செஸ்ஸில் புதிய சகாப்தம் தொடங்கியிருக்கிறது. செஸ் வரைபடத்தில்
நார்வேக்கும் ஓர் இடம் கிடைத்திருக்கிறது. 22 வயது கார்ல்சன் புதிய உலக
சாம்பியனாகியிருக்கிறார். 2007லிருந்து உலக சாம்பியனாக
இருந்த விஸ்வநாதன் ஆனந்த்தை அவருடைய சொந்த மண்ணில் தோற்கடித்து, தன்னிகரற்ற
வீரராக விளங்குகிறார் கார்ல்சன்.
ஆரம்பத்தில், யார் உலக சாம்பியன் என்பதில் கடும் விவாதங்கள் நடைபெற்றன.
‘கார்ல்சன் மாதிரி வராது, கோட்டையைத் தகர்க்கப் போகிறார்’ என்று பலரும்,
‘ஆனந்த்தை உலக சாம்பியன்ஷிப்
போட்டிகளில் ஜெயிப்பது அவ்வளவு சுலபமில்லை. தான் பெரிய லெஜண்ட் என்பதை
மீண்டும் நிரூபிக்கப் போகிறார்’ என்று ஆனந்த் ரசிகர்கள் பட்டாளமும்
ஆட்டத்தின்
முடிவை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், ஆனந்த் ஒரு
மேட்சில் கூட ஜெயிக்காமல் தோற்றுப்போனது அவருடைய ரசிகர்களுக்கு மிகுந்த
ஏமாற்றமாகப் போய்விட்டது. செஸ்ஸில்
இனி புதிய தலைமுறையின் ஆட்சிதான் என்பதை அழுத்தம் திருத்தமாக
நிரூபித்துள்ளார் கார்ல்சன்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்காகத் தமிழக அரசு ரூ. 29 கோடியைச் செலவு
செய்துள்ளது. உலக அளவிலுள்ள மிக முக்கிய செஸ் பிரமுகர்களெல்லாம் சென்னைக்கு
வந்திருந்தார்கள். இந்தப் போட்டி
சென்னையில் நடந்ததன் மூலமாகத் தமிழ்நாட்டின் செஸ் வளர்ச்சியை அனைவரும்
அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. மாஸ்கோவுக்கு இணையாகச்
சென்னையிலும் ஏராளமான, தரமான செஸ் வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை சர்வதேச
மீடியா பதிவுசெய்துள்ளது.
கார்போவ், காஸ்பரோவுக்குப் பிறகு ஆனந்த், கிராம்னிக், டொபலோவ், கெல்ஃபண்ட்
போன்ற வீரர்கள் முன்னணி வீரர்களாக இருந்தார்கள். இவர்களில் ஆனந்தும்
கிராம்னிக்கும் மற்றவர்களைத்
தாண்டிச் சென்றார்கள். அதிலும் ஆனந்த், ‘2000ல் ஆரம்பித்து அடுத்த 13
வருடங்களுக்கு அதிகமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர்’ என்கிற பெருமையை
அடைந்தார்.
இப்போது அந்தத் தலைமுறையைத் தாண்டிச் சென்று, புதிய வளையத்தை
உருவாக்கியிருக்கிறார் கார்ல்சன்.
கார்ல்சனின் செஸ் வாழ்க்கையில் இதுவரை முடியாதது என்று ஒன்றில்லை. 12
வயதில் செஸ், கால்பந்து ஆகிய இரண்டிலும் ஈடுபாடு அதிகமிருந்தபோது செஸ்தான்
இனி
என்று முடிவெடுத்தார். 16 வயதில் ‘பள்ளிக்குச் செல்லமாட்டேன் செஸ்தான்
முக்கியம்’ என்று பெற்றோரிடம் சொன்னார். 13 வயதில் கிராண்ட் மாஸ்டர், 19
வயதில் உலகின்
நெ.1 வீரர், 22 வயதில் உலக சாம்பியன் என்று சரியாகத் திட்டுமிட்டு
வென்றிருக்கிறார். இத்தனைக்கும் நார்வே, செஸ்ஸில் ஆர்வம் உள்ள நாடு
கிடையாது. எப்படி இந்தியாவுக்கு ஒரு
ஆனந்தோ அதுபோல நார்வேக்கு ஒரு கார்ல்சன் என்கிற பெருமை அவருக்கு இப்போது
கிடைத்திருக்கிறது.
போட்டியின் 10வது ஆட்டத்தில் கார்ல்சன் டிரா செய்தாலே உலக
சாம்பியனாகிவிடலாம் என்கிற நிலையிலும் சுலபமாக டிராவுக்கு ஒப்புக்கொள்ளாமல்
கடைசிவரை
முயற்சி செய்தபிறகே ஆட்டத்தை டிரா செய்தார். இறுதிப் போட்டியில் செகண்ட்ஸ் என்றழைக்கப்படும் பயிற்சியாளர்களின்
உதவியில்லாமல் (ஒருவர் இருந்திருக்கிறார். ஆனால் அவர் சென்னைக்கே
வரவில்லை.) ஜெயித்திருக்கிறார்
கார்ல்சன். செஸ் வரலாற்றில் ஃபிஷர்கூட இப்படிச் செய்ததில்லை. அருமையான
தொடக்கம்தான். செஸ் ஆட்டத்தின் அடிப்படை என்கிற விதியை மாற்றி இறுதி
ஆட்டத்தில்
திறமையை வெளிப்படுத்துவதில் நிபுணராக இருக்கிறார். இதனால்தான் இந்தப்
போட்டியில், பாதி ஆட்டங்களில் ‘டிரா அல்லது ஆனந்த் ஜெயிக்கக்கூடும்’ என்கிற
கணிப்புகளை
உடைத்து மூன்று வெற்றிகளைப் பெறமுடிந்தது. தொடக்க ஆட்டமும் வலுவாக
அமைந்துவிட்டால் கார்ல்சனை யாராலும் அசைக்கமுடியாது என்று
மதிப்பிடுகிறார்கள் செஸ் நிபுணர்கள். மீடியா, கார்ல்சனை ‘மொசார்ட் அஃப்
செஸ்’ என்று
வாழ்த்துகிறது. காஸ்பரோவ் 45 வயது வரை ஆடினார். கெல்ஃபண்ட் 45 வயதிலும் தரவரிசைப்
பட்டியலில் ஆனந்துக்கு முன்னால் இருக்கிறார். ஆனால் கடந்த 6 வருடங்களில் 5
உலக சாம்பியனுக்கான
போட்டியில் ஆடியதால் இதற்கு மேலும் ஆனந்தால் உற்சாகமாக ஈடுபடமுடியுமா
என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ‘இரண்டு வாரங்கள் கழித்து
லண்டன் கிளாசிக் போட்டியில்
ஆடுவேன். பிறகு, பிப்ரவரியில் ஜூரிச் போட்டியில் ஆடுவேன். மார்ச்சில்
நடக்கும் கேண்டிடேட்ஸில் (அடுத்த வருட உலக சாம்பியனுக்கான போட்டியில்
கார்ல்சனுடன் விளையாடுபவரைத் தேர்ந்தெடுக்கும் போட்டி) ஆடுவேனா என்று
முடிவு செய்யவில்லை’ என்கிறார் ஆனந்த்.
சொந்த மண்ணில், ரசிகர்கள் முன்னால் தோற்றுப்போனதற்கு மிகுந்த வருத்தம்
தெரிவித்தார். ‘என் அம்மா சிறிய வயதில் போட்டிகளுக்கு அழைத்துச்
சென்றதுபோல, பெற்றோர்கள் தங்கள்
பிள்ளைகளை அழைத்து வந்து இறுதிப் போட்டியைப் பார்த்தது நெகிழ்ச்சியாக
இருந்தது. பல மேட்சுகளில் என் முதல் மூவ்களுக்கு கைதட்டினார்கள். ரஷ்யா
மற்றும்
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டும்தான் இப்படி காய் நகர்த்தல்களுக்கு
மக்கள் கைதட்டுவார்கள். நான் நிச்சயம் செஸ்ஸை விட்டு விலக மாட்டேன்’ என்று
உறுதியளிக்கிறார் ஆனந்த்.
‘ஆனந்துடன் விளையாடியும் பயிற்சிகள் எடுத்தும் நிறைய கற்றுக்
கொண்டிருக்கிறேன். இப்போது அவருக்குக் கற்றுத்தரும் நேரமிது’ என்று உலக
சாம்பியனாக முடிசூட்டிக்கொண்ட
பிறகு பேட்டியளித்தார் கார்ல்சன். ‘இளவயது என்பதால் கார்ல்சன் எதற்கும்
பயப்படுவதில்லை. இரண்டு தோல்விகள் ஏற்பட்டாலும் கூட, அடுத்தநாள் அதிரடியாக
ஆடி ஜெயிப்பார். மற்றவர்களைப் போல
ஒரு தோல்வியில் துவண்டு விடமாட்டார்’ என்கிறார் கார்ல்சனின் முன்னாள்
பயிற்சியாளர் சிமென்.
ச.ந.கண்ணன்
No comments:
Post a Comment