‘ஆனந்த் மட்டும் ரஷ்யாவில் பிறந்திருந்தால் அவருடைய ஆட்டத்தின் முன்பு
யாரும் தாக்குப் பிடித்திருக்க முடியாது,’ என்று 1995 உலக சாம்பியனுக்கான
போட்டியில் ஆனந்தைத் தோற்கடித்த பிறகு
இவ்வாறு குறிப்பிட்டார் காஸ்பரோவ். சரியான கணிப்புதான். அந்தத்
தோல்விக்குப் பிறகு ஆனந்தின் ஆட்டத்தை யாராலும் தாக்குப்பிடிக்க
முடியவில்லை. 2000ல் ஆரம்பித்து ஐந்து முறை
உலக சாம்பியன் ஆகிவிட்டார் விஸ்வநாதன் ஆனந்த். இப்போது வெவ்வேறு
தலைமுறையைச் சேர்ந்த ஆனந்த் - கார்ல்சன் இடையேயான உலக சாம்பியன்ஷிப் போட்டி
சென்னையில் (நவம்பர் 7 - 28) நடக்கவுள்ளது. கடந்த சில வருடங்களில் வரிசையாக
உலக சாம்பியன் பட்டங்களை வென்ற 43 வயது ஆனந்தின் ஆதிக்கத்தை 22 வயது
கார்ல்சன் வீழ்த்துவாரா
என்கிற பரபரப்பில் இருக்கிறது, செஸ் உலகம்.
இதுவரையிலான செஸ் உலக சாம்பியன்களில் 90 சதவிகிதம் பேர் ரஷ்யர்கள்.
ஆசியாவிலிருந்து, அதிலும் இந்தியாவிலிருந்து ஒரு உலக சாம்பியன்
உருவாகமுடியும்
என்று நிரூபித்துக் காண்பித்தவர் ஆனந்த். தம் முன்னால் நின்ற அத்தனை
சவால்களையும் அமைதியாக எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
‘இறுதிப்போட்டியில் ஆனந்த்
என்னைத் தோற்கடிக்கட்டும், அப்போது நான் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறேன்,
ஆனந்த்தான் உலக சாம்பியன்’ என்று 2007ல், ஆனந்திடம் சவால்விட்டு தோற்றார்
கிராம்னிக். இப்போது இளம்
செஸ் சூறாவளியாகக் கருதப்படும் கார்ல்சனை எப்படி வீழ்த்தப்போகிறார் என்கிற
கேள்விதான் எல்லோருடைய மனத்திலும். இந்தியாவில் நடக்கும் முதல் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இது. கடந்த உலக
செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை (2012) நடத்தும் வாய்ப்பு முதலில்
சென்னைக்குத்தான்
கிடைத்தது. தமிழக அரசு, ரூ. 20 கோடி செலவழிக்கவும் தயாராக இருந்தது. ஆனால்
சென்னையை விடவும் அதிகத் தொகையை ரஷ்யா அளிக்க முன்வந்ததால் வாய்ப்பு
பறிபோனது. இதனால் ஆனந்துக்குப்
பெரிய இழப்பு ஏற்படவில்லை. அவர் வழக்கம்போல அபாரமாக ஆடி, ஐந்தாவது முறையாக
உலக சாம்பியன் ஆனார். இனி இப்படியொரு போட்டி, சென்னையில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே நடக்க வேண்டுமென்றால் இன்னொரு ஆனந்த் உருவாக வேண்டும், அவர் இதுபோல உலக
சாம்பியனுக்கான போட்டியில் பங்கேற்க வேண்டும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது சென்னைப் போட்டி, வரலாற்றுச் சிறப்பு பெறுகிறது.2000ஆம் ஆண்டில், ஆனந்த் முதல் முறையாக உலக சாம்பியன் ஆனார். அடுத்து 2007,
2008, 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் உலக செஸ் சாம்பியன் பட்டங்களை
அடுத்தடுத்து
வென்று தன்னிகரற்ற சாம்பியன் ஆனார். செஸ் வரலாற்றில் மேட்ச், நாக் அவுட்
மற்றும் டோர்னமெண்ட் ஆகிய மூன்று பிரிவுகளிலும் உலக சாம்பியன் பட்டம்
வென்ற ஒரே வீரர் ஆனந்த்தான். ஆனந்தின் தொடர் வெற்றிகளால்தான் இன்று இந்தியா
முழுவதும் செஸ் வீரர்கள் தோன்றியிருக்கிறார்கள். இந்தியாவில் 34 கிராண்ட்
மாஸ்டர்கள் உருவானதற்கு அவரே முக்கியக் காரணம். பழுத்த அனுபவத்தின் காரணமாக
6வது முறையும் உலக சாம்பியன் ஆவார் என்று நிபுணர்கள் கருத்துத்
தெரிவிக்கிறார்கள்.
2000ஆம் ஆண்டில், ஆனந்த் முதல் முறையாக உலக சாம்பியன் ஆனார். அடுத்து 2007,
2008, 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் உலக செஸ் சாம்பியன் பட்டங்களை
அடுத்தடுத்து
வென்று தன்னிகரற்ற சாம்பியன் ஆனார். செஸ் வரலாற்றில் மேட்ச், நாக் அவுட்
மற்றும் டோர்னமெண்ட் ஆகிய மூன்று பிரிவுகளிலும் உலக சாம்பியன் பட்டம்
வென்ற ஒரே வீரர் ஆனந்த்தான். ஆனந்தின் தொடர் வெற்றிகளால்தான் இன்று இந்தியா
முழுவதும் செஸ் வீரர்கள் தோன்றியிருக்கிறார்கள். இந்தியாவில் 34 கிராண்ட்
மாஸ்டர்கள் உருவானதற்கு அவரே முக்கியக் காரணம். பழுத்த அனுபவத்தின் காரணமாக
6வது முறையும் உலக சாம்பியன் ஆவார் என்று நிபுணர்கள் கருத்துத்
தெரிவிக்கிறார்கள்.கார்ல்சன் கடந்த இரண்டு வருடங்களில் அமோக வளர்ச்சி கண்டிருக்கிறார். இன்றைய
செஸ் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் (ஆனந்துக்கு ஏழாம்
இடம்). 13 வயதில் கிராண்ட்
மாஸ்டர் ஆகி, 19 வயதில் உலகின் நெ.1 செஸ் வீரரானார் கார்ல்சன்.
இதுவரைக்கும் அதிகப் புள்ளிகள் எடுத்த செஸ் வீரரும் அவர்தான். ஃபிஷர்,
காஸ்பரோவ், கார்போவ், ஆனந்த் போல
அடுத்து செஸ் உலகை ஆளக் கூடியவர் என்று கார்ல்சன் மீது செஸ் உலகம் அதிக
நம்பிக்கை வைத்திருக்கிறது. இணைய தளங்களில் நடத்தப்படும் வாக்கெடுப்புகளில்
இந்த முறை கார்ல்சன் ஜெயிப்பார்
என்று பலரும் வாக்களித்துள்ளார்கள். கார்ல்சனுக்கு உலகம் முழுவதும்
ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்னையிலேயே பல இளம் செஸ் வீரர்களின் ஆதர்சம்,
கார்ல்சன்தான்.
ஆனந்துக்கு செஸ்ஸில் ஊக்கமில்லை, வயதாகி விட்டது, மற்ற வீரர்களைப் போல
கார்ல்சனை வெல்வது அவ்வளவு சுலபமல்ல என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
இப்படிச்
சொல்கிற விமர்சகர்களே இன்னொன்றையும் ஒப்புக் கொள்கிறார்கள், உலக சாம்பியன்
போட்டி என்று வந்துவிட்டால் ஆனந்தின் அணுகுமுறையே வேறு மாதிரியிருக்கும்
என்று. இளமையா? அனுபவமா? எது
வெல்லப் போகிறது? சபாஷ், சரியான போட்டி!
ச.ந.கண்ணன்
அள்ளிக் கொடுத்த முதல்வர்!
2011ல் உலக சதுரங்க (chess) கூட்டமைப்பின் தலைவர் கர்சன் இலியும் மினோவ்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தபோது, பேச்சோடு பேச்சாக ‘உலகச்
சதுரங்கப் போட்டியைத் தமிழகத்தில்
நடத்த முதல்வர் உதவ வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். தாராளமாக.. அடுத்த
வருடமே நாங்கள் தயார். இதற்கான நிதிச் செலவை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும்"
என்று
முதல்வர் சொன்னவுடன் கர்சனுக்கு குஷியோ குஷி. ஆனால், 2012ல் தமிழ்நாட்டில்-
சென்னையில் நடத்தும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. காரணம் ‘நாங்கள்தான்
நடத்துவோம்’ என்று 22 கோடி தொகைக்கு
ஏலம் கேட்டு அந்த வாய்ப்பை ரஷ்யா ஏற்கெனவே பெற்றிருந்ததுதான். பொதுவாக
உலகச் சதுரங்க சாம்பியன் போட்டியை நடத்த விரும்பும் நாடுகள் ஏலம்
கேட்டுத்தான் அந்த வாய்ப்பை பெற வேண்டும். இருந்தும்
தமிழக முதல்வரின் ஆர்வத்தைப் பார்த்த உலகச் சதுரங்கக் கூட்டமைப்பின்
நிர்வாகிகள் ஏலமுறை இல்லாமலேயே தமிழக அரசு சென்னையில் அந்தப் போட்டியை
நடத்த வாய்ப்பு வழங்கி விட்டார்கள். தொடர்ந்து 29 கோடி நிதியை ஒதுக்கினார்
ஜெயலலிதா. தமிழ்நாடு சதுரங்கக் கழகம், இந்திய சதுரங்கக் கூட்டமைப்பு ஆகிய
அமைப்புகள் தமிழக அரசுடன்
இணைந்து கொள்ள சர்வதேச சதுரங்க சாம்பியன் போட்டிக்கான ஏற்பாடுகள்
விறுவிறுவென தொடர்ந்தன.
முதல்வர் போட்டியைத் தொடங்கி வைத்தாலும் சதுரங்கச் சிங்கங்களான மேக்னஸ்
கார்ல்சன்னும் (நார்வே) விஸ்வநாதன் ஆனந்தும் மோதத் தொடங்குவது ஒன்பதாம்
தேதிதான். ஏழாம் தேதி இந்த இரு வீரர்களில் கறுப்பு யாருக்கு, வெள்ளை
யாருக்கு என்பதை முதல்வர் தேர்ந்தெடுத்து அறிவிப்பார். மிகச் சமீபத்திய தர
வரிசைப் பட்டியல்படி கார்ல்சன் ஒன்றாம்
இடத்திலும், ஆனந்த் ஏழாம் இடத்திலும் இருக்கிறார்கள். இந்த இருவரின்
மோதலைக் காண சதுரங்க ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை அண்ணாசாலை ஹயாத் ஹோட்டல்
பால்ரூம் இந்தப் போட்டிக்காகத் தயாராகிறது. பார்வையாளர்கள் 300 பேர்
மட்டுமே அமர முடியும். தினசரி டிக்கெட் 2500, 2000 என்று இருவிதமாக
வைத்திருக்கிறார்கள். 28ம் தேதி வரை நடக்கும் இந்தப்
போட்டிக்கு சீசன் டிக் கெட்டும் உண்டு. பார்வையாளர்களில் கார்ப்பரேட்
பாக்ஸ் என்று தனியாக வைத்திருக்கிறார்கள். மிகக் குறைந்த இடங்களே உள்ள,
இதற்கு மூன்றரை
லட்சம் கட்டணம். டி.டி. ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பும். தமிழக அரசு
ஒதுக்கியுள்ள 29 கோடியில் 15 கோடி பரிசுத் தொகை, 6 கோடி உலக சதுரங்க
அமைப்புக்குக் கொடுக்க வேண்டும்.
மீதிப் பணம், ஏற்பாடு, தங்கும் செலவு மற்றும் வேறுபல செலவுகளுக்காக. 12
சுற்றாக நடக்கும் இந்தப் போட்டியில் ஆறரைப் புள்ளி பெற்றவர் வென்றவர்.
அவர்தான் உலக சதுரங்க சாம்பியன். இருவரும் ஆறரைப் புள்ளி
பெற்றால் 28ம் தேதி டை பிரேக் போட்டி நடக்கும். மாஸ்கோவில் நடந்த சென்ற
உலகப் போட்டியில் ஆனந்த் வெற்றிவாகை சூடினார். ஒவ்வொரு நாளும் போட்டி
சுமார் 5 மணி நேரம் நடக்கும். இதுபோன்ற போட்டி
இந்தியாவில் நடப்பது இதுதான் முதன்முறை.
இந்தச் சதுரங்கப் போட்டியைத் தொடர்ந்து தமிழகமே (சதுரங்கத்) திருவிழா கோலம்
பூண்டுவிட்டது என்று சொல்லலாம். ஏற்கெனவே பள்ளியில் படிக்கும் மாணவ,
மாணவிகளுக்கு சதுரங்கம் சொல்லித் தரப்பட வேண்டும் என்று தேவையான
நிதியை ஒதுக்கி இருக்கிறார் முதல்வர். சாம்பியன் போட்டிக்கு முன்னோட்டமாக,
பார்வையற்றோர் செஸ் போட்டி, பள்ளி மாணவர்கள் போட்டி, அதிகாரிகளுக்கான
போட்டி, நடிக - நடிகையர்களுக்கான போட்டி என்று பல
பிரிவுகளை உள்ளடக்கிய போட்டிகள் நடத்தி தமிழகத்தில் சதுரங்கச் சூழலைக்
கிளப்பிவிட்டிருக்கிறது அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு. இந்தப் போட்டி
சென்னையில் நடக்கும் என்று
கனவுகூட காணவில்லை. எல்லாப் புகழும் முதல்வருக்கே. அவர் பதவியில் இருக்கும்
காலம் விளையாட்டுத் துறைக்கு பொற்காலம்" என்கிறார் அகில இந்திய சதுரங்கக்
கழக
பொதுச் செயலாளர் ஹரிஹரன். கடந்த ஆகஸ்ட் மாதம் கார்ல்சன் சென்னைக்கு வந்து
போட்டி நடக்கும் ஹோட்டலையும் பார்த்து, ஏற்பாடுகளையும் அறிந்து கொண்டு
போனார்.
- ஸ்ரீநி
ReplyDeleteஇனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...