ராமேஸ்வரம் - காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை அனைத்து இந்தியர்களுக்கும்
புனித கே்ஷத்ரம். இங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில்தான் ஸ்ரீ ராமபிரான்
ராவணனை வதம் செய்தபின் சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்பது
ஐதிகம்.
இங்கு அக்னி தீர்த்தத்தில் ஆரம்பித்து நகுல தீர்த்தம், சகாதேவ தீர்த்தம்,
திரௌபதி தீர்த்தம், ஹனும குண்ட தீர்த்தம், நாகதீர்த்தம், அகஸ்திய
தீர்த்தம், லக்ஷ்மண தீர்த்தம், ராம தீர்த்தம்,
அமிர்தவாபி தீர்த்தம், ரண விமோசன தீர்த்தம், மங்கல தீர்த்தம், சுக்ரீவ
தீர்த்தம், அங்கத தீர்த்தம், ஜாம்பவ தீர்த்தம் என்று 11 குளங்கள், நான்கு
கிணறுகள் மற்றும் சமுத்திர நீராடல் தலங்கள் உள்ளன.இவற்றில் சிலவற்றையே யாத்திரிகர்கள் பயன்படுத்துகின்றனர். பல கைவிடப்பட்ட
நிலையில் உள்ளன. குப்பைகளே எங்கும் நிறைந்திருந்தன. யாரும் பயன்படுத்த
முடியாத அளவுக்கு மாசு. இதைச் சீர்திருத்தும்
முயற்சியை கன்யாகுமரி விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி
செயல்திட்டம் மேற்கொண்டு இன்று பல தீர்த்தங்களை மீட்டிருக்கிறது.ஹனுமான் குண்ட தீர்த்தத்தில்தான் தூய்மைப்படுத்தும் பணியின் தொடக்கப்
பூஜைகள் செய்யப் பட்டன. புனித தீர்த்தங்கள் ஒவ்வொன்றும் மிக அழகாக
வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது அவற்றைச்
சீரமைக்கும் பணியில் களமிறங்கிய பின்னர் தெரிந்தது. ஒவ்வொன்றும் நம்
அலட்சியத்தால் அசுத்தங்களாலும் மது குப்பிகளாலும் நிரம்பியிருந்தன.
பல்லாண்டுகளாகச்
சுத்தப்படுத்தப்படாத அந்தத் தீர்த்தங்களை முட்மரங்கள் கவிந்து
மூடியிருந்தன.ஒவ்வொரு நாளும் உள்ளே இறங்கிச் சுத்தம் செய்யும் ஒரு சகோதரரின் கால்
மதுபாட்டில் ஒன்றால் கிழிபடும். மாசுகளால் காய்ச்சல் வரும். ஒரு கட்டத்தில்
உள்ளூர் ஆஸ்பத்திரிகளில் ‘என்ன தடுப்பூசி ஆட்களா?’ என்றே அன்புடன் கேட்க
ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் கவிந்திருந்த அத்தனை மாசையும் கஷ்டப்பட்டு
அகற்றி, தேங்கி அசுத்தமாகிவிட்ட நீரைச் சிரமத்துடன்
வெளியேற்றிய பிறகு உள்ளே நல்ல நீர் ஊறிக்கொண்டே இருப்பதைக் காண முடிந்தது.
நம் பாரதப் பண்பாட்டைப் போலவே," என்கிறார் இந்தச் செயல்களைக் களத்தில்
ஒருங்கிணைத்து வரும் சகோதரி சரஸ்வதி. இவர் விவேகானந்த கேந்திரத்தின்
முழுநேர ஊழியர். இதே கதைதான் மீண்டும் திரௌபதி தீர்த்தத்திலும். அங்கு விவேகானந்த
கேந்திரத்தினர் செல்வதற்கு முன்னால் அந்தத் தீர்த்தத்தின் அடிப்பகுதி
ஏறக்குறையத் தகர்ந்திருந்தது. முழுக்க
முழுக்க மதுபானக் குப்பிகள், அசிங்கமான மாசு தேங்கி நோய் உருவாக்கும்
தண்ணீர். இன்றோ அந்தத் தீர்த்த நீரில் உள்ளூர்ச் சிறுவர்கள் தாவி ‘டைவ்’
அடித்து நீச்சல் பழகும்படி அழகிய நன்னீர். நகுலசகாதேவ தீர்த்தங்களில்
நன்றாகத் தூர்வாரி சுற்றுப்புறத்தைச் சரிசெய்து அருமையான ஒரு தீர்த்தமாக
அவை மாற்றப்பட்டுள்ளன. ஜாம்பவான் தீர்த்தமும் அங்கத தீர்த்தமும் கிணறுகள்.
அவை பாழடைந்து கிடந்தன.
இப்போது அவை புதுப்பொலிவுடன். இவற்றின் சுற்றுச்சுவர்கள் சரி
செய்யப்பட்டுள்ளன. மங்கல தீர்த்தமும் ருண விமோசன தீர்த்தமும் ராமேஸ்வரத்துக்கு நுழையும்
பாதையிலேயே இருக்கின்றன. முழுக்க கைவிடப்பட்ட நிலையில் இருந்த இவை இன்று
சுத்தமான நீருடன் அல்லிகள் திரும்பப் பூக்க, மீண்டும் மீன்கள் துள்ளி
விளையாடும் நீர்நிலைகளாகியுள்ளன. ருண விமோசன தீர்த்தத்தின் அருகே ஒரு சிறிய
ஆலமரம்
துளிர்விட்டு நிற்கிறது. கோயிலின் அருகே எளிய டீக்கடை வைத்திருக்கும்
முதியவர் ஒருவர் அவரே முன்வந்து இந்த ஆலமரக் கன்றைப் பராமரித்து வருகிறார்.
தீர்த்தங்கள் இப்போது உண்மையிலேயே அர்த்தமுள்ளதாகிவிட்டன!
No comments:
Post a Comment