மூன்று வயஸாவது பெரியவனாக இருப்பவனுக்குத்தான் பூமியில் விழுந்து நமஸ்காரம், மற்றவர்களுக்கு வேறே தினுஸில் ‘விஷ்’ பண்ணுவது என்பார்கள். முன்னேயே சொன்னாற்போல, விநயம் ரொம்பக் குறைந்து வருகிற இந்நாளில் நமஸ்காரப் பழக்கத்தை எவ்வளவு வ்ருத்தி செய்து கொடுத்தாலும் நல்லதுதான் என்பதால் குறைந்த பக்ஷம் மூன்று வயஸு ஜாஸ்தி இருக்கணும் என்பதைப் பார்க்கலாம். நம்மைவிடப் பெரியவர்களாக உள்ள எல்லாருக்குமே நமஸ்காரம் பண்ணிவிடலாமென்று தோன்றுகிறது.
கண்டிப்பான சாஸ்த்ர விதிப்படியேகூட நம்மைவிட வயஸில் சின்னவர்களாகவுள்ள சில பேருக்கும் நமஸ்காரம் பண்ண வேண்டுமென்று இருக்கிறது. உதாரணமாக, மன்னி வயஸில் சின்னவளாகவே இருந்தாலுங்கூட ஸ்தானத்தால் தாயார் மாதிரி என்பதால் நமஸ்காரம் பண்ணவேண்டும். அதே மாதிரிதான் குரு பத்னியும் ஒருவேளை நம்மைவிட வயஸு குறைவானாலும் நமஸ்கரிக்கணும். பொதுவாகவே கூட, நம்மைவிட வயஸில் பெரிய எவருடைய பத்னியும் அவரில் பாதி என்பதாலும், தம்பதி ஸமேதர்களாக நம்ஸ்கரிப்பது விசேஷம் என்பதாலும் அந்த ஸ்த்ரீகளுடைய வயஸைப் பார்க்காமல் விழுந்து நமஸ்கரிக்கணும்.
வித்யையில் பெரியவர், குணத்தில் பெரியவர், அநுபூதிமானாக இருப்பவர், பக்த ச்ரேஷ்டர்கள், ஞானிகள், ஸந்நி யாஸிகள், ஆத்ம ஸம்பந்தமான, தர்ம ஸம்பந்தமான ஸ்தாபனங்களில் ஆசார்ய ஸ்தானத்தி லுள்ளவர்கள் அதாவது பணம், பதவி, அந்தஸ்துகளால் இல்லாமல் வேறே விதங்களில் பெரியவர்களாக உள்ள எல்லோருக்குமே இந்த மூன்று வருஷ வித்யாஸம் கிடையாது. நம்மைவிட வயஸில் சின்ன வர்களானாலும் நமஸ்கரிக்கணும். குரு புத்ரனையும் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளணும்.
நிறைய பேரின் காலில் போய் விழ விழ அஹங்காரம் குறைந்து கொண்டே வரும் என்பதுதான் பொதுக் கொள்கை.
No comments:
Post a Comment