அழுகையைப் பற்றி நம்ம ஞானிகள் நிறைய சொல்லியிருக்காங்க... கண்ணீர் ஊற்றால்
உடல் நனைய அழுது இறைவனைப் போற்றுதல் வேண்டும் என்று
வள்ளலார் கூறுவார். மாணிக்கவாசகரும் இறையருளை ‘அழுதால் பெறலாமே’ என்று
கூறுவார். திருமங்கை ஆழ்வார் மட்டும் சளைத்தவரா? ‘உடம்பெலாம் கண்ண நீர் சோர
நள்ளிருள் அளவும்
பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம்’ என்பார். நிலையான இறை அருளைப்
பெற அழுவது முறை. ஆனால், அழியும் பொருளைப் பெறவும் அதேபோல அழுவது எப்படி
முறையாகும். பெண்கள் தாங்கள் நினைத்ததைச் சாதித்துக் கொள்ள பயன்படுத்தும்
ஒரே ஆயுதம் இந்த அழுகை. கணவன் போடும் தும்மலில் தொடங்கி கடையில்
வாங்கும் கம்மல் வரை அழுது அழுது சாதிக்கும் அருங்குணம் பெண்கள் குணம்
என்று குற்றம்சாட்டுவார்கள் ஆண்கள்.
வள்ளுவன் கண்ட பெண்கள் முதல் வலைத்தளம் கண்ட பெண்கள் வரை அழுகின்ற இந்நிலையில் மாற்றம் எதுவும் பெரிதாக நிகழ்ந்து விடவில்லை. சமீபத்தில் இஸ்ரேலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அழுகைப் பற்றிய ஆய்வொன்றை
மேற்கொண்டனர். இதில் ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். அவர்களில் பெண்களை
மட்டும்
தனிக்குழுவாகப் பிரித்து பரிசோதனை செய்தனர். அந்தக் குழுவில் மொத்தம் 60
பெண்கள் இருந்தனர்.
பெண்கள் அமர்ந்திருந்த தனி அறையில் மிகவும் மோசமான அழுகைக் காட்சிகள் கொண்ட
திரைப்படம் திரையிடப்பட்டது. சுமார் அரைமணி நேரம்
படம் ஓடியது. இதனால் பெண்களுக்குக் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது.
அப்போது அறைக்குள் நுழைந்த ஆராய்ச்சியாளர்கள் படம் பார்த்து கண்ணீர் வடித்த
பெண்களின் கண்ணீரைச் சோதனைக் குழாயில் சேகரித்தனர். கண்ணீர் வராத
பெண்களுக்காக மற்றொரு சோதனைக் குழாயில் உப்பு கலந்த நீரைத் தயார் செய்தனர்.பின்னர் கண்ணீர் வடித்த பெண்களின் முகத்தில் உண்மையான கண்ணீரையும், கண்ணீர்
வராத பெண்களின் முகத்தில் உப்பு நீரையும் பேஷியல் செய்வதுபோல் பூசினர்.
இப்போது யாருக்கு
உண்மையான கண்ணீர், யாருக்குப் பொய்யான கண்ணீர் என்பது ஆய்வாளர்களைத் தவிர
மற்றவர்களுக்குத் தெரியாது. இந்நிலையில் வெளியே இருந்த ஆண்கள் சிலரை உள்ளே அழைத்து அந்தப் பெண்களின்
அருகில் சென்று பேசச் செய்தார்கள். அப்போது ஆண்களின் முகத்தில் ஏற்படும்
மாறுதல்களைத் துல்லியமாகப் பதிவு செய்தனர். கூடவே காதல் உணர்வைத்
தோற்றுவிக்கும் டெஸ்ட்ரோஜன் ஹார்மோன் இருவரின் உடலில் எந்தளவு சுரக்கிறது
என்பதையும் ஆய்வு செய்தனராம். ஆய்வின் முடிவில் அழுவதால் ஹார்மோன்களில்
மோசமான மாற்றம் ஏற்பட்டு பெண்களின் அழகு குறையும் என்று தெரியவந்துள்ளதாக
அறிவித்துள்ளனர்.
ஆதிரா முல்லை
No comments:
Post a Comment