Search This Blog

Sunday, October 18, 2015

ஃப்ளிப்கார்ட், அமேசான்...பிசினஸ் மேஜிக்!

ஆடித் தள்ளுபடியும், தீபாவளி விற்பனையும்தான் ரீடெயில் நிறுவனங்களின் மிகப் பெரிய விற்பனை உத்திகள். அதேமாதிரி ஆன்லைன் நிறுவனங்களுக்கு அக்டோபர் மாதம்தான் ஹைலைட்டான விற்பனை மாதம்.  கல்லா கட்ட சென்ற ஆண்டு தீபாவளிக்கு முன் உருவாக்கப்பட்டவைதான் அமேசானின் ஃபெஸ்டிவ் சேல், ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே முதலியவை.

இவற்றின் சீசன் 2 விற்பனையை இந்த ஆண்டும் ஆரம்பித்தன அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள். அதோடு இந்த வருடம் ஸ்நாப்டீல் நிறுவனமும் அக்டோபர் 13-ம் தேதியை குறிவைத்து களத்தில் குதித்தது.


சென்ற வருடம் இணைய தளங்களில் மிகப் பெரும் ஆஃபர் முதன் முதலாக அறிவிக்கப் பட்டதால் விற்பனை பின்னியெடுத்தது. பல பொருட்கள் ஸ்டாக் இல்லை. ஆர்டர் செய்தவர்களுக்குப் பொருட்கள் வருவதில் தாமதம் ஆனது. பலருக்கு  ஆர்டர் செய்யாத பொருட்கள் வந்து சேர்ந்தது. இப்படி பல சொதப்பல்கள் அரங்கேறி, சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனங்களே இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு போனது.

கடந்த ஆண்டு நடந்த தவறுகள் எதுவும் இந்த வருடம் இருக்காது. அனைத்து பிரச்னைகளையும் சரி செய்துவிட்டோம் என்றுதான் களமிறங்கின ஆன்லைன் நிறுவனங்கள். அதோடு இணையதள வேகம் குறித்த கவலை வேண்டாம் என்றும் சொல்லப்பட்டன. மொபைலில் 2ஜி வேகம் இருந்தாலே ஆப்ஸ் மூலம் ஆஃபரை அள்ளிக் குவிக்கலாம் என்றன.

ஆப் ஒன்லி ஆஃபர் ஏன்? 

கடந்த ஆண்டு இணையதளத்தில் ஆஃபர் ஆசை காட்டிய ஆன்லைன் நிறுவனங்கள், இந்தமுறை ஆஃபர் இன் ஆப் ஒன்லி என்று சொல்லிவிட்டது. இந்த ஆப் ஒன்லி விற்பனை அறிவிப்புக்குப் பின்னால் மிகப் பெரிய விற்பனை உத்தியை ஆன்லைன் நிறுவனங்கள் வைத்துள்ளன. ஒரு நபர் ஆப்ஸை டவுன்லோட் செய்துவிட்டால், அவர்களை மீண்டும் தொடர்பு கொள்வது எளிது என்பது  ஆன்லைன் நிறுவனங்களுக்கு கிடைக்கும் முதல் செளகரியம். டிஜிட்டல் மார்க்கெட்டிங் உத்திகளில் முதன்மையான இந்த உத்தியை இந்த நிறுவனங்கள் நன்றாகவே புரிந்துவைத்துள்ளன.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட் போன் மூலமாகத்தான் இணையச் சேவையைப் பெறுகின்றனர் என்ற ஆய்வையும் இந்த நிறுவனங்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளன.

ஆஃபர்கள் எப்படி?

இந்த ஆண்டு நடந்த விற்பனையில் எந்தெந்த நிறுவனங்கள் என்ன மாதிரியான ஆஃபர்களை வழங்கின என்று பார்ப்போம். முதலில் .ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேவை எடுத்துக் கொள்வோம்.

வித்தியாசம் காட்டாத ஃப்ளிப்கார்ட்!

ஃப்ளிப்கார்ட்டை பொறுத்தவரையில், ஆப் ஒன்லி ஆஃபர்கள் என்பதில் தெளிவாக இருந்தது. அதோடு 5 நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒரு பிரிவில்தான் ஆஃபர் என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தது. ஃபேஷன், ஹோம் அப்ளையன்ஸ், மொபைல் என அனைத்துப் பிரிவுகளுக்கும் ஒவ்வொரு நாள் ஆஃபர் வழங்கியது. இதனால் எல்லா நாட்களிலும் பொருட்களை வாங்க போட்டி போடாமல், நமக்கு தேவையான பொருள் என்றைக்கு விற்பனை என்பதை அறிந்து அந்த நாளில் மட்டும் ஆர்டர் போட இது வசதியாக இருந்தது.

ஆனால், விலை விஷயத்தில் ஃப்ளிப்கார்ட்  பெரிய  ஆஃபர்களையெல்லாம் வழங்கவில்லை. சாதாரணமாக ஃப்ளிப்கார்ட்டில் நாம் வாங்கும்போது என்ன விலை இருக்குமோ, அதே விலையில்தான் ஆஃபர்களை வழங்கியது.

 அதேபோல் இணையதளத்தில் உள்ள அசல் விலை - ஆஃபர் விலைக்கு இடையேயான வேறுபாட்டுக்கும், ஆப்ஸில் இதே விலைகளுக்கு இடையேயான வேறுபாட்டுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை என்பது பலரது குற்றச்சாட்டாக இருந்தது.

சமூக வலைதளங்களிலும் ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே விற்பனை சுமார்தான் என்ற விமர்சனமே வைக்கப்பட்டது.

ஜஸ்ட் பாஸ் அமேசான்!

ஃப்ளிப்கார்ட்டைப் போல அல்லாமல், அமேசான் வேறு விதமான உத்திகளோடு களமிறங்கியது. ஆஃபர்கள் ஆப்ஸில் 15 நிமிடங்களுக்குமுன் கிடைக்கும் என்றும், அதன்பின் அதே ஆஃபர் இணைய தளங்களில் கிடைக்கும் என்றும் ஆஃபர் வழங்குவதில் புது  நியூட்ராலிட்டியைக் கடைப்பிடித்தது. ஆனால், ஃப்ளிப்கார்ட்டை போலவே விலைகளில் பெரிய அதிரடிக் குறைப்பு இல்லை.  பல பொருட்கள் ஸ்டாக் இல்லை. பெரிய பிராண்டுகளுக்கு ஆஃபர் குறைவாகவும், சிறு பிராண்டுகள் அதிக ஆஃபருடனும் வழங்கப் பட்டன.

அமேசான் ஆஃபர்களில் எலெக்ட்ரானிக் பொருட்கள் தவிர, மற்ற பொருட்களுக்குப் பெரிய ஆஃபர்கள் இல்லை. இருப்பினும், அமேசான் ஆஃபர்கள் ஏறக்குறைய சரியாகவே இருக்கின்றன என்கிற எண்ணத்தை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்திவிட்டது.

விலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த வில்லை. சில பொருட்கள் கிடைக்கவில்லை என்றாலும் அமேசானின் விற்பனை மக்களுக்கு திருப்தியை தந்துள்ளது. ஆஃபர் விற்பனையில் அமேசான் ஜஸ்ட் பாஸ் ஆனது.

மந்தமான ஸ்நாப்டீல்!

அமேசான், ஃப்ளிப்கார்ட் இரண்டு நிறுவனங்களும் 13-ம் தேதி விற்பனையைத் துவங்கும் என்பதால், சற்று முன்னெச்சரிக்கையாக 12-ம் தேதியே விற்பனையைத் துவங்கியது ஸ்நாப்டீல். அறிவிப்புகளின்போதே ஆஃபர் என்று சொல்லி, எலெக்ட்ரானிக் பொருட்களை ஆஃபரில் விற்க துவங்கியது.

 ஆனாலும் ஃப்ளிப்கார்ட், அமேசானின் விளம்பரங்களுக் குமுன் ஸ்நாப் டீலின் ஆஃபர்கள் சற்று மந்தமாக இருந்தது. மிகப் பெரிய உத்திகள் ஏதுமின்றி இருந்தாலும் குறைவான விலைதான் என்று சிலர் வாங்கிவிட்டார்கள்.

இன்னும் சிலரோ அடுத்து அமேசான், ஃப்ளிப்கார்ட்டை பார்ப்போம் என்று காத்திருந்தது ஸ்நாப்டீலுக்குச் சற்றுப் பின்னடைவுதான்.

ஆக மொத்தத்தில் மூன்று நிறுவனங்களும் சில பிளஸ், மைனஸ்களைக் கொண்டிருந்தா லும், சென்ற ஆண்டில் சில பல அதிரடி ஆஃபர்கள் என்று அறிவித்து அனைவரையும் கணினியில் கட்டி போட்டுவிட்ட மாதிரி இந்த வருடம் செய்யத் தவறிவிட்டன.

இந்த ஆஃபர்கள் சுமார் ரகம் என்பதால் பெரிய நகரங்களில் ரீடெயில் கடைகளில் இனி நிறைய கூட்டத்தை எதிர்பார்க்கலாம் என்ற கருத்து வலுத்திருக்கிறது.

ஆன்லைன் நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு பதிலடி தருகிற மாதிரி பெரிய ரீடெயில் நிறுவனங்களும் முன்னணி நடிகர், நடிகைகளைக் கொண்டு விளம்பரப்படுத்தி வருகின்றன. ஆன்லைன் ஆஃபரில் திருப்தி அடையாத வாடிக்கையாளர்களை கடைகளுக்கு இழுக்கும் முயற்சிகளை ரீடெயில் நிறுவனங்கள் இனி எடுக்கும் என்பதில் ஆச்சர்யமில்லை!

ச.ஸ்ரீராம்



No comments:

Post a Comment