இதை நீங்கள் படிக்கும்போது, விஜய்காந்தின் தே.மு.தி.க.வுக்கு தில்லி
சட்டமன்றத் தேர்தலில் டிபாசிட்டாவது கிடைத்ததா இல்லையா என்பது தெரிந்து
போயிருக்கும். அல்லது போட்டியிட்ட ஒவ்வொரு
தொகுதியிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தால் வேறு எந்தக் கட்சியின்
வெற்றி வாய்ப்பை அது கெடுத்தது என்று கூட ஆராயலாம். தப்பித் தவறிக் கூட
ஏதேனும் ஒரு
தொகுதியிலேனும் வெற்றியே பெற்றிருந்தது என்றால், அது அரவிந்த் கேஜரிவாலின்
ஆம் ஆத்மி கட்சி அரசியலில் ஏற் படுத்தியிருக்கும் சலசலப்பை விட பெரிய
சாதனையாக
இருக்கும். நிச்சயம் அப்படி எல்லாம் எதுவும் நடந்துவிடப் போவதில்லை.
ஆனால் தமிழ்நாட்டில் ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பாத
தே.மு.தி.க தில்லி சட்டமன்றத்துக்குப் போட்டியிடுவது ஏன் என்ற கேள்வி
முக்கியமானது. அங்கே மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 11 தொகுதிகளில்
தே.மு.தி.க போட்டியிடுகிறது. ஆட்சியைப் பிடிக்கும் ஆசையோ, நோக்கமோ நிச்சயம்
இல்லை. இருந்தால் இன்னும் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும்.
தில்லிவாழ் தமிழர்கள்
நலனைப் பாதுகாப்பதற்காகவே போட்டியிடுவதாக விஜய்காந்த் சொல்லியிருக்கிறார்.
அவர் கட்சியின் கணக்குப்படி தில்லியில் 15 லட்சம் தமிழர்கள்
வாழ்கிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் குடிசைப்பகுதிகளில்
இருக்கிறார்கள். இன்னொரு கணிசமான பிரிவினர்
நடுத்தர வகுப்பினர். தில்லி குடிசைப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் நலனில்
அங்கே இருக்கும் எந்தப் பெரிய கட்சியும் அக்கறை காட்டவில்லை என்பதால்
தங்கள் கட்சி களம் இறங்கியிருப்பதாக
விஜய்காந்த் சொல்லியிருக்கிறார். பெங்களூரு, மும்பை நகரங்களில் வாழும்
தமிழர்கள் நலனில் கூடத்தான் அங்கிருக்கும் பெரிய கட்சிகள் அக்கறை
காட்டுவதில்லை. அங்கெல்லாம் சென்று போட்டியிடாத தே.மு.தி.க., தில்லிக்குச்
சென்றது ஏன்?
ஒரு கருத்தின்படி காங்கிரஸ் கட்சிக்கு உதவுவதற்காகவே விஜய்காந்த் இதைச்
செய்திருக்கிறார் என்று கருதலாம். கடும் விலைவாசி உயர்வினால் தில்லி
காங்கிரஸ்
ஆட்சிக்கு எதிரான அதிருப்தி நிலவும் சூழலில் காங்கிரசுக்கு எதிரான
வோட்டுகளைப் பிரியச் செய்வதுதான் காங்கிரசுக்கு லாபமாக இருக்க முடியும்.
ஏற்கெனவே ஆம் ஆத்மி
கட்சி இப்படி தனக்கு வரவேண்டிய காங்கிரஸ் எதிர்ப்பு வோட்டுகளைப்
பிரிக்கிறது என்றுதான் பி.ஜே.பி. அதன் மீது கடும் கோபத்தில் இருக்கிறது.
நடுத்தர வகுப்பு, புதிய இளம் வாக்காளர்கள்
வோட்டுகள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஓரளவு செல்லக்கூடும். ஒரு திரளாக இன்னும்
கொஞ்சம் வாக்குகளைப் பிரிப்பது என்றால், அதை, மத, சாதி, மொழி
அடிப்படையில்தான் திரட்டிப் பிரிக்க
முடியும். தமிழர்கள் வோட்டுகளை, குறிப்பாக குடிசைத் தமிழர்கள் வோட்டுகளை
விஜய்காந்தால் பிரித்துக் காட்ட முடிந்தால் அது காங்கிரசுக்கு லாபம்தான்.
இப்படி தம் செல்வாக்கை தில்லி தமிழர்களிடமே செய்து காட்டினால், அடுத்து
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தம்முடன் கூட்டணி அமைக்க
முன்வரச் செய்யவும் அப்போது அதனிடம் பேரத்தில்
அதிக இடங்கள் கேட்கவும் தோதாக இருக்கும் என்பது விஜய்காந்தின் கணக்கு
என்பது இந்தப் பார்வை. ஏற்கெனவே அதற்கான ரகசியமான உடன்பாடு வந்துவிட்டதன்
விளைவாகக் கூட இந்தப்
போட்டியிடுதல் நிகழலாம்.தில்லியில் விஜய்காந்துக்கு அப்படி என்ன செல்வாக்கு இருக்க முடியும்? அங்கே
குடியேறியிருக்கும் ஏழை, கீழ் நடுத்தர வகுப்புத் தமிழர்கள் பெருவாரியாக
தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து சென்றவர்கள். அதனால்
அவர்கள் மத்தியில் மதுரைக் காரனாகிய தமக்கு ஈர்ப்பு இருக்கலாம் என்று
கருதியிருக்கலாம். இதை விட முக்கியமாக, தில்லியில் இருக்கும் தமிழர்கள்
இதுவரை தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. என்று கட்சி
வாரியாகப் பெருமளவில் பிரிக்கப்படவில்லை. அவர்கள் மத்தியில் பெரிய அளவில்
நுழைய முயற்சிக்கும் முதல் தமிழகக் கட்சி தே.மு.தி.க.தான்.
ஆனால் கர்நாடகத்தில் இருக்கும் பெங்களூருவிலும், மகாராஷ்டிரத்தில்
இருக்கும் மும்பையிலும், தி.மு.க., அ.இ.அ.தி. மு.க. கட்சிகள் பல
வருடங்களாகவே தங்களுக்கு
அமைப்புகளை நடத்தி வருகின்றன. அவ்வப்போது உள்ளாட்சித் தேர்தல்களிலும்
சட்டமன்றத் தேர்தல்களிலும் கூடப் போட்டியிட்டு வருகின்றன. உள்ளூரின்
பிரதானக் கட்சி
ஏதேனும் ஒன்றுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடுவதே அங்கே அவற்றின் வழக்கம்.விஜய்காந்தின் கணக்கு அவருக்கு உதவுமா, காங்கிரசுக்கு உதவுமா, அல்லது
யாருக்குமே உதவாத கணக்கா என்பது இதை நீங்கள் படிக்கும்போது
தெரியவந்துவிடும். தொகுதிக்கு ஆயிரம் வாக்குகள் பெற்று
படுதோல்வி அடைந்திருந்தால் கூட, இதற்கு முன் தமிழகக் கட்சிகள் யாரும் இங்கே
இதைக் கூட செய்து பார்த்ததில்லை என்ற சாதனை அவரால் முன்வைக்கப்படும்.இந்த விஷயத்தில் தே.மு.தி.க.வின் வியூகம், இப்போதைய தேர்தல் சூழல்
இவற்றுக்கு அப்பாற்பட்டு இருக்கும் தொலைநோக்கிலான ஓர் முக்கிய அம்சத்தைப்
பார்ப்போம். இந்தியாவுக்குள் பல்வேறு
மாநிலங்களில் இன்று தமிழர்கள் சென்று வாழ்கிறார்கள். இதே போல
தமிழகத்துக்குள் பிற மாநிலத்தினர் பலர் வந்து வசிக்கிறார்கள். இப்படிப்
புலம் பெயர்ந்து வாழும் வாழ்க்கையில் அவர்களுடைய
நலன்கள் குடிபெயர்ந்த இடத்தில் பாதுகாக்கப்பட வேண்டும். அதை எப்படிச்
செய்வது என்பதுதான் கேள்வி.குடிபெயர்ந்த இடத்தில் தமிழர்களின் அடிப்படைத் தேவைகள் என்ன என்று
பார்த்தால், தாய்மொழிக் கல்விக்கான வாய்ப்பு, வேலை, குடியிருப்பு,
மருத்துவம் முதலியவற்றில் பாரபட்சமற்ற சமவாய்ப்பு ஆகியவை என்று சொல்லலாம்.
இவை அனைத்தையும்
அந்தந்த மாநில அரசின் வாயிலாகவே உறுதி செய்ய முடியும். கடந்த காலங்களில்
பெங்களூருவிலும் மும்பையிலும், தில்லியிலும் உருவான பல தமிழர் சங்கங்கள்
தேர்தல் அரசியலில்
பங்கேற்காமல் அதற்கு வெளியே பொது அமைப்பாக நின்றே இவற்றை பெற முயற்சித்து
வந்திருக்கின்றன. உள்ளூர் மக்களுடன் ஒட்டாமல் வாழ்வதும் கூடாது என்று
நம்மவருக்கு அறிவுறுத்தவும்
இவை முயற்சித்திருக்கின்றன. பெங்களூரு தமிழ்ச் சங்கம் பல்லாண்டுகளாக அங்கே
புதிதாகக் குடியேறும் தமிழர்களுக்குக் கன்னடம் கற்பிக்கும் வகுப்புகள்
நடத்தி வருகிறது. (இப்போது தமிழும் கற்பிக்கும்
வகுப்புகள் தேவைப்படலாம் என்பது இன்னொரு கதை.) ஆனால் இதில் பெரும்பாலான அமைப்புகள் (எல்லோரும் அல்ல) பொழுதுபோக்கு,
கேளிக்கை நிகழ்வுகள், பண்டிகைத் திருவிழாக்கள், இலக்கிய நிகழ்ச்சிகள்
முதலியவற்றை மட்டுமே
நடத்தும் அமைப்புகளாகக் குறுகிப் போய்விட்டன. அன்றாட தமிழர் வாழ்வின்
அவசியங்களுக்கு சமவாய்ப்பை உறுதி செய்யும் அம்சங்களில் கவனம்
செலுத்தவில்லை. மெல்ல மெல்ல இவை தனி நபர்களின்
விருப்புவெறுப்பு மட்டுமன்றி வர்க்க அடிப்படையிலும் சாதி அடிப்படையிலும்
கூடப் பிரிந்து சின்னச் சின்ன அமைப்புகளாகவும் ஆகிவிட்டன. தமிழகத்தில்
கட்சிரீதியாகப் பிரிந்திருப்பதைப் போலவே புகலிடங்களிலும்
பிரிந்திருப்பதை திராவிடக் கட்சிகள் ஏற்கெனவே செய்து வந்துள்ளன.
(மும்பையில் தமிழர்களுக்கு எதிராக சிவசேனை தன் கொடூர முகத்தைக் காட்டிய
காலத்தில்
மட்டுமே வரதாபாய் போன்ற எதிர்வினைகள் உருவாகின.)இதன் விளைவாக இன்று தமிழர்கள் கணிசமாக வாழும் எந்த வேற்று மாநிலத்திலும்
அங்கிருக்கும் தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காக அரசிடம்
நிர்வாகத்திடம் செல்வாக்குடன் பேசித் தீர்வுகளை
உருவாக்கக் கூடிய ஒற்றைத் தமிழர் அமைப்பு எந்த நகரிலும் இல்லை. அதனால்தான்
மும்பையிலோ தில்லியிலோ பெங்களூருவிலோ அரசு உதவியுடன் நடந்த தமிழ்ப்
பள்ளிகள்
குறைந்து கொண்டே வருகின்றன. இதற்கு ஒற்றை வலிமையான குரலாக ஒலிக்கும்
முயற்சி ஏதும் அங்கெல்லாம் இல்லை. தனித்தனிக் குழுக்களின்
முணுமுணுப்புகளோடு முடிந்துபோய் விடுகின்றன.
தமிழ்நாட்டுக்குள்ளேயே முல்லைப் பெரியாறு, காவிரிப் பிரச்னை, அணுஉலை
எதிர்ப்பு போன்றவற்றுக்குக் கட்சி, சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்று சேர
வேண்டிய அவசியம் இருந்தும் நடப்பதில்லை.
இந்தப் பிரிவினையை சிறுபான்மையினராக தமிழர் இருக்கும் புகலிடங்களிலும்
கட்சி, சாதி அடிப்படையில் நீட்டிப்பதால் அங்குள்ள தமிழருக்கு எந்த
விமோசனமும் கிட்டாது. தமிழர்கள் கணிசமாக வாழும்
ஒவ்வொரு மாநிலத்திலும் பெருநகரிலும் சிதறிக் கிடக்கும் தமிழர் சங்கங்கள்,
அமைப்புகள் எல்லாம் தங்கள் தனி அடையாளங்களை அவ்வளவு எளிதில் விட்டுவிட்டு
ஒருங்கிணையமாட்டார்கள். எனினும் பொது நோக்கங்களுக்காக வேனும் ஒற்றைக்
கூட்டமைப்பாக செயல்படுவது அவசியமாகிறது. குறைந்தபட்சப் பொதுத்திட்ட
அடிப்படையில் ஆங்காங்கே இப்படித் தமிழர் கூட்டமைப்புகள் பிற மாநிலங்களில்
அமைந்தால், அவை தமிழகக் கட்சிகள்
அமைப்புகளுக்கே வழிகாட்டியதாக இருக்கும்.
விஜய்காந்தின் தில்லி முயற்சி அவரது அரசியலுக்கே எந்த அளவு உதவும்
என்பது சந்தேகம்தான். நிச்சயம் தில்லி தமிழர் நலனுக்கு உதவாது. அவரை
அடுத்து பிற
கட்சிகளும் அங்கே போய் தமிழரைப் பிரிக்கும் ஆபத்தே உள்ளது.
No comments:
Post a Comment