Search This Blog

Wednesday, September 08, 2010

டாடா கம்பெனிக்கு யார் வாரிசு?


பொது சொத்தாக இருக்க வேண்டிய அரசியல் இயக்கங்களின் வாரிசுகள் ஒரே குடும்பத்துக்குள் எப்படி போட்டி போடுகிறார்கள், முட்டி மோதுகிறார்கள், என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆனால், தனி மனித உருவாக்கமான ஒரு மாபெரும் தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான வாரிசுத் தேடல், முற்றிலும் தகுதியை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு நடந்து வருகிற செய்தி, ஓர் ஆச்சர்ய அதிர்ச்சிதான்! 

உப்பு, சோப்பு என்று தொடங்கி... கார், லாரி, பஸ் என ஆயிரக்கணக்கான பொருட்கள் உற்பத்தி செய்யும் 100-க்கும் மேற்பட்ட கம்பெனிகளின் தலைமை நிறுவனம் - டாடா அண்ட் சன்ஸ். 20 ஆண்டுகளாக இதற்கு ரத்தன் டாடா தலைவர். மூன்று லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த  நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து அடுத்த ஆண்டு ரத்தன் டாடா ஓய்வு பெறுவதால், இந்தப் பதவிக்கான வாரிசு தேடும் படலம் இப்போதே ஆரம்பித்துவிட்டது! 

நானோ கார் அறிமுகம், லேண்ட் ரோவர் மற்றும் ஜாக்குவார் கார் கம்பெனிகளை வாங்கியது என்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ரத்தன் டாடா தொடர்ந்து சிக்ஸர்களாக அடித்து வருகிறார். இவருக்கு முன்பு இந்தப் பதவியில் இருந்த ஜே.ஆர்.டி.டாடா, 53 ஆண்டுகள்... அதாவது, 86 வயது வரை இந்தப் பதவியில் இருந்தார். ஆனால்... திருமணம், குழந்தை, குடும்பம் என்று எதுவுமே இல்லாமல், 74 வயதிலும் தன் காரைத் தானே ஓட்டிக்கொண்டு அலுவலகம் வரும் ரத்தன் டாடா, '75 வயதுக்கு மேல் ஒருவர் இந்தப் பதவியில் இருப்பது சரி இல்லை...' என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்கமாகச் சிந்தித்து முடிவு எடுத்து, அதை கம்பெனியின் சட்டமாகவே ஆக்கிவிட்டார். 

'சரி, தன் வாரிசு யார் என்பதை அவரே அடையாளம் காட்டுவாரா?' என்றால், அதற்கும் 'நோ' சொல்லிவிட்டார் ரத்தன் டாடா. 'அந்த வேலையை செய்வதற்கு அவரது கம்பெனி, 'ஐந்து நபர் கமிட்டி' ஒன்றை நியமித்து இருக்கிறது. அதுதான் அடுத்த வாரிசைத் தேர்ந்து எடுக்கும். அந்த கமிட்டிக்கு முழு சுதந்திரம். 'நான் ஒருபோதும் இந்த விஷயத்தில் குறுக்கிட மாட்டேன். நீங்கள் யாரை வேண்டுமானாலும் உங்கள் இஷ்டப்படி தேர்ந்து எடுங்கள்' என்று டாடா சொல்லிவிட்டாராம்! ஆனால், ரத்தன் டாடா போகும் இடத்தில் எல்லாம் நிருபர்கள் வளைத்து, வாரிசு பற்றிய கேள்விகளால் துளைத்து வருகின்றனர். ''உங்கள் நிறுவன வாரிசாகக் கட்டாயம் உங்கள் இனத்தைச் சேர்ந்த ஒரு பார்ஸிதான் வருவார் என்கிறார்களே?'' என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, அவரின் கண்களைத் தீர்க்கமாகப் பார்த்த ரத்தன், ''பார்ஸியும் வரலாம். பார்ஸி அல்லாதவர்களும் வரலாம். ஏன்... நம் இந்தியாவுக்கு வெளியில் இருந்துகூட வரலாம். எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. ஆனால், தலைவர் பதவிக்கான தகுதி இருக்கிறதா என்பது மட்டும்தான் கண்டிப்பான ஒரே அளவுகோல்!'' என்று நச்சென்று பதில் தந்தார். 

டாடா சாம்ராஜ்யத்தின் மொத்த வருமானத்தில் 65 சதவிகிதம், தற்போது வெளிநாடுகளில் இருந்துதான் வருகிறது. எனவே, வெளிநாட்டைச் சேர்ந்த இந்தியர்களான இந்திரா நூயி (பெப்ஸி கம்பெனியின் தலைவரான இவர், சென்னைப் பெண்மணி.) இந்தப் பதவிக்கு வரக்கூடும் என்று ஊடகங்கள் தொடர்ந்து யூகங்கள் வெளியிட்டன. இந்த நிலையில் இந்திரா நூயி, அந்தப் பதவிக்கு வர விரும்பவில்லை என்று கூறி உள்ளார். அதைத் தொடர்ந்து, ''டாடா கம்பெனிக்கு 'டாடா' என்பதை பெயரோடு கொண்டிருக்கும் ஒருவர் வருவதுதான் பொருத்தமாக இருக்கும்'' என்றும் சொல்லும் சிலர், ரத்தன் டாடாவின் உறவினரான நோயல் டாடாவின் பெயரைக் கூறி வருகின்றனர். இன்னொரு புறம், ஃபிரெஞ்ச் கம்பெனியான ரெனோ மற்றும் ஜப்பான் கம்பெனியான நிஸான் ஆகிய இரண்டு கம்பெனிகளுக்கும் தலைவராக இருக்கும் கார்லோஸ் கோஷன் பெயரும் பலமாக அடிபடுகிறது. இது தவிர, பாம்பே டையிங் கம்பெனியின் நுஸ்லி வாடியா, வோடஃபோன் கம்பெனி தலைவராக இருந்த அருண் சரீன் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாம்.

No comments:

Post a Comment