடம் உள்ளது. ஆனால், 2002-ம் ஆண்டு 63 மில்லியன் டன் உணவுப் பொருட்களைச் சேமிக்க வேண்டியிருந்தது. போதுமான சேமிப்பிடங்கள் இல்லாததால், சர்வதேசச் சந்தையில் விலையைக் குறைத்து, உணவு தானியங்களை விற்க வேண்டியிருந்தது" என்று தெரிவித்தது இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India). ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதும் அதே நிலைமைதான்.
அழுகிப்போகும் உணவுப் பொருட்களைக் குப்பையில் கொட்டுவோமே தவிர, ஏழைகளுக்கு வழங்க மாட்டோம் என அரசு பிடிவாதம் பிடிப்பது ஏன் என்பதுதான் எல்லோரது கேள்வியும்.
2010-ம் ஆண்டில் மட்டும் அரசின் கணக்குப்படி உத்திரப்பிரதேசம் காசியாபாத் மத்திய உணவுக் கழகக் கிடங்கில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் மழையின் காரணமாக வீணாகின. ஹரியானாவில் 3 லட்சம் கோதுமை மூட்டைகள் வெள்ளத்தால் பாழாகின. மகாராஷ்டிராவில் உள்ள கோண்டியா மாவட்டத்தில் 56,000 நெல் மூட்டைகள் மழையாலும் வெள்ளத்தாலும் நாசமாகின. இந்த அனைத்து இடங்களிலும் மழை, வெள்ளம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டும், அலட்சியம் காரணமாகவே இவ்வளவு நாசம். ஆக, ஆண்டுக்கு 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள், போதிய பராமரிப்பு இன்றியும், கிடங்குகளில் போதிய இடம் இல்லாமலும் வீணாகின்றன. ஆனால், இது மாதிரியான தகவல்கள் வெளிவருவது இது முதல் முறை அல்ல. சென்ற முறையும் இதுமாதிரியான புள்ளிவிவரங்கள் வெளியானபோது, ஒரு கமிட்டி அமைப்பதாக அறிவித்தார் சரத்பவார். பாவம், அதற்குப் பிறகு அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக கிரிக்கெட் போட்டிகளைக் கவனிப்பதிலேயே நேரம் செலவிட்டதால், இதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் போய்விட்டது.
பி.யு.சி.எல்லின் தமிழகத் தலைவரான வழக்கறிஞர் வி.சுரேஷி "இங்கு விளைவதை அழுகவிட்டு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது அரசு. இதற்குக் காரணம், உலக வர்த்தக மையத்தின் (WTO) நிர்பந்தம். மேலும், வீணாகும் உணவுப் பொருட்களை ஏன் மத்திய அரசு ஏழைகளுக்கு விநியோகிக்க மறுக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஏனெனில், வறுமையால் வாடுபவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட வேண்டும். அப்போதுதான், இந்தியா 'வளர்ச்சி' அடைந்துவிட்டது என்று பொய்யான பிம்பத்தைக் காட்ட முடியும்.
இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் எத்தனை சதவிகித மக்கள் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதற்காக, மத்திய அரசே மூன்று கமிட்டிகளை அமைத்தது. சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டியின்படி 38.4% பேரும், என்.சி.சக்சேனா கமிட்டியின்படி 53% பேரும், அர்ஜுன்சென்குப்தா கமிட்டியின்படி 60% பேரும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளதாக சொல்லப்பட்டது. அரசின் கமிட்டிகளிலேயே இவ்வளவு புள்ளிவிவர முரண்பாடுகள்.
கடந்த கால ஆட்சிகளைவிட தங்கள் ஆட்சிதான் பொற்கால ஆட்சி என்று 'நிரூபிப்பதற்காக'ச் செய்யப்படும் தகவல் தகிடுதத்தங்கள்தான் இவை. மேலும், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களைக் குறைத்துக்காட்டினால், பட்ஜெட்டில் அவர்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கத் தேவை இல்லை. இப்படி ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிப்பதாக நினைத்துக்கொண்டு, ஏழைகளின் வயிற்றில்தான் அடிக்கிறது மத்திய அரசு" என்கிறார் சுரேஷ்.
உலகம் முழுவதும் ஊட்டச் சத்து உணவு கிடைக்காத 102 கோடி மக்களில், ஏறத்தாழ 50 சதவிகிதத்தினர் இந்தியாவில்தான் இருக்கின்றனர் என்கிறது ஐ.நா-வின் உலக உணவுத் திட்டத்தின் (WFP) அறிக்கை. இந்தியாவில் உள்ள 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளில், 50 சதவிகிதம் பேரும்... கர்ப்பிணித் தாய்மார்களில் 90 சதவிகிதமும், சத்துக் குறைவாலும் ரத்த சோகையாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
"மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழகத்தில் பொது விநியோகம் சிறப்பாக இருக்கிறது. ஆனால், ஊட்டச் சத்து உணவு என்று பார்த்தால் ஜார்கண்ட் போன்ற பின்தங்கிய மாநிலங்களின் தரத்தில்தான் தமிழகமும் இருக்கிறது. 'உணவுப் பாதுகாப்பு' என்பதில் முக்கியமான மூன்று அம்சங்கள் உண்டு.
1. அனைவருக்கும் உணவு வழங்குதல்
2. வழங்கக்கூடிய உணவு சத்துள்ளதா என்று உறுதிசெய்தல்
3. அரசிடம் இருந்து உணவுப் பொருட்களைப் பெறுவதைத் தங்கள் வாழ்வாதார உரிமையாகக் குடிமக்களை உணரவைத்தல்.
'அரசு ஏதோ நமக்குப் பிச்சை போடுகிறது' என்கிற உணர்வைக் குடிமக்களிடம் உருவாக்கிவிடக் கூடாது. அதேபோல், மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தும் வகையிலான தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதும் ஓர் அரசின் கடமை. ஆனால், நம் இந்திய அரசோ உள்நாட்டுத் தொழில் வாய்ப்புகளை அழிக்கிறது. பின், பட்டினியால் வாடுபவர்களுக்கு உணவு அளிக்காமல் கொல்கிறது. உணவை விளைவிக்கும் விவசாயியே பட்டினியால் தற்கொலை செய்வதைவிடவும் வேறு கொடுமை உண்டா?" என்று கேட்கிறார் சுரேஷ்.
'ஆற்றில் போட்டாலும் அளந்து போடு' என்பது நம் ஊர் பழமொழி. ஆனால், எவ்வளவு பழிச்சொல் வந்தாலும் உணவுப் பொருட்களை வீணடிப்போமே தவிர, பசியால் வாடும் மக்களுக்கு விநியோகிக்க மாட்டோம் என்பது மத்திய அரசின் 'தாராள'மய மொழி!
This comment has been removed by the author.
ReplyDeleteI'm getting confuced about this as why they are doing such kind of things. So, don't need to worry about the food. But we have to use the foods which we have. Is they thinking that all the saved foods are comes to market, then there is a fall of food price and they may not get the paricular percentage of tax???
ReplyDeleteThanks for the good information ...
I'm always thinking about how the poor peoples live with atleast foods in their life...
But...
What to do? The stupid Politician made our life Miserable.. Things Wont get Change until l people take revolution.. British ruled our country for the Last 500 yrs!!!!!.. So, if you tell Politely now one ll agree.. We have to shout and Kick
ReplyDeleteman...These politicians and greedy government officers F**K our country people only. all became selfish and thinking F**king money all the time. This land will not be a place for ordinary people soon I am afraid.... :(
ReplyDelete