இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசிலிருந்து யாரும்
கலந்து கொள்ளக்கூடாது என்று கோரி தமிழக சட்டமன்றத்தில் இரண்டாவது
முறையாகத் தீர்மானம்
நிறைவேறச் செய்திருக்கிறார் ஜெயலலிதா.
‘இந்தியா கலந்துகொள்ளும். பிரதமர் தான் செல்லமாட்டார். வெளியுறவு
அமைச்சர் சல்மான் குர்ஷித் செல்வார்’ என்று மத்திய அரசு தெளிவாக அறிவித்த
பின்னர்
சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் அவசர அவசரமாக இரண்டாம்முறை இதே
தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார் ஜெ. இதற்கு ஏதாவது அர்த்தம், பயன்,
விளைவு இருக்கமுடியுமா
என்று பார்த்தால், ஒன்றும் கிடையாது.
குர்ஷித் போய்விட்டார். சட்டமன்றத் தீர்மானத்துக்கு ஒரு மரியாதையும் இல்லை. ஒரு வாதத்துக்காக, ‘குர்ஷித்தையும் போகவேண்டாம் என்று பிரதமர்
நிறுத்திவைத்து தமிழக சட்டமன்றத் தீர்மானத்துக்கு மரியாதை
செலுத்தியிருந்தால்...?’ என்று
கற்பனை செய்வோம். அப்போதும் அதன் விளைவு என்ன? ஒன்றும் கிடையாது. இந்தியா
கலந்து கொள்ளவில்லை என்பதால் காமன்வெல்த் மாநாடு ரத்து செய்யப்பட்டிராது.
அடுத்த இரு
வருடங்களுக்கு இலங்கைதான் காமன்வெல்த்தின் தலைமையில் இருக்கும்.
ராஜபட்சேதான் காமன்வெல்த் தலைவராக இருப்பார். இந்தியா கலந்து கொண்டாலும் கலந்து கொள்ளாவிட்டாலும் இதுதான் யதார்த்த
நிலைமை. ராஜபட்சேதான் அடுத்த இரு வருட காமன்வெல்த் தலைவர். அந்த
காமன்வெல்த்தின் கூட்டங்களிலே இலங்கை
மீதான மனித உரிமை மீறல், போர்க் குற்றங்களுக்கான கண்டனங்களோ, விசாரணையோ
நடக்கும் வாய்ப்பே இல்லை. காமன்வெல்த்தில் இந்தியா பேசினாலும்
பேசாவிட்டாலும், அது இலங்கைத்
தமிழர்கள் மறுவாழ்வை வளமாக்கவோ, 13 வது திருத்தத்தைக் கொண்டு வந்து அரசியல்
சம உரிமைகளைத் தரவோ, இலங்கையின் போர்க்குற்றவாளிகளை உலக நீதிமன்றத்தில்
நிற்கவைத்து விசாரிக்கவோ துளியும்
உதவப் போவதில்லை. ஐ.நா. மனித உரிமை ஆணையம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் போன்ற அமைப்பு அல்ல
காமன்வெல்த். இது ஒரு முன்னாள் அடிமைகளும் ஆண்டானும் சேர்ந்து இப்போது
சமமாகிவிட்டோம் என்று நம்பிக்கொண்டு ஒன்றாக விருந்து
சாப்பிட்டு மகிழும் ‘க்ளப்’ மட்டும்தான். தமிழ்நாட்டில் நேற்று முளைத்த
தமிழகப் பிரிவினைக் கனவுடைய சிறு குழு முதல், இலங்கைப் பிரச்னையைச்
சமாளிப்பதில் பழம்
தின்று கொட்டை போட்டவர்களான கருணாநிதி, ஜெயலலிதா வரை எல்லோருக்கும் இதுதான்
யதார்த்தம் என்பது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. மக்களவைத்
தேர்தலையொட்டி, இந்தப் பிரச்னையை
எழுப்பி மக்களை உணர்ச்சிவசப்படுத்தி கிடைத்த லாபத்தை அடையலாம் என்பதே
வெவ்வேறு கட்சிகளின் கணக்கு.சட்டமன்றத்தில் பெரும்பாலான கட்சிகளின் ஆதரவுடன் இருமுறை தீர்மானம்
நிறைவேற்றுகிற முதலமைச்சர் நியாயமாகச் செய்திருக்க வேண்டியது என்ன? அத்தனை
கட்சிகளின் பிரதிநிதிகளையும் தம்முடன் அழைத்துக் கொண்டு தில்லிக்குப் போய்
நேருக்கு நேர் பிரதமரைச் சந்தித்து, ‘காமன்வெல்த்திலிருந்து இலங்கையை
வெளியேற்றுங்கள், வேறு நாட்டில்
நடந்தால் மட்டுமே மாநாட்டுக்கு வருவேன் என்று சொல்லுங்கள்,’ என்றெல்லாம்
சொல்லியிருக்க வேண்டும். நேரில் சொன்னால் நடந்துவிடுமா என்று வாதிடலாம்.
தீர்மானம் போட்டால்
மட்டும் நடக்கிறதா என்ன? நேருக்கு நேர் போய் பிரச்னையைப் பேசும்போது,
இருதரப்பும் ஒரு மையப் புள்ளியில் சந்திக்க வேண்டிய கட்டாயமேனும் ஏற்படும்.இலங்கை அரசை உலக அரங்கில் தனிமைப்படுத்தி, பிறநாட்டு அரசுகள் உதவியுடன்
விசாரணைக்கு உட்படுத்தி தண்டனையும் மக்களுக்குப் பரிகாரமும் பெற்றுத் தர,
தனிமைப்படுத்தும் உத்திகளில்
ஒன்றுதான் காமன்வெல்த்திலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை
என்று வாதிடலாம்.
ஆனால் அதை எப்போது செய்திருக்க வேண்டும்? 2011லேயே அடுத்த மாநாடு
இலங்கையில் என்பதும் அதையொட்டி அடுத்த தலைவர் இலங்கை என்பதும்
அறிவிக்கப்பட்டுவிட்ட விஷயங்கள்.
அப்போது ஐ.நா. மனித உரிமை ஆணையம் முன்பு இலங்கையை நிறுத்தக் காட்டிய
முனைப்புக்குச் சமமான முனைப்புடன் யாரும் காமன்வெல்த் முடிவை
எதிர்க்கவில்லை.அடுத்த காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று
வற்புறுத்தும்படி இந்தியப் பிரதமரை தமிழகக் கட்சிகள் அப்போது
நிர்ப்பந்திக்கவில்லை. காரணம் உடனடியாகத்
தேர்தல் வாய்ப்பு அப்போது இல்லை. இப்போது தேர்தலை மனத்தில் வைத்து மட்டுமே
எல்லாம் நடக்கிறதே தவிர, ஈழத் தமிழரைக் கருதியே அல்ல.ஒப்புக்குத் தீர்மானம் நிறைவேற்றுகிறோம் என்று தெரிந்தே எல்லோரும்
நாடகமாடுகிறார்கள். தீர்மானம் போட்டால் நெருக்கடி ஏற்படும் என்ற நிலையுள்ள
விஷயங்களில்
நிச்சயம் தீர்மானம் போடமாட்டார்கள். கூடங்குளம் அணு உலையையே எடுத்துக்
கொள்வோம். இரண்டு வருடங்களாக மக்கள் போராட்டம் நடக்கிறது. சுமார் ஒரு
வருடத்துக்கு மேல் தொடர் உண்ணாவிரதம் இருந்தார்கள். இன்று வண்டலூர் மிருகக்
காட்சி சாலையில் ஒரு விலங்கு இறந்த செய்தி கேட்டதும் முதலமைச்சர் அங்கே
சென்று இதர மிருகங்களின்
நிலையைப் பார்வையிடுகிறார். ஆனால் கூடங்குளத்துக்கு ஒருமுறை கூடப் போய்
மக்களைப் பார்த்ததில்லை. ‘இன்னும் 15 நாட்களில் மின் உற்பத்தி
தொடங்கிவிடுவோம்’ என்று இரண்டு வருடம்
வாதா வாங்கிக் கடைசியில் தொடங்கிவிட்டோம் என்று மத்திய அரசு அறிவித்த மின்
உற்பத்தி ஏன் ஒரு சில வாரம் கூட நீடிக்கவில்லை? அணு உலையில் என்ன
நடக்கிறது என்று மத்திய
அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்று தமிழகச் சட்டமன்றத்தில்
தீர்மானம் கொண்டுவர முடியுமா? முடியாது. நிழல் யுத்தம் நடத்துவது
பாதுகாப்பானது. நிஜ சண்டைகள் போட்டால், சி.பி.ஐ.யும்
வழக்குகளும்தான் வரும். இலங்கை காமன்வெல்த் மாநாடு தொடர்பாகச் சில மாதங்களாக அரசியல் கட்சிகளும்
சில அமைப்புகளும் எழுப்பிய நவரச சுவை நிரம்பிய நாடகத்தின் உச்சகட்ட
காமெடிக் காட்சிதான் தமிழக சட்டமன்றத்தின் ‘வரலாற்று சிறப்பு’ மிக்க
தீர்மானம்.
No comments:
Post a Comment