கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 24 வருட ஆட்டத்துக்குப் பிறகு
ஓய்வெடுக்க முடிவு செய்ததும் அவருக்குப் பாரத் ரத்னா என்ற இந்திய அரசின்
உயரிய விருதை
அரசு அறிவித்திருக்கிறது. கூடவே சி.என்.ஆர்.ராவ் என்கிற மக்கள் யாரும் அறிய
வாய்ப்பில்லாத ஒரு மூத்த விஞ்ஞானிக்கும் விருதை அறிவித்துள்ளது.சச்சின் நல்லவர்தான். ஆனால் சம்பளம் வாங்கிக்கொண்டுதானே ஆடினார். அவருக்கு
எதற்கு விருது என்று ஐக்கிய ஜனதா தளப் பிரமுகர் ஒருவர் கேட்டிருக்கிறார்.
சம்பளம் வாங்கிக்கொண்டு
வேலை பார்த்தவர்களுக்கு விருது தரக் கூடாது என்றால் விஞ்ஞானியும் தகுதி
இழந்துவிடுவார். அவர் மட்டுமல்ல, இதற்கு முன்பு பாரத் ரத்னா விருது
வாங்கியவர்களில் எம்.ஜி.ஆர், எம்.எஸ் போன்ற ஒரு
சிலரைத் தவிர, விருது பெற்ற பல குடியரசுத் தலைவர்கள், துணைக் குடியரசுத்
தலைவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள் எனப் பலரும் சம்பளம் வாங்கிக்கொண்டு
பணியாற்றியவர்கள்தான்.தேசத்தின் மிக உயரிய இந்த விருது எந்த அடிப்படையில் யாருக்குத்
தரப்படுகிறது என்பதற்குத் தெளிவான, துல்லியமான வரையறைகள் இல்லை. நாட்டுக்கு
ஆற்றிய மிக உச்சமான
தொண்டுக்கு (for the highest degrees of national service) என்று மட்டுமே
குறிப்பிடப்படுகிறது. தொண்டு எந்தத் துறையிலும் இருக்கலாம். கலை, இலக்கிய,
அறிவியல் துறைகள் மட்டுமன்றி
எந்தப் பொதுத் தொண்டின் அங்கீகாரமுமாகவும் தரப்படலாம் என்று இருந்த
வரையறையை எந்தத் துறையிலும் மனித முயற்சியின் உச்சமான சாதனைக்கு என்று
அண்மையில் திருத்தினார்கள். கோயில் பிரசாதமாக
சுண்டல் விநியோகிப்பது போல இந்த உயரிய விருதைக் கொடுத்துவிடக் கூடாது
என்பதற்காக, ஒரு வருடத்தில் மூன்று பேருக்கு மேல் விருது கொடுக்கப்படக்
கூடாது என்ற விதியும் போடப்பட்டிருக்கிறது. யாருக்கு விருது தரலாம் என்று தேர்வு செய்வது யார்? ஒரே ஒருத்தர்
கையில்தான் அதிகாரம் இருக்கிறது. பிரதமர், குடியரசுத் தலைவரிடம் பெயரைப்
பரிந்துரைக்க வேண்டும். அவ்வளவுதான்.இந்த விதியைப் படித்துவிட்டு இதுவரை பாரத் ரத்னா விருது தரப்பட்டோர்
பட்டியலைப் பரிசீலித்தால் நிச்சயம் வருத்தமாக இருக்கிறது. தங்களுடன்
பதவியில் இருக்கிற சகாவுக்கே
விருது கொடுத்துக் கொள்வது என்ற நடைமுறையைப் பலமுறை பிரதமரும் குடியரசுத்
தலைவரும் பின்பற்றி இருக்கிறார்கள். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
1954ல் துணைக் குடியரசுத் தலைவராக
இருக்கும் போதே அவருக்கு பாரத் ரத்னா விருதை அன்றைய பிரதமர் நேருவும்
குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்தும் கொடுத்திருக்கிறார்கள். அடுத்து
ஜாகீர் உசேன் துணைக்
குடியரசுத் தலைவராக இருக்கும் போதே அவருக்கு பாரத் ரத்னா விருது
தரப்படுகிறது. கோவிந்த் வல்லப் பந்த் நேருவின் அமைச்சரவையில் உள்துறை
அமைச்சராக இருக்கும்போதே
அவருக்கு 1957ல் பாரத் ரத்னா கிடைக்கிறது. (இவர்தான் ஹிந்தியை
ஆட்சிமொழியாக்கியவர்.)
குடியரசுத் தலைவராக இருப்பவருக்கே அவர் தரும் விருதைத் தரமுடியாது
என்பதால், ராஜேந்திர பிரசாத் 1962ல் அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற
உடனே அவருக்கு பாரத்
ரத்னா அளிக்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் என்னால் ஜீரணிக்கவே முடியாமல்
இருக்கும் தகவல் நான் மிகவும் மதிக்கும் ஜவாஹர்லால் நேருவைப் பற்றியதுதான்.
அவருக்கு 1955ல் பாரத் ரத்னா அளிக்கப்படுகிறது.
அப்போது அவர்தான் பிரதமர். அப்படியானால், தனக்கு விருது தரும்படி தானே
குடியரசுத் தலைவருக்கு அவர் பரிந்துரை செய்தாரா? பின்னாளில் அவர் மகள்
இந்திரா காந்திக்கு 1971ல் பாரத் ரத்னா
விருது தரப்பட்டது. அப்போது இந்திராவேதான் பிரதமர்! இப்போது சச்சினுக்கு விருது அறிவிக்கப்பட்ட உடன் எழுந்த இன்னொரு சர்ச்சை,
சச்சினை விட முக்கியமானவரான இந்திய ஹாக்கியின் தந்தை தியான்சந்துக்கு
தராமல் சச்சினுக்குக் கொடுக்கலாமா என்பதாகும். தியான்சந்த் சாதனையாளர்தான்.
ஒலிம்பிக்கில்
ஹாக்கியில் 1928,1932,1936 ஆகிய மூன்று வருடங்களும் தங்கம் வென்றவர். ஆனால்
அவரது சாதனை சுதந்திர இந்தியாவுடன் எந்தச் சம்பந்தமும் இல்லாதது.
விடுதலைக்கு முந்தைய காலகட்டம்
அது. தவிர, அவர் அந்தச் சமயத்திலும் விடுதலை வரையிலும் கூட, பிரிட்டிஷ்
ராணுவத்தில்தான் பணியாற்றிக் கொண்டிருந்தார். எனவே அவரை பாரத ரத்னாவாகக்
கருத
நியாயமில்லை.எந்த அடிப்படையில் பாரத் ரத்னாவுக்கு ஒருவரை பரிசீலிப்பது என்பது நிச்சயம்
குழப்பமானதாகவே இருக்கிறது. வாஜ்பாயி பாரத் ரத்னாவுக்கு உரியவர் என்றால்
அதற்கு என்ன காரணம்? பொக்ரானில் இரண்டாம்
முறை அணுகுண்டு வெடித்த சாதனைக்கா? அதற்காகத்தான் ஏற்கெனவே கலாமுக்குக்
கொடுத்தாகிவிட்டதே! அரசியல் ரீதியாக என்றால் அத்வானி உரியவர் இல்லையா?
எம்.ஜி.ஆருக்குக் கொடுக்கலாம் என்றால்
ஏன் கருணாநிதிக்குக் கொடுக்கக்கூடாது ? லதா மங்கேஷ்கருக்குத் தரலாம்
என்றால் ஏன் பி.சுசீலாவுக்கும் தரக் கூடாது ? மராத்திய லதா ஹிந்தியில் பாடி
இந்திய ஒருமைப்பாட்டை
வலுப்படுத்திய மாதிரி தானே, தெலுங்கு சுசீலா தமிழில் பாடி
வலுவூட்டியிருக்கிறார்? பீம்சேன் ஜோஷிக்கு உண்டு. பாலமுரளிக்குக் கிடையாதா?
பிஸ்மில்லாகானுக்கு உண்டு. ராஜரத்தினம் பிள்ளைக்குக் கிடையாதா? இந்தக் கேள்விகளுக்கு முடிவே கிடையாது.
பாரத் ரத்னா சர்ச்சைகளுக்கு இரண்டே தீர்வுகள்தான் உள்ளன. ஒன்று எல்லா அரசு
விருதுகளையும் முடிவு செய்ய சுயேச்சையான அறிஞர் குழு ஒன்றை ஏற்படுத்தலாம்.
பத்மஸ்ரீ, பத்மபூஷண், விபூஷன் எல்லாவற்றையும் இதன்
கீழ் கொண்டு வந்துவிடலாம். அரசியல், நிர்வாகம் ஆகியவற்றின் செல்வாக்கு
இல்லாமல் முடிவுகளை எடுக்கும் அதிகாரம், இந்தக் குழுவுக்கும் தேர்தல்
ஆணையம் போல, கணக்குத்
தணிக்கை அதிகாரிப் போல இருக்க வேண்டும். இது நடக்கும் வாய்ப்பு மிகக்
குறைவுதான்.எனவே இரண்டாவது தீர்வே மேலானது. இனி இந்த விருதுகள் கிடையாது என்று
அறிவித்துவிடலாம். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்கிறபோது எல்லோரும்
இந்நாட்டு பாரத்
ரத்னாக்கள்தானே.
No comments:
Post a Comment