Search This Blog

Wednesday, September 15, 2010

'அம்மா' வருகை... அழகிரி தயார்!

கோவை, திருச்சி என இரண்டே இடங்களில் பொதுக் கூட்டம் நடத்தி 'அடுத்தது அ.தி.மு.க. ஆட்சிதானோ?' என்று யோசிக்க வைத்திருக்கிறார் ஜெயலலிதா. 'ஆர்ப்பாட்டமான' பொதுக்கூட்ட வரிசையில் அடுத்ததாக அவரின் டார்கெட்... மதுரை. தென் மண்டல தி.மு.க-வை அசுர பலத்தோடு வைத்திருக்கும் மு.க.அழகிரியின் கோட்டை இது என்பதால், இங்கே நடக்கும் யுத்தம் எப்படி இருக்கும் என்பதைக் கவனிக்க வட இந்திய மீடியாக்களும் சேர்ந்தே தயாராகி வருகின்றன. 

'மதுரையில் 18-ம் தேதி ஆர்ப்பாட்டம்!' என்று ஜெயலலிதா அறிவித்ததுமே, அழகிரியின் ரியாக்ஷன் என்ன என்று எல்லோரும் உற்று நோக்கினார்கள். உத்தங்குடி என்ற ஊரில் திருமண மண்டபங்களைக் கடந்த 11-ம் தேதி திறந்துவைத்த அழகிரி, மனம் திறந்து பல வார்த்தைகளை அவிழ்த்தார். தென் மாவட்டத் தி.மு.க. தொண்டர்கள் அனைவருக்கும் சத்து மாவு ஊட்டுகிற மாதிரி உற்சாகம் கூட்டினார்.

''அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பேசும் போது, நான் ஏழை எளிய மக்களுக்காகப் பல நல்ல காரியங் களை எல்லாம் செய்வதாக சொன்னார்கள். நாட்டின் 30 மாநிலங்களுக்கும் பொதுவான அமைச்சர் நான். ஆனால், அதை எல்லாம் விட்டுவிட்டு மதுரையை மட்டும்தான் சுற்றிக்கொண்டு இருக்கிறேன். ஏனென்றால், நிச்சயமாக இதுதான் என்னைக் காப்பாற்றப்போகிறது என்று எனக்குத் தெரியும். இன்று நான் மேடையில் நிற்கிறேன் என்றால்... அதற்குக் காரணம் இந்த மதுரை மண்ணுதான். எனக்குக் கிடைக்கும் மாலை மரியாதைக்குக் காரணமும் நீங்கள்தான். 'ராஜஸ்தான் போகலையா, ஜெய்ப்பூர் போகலையா, டெல்லி போகலையா?' என்று சிலர் கேட்கிறாங்க. 'நான் எதுக்குப் போகணும்? எனக்கு யாருய்யா ஓட்டு போட்டா-? அவங்களுக்குத்தானே செய்யணும்?'-னு சொல்வேன். இதற்கு, 'மற்ற பகுதிகளுக்கு நான் போக மாட்டேன்' என்று அர்த்தம் இல்லை. அங்கெல்லாம் போய் நல்லது செய்யத்தான் செய்கிறேன். ஆனாலும் அவர்களைவிட உங்களுக்குத்தான் அதிகம் செய்வேன்...'' என்று சொன்ன அழகிரி, அடுத்ததாக எதிர்பார்ப்பு மிக்க லோக்கல் அரசியலுக்கு வந்தார்...

''கலைஞர் பிறந்த நாள், அண்ணா பிறந்த நாள், என்னுடைய பிறந்த நாளின்போது மதுரை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 150 மருத்துவ முகாம்கள் நடத்தி இருக்கிறோம். கடைசியாக ஆண்டிபட்டியில் நடத்தினோம். 'ஏன் என்னுடைய தொகுதியில நடத்துறே-?' அப்படின்னு அந்தம்மா கேட்குது. 'நானே நடத்தியிருப்பேனே?' என்கிறது. நீ தொகுதிக்கு வந்தாத்தானேம்மா நடத்துவே? நீ ஒரு நாளாவது சட்டசபைக்கு வந்து, 'என் தொகுதிக்கு அதைச் செய்யுங்க, இதைச் செய்யுங்க'ன்னு கேட்டு இருக்கீங்களா? 

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை நான் மரியாதை யோடு கேட்கிறேன்... கலைஞரின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு 8 ஆயிரத்து 700 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தோம். ஆண்டி பட்டியில் வந்த நோயாளிகள் எல்லோருக்கும் ஹார்லிக்ஸ் டப்பா கொடுத்தோம்.. உடனே அந்தம்மா அறிக்கை விடுது... 'இந்த ஹார்லிக்ஸ் டப்பா எங்கே இருந்து வந்தது தெரியுமா? ஒரு தொழிற்சாலையில் இருந்து தென் மாவட்டத்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சோழவந்தான் அருகே ஒரு லாரியில் அழகிரி திருடி ஆண்டிபட்டியில் ஏழைகளுக்கு கொடுக்கிறார்' என்று சொல்லுது. ஒரு வாதத்துக்கு அப்படியே வெச்சிக்கிடுவோம். நான் திருடி யாருக்குக் கொடுத்தேன்? ஏழைகளுக்குத்தானே கொடுத்தேன்? உங்களுடைய தலைவர் எம்.ஜி.ஆர். 'திருடாதே' படத்தில், பணக்காரர்களிடம் திருடி ஏழைகளுக்குத்தானே கொடுத்தாரு? ஆனாலும் சொல்றேன்... நான் திருடவும் இல்லை, அந்த லாரியை கண்ணால் பார்க்கவும் இல்லை. நான் கொடுத்தது 200 கிராம் ஹார்லிக்ஸ் டப்பா. அந்தம்மா களவு போனதாகச் சொன்னது 500 கிராம் பாட்டில்!'' என்று அழகிரி அளித்த விளக்கத்தைக் கூட்டம் ரசித்தது!

மதுரையில் இருந்து ஜெயலலிதாவுக்கு அனுப்பப்படும் மிரட்டல் கடிதங்கள் குறித்து அடுத்ததாகப் பேசினார் அழகிரி... ''இப்போது எதுக்கெடுத்தாலும் போராட்டம் நடத்துது அந்தம்மா. இந்த மாசமே மதுரையில் போராட்டம் நடத்துவதாகச் சொல்லுச்சு. அப்புறம் தானா ஒரு லெட்டர் எழுதிப் போட்டுக்கிச்சு. 'மதுரைக்கு வந்தால், அழகிரி ஆட்கள் குண்டு போட்டுவிடுவார்கள் என்று
சொல்லுது...'' என்ற அழகிரி அடுத்தபடியா உதிர்த்த சிலேடையில் என்ன புரிந்ததோ... பெண் அமைச்சரான தமிழரசியும் சேர்ந்து அடக்க முடியாமல் சிரித்தார்! 

''திருப்பியும் அடுத்த மாசம் 18-ம் தேதி போராட்டம் என்கிறது அந்தம்மா. நடத்து... வேண்டாம்னு சொல்லலை. இப்பத்தானே வெளியிலேயே வர்றே. இத்தனை நாள் எங்கே போயிருந்தே? உன் தொகுதிக்காகப் பாடுபட்டியா? மக்களைப் பார்த்தியா? உன் கட்சிக்காரனையாவது பார்த்தியா? இந்த அம்மா கொடநாட்டில் இருந்து வந்தவுடன் ஒரே ஒரு நாள் பார்ட்டி ஆபீஸ§க்குப் போகுது. உடனே, 'பராசக்தியே வருக, தர்மத் தாயே வருக, புரட்சித் தாயே வருக...' என்று என்னென்னவோ போஸ்டர் அடிக்கிறாங்க. உன் கட்சிக்காரனைக் கேட்கிறேன்... 'கன்னித் தாயே'னு போஸ்டர் அடிக்க முடியுமா? இன்னும் நிறைய இருக்குது. நீ முதல்ல போராட்டம் நடத்திட்டுப் போ. அதுக்கு அப்புறமா அதுக்கெல்லாம் பதில் சொல்றோம்.!'' என்று காட்டமாகப் பேசி முடித்தார் அழகிரி.

'ஜெயலலிதா வருகைக்கு தி.மு.க. எப்படித் தயாராகிறது என்பதை பூடக மாகச் சொல்லிவிட்டார் அழகிரி' என்பதாகவே இருக்கிறது இப்போது தென் மாவட்ட எதிர்பார்ப்பு!

விகடன் 

2 comments:

  1. மதுரை கலைக்கட்டுகிறது போங்க... அசத்தல் தான்.. பாவம் பிளக்ஸ் ... பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பார்க்கலாம், இதுக்கு எல்லாம் என்று விடிவு வருமோ, மொத்தத்தில் மதுரை மக்களுக்கு நல்லது நடந்தால் சந்தோசமே!!

    ReplyDelete