Search This Blog

Tuesday, June 23, 2015

ஆனந்த ஸ்வரூபம்!


மநுஷ்யனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே, எதற்காக? ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான். வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை. அவற்றைப் பெறவே அலைகிறான். ஒன்று கிடைத்துவிட்டாலும் போதவில்லை. அதனால் வருகிற சுகம் தீர்ந்து போகிறது. இன்னொன்றுக்கு ஆசைப்படுகிறான். அதைத் தேடி ஓடுகிறான். இவனுக்கு சாந்தி என்பதே ஒரு நாளும் இல்லாமலிருக்கிறது.

வெளியில் இருக்கிற வஸ்து வந்தால்தான் சந்தோஷம், ஆனந்தம் என்று துரத்திக்கொண்டே இருப்பவனுக்கு சாந்தி எப்படி வரும்? வெளியில் இருப்பது நம் வசத்தில் இருப்பதல்ல. அது வந்தாலும் வரும், போனாலும் போகும். அதை நம் வசப்படுத்திக் கொண்டதாக நினைத்தபோதே கைவிட்டுப் போகக் கூடும். நமக்கு அன்னியமான வெளி விஷயங்களிலிருந்து ஆனந்தத்தைச் சாசுவதமாகச் சம்பாதித்துக் கொள்வது நடக்காத காரியம். அது சாந்தியைக் கெடுக்கிற பிரயத்தனம்தான்.

மநுஷ்யன் புறத்தில் ஆனந்தத்தைத் தேடிக் கொண்டு போவதற்குக் காரணம், அவன் உள்ளுக்குள்தானே ஆனந்த ஸ்வரூபமாக இருப்பதுதான். இவன் உள்ளூர ஆனந்த ஸ்வரூபமாய் இருப்பதாலேயே ஆனந்தத்தை எப்போது பார்த்தாலும் தேடிக்கொண்டு இருக்கிறான். மாயையால், தானே ஆனந்த ஸ்வரூபம் என்பதை மறந்துவிட்டிருக்கிறான். இருந்தாலும் இவனுடைய ஸ்வபாவமே ஆனந்தமானபடியால் இவனுக்கு ஆனந்தம் அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது.

மநுஷ்யர்களில் எவராவது ஆனந்தத்தைத் தேடாமல் துக்கத்தைத் தேடிப் போகிறவர்கள் உண்டா? ஆனாலும், அந்த ஆனந்தம் உள்ளே இருப்பதை அறிந்து சாந்தத்தில் அதை அநுபவிக் காமல், வெளியே ஆனந்தத் தைத் தேடித்துரத்திக் கொண்டே போய் சாந்தியை ஓயாமல் கெடுத்துக் கொள்கிறார்கள். தன் நிஜ ஸ்வரூபம் என்ன என்று ஒருவன் அம்பாளின் கிருபையால் பிரார்த்தித்து ஆத்ம விசாரம், தியானம் செய்து பார்த்தால், தானே பூரண ஆனந்த வஸ்து என்று தெரிந்து கொள்வான்.

No comments:

Post a Comment