தடுப்பு மற்றும் சொட்டு மருந்து மரணங்கள் சில மாதங்களுக்கு முன்னால்
தமிழகத்தில் நடந்தன. இப்போது உத்தரப் பிரதேச மாநிலத்தையும் விட்டுவைக்கவில்லை. லக்னோ, அலகாபாத், ஃபதேபூர் மாவட்டங்களில் ஆறு குழந்தைகள் பரிதாப மாக உயிரிழந்துவிட்டன!
உ.பி-யில் ஒவ்வொரு வருட மழைக் காலத்திலும் குழந்தைகளுக்கு வரும் பல்வேறு வகையான நோய்களைத் தடுக்க, நோய்த் தடுப்பு மற்றும் அம்மைத் தடுப்பு மருந்து போடப்படுகிறது. கடந்த 21-ம் தேதி லக்னோ அருகில் உள்ள மோகன்லால் கன்ச் தாலுக்காவின் கிராமங்களிலும் தடுப்பு மருந்து போடப்பட்டது. பிந்தாவா கிராமத்தில் அரசு மருத்துவப் பணியாளர்கள், இந்திரபால் என்பவரின் 10 மாதக் குழந்தை சாதிலுக்கும் தடுப்பு மருந்து போட... திடீரென காய்ச்சல். அரசு மருத்துவ மையத்துக்குக் கொண்டு செல்வதற்குள், இறந்துவிட்டது. அதேபோல், பத்மின் கேராவில் சுனில் என்பவரின் ஒன்பது மாதப் பெண்குழந்தை ரேகாவுக்குத் தடுப்பு மருந்து போடப்பட்டது. மூன்று மணி நேரத்திலே காய்ச்சலால் துவண்டு உயிர்விட்டது. அடுத்து, ராம்பூர் கடி கிராமத்தில் ஒரு வயது சத்யம்குமாரி, அகமதுபூரில் உள்ள ஒரு வயதுக் குழந்தை ஆகியவையும் இறந்தன.
இதனால் கோபம் கொண்ட பொதுமக்கள் திரண்டு, அரசு மருத்துவ சேவை மையத்தை அடித்து நொறுக்கினர். மருத்துவர்கள், பணியாளர்களுக்கும் தர்ம அடி! இந்த நிலையில், மோகன்லால் கன்ச் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த உ.பி. அரசு, மருத்துவ விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. அந்த விசாரணையில், 'பாதுகாத்து வைக்கப்படும் குளிர்நிலை சரியாகப் பராமரிக்கப்படாததால் அம்மைத் தடுப்பு மருந்துகளில் வைரஸ்கள் புகுந்திருக்கலாம்...' என அறிக்கை அளிக்கப்பட... மோகன்லால் கன்ச் அரசு மருத்துவ மையத்தின் மருத்துவர் உட்பட மூன்று பேர் சஸ்பெண்ட் ஆகியுள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட மருந்துகள் மற்றும் சிரிஞ்ச்சுகளை இமாசலப் பிரதேசத்தின் கசௌலி மற்றும் கொல்கத்தாவில் உள்ள மத்திய மருத்துவப் பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையே, உ.பி-யை ஆளும் மாயாவதிக்கும் அதன் எதிர்க் கட்சியான காங்கிரஸ் கூட்டணி ஆளும் மத்திய அரசுகளுக்கும் இடையே அரசியல் ஆரம்பமாகி விட்டது. மாநில அரசின் செய்தி அறிக்கை, ''நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசுதான் போலியோ, பி.சி.ஜி., வைட்டமின் 'ஏ' போன்ற தடுப்பு மற்றும் சொட்டு மருந்துகளை சப்ளை செய்கிறது. விசாரணைக் குழுவின் முழு அறிக்கை வந்த பின், இவற்றை உ.பி-யில் பயன்படுத்துவதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும்!'' எனக் கூறியுள்ளது. இதற்கு பதில் தரும் வகையில் மருத்துவ நலத் துறையின் மத்தியச் செயலாளர் கே.சுஜாதாராவ், 'சொட்டு மருந்துகளில் எந்தக் குறைபாடுகளும் இல்லை; அதைப் பராமரித்துப் பயன்படுத்தப்பட்டதில்தான் கோளாறு!'' என்று சொல்லி இருக்கிறார்.
முதல் சம்பவத்தின்போதே காரணத்தைக் கண்டுபிடித்துச் சரிசெய்திருந்தால், பிஞ்சுகளை பாதுகாத்து இருக்கலாமே!
No comments:
Post a Comment