Search This Blog

Monday, November 18, 2013

தலையைப் பாதுகாப்பது எப்படி? - டாக்டர் கு.கணேசன்

 
மனித உடலின் சிகரமாகத் திகழ்கிறது தலை. மனிதனை அடையாளப்படுத்தும் முகம் தலையில்தான் உள்ளது. மனிதனை இயக்கும் மூளையும் அதில்தான் உள்ளது. உடல் உறுப்புகளிலேயே தலையாய உறுப்பு மூளை. நம் உடலின் ஒவ்வோர் அசைவையும் இயக்கத்தையும் கட்டுப்படுத்துவது மூளை. மூளைதான் நமது உயிர். மூளையின் செயல்பாடு நின்ற பிறகு மற்ற உறுப்புகள் செயல்பட்டாலும் பலனில்லை. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மூளையைப் பாதுகாக்கும் தலையாயப் பணியைச் செய்வது தலையில் இருக்கும் மண்டை ஓடுதான். 
 
தலையின் முன்பகுதியில் முக எலும்புகளும் அதன் மேற்புறமும் பின்புறமும் ‘கிரேனியம்’ என்று சொல்லப் படும் கபாலமும் உள்ளன. தலை எலும்புகள் மொத்தம் 22. இவற்றில் முக எலும்புகள் 14. இந்தத் தலை எலும்புகளைத் தாங்குபவை கழுத்து எலும்புகள். உடலின் மற்ற பாகங்களின் தோலோடு ஒப்பிடும்போது, தலையில் இருக்கும் தோல் சிறிது வித்தியாசமானது. ‘ஸ்கால்ப்’ என்று சொல்லப்படும் தலைத் தோலின் கீழ் தசை எதுவும் இல்லை. இதனால் தலையில் லேசாக அடிபட்டால்கூட காயம் பலமாக ஏற்பட்டுவிடலாம். தலையில் ஆறு ரத்தக்குழாய்கள் உள்ளன. இதனால் தலையில் அடிபடும்போது அதிக அளவில் ரத்தம் இழப்பதற்கு வாய்ப்புண்டு.  தலைக்கு ஆபத்து வருவது பெரும்பாலும் சாலை வாகன விபத்துகளால்தான். அடுத்து, நாம் விளையாடும் போது, நடை தவறி கீழே தரையில் விழும்போது, அடிதடி சண்டை போடும்போது, துப்பாக்கிச்சூடு என்று பல வழிகளில் தலையில் காயங்கள் உண்டாகின்றன. தலையில் காயம் ஏற்படும்போது தோல் கிழியும். கபால எலும்பு உடையும். கபால எலும்புக்கும் மூளைக்கும் நடுவில் இருக்கும் மூளை உறையில் ரத்தம் உறைந்து போகும். மூளை அதிர்ந்து போகும். மூளைத் திசுக்களும் கிழிபடலாம். மூளைக்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்தக்குழாய்கள் வெடித்து மூளையின் உள்ளேயே ரத்தம் உறையலாம். கண் பார்வை பறி போகலாம். காதுச் சவ்வு கிழிந்து காது கேட்காமல் போகலாம். இப்படிப் பல ஆபத்துகள் நெருங்கலாம். ஆகவே, தலைக்காயத்தை உடனடியாகக் கவனிக்க வேண்டும்.தலைக்காயங்கள் இரண்டு வகைப்படும். 1. மூடிய காயங்கள். 2. திறந்த காயங்கள். மூடிய காயங்களில் ரத்த ஒழுக்கு இருக்காது. தோலுக்கு அடியில் ரத்தம் உறைந்து வீங்கியிருக்கும். இதனை ‘ரத்தக்கட்டு’ என்று சொல்வார்கள். திறந்த காயங்களில் ரத்தம் வெளியேறும். தோல் மட்டும் சிதைந்திருந்தால் ‘சிராய்ப்பு’ என்கிறோம். இதில் ரத்தம் லேசாகவே கசியும். தோல் கிழிந்திருந்தால் அது ‘வெட்டுக்காயம்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் ரத்தம் குபுகுபுவென்று நிறைய வெளியேறும். பல நேரங்களில் பார்ப்பதற்குத் தலைக்காயம் லேசாக இருக்கும். ஆனால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். கடுமையான தலைக்காயத்தின் அறிகுறிகள் இவை: காயம் பட்ட தலையில் குழி இருக்கும் அல்லது வீக்கம் இருக்கும். காதுக்குப் பின்புறம் வீக்கம் காணப்படும். காது மற்றும் மூக்கிலிருந்து ரத்தம் வெளியேறலாம். அல்லது நிறமற்ற திரவம் கசியலாம். கண்ணில் ரத்தக்கசிவு காணப்படலாம். முகம் வீங்கலாம். கிறுகிறுப்பு வரும். வாந்தி வரக்கூடும். சுயநினைவில் மாற்றம் இருக்கலாம். சிலர் பிரமை பிடித்ததுபோல இருப்பார்கள். சுவாசிக்கச் சிரமப்படுவார்கள்.
 
கபால எலும்பு முறிந்திருந்தால் அல்லது மூளைத் திசுக்கள் பாதிக்கப்பட்டிருந்தால், காது மற்றும் மூக்கு வழியாக ரத்தம் வடியும். கண்கள் முன்பக்கமாகத் தள்ளப்படலாம். காதுக்குப் பின்புறம் கடுமையான வீக்கம் உண்டாகும். அடிபட்டவருக்கு மயக்கம் உண்டாகும். வலிப்பு வரலாம். சமயங்களில் தலையில் அடிபடும்போது மூளை மட்டும் கபாலத்துக்குள் அதிர்ந்து அசைந்திருக்கும். இதனாலும் மயக்கம் வரலாம்.  தலைக்காயம் எதுவாக இருந்தாலும் உடனடியாக முதலுதவி செய்யப்பட வேண்டும். பஞ்சை ஈரப்படுத்திக் கொண்டு அல்லது சுத்தமான பருத்தித் துணி கொண்டு காயத்தைச் சுத்தப்படுத்த வேண்டும்.டெட்டால் இருந்தால் அதைக் கொண்டும் சுத்தப்படுத்தலாம். ‘ஆன்டிபயாடிக்’ களிம்பு கைவசமிருந் தால், அதைக் காயத்தில் தடவி, சுத்தமான துணியால் தலையைச் சுற்றி அழுத்தமாகக் கட்டுப் போட வேண்டும். தலைக்காயத்திலிருந்து வெளியேறும் ரத்தக்கசிவை நிறுத்துவதுதான் முதலுதவியின் முக்கிய நோக்கம் என்பதால் பஞ்சு, துணி, பாண்டேஜ் எதுவும் கிடைக்காதபோது, முதலுதவி செய்பவர் தன் உள்ளங் கையால் தலைக்காயத்தின் மீது சுமார் 10 நிமிடங்களுக்கு அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாலே ரத்தம் கசிவது நின்று விடும். அதற்குள் துணி, கைக்குட்டை என்று ஏதாவது வைத்துக் கட்டுப் போட்டு விடலாம். காயத்திலிருந்து ரத்தம் கடுமையாக வெளியேறினால் கழுத்தைச் சுற்றி தாடையோடு ஒரு கட்டுப் போடலாம். கபால எலும்பில் முறிவு உள்ளது என்பது தெரிந்தால் தலையையும் கழுத்தையும் அசைக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தலையில் காயம் பட்டவருக்குக் கழுத்து எலும்பிலும் முறிவு உண்டாகியிருக்கலாம். அப்போது கழுத்தை அசைத்தால் கழுத்தில் எலும்பு முறிவு அதிகப்பட்டுவிடும். அல்லது கபாலத்தின் உள்ளே ஏற்கெனவே ஏற்பட்டுள்ள ரத்தக்கசிவு அதிகப்பட்டுவிடும். இதைத் தவிர்க்க தலையில் அடிபட்டவரை சமதளத்தில் மல்லாந்து படுக்க வைக்க வேண்டும். அந்த நபர் சுவாசிக்கச் சிரமப்பட்டாலோ, சுயநினைவை இழந்திருந்தாலோ செயற்கை சுவாசம் மற்றும் இதய மசாஜ் தரப்பட வேண்டும். மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். எந்த ஒரு விபத்து நடந்தாலும் முதல் ஒரு மணி நேரம் என்பதை ‘பொன்னான நேரம்’ என்கிறோம். அதற்குள் அவருக்கு மருத்துவ சிகிச்சை கிடைத்துவிட்டால் உயிருக்கு ஆபத்து வருவது குறையும். ஆகவே, அடிபட்டவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அல்லது ஒரு வாகனம் மூலம் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
 
பாதுகாப்பான பயணம்தான் தலைக்குப் பாதுகாப்பு தரும். குறிப்பாக, இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிய வேண்டியது அவசியம். வாகனத்தின் பின்புறம் அமர்ந்து செல்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்.சாலை விதிகளை மீறக்கூடாது. மித வேகம் நல்லது. அதிவேகம் ஆபத்தானது. செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது. கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும்போது பாதுகாப்பு ‘சீட் பெல்ட்’ அணிந்து கொள்ள வேண்டும். பயணம் செய்யும் வாகனங்களில் குழந்தைகளை அமரச் செய்ய வேண்டும்; நிற்க வைக்கக்கூடாது. பெண்கள் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது துப்பட்டாவை முடிச்சுப் போட்டுக் கொள்ள வேண்டும். சைக்கிள் பயணம் என்றால், அதன் சுழலும் செயின் முழுவதும் மூடும்படியான உலோகக் கவசமுள்ள சைக்கிளில் பயணிப்பது நல்லது.

No comments:

Post a Comment