2013ல் ஏறக்குறைய 150 திரைப்படங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. இதில் கடந்த பத்துப் பதினைந்து வருட மரபுப்படியே இந்த வருடமும் வழக்கம்போல 10% தயாரிப்பாளர்களின் முகம் மலர்ந்துள்ளது...
அலெக்ஸா, 7D, ரெட் எபிக் போன்ற டிஜிட்டல் கேமராக்களின் பயன்பாடு இந்த வருடம் வெளிவந்த படங்களில் அதிகம்.
இந்தியத் திரையுலகில் டிஜிட்டல் தொழில்நுட்ப படமாக்கலில் மிகச்சிறப்பான ஒளிப்பதிவுத் திறனுக்கான பாராட்டு ‘ஹரிதாஸ்’ படத்துக்காக நம் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலுவுக்குக் கிடைத்த விஷயம் வழக்கம்போலவே யாரும் கண்டுகொள்ளவில்லை. அதேபோலத்தான் ‘பரதேசி’ படத்துக்காக சர்வதேச விருது பெற்ற ஒளிப்பதிவாளர் செழியனும் அதிகம் கவனிக்கப்படவில்லை.
‘சூதுகவ்வும்’, ‘நேரம்’, ‘மூடர்கூடம்’, ‘விடியும் முன்’ போன்ற படங்கள் இந்த வருட ‘அட’ தெறிப்புகள் வரிசையில் இடம்பெற்றன..
‘மூடர் கூடம்’ இயக்குனர் நவீன், இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர். ஆனால் இது அவரின் சொந்தத் தயாரிப்பு. அந்தத் தைரியத்தைப் பாராட்டியாக வேண்டும். அதோடு தம் மாணவன் வளர்வதை ஊக்கப்படுத்தும் விதமாக அந்தப் படத்தை விநியோகம் செய்தார் இயக்குனர் பாண்டிராஜ்.
யாரிடமும் பணிபுரியாமல் தம் முதல் படத்தை எடுத்து வெற்றி பெறும் இயக்குனர்களின் எண்ணிக்கை சமீபமாக அதிகமாகி வருகிறது . அதில் ‘சூது கவ்வும்’, ‘நேரம்’ பட இயக்குனர்களும் சேர்த்தி... இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒரு கைபேசி கேமராவில் குறும்படம் எடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளதால் திரைத்துறையிலும் இத்தகைய வரவுகள் தவிர்க்க இயலாத ஒன்று. கதைப்பின்னல்" பாட்டுகள்" சண்டைக்காட்சிகள்" போன்ற வழக்கமான விஷயங்களை விடுத்து, எந்தவிதப் புத்தி சிரமமும் இல்லாத எளிய வகை கதை சொல்லிகளாகவே இவர்கள் வந்திருக்கிறார்கள். கதாபாத்திரங்களின் அசைவுகளும் வசன யதார்த்தமுமே இவர்களின் பலம். இது வழக்கமான சினிமா பாணியிலிருந்து வேறுபடுவதால், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
வர்த்தகரீதியான நம்பிக்கை!
‘ராஜா ராணி’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘தேசிங்கு ராஜா’, ‘ஆரம்பம்’ போன்ற படங்கள் நம் கமர்ஷியல் மரபில் நின்று விளையாடி, பல உலக சினிமா ஆதங்க தமிழர்களின் வயிற்றெரிச்சலுடன் வசூலை வாரிக் குவித்தது.
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இருவரும் வர்த்தகரீதியான நம்பிக்கையைப் பெற்ற நடிகர்கள் வரிசையில் இடம்பிடித்துள்ளனர். இதில் ஒரு ஓரமாக விமலும் சித்தார்த்தும் நிதானமாக வளர்ந்து வருவது தெரிகிறது.
‘மரியான்’, ‘நையாண்டி’ போன்ற படங்கள் தனுஷுக்குக்கு கைகொடுக்கவில்லை. ஆனால் ‘எதிர் நீச்சல்’ வெற்றி, ஒரு தயாரிப்பாளராக அவரளவில் வெற்றியே. சிம்பு இதில் எந்தச் சிரமத்தையும் நமக்குக் கொடுக்கவில்லை.
மணிரத்னம், அமீர், செல்வராகவன் போன்ற இயக்குநர்களின் படங்கள் பெரும் எதிர்பார்ப்போடு வெளிவந்தபோது, இவங்களுக்கு என்ன ஆச்சு" என்ற முனகலுடன் பார்வையாளர்கள் தியேட்டரை விட்டு வெளியே வருவதிலிருந்தே, இவர்கள் எத்தகைய திறமைசாலிகளாகத் தம்மை நிரூபித்தார்கள் என்று தெரியும். அத்தகைய இயக்குநர்களின் படங்கள் ஏன் எதுவும்சொல்லுமளவுக்கு இல்லை என்னும் கேள்வி நம்மில் எழாமல் இல்லை. இப்படங்கள் சரியாக அமையாததற்குக் காரணங்கள் பல இருக்கும். ஆனால் அது பார்வையாளனுக்குத் தேவையில்லை. இவர்கள் தானே முன்பு பெரும் வெற்றியைத் தந்தவர்கள்.
இதை எந்த வகையில் எடுத்துக் கொள்வது? கற்பனை வறட்சி என்றா? காலமாற்றம் என்றா?
‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’,‘தங்க மீன்கள்’,‘பரதேசி’ போன்ற படங்கள் பத்திரிகைகளாலும் விமர்சகர்களாலும் இரண்டு வேறுவேறு எல்லைகளில் விமர்சனத்துக்குள்ளானது. ஆஹா ஓஹோ" என்று ஒருபுறம், ஐயோ அய்யயோ" என்று மற்றொரு புறம்.. ஆனால் விமர்சனங்களையும் தாண்டி ‘போட்ட முதலுக்கு’ நியாயம் செய்தது பாலாவின் பரதேசி...
சமீப காலமாக தமிழ்த் திரையுலகில் நிலவும் இன்னொரு முக்கிய சர்ச்சையான ‘தியேட்டர் அரசியல்’ இந்த வருடமும் இல்லாமல் இல்லை. படங்களை சரியான நேரத்தில் வெளியிட முடியாமை, தியேட்டர் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் என்று படம் எடுப்பதையும் தாண்டி, படம் எடுப்பதைவிட அதிக சிக்கலும் சிரமமும் படம் வெளியிடுவதில் இருந்ததைக் கண்கூடாக இந்த வருடம் காணமுடிந்தது. பல படங்கள் வெளியிடப்படாமல் தள்ளிப்போடப்பட்ட சம்பவங்கள் இந்த வருடமும் நடந்தது. கடைசி நேரத்தில் டிசம்பரில் மட்டும் 22 படங்கள் வெளியிட தியேட்டருக்காக அலைந்தன.
சர்ச்சைக்குள்ளான ‘விஸ்வரூபம்’,‘தலைவா’ போன்ற படங்கள் இந்த வருடத்தின் சினிமா அரசியல்" பகுதியில் இடம்பிடித்தன. இதுவும் நம் கலாசார மரபுகளில் ஒன்றே...
ஹிட்டான ரிங்டோன்!
பேருந்துகளிலும், ரயில்களிலும், ரிங்டோனிலும் கேட்கும் சத்தங்களின் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது இந்த வருடம் ஊதா கலரு ரிப்பன்", காசு பணம் துட்டு மணி மணி" சுமாக்கிற சோமாரி ஜமாயக்கிராடா" "FY FY FY கலாய்ச்சி FY” போன்ற பாடல் வரிகளே மக்கள் மனத்தில் அதிகம் இடம்பிடித்தன என்று அறுதியிட்டுச் சொல்லலாம்.
கலைஞர்கள் இறப்பு அதிகம்!
டி.எம்.எஸ், பி.பி.எஸ், வாலி போன்ற மாபெரும் சகாப்தங்களின் மறைவும், மணிவண்ணன் என்னும் தமிழ் உணர்வு மிக்க கலைஞனின் இழப்பும் மஞ்சுளா விஜயகுமார், திடீர் கண்ணையா, மாஸ்டர் ஸ்ரீதர் போன்ற நடிகர்கள் இழப்பும் இந்த வருடசோகங்கள். ‘பாசவலை’, ‘நல்லவன் வாழ்வான்’ போன்ற படங்களில் நீங்கா இடம்பிடித்த பல பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரரான கவிஞர் ஆத்மநாதன் மறைவு பெரும்பான்மையான தமிழர்களுக்குத் தெரியாமல் போனது அதனினும் சோகம்.
பெரும்பாலும் ‘நான் என்ன நினைக்கிறேன்னா’ என்னும் அளவிலேயே இந்த வருட சினிமா விமர்சனங்கள் பத்திரிகைகளிலும் இணையத்திலும் தெரிந்தன. இதில் பாதிப்படம் பார்த்துவிட்டு ‘திரைக்கதைச் சிக்கல்கள்’ பற்றியெல்லாம் விரிவாக விளக்கிய காமெடிகளும் உண்டு... அவற்றை ‘சுயகருத்துக்கள்’ என்ற தலைப்பில் செய்வது உத்தமம். அதில் இந்தக் கட்டுரையையும் (பாயிண்ட்டுகள்) சேர்த்துக் கொள்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை.
அரவிந்த் யுவராஜ்
No comments:
Post a Comment