இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகளைக் கொண்டிருப்பதும் அதிக அளவில் பொறியியலாளர்களை
உருவாக்கிக்கொண்டிருப்பதும் தமிழ்நாடுதான். எப்படியாவது தங்கள் வாரிசுகள் பி.இ. படித்து ஒரு நல்ல வேலையில் சேரவேண்டும் என்பது பல
தமிழ்க் குடும்பங்களின் கனவு. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிவரும் புள்ளிவிவரங்கள் தரும் தகவல்கள் பி.இ. படித்தவர்களுக்கு
நல்ல எதிர்காலம் இல்லையோ என்ற அச்சத்தை எழுப்புகிறது.
கடந்த சில ஆண்டுகளைவிட இந்தாண்டில் +2வில் பெரும்பாலான மாணவர்கள் சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர். பள்ளிகள்
பெருமிதத்திலும் பெற்றோர்களும் சந்தோஷத்தில் பத்திரிகைகளுக்குப் பேட்டிகள் கொடுத்தனர். தமிழகமே பெருமைப்பட்டது.
ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புக்கு வந்திருக்கும்
விண்ணப்பங்கள் பெருமளவில் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டைவிட
இருபது சதவிகிதம் குறைவு. 2014ஆம் ஆண்டே அதற்கு முந்தைய ஆண்டைவிட பத்து
சதவிகிதம் குறைந்திருந்தது. கடந்தாண்டு விற்பனையான
விண்ணப்பங்கள் 2 லட்சத்து 12 ஆயிரம். மனுச் செய்தவர்கள் 1 லட்சத்து 70
ஆயிரம். நிரப்பப்படாமல் இருந்த காலியிடங்கள் 1 லட்சம். இந்த ஆண்டு
(2015) விண்ணப்பங்கள் விற்பனை 1 லட்சத்து 90 ஆயிரமாகக் குறைந்தது. மனுச்
செய்திருப்பவர்கள் 1 லட்சத்து 45 ஆயிரம் மட்டுமே. மனுச்செய்தவர்களில்
பலர் கலந்தாய்வில் பங்கேற்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கலந்தாய்வுக்குப் பின் காலியாக இருக்கப் போகும் இன்ஜினியரிங் சீட்டுகள்
1 லட்சத்து 20 ஆயிரமாக இருக்கலாம் என்பது நிபுணர்களின் கணிப்பு.
பல கோடி ரூபாய் முதலீடு செய்து கல்லூரி வளாகங்களைப் பிரம்மாண்டமாக உருவாக்கி பல லட்சங்களில் நன்கொடை பெற்று சீட்டுகளை
ஒதுக்கிய கல்லூரிகள் இன்று அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணத்திலேயே மாணவர்களைச் சேர்க்கத் தயாராகக் காத்திருக்கின்றன. ஆனால்,
மாணவர்கள் சேருவதில்லை
நல்ல மதிப்பெண்கள் இருந்து, கலந்தாய்வில் அரசுகோட்டாவில் இடம் கிடைத்தாலும், மாணவர்கள் கணிப்பில் அந்தக் கல்லூரி, நல்ல கல்லூரி
இல்லையென்றால் அதில் சேர விரும்புவதில்லை. பொறியியல் கல்வியில் உயர்ந்த தரம், கேம்பஸ் தேர்வில் பங்கேற்க வரும் நல்ல நிறுவனங்கள்
போன்றவற்றினால் மட்டுமே ஒரு பொறியியல் கல்லூரியின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.
அதனால்தான் நல்ல மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்கள் கூட, நன்கொடை கொடுத்து
நிர்வாக கோட்டாவில் குறிப்பிட்ட சில கல்லூரிகளில்
சேர விரும்புகின்றனர். படிப்புக்குப் பின் நல்ல வேலை என்பதை குறிக்கோளாகக்
கொண்டிருக்கும் மாணவர்கள் தங்களின் கட்-ஆஃப் மார்க்குக்கு
கலந்தாய்வில் முதல் தரமான கல்லூரிகளில் அரசுகோட்டாவில் இடம் கிடைக்காது
என்பதை கணித்தபின் கலந்தாய்வில் பங்கேற்பது அவசியமில்லை
என விட்டு விடுகின்றனர்.
அதாவது எப்படியாவது பி.இ. படித்தாக வேண்டும் என்ற நிலையிலிருந்து நல்ல தரமான கல்விக்கும் வேலைக்கும் வாய்ப்புள்ள கல்லூரியில் இடம்
கிடைக்காவிட்டால் பொறியியல் படிப்பே வேண்டாம் என மாணவர்கள் ஒதுங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் 552 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர்களின் தகுதி, உள்கட்டுமானம், இதர வசதிகள்
போன்றவற்றின் அடிப்படையில் தரப்பட்டியலும் இடப்பட்டிருக்கிறது. ஆனால், மாணவர்கள் இதைத் தவிர பல்வேறு அளவுகோல்களை அடிப்படையாகக்
கொண்டு ஒரு பட்டியலை வைத்திருக்கிறார்கள். அதில் முதலிடத்தில் இருப்பவை 30 கல்லூரிகளே. இதற்கு அடுத்த கட்டமாக இரண்டாம் நிலையில்
15 கல்லூரிகள். இவற்றில் சேரத்தான் மாணவர்கள் விரும்புகிறார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளில் அக்கல்லூரிகளில் படித்தவர்களுக்குக் கிடைத்த வேலைவாய்ப்பை வைத்து இப்பட்டியலை உருவாக்கி இருக்கிறார்கள்.
அதிகாரபூர்வமாக இல்லாவிட்டாலும் சமூக, நட்பு ஊடகங்கள் வழியாக இந்தப் பட்டியல் பகிரப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழகத்தின் கல்விச்சூழலில் ஏற்பட்டிருக்கும் மற்றொரு மாற்றம் அகில இந்திய அளவில் நடைபெறும் பொறியியல்
கல்வி நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் முந்தைய ஆண்டுகளைப்போல பெருமளவில் பிரகாசிக்கவில்லை என்பதுதான். பிளஸ் டூவுக்குப்பின்,
தமிழகத்துக்கு வெளியே அகில இந்திய அளவில் பொறியியல் படிக்க வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள பல
நுழைவுத்தேர்வுகள் இருக்கின்றன. அதில் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் படிக்க JEE என்ற
நுழைவுத்தேர்வு மிக முக்கியமானது. 13 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற இந்தத் தேர்வில் தேறிய 1.5 லட்சம் பேர் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு
முன்னேறியிருக்கிறார்கள்.
இந்தத் தேர்வில் தேர்வுபெற்ற தமிழக மாணவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்துகொண்டே வருகிறது. கடந்த ஆண்டு
தமிழகத்தில் தேர்வு பெற்ற மாணவர்கள் நான்காயிரம் மட்டுமே. ஆந்திரத்தில் 32 ஆயிரம், கர்நாடகத்தில் இதைவிட அதிகம்.
தமிழ்நாட்டில் ஐந்துவிதமான சிலபஸ்கள் இருக்கின்றன. அண்ணா
பல்கலைக்கழகத்துடன் இணைந்தது,
தன்னாட்சிப் பெற்றவை, அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சிப்
பெற்றவை, தனியார் சுயநிதிக் கல்லூரிகள் என பலவகைக் கல்லூரிகள்
வெவ்வேறு சிலபஸ்களுடன் இயங்குகின்றன. இதனால் தரம் ஒரே மாதிரியாக இருக்க
வாய்ப்பில்லை. இந்த வேறுபாடுகளைக் களைய மத்திய
அரசின் கல்வித்துறை முயற்சிகள் எடுத்து NPTEL(National Programme on
Technology Enhanced learning) என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறது.
ஆனால் பல கல்லூரிகள் அந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. இன்னும்
சொல்லப்போனால் பல கல்லூரிகளுக்கு இந்தத் திட் டம் பற்றித்
தெரியுமா என்பதே சந்தேகமாயிருக்கிறது.
மேலும் பல கல்லூரிகளில் திறமையான ஆசிரியர்கள் இல்லை. வேறு வேலை கிடைக்காததால் ஆசிரியரானவர்களே அதிகம். இவர்கள் பள்ளிகளில்
இறுதித்தேர்வுக்கு மாணவர்களைத் தயாரிப்பது போலவே கல்லூரியிலும் செய்கிறார்கள். அதனால் நமது மாணவர்கள் தேர்வுகளில் பாசானாலும்
நிறுவனம் எதிர்நோக்கும் திறன்கள் இல்லாமல், வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். அதைப் பார்க்கும் கிராமப்புற இளைஞர்கள் பி.இ.யைப்
படிக்கத் தயங்குகிறார்கள்.”
ஆண்டுக்கு சராசரியாக வெளிவரும் பொறியாளர்கள் 1.7 லட்சம்.
காம்ப்ஸ் இண்டர்வியூவில் வேலை பெறுபவர்கள் 32 ஆயிரம் பேர்கள்.
வேலையில்லாமல் காத்திருப்போர் 68 ஆயிரம் பேர்கள்.
No comments:
Post a Comment