Search This Blog

Wednesday, October 15, 2014

ஞானமலை

வேலூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் அருகில், கோவிந்தச்சேரி கிராமத்தில் உள்ள ஒரு மலையின்மேல் கல்வெட்டு ஒன்று காணப்பட்டதாக நாளேடுகளில் ஒரு செய்தி வெளியானது. 'காளிங்கராயன் என்பவன் இந்த ஞானமலைக்குப் படிகளை அமைத்தான்’ என்பதுதான் அந்தச் செய்தி. செய்தி வெளியான ஆண்டு 1998. மண்கொண்ட சம்புவராயர், முதலாம் ராஜநாராயணன், இரண்டாம் ராஜநாராயணன் ஆகிய அரசர்கள் காலத்தில் தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதிக்கு அதிகாரியாக இருந்தவன் இந்தக் காளிங்கராயன் (1322-1340).

1977ம் ஆண்டு தொடங்கி, இடைவிடாது நான்கு ஆண்டுகள் திருப்புகழ்த்தலங்களைப் பற்றித் தீவிரமாக ஆய்வு செய்தபோது, 'ஞானமலை’யின் இருப்பிடம் மட்டும் தெரியவரவில்லை. 

'முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச்சரவண...’ என்று முதலடி எடுத்துக் கொடுத்து அருணகிரிநாதரை ஆட்கொண்டான் கருணை முருகன். அங்கிருந்து புறப்பட்டு பல மலைகளையும், பல தலங்களையும் தரிசித்துவிட்டு, அருள் பெறும் நிலையில் ஞானமலைக்கு வருகிறார் அருண கிரியார். திருவண்ணாமலைக் காட்சிகள் அவரது நினைவுக்கு வருகின்றன. அங்கே உலகை வெறுத்து உயிரை விடத் தீர்மானித்தபோது, முருகப் பெருமான் திருவடி தரிசனம் தந்து ஆட்கொண்டான் அல்லவா? அந்தத் திருவடிக் காட்சிப் பேரருளை மீண்டும் ஞானமலையில் வேண்ட, அவ்வண்ணமே அவருக்கு யோகாநுபூதி அளித்து, பாத தரிசனம் அளிக்கிறான் ஞான பண்டிதன்.

'எமைமனம் உருக்கி யோக அநுபூதி அளித்த பாத
உமைபாலா எழுதரிய பச்சைமேனி
இமையவர் துதிப்ப ஞானமலையுறை குறத்தி பாக
இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே’

என்று அந்த அருள் அனுபவத்தை ஞானமலைத் திருப்புகழில் பதிவு செய்கிறார் அருணகிரியார். ஞானமலை ஞானபண்டிதனை வழிபட்டு அவனது பாத தரிசன அனுபவத்தை நாமும் பெற வேண்டும் அல்லவா?


ஞானமலை அடிவாரத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கும் ஞானசக்தி கணபதியை தரிசனம் செய்துகொண்டு, 150 படிகள் ஏறினால், அருணகிரிநாதர் யோகாநுபூதி மண்டபத்தில், கல்லால மரத்தடியில் காட்சியளிக்கும் ஞான தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். அங்கிருந்து கோயிலை அடைந்து, கொடிமரம் அருகில் வீழ்ந்து வணங்கி மகா மண்டபத்துக்குள் செல்லலாம். கருவறையில் ஞானகுஞ்சரி, ஞானவல்லி சமேத ஞானபண்டித சுவாமி அருட்காட்சி வழங்குகிறார். ஒருமுகம், நான்கு கரங்களுடன் பின் இருகரங்களில் கமண்டலம் ஜபமாலை ஏந்தியும், முன் வலக் கரம் அபய முத்திரையிலும், முன் இடக் கரம் இடுப்பிலும் கொண்டு நின்ற கோலத் தில் மிக அற்புதக் காட்சி! சிற்ப ஆகம நூல்கள் குறிப்பிடும் 'பிரம்ம சாஸ்தா’ வடிவம். பிரணவத்துக்குப் பொருள் தெரியாத பிரமனைக் குட்டி, சிறையிட்டு, சிருஷ்டித் தொழிலைத் தாமே மேற்கொண்ட (பிரமசாத்தன்  பிரமனைத் தண்டித்தவன் என்று பொருள்) அருட்கோலம்.

பல்லவர் காலம் மற்றும் முற்காலச் சோழர்கள் காலத்தில் தொண்டை மண்டலத்தில் அமைந்த பெரும்பாலான திருக்கோயில்களில் பிரம்ம சாஸ்தா வடிவமே காணப்படுவது குறிப்பிடத் தக்கது. சிற்ப அமைப்பைக் கொண்டு ஞானமலை ஞானபண்டிதன் திருக் கோலம் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெரிய வருகிறது.

தெற்குச் சுற்றில் அருணகிரிநாதருக்குக் காட்சியளித்த 'குறமகள் தழுவிய குமரன்’ வடிவம், வேறு எங்கும் காண இயலாத அற்புத வடிவம். நீல மயிலில் அமர்ந்த கோலக்குமரன், இடதுபுறம் மடிமீது வள்ளியை அணைத்தவாறு இருக்கும் இன்ப வடிவம். அருகில், அருணகிரியார் கூப்பிய கரங்களுடன் இக் காட்சியைக் கண்டு இன்புறுவார். தெற்குச் சுவரில் ஞானமலைக்குரிய இரண்டு திருப் புகழ்ப் பாடல்கள் மற்றும் பதிகம், வரலாறு முதலான கல்வெட்டுகள் முருகன் புகழைப் பாடுகின்றன. வடக்குச் சுற்றில் சண்முக கவசம், குமாரஸ்தவம் மற்றும் படித்திருப்பணி நன்கொடையாளர்கள் பெயர் விவரங்கள் கல்வெட்டில் உள்ளன. மலையின் மேற்புறம் ஏறிச் செல்லும் வழியில் முருகன் உண்டாக்கிய 'வேற்சுனை’ உள்ளது.

சில படிகள் ஏறி மலையின் மேற்புறம் சென்றால், அங்குள்ள மண்டபத்தில் ஞானப்பூங்கோதை சமேத ஞான கிரீஸ்வரர் அருள் காட்சி வழங்குவார். அருணகிரிநாதரை பரமகுருவாகக் கொண்டு  இந்த ஞானமலையில் பல்லாண்டுகள் தவமியற்றியவர் ஞான வெளிச் சித்தர் என்னும் பாலசித்தர் ஆவார். முருகன் திருவடிகள் பதிந்த இவ்விடத்தில் தவமியற்றி, மக்களுக்கு கூன், குருடு, செவிடு, பேடு போன்ற குறைகளை நீக்கி, பல நோய்களுக்கு மருந்தளித்து, ஞானத்தை போதித்தவர். கார்த்திகை மாதம் மூல நட்சத்திர நாளன்று, இவர் ஞானமலை முருகன் திருவடிகளில் கலந்தார். இந்த அற்புதச் செய்தியை 2010ம் ஆண்டு அக்டோபர் நாலாம் நாள் நள்ளிரவில் உணர்த்தியதோடு, முருகன் கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தூணில் ஞானவெளிச் சித்தரின் உருவத்தைக் காட்டி அருள்பாலித்தான் முருகன். அவர் சமாதி கொண்ட இடத்தில்தான் ஞானகிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

இம்மலையில் இரண்டு குகைகள் உள்ளன. பாலசித்தருக்குப் பிறகு மற்றொரு சித்தர் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தவமியற்றியுள்ளார். மலையின் அடி வாரத்தில் அவருக்கான சமாதி உள்ளது.

ஞானகிரீஸ்வரர் திருக்கோயிலின் பின்புறம், ஞானபண்டித சுவாமி திருவடி பதிந்துள்ள மகா புனிதமான இடத்தைத் தரிசிக்கும்போது, நமக்கு அருணகிரிநாதர் வரலாறு நினைவுக்கு வர, பரவசம் அடைகிறோம். அவருக்குத் திருவடி காட்சியளித்து, யோகாநுபூதி அளித்ததற்கான சான்று இங்கே பதிந்துள்ள முருகனின் பாதச் சுவடுகளே! வள்ளியை மணந்துகொண்டு இங்கு வந்தபோது, இம்மலையில் முருகன் உலவியதாக மக்கள் நம்புகிறார்கள். 'ஞானம்’ என்பதற்கு திருவடி என்றும் பொருள். எனவே, ஞானமலை என்பதை திருவடி மலை என்றும் கூறலாம். 'ஞானமலை முருகன் திருவடிப் பூங்கோயில்’ இங்கே அருமையாகக் காட்சியளிக்கிறது. வேதங்களும் காணாத வேலனின் திருப்பாதங்கள் பதிந்த பரம பவித்திரமான இந்தப் புண்ணியபூமியில் நாம் உடலால் வலம்வர (அங்கப் பிரதட்சணம் செய்ய) இம்மண்டபம் உருவாகியுள்ளது. இங்கே அமர்ந்து ஜபம், தியானம் செய்யும்போது அற்புதமான ஒலி அதிர்வுகளை பலரும் உணர்ந்து அனுபவித்துள்ளனர். இங்கு அங்கப் பிரதட்சணம் செய்தால் நோய்கள் நீங்கும்; மகிழ்ச்சியான இல்லற வாழ்வு அமையும் என்பதை அனுபவத்தால் மட்டுமே உணர முடியும்.


ஞானமலையில் மிகுதியாகக் காணப்படுவது, வெப்பாலை என்னும் அரிய வகை மூலிகை மரம். இதற்கு மலை மல்லிகை, குடசப்பாலை என்றும் பெயர். தோல் சம்பந்தமான நோய் (சொரியாசிஸ்) வெண்குஷ்டம், மூட்டுவலி முதலான உபாதைகளுக்கு இம்மரத்தின் இலை அரிய மூலிகை யாகும். இதன் மிகச் சிறிய விதை, பாதாம் பருப்பின் சுவையுடையது. இம்மரத்தின் காற்று, தம்பதியருக்கு இல்லற இன்பத்தையும், குடும்ப ஒற்றுமையையும் அளிக்கிறது என்பது சித்த மருத்துவம் கூறும் உண்மை. மேலும், இங்குள்ள எலுமிச்சை மணம் கமழும் புல் மூலம் முகத்துக்்கு வசீகரம் அளிக்கும் தைலம் தயாரிக்கலாம்.

வள்ளிமலையில் வள்ளியை மணந்து, தணிகைமலை செல்லும் வழியில் முருகன் முதலில் வள்ளியுடன் பொழுதுபோக்கிய பெருமையுடையது ஞானமலை. எனவே, இம்மலைக்கு வந்து தரிசிப்பவர்களுக்கு ஆனந்தமான வாழ்வையும், மன அமைதியையும் அளித்து மகிழ்விக்கிறான் அந்த வள்ளி மணாளன். இம்மலைக்கு வடமேற்கில் வள்ளிமலையும் வடகிழக்கில் தணிகை மலையும் சமஅளவு (35 கி.மீ) தூரத்தில் அமைந்துள்ளது. மூன்றும் ஒரு முக்கோண வடிவில் அமைந்திருப்பதும், இவற்றை முறையே காலை, பகல், மாலை என ஒரே நாளில் மூன்று வேளைகளில் தரிசிப்பதும் மிகவும் விசேஷம்!

மலை ஏறிச் செல்வதற்கு வசதியாகப்  படிகள் அமைத்துள்ளது ஞானாச்ரமம் அறக்கட்டளை அமைப்பு. நித்ய பூஜை ஏற்பாடு, மலையில் குடிநீர் வசதி முதலானவையும்  செய்யப்பட்டுள்ளன. ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம், தைப்பூசம் முதலான விசேஷ நாட்களில் காவடி, பால்குடம் எடுத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபடுகிறார்கள். கோயிலின் தென்புறம் வேல் பூஜை, லட்சார்ச்சனை, திருவிளக்கு பூஜை மற்றும் பொதுமக்கள் வசதிக்காக அன்னதானம், திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தவும், தற்போது மிக பிரமாண்டமான 'ஞானவேல் மண்டபம்’ (2112 சதுர அடி அளவில்) உருவாகி வருகிறது. இம்மண்டபத் திருப்பணிக்கும், மேற் கொண்டு இக்கோயிலின் பல்வேறு வளர்ச்சிகளுக்கும் பொதுமக்களின் நன்கொடை பெரிதும் தேவைப்படுகிறது.


மலை அடிவாரத்தில் அமைந்துள்ள 'ஞானாச்ரமம் திருமாளிகை’, 'செந்திலடிமை’ டாக்டர் எஸ்.சுந்தரம் அவர்களின் அரிய முயற்சியால் உருவாகியுள்ளது. இம் மாளிகையில் 'குறமகள்தழுவிய குமரன்’ அற்புதமான பஞ்சலோக வடிவம் தரிசித்து இன்புறத்தக்கது. ஆண்டுதோறும் அருணாகிரியாருக்கு காட்சி விழாவும், திருப்புகழ் திருப்படி விழா, லட்சார்ச்சனை போன்ற வைபவங்கள் ஞானாச்ரம அறக்கட்டளை மூலம் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கோயிலில் பூஜை செய்து வரும் குமரேசன் குடும்பத்தார் ஞானாச்ரமம் திருமாளிகையில் வசித்து வருவதால், தரிசனத்துக்கு வரும் அன்பர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தருகிறார். மலைமேல், தமிழ்நாடு வனத்துறை உதவியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டுப் பசுமையுடன் காட்சியளிக் கிறது. ஞானமலையின் ஒருபுறம் ஏரியும், மறுபுறம் வயல்களும் பச்சைப்பசேல் என்று அழகாகக் காட்சியளிக்கின்றன. இந்தக் கிராமத்தில் கல்வி, மருத்துவம் போன்ற சமுதாயப் பணிகளிலும் ஞானாச்ரமம் அறக்கட்டளை ஆர் வமுடன் பங்கு கொண்டு செயலாற்றி வருகிறது.

திருப்புகழைப் பாடிப் பரப்பிய வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் போன்ற அருளாளர்கள் பலர் வழிபட்டு அருள்பெற்ற ஞானமலை முருகனை நாமும் சென்று வழிபடுவோம். உடலும் உள்ளமும் இன்புற்று மகிழ, ஞானபண்டித சுவாமியின் திருவருளை வேண்டுவோம்!

Tuesday, October 14, 2014

பண்டிகை ஆஃபர்கள்!

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பண்டிகை ஆஃபர்கள் நம் வீட்டின் கதவைத் தட்ட தொடங்கியுள்ளன. முன்பு கடைகளுக்குச் சென்று பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவதை வழக்க மாகக் கொண்டிருந்தனர் நம் மக்கள்.

ஆனால், தற்போது வீட்டிலிருந்தபடியே பண்டிகை பர்ச்சேஸை பக்காவாக முடித்துக்கொள்ளும் வசதியை ஆன்லைன் நிறுவனங்கள் கொண்டுவந்துவிட்டன. புத்தாடைகள் தொடங்கி, டிவி, ஃபிரிட்ஜ் என அனைத்துப் பொருட் களையும் கணினி திரையில் பார்த்தபடி வாங்கிக் குவிக்கிறது இளைஞர் கூட்டம்.

இதனை நன்றாகப் புரிந்துகொண்ட இ-காமர்ஸ் நிறுவனங்களும் ஆஃபர்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் வழங்கி வருகின்றன.

ஒரு நாளைக்கான ஆஃபர், ஒரு மணி நேரத்துக்கான ஆஃபர் என பல ஆஃபர்களை இந்த நிறுவனங்கள் வழங்கி வருவதுடன், இடையிடையே அதிரடி ஆஃபர்களை வழங்கி வாடிக்கையாளர்களைத் திக்குமுக்காட செய்கின்றன ஆன்லைன் நிறுவனங்கள்.


இதனைச் சமாளிக்க நேரடியாகப் பொருட்களை விற்கும் சில ரீடெயில் நிறுவனங்களும் தங்கள் பங்குக்கு ஆஃபர்களை வழங்கத் தொடங்கி விட்டன. குறிப்பிட்ட தொகைக்கு நீங்கள் பொருட்களை வாங்கினால், மாதந்தோறும் குறிப்பிட்ட தொகைக்கான பொருட்களை இலவச மாகவே பெறலாம் என்று சொல்லி, தாங்களும் இந்த ஆஃபர் மழையில் இலவசங்களை கொட்டத் தயார் என்று களத்தில் குதித்திருக்கின்றன. இந்த ரீடெயில் நிறுவனங்கள் தரும் ஆஃபரையும் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டுதான் இருக்கிறது.

இந்தியாவில் ரீடெயில் நிறுவனங் களின் வர்த்தகத்தில் அமைப்பு சார்ந்த ரீடெயில் வர்த்தகத்தின் மதிப்பு ரூ.1,76,700 கோடியாக உள்ளது. அதேசமயம், அமைப்பு சார்ந்த ஆன்லைன் வர்த்தகத்தின் மதிப்பு ரூ.13,900 கோடியாக உள்ளது. மொத்த ரீடெயிலுடன் ஒப்பிட்டால்,  வெறும் 7.9 சதவிகிதத்தையே ஆன்லைன் நிறுவனங்கள் ஆக்கிரமிக் கின்றன என்றாலும் ஆஃபர்களை அள்ளி வழங்குவதில் முதலிடம் பிடிப்பவை ஆன்லைன் நிறுவனங்களாகவே இருக்கின்றன. சமீபத்தில் ஃப்ளிப்கார்ட் ‘பிக் பில்லியன் டே’ என்று அறிவித்து,  அன்றைக்கு ஆரவாரமான பம்பர் தள்ளுபடி விற்பனையை நடத்தியது.

அன்று மட்டும் ஏறக்குறைய ஒரு பில்லியன் முறை (100 கோடி) மக்கள் இந்த இணையதளத்தை அணுகி பொருட்களைத் தேடியுள்ளனர் என பெருமையோடு சொல்லிக் கொண்டது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். ஒரு ரூபாய்க்கு ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்குவது தொடங்கி, பொருளின் விலையில் 90% வரை ஆஃபர் வழங்கும் அதிசயம் அன்று நடந்ததால், காலை 8 மணி தொடங்கி பலரும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து பல பொருட்களை வாங்கத் தயாரானார்கள்.

இந்த ஆஃபரில் விற்கப்பட்ட பொருட்கள் அனைத்துமே சாதாரண மாக எல்லா கடைகளிலும் கிடைப்பது தான். என்றாலும், நினைத்துப் பார்க்க முடியாத ஆஃபர், அதுவும் மிகச் சில மணி நேரங்களுக்குத்தான் என்கிற பரபரப்பினால் பலரும் பல பொருட்களை வாங்க முற்பட்டனர். குறிப்பிட்ட சில பொருட்களுக்குக் காலையில் மிகக் குறைந்த விலையும், நேரம் ஆக ஆக அதிக விலையும் இருந்தது. இருந்தாலும், ரீடெயில் கடைகளைவிட விலை குறைவுதான் என்பதால், அதிகமான பொருட்களை மக்கள் வாங்கிக் குவித்தனர்.

 பில்லியன் சொதப்பல்கள்!

‘பிக் பில்லியன் டே’ அன்று ஏறக்குறைய ரூ.600 கோடிக்கு வியாபாரம் செய்ததாகச் சொன்னது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். ஆனால், அன்றைய தினத்தில் பொருட்களை வாங்க வந்தவர்களுக்கு கசப்பான அனுபவமே கிடைத்தது. காரணம், இந்த ஆஃபரில் விற்கப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவை விற்பனை தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே ஸ்டாக் இல்லை என்ற அறிவிப்பு வந்துவிட்டது.

சில பொருட்களை ஆர்டர் செய்யும்போது ஆஃபர் விலை ஒன்றாகவும், அதனை வாங்கும்போது வேறொரு விலையாகவும் இருந்தது கண்டு பலரும் அதிர்ந்து போனார்கள். அழகான சுடிதார் 500 ரூபாய் விலையில் கிடைக்கிறதே என்று ஆசையாக வாங்கப்போனவர்கள், பணம் கட்டும் போது அது 1,200 ரூபாய் என்று மாறியதைப் பார்த்து அதிர்ந்தனர். 

ஒரு பொருளை வாங்கியவர் அதற்கான பணத்தைக் கட்டிவிட்டு ஆவலாகக் காத்திருக்க, மறுநாள் காலையில் இந்தப் பொருளைத் தருவதில் எங்களுக்குச் சிரமம் உள்ளது. அதனால் உங்கள் பணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று வந்த மெயிலைப் பார்த்து கடுப்பானவர்கள் பலர்.

பரிசாகத் தரப்பட்ட கூப்பனிலும் பல குளறுபடிகள். ரூ.500 மதிப்புள்ள கூப்பனைத் தந்துவிட்டு, இதனை நீங்கள் பயன்படுத்த 3,000 ரூபாக்குமேல் பொருளை வாங்க வேண்டும் என்று நிபந்தனைப் போட்டதும் அதிர்ச்சிதான்.

இன்னும் சிலர், சில பொருட்களின் விலையைக் கடந்த மூன்று மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, இப்போது மீண்டும் குறைத்துள்ளனர். இதெல்லாம் தள்ளுபடியே கிடையாது என  இணையதளங்களில் வெறுப்பு மழை கொட்டினார்கள்.

பலரும் இப்படி வெறுப்பில் இருப்பதைப் பார்த்து, மறுநாள் காலையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது ஃப்ளிப்கார்ட் நிறுவனம்.

 அடுத்தது அமேசான்!

ஃப்ளிப்கார்ட்டின் இந்த மெகா ஆஃபரைத் தொடர்ந்து அமெரிக்காவின் அமேசான் நிறுவனமும் இதேமாதிரியான தள்ளுபடி கொண்டாட்டத்துக்குத் தயாரானது. ஏற்கெனவே மிஷன் மார்ஸ் என்கிற பெயரில் ஆஃபர்களைத் தந்த அமேசான், ஃப்ளிப்கார்ட் இழுத்துக்கொண்ட வாடிக்கை யாளர்களை இப்போது தனது பக்கம் இழுத்துக் கொள்ள தயாராகிவிட்டது.

இனிவரும் காலத்தில் ஆன்லைன் நிறுவனங்களை நம்மால் தவிர்க்க முடியாது. விலை குறைவு, வீட்டுக்கு பொருள் வந்து சேரும் வசதிகளால் இனி பலரும் பொருட்களை வாங்க  ஆன்லைனை நாடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது   எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பது முக்கியமான விஷயம்.


மோடியின் மேக் இன் இந்தியா சாத்தியம் ஆகுமா?

மேட் இன் அமெரிக்கா, மேட் இன் ஜெர்மனி என்கிற வார்த்தைகள் ஒரு காலத்தில் நம்மவர்கள் இடையே படுபிரபலம். இதனை உணர்ந்த பிரதமர் மோடி இதே பாணியில் மக்களைக் கவரும் விதமாக  சமீபத்தில் அறிவித்திருக்கும் திட்டம் தான் ‘மேக் இன் இந்தியா’. உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் நிறுவனமாக இருந்தாலும் சரி, இந்தியாவில் பொருளைத் தயாரித்து, அதை உலகம் முழுக்க கொண்டு சென்று விற்கலாம். இதன்மூலம் பல கோடி வேலைவாய்ப்பு களை உருவாக்கலாம் என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டத்தை முழுமையாக விளக்கும் வகையில் ஒரு தனி இணையதளத்தையே திறந்திருக்கிறது மத்திய அரசாங்கம்.

 

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க 25 துறைகளை அந்த இணையதளத்தில் பரிந்துரை செய்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்தத் துறைகள் இன்றைக்கு இந்தியாவில் எப்படி இருக்கிறது, ஏன் இந்தத் துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான காரணங் களையும் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். இணையதளத்தில் சொல்லப்பட்டு இருக்கும் முக்கிய விஷயங்களைக் கொஞ்சம் பார்ப்போம்.

1ஆட்டோ மொபைல் துறை யில் ஆண்டுக்கு 21.50 லட்சம் வாகனங்களைத் தயாரிக்கிறது நம் இந்தியா. உலக அளவில் ஆட்டோமொபைல் உற்பத்தியில் இந்தியா 4-வது பெரிய நாடாக இருக்கிறது. எனவே, இந்தியாவில் ஆட்டோமொபைல் தொழிலுக்குத் தேவையான கட்டமைப்பு இருப்பதால், இந்தத் தொழிலை வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து தொடங்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும், 2020-ல் வருடத்துக்கு 60 லட்சம் வாகனங் களை விற்பனை செய்யும் அளவுக்கு இந்தியா வளரும்; அடுத்த 20 வருடத்தில் உலகின் மிகப்  பெரிய ஆட்டோமொபைல் ஹப்பாக இந்தியா இருக்கும். 

2 ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்புத் துறை 2012-13-ல் மட்டும் 39.7 பில்லியன் டாலர் வருவாயைப் (சுமார் 2.42 லட்சம் கோடி ரூபாய்) பெருக்கியுள்ளது. தற்போது உலகின் நான்காவது பெரிய ஸ்டீல் உற்பத்தியாளராக உள்ள இந்தியா இன்னமும் இரண்டு ஆண்டுகளில் உலகின் இரண்டாவது பெரிய ஸ்டீல் உற்பத்தியாளராக உருவாகும்.

3உள் கட்டமைப்புத் துறையில் 2017-ம் ஆண்டு வரை 1,000 பில்லியன் டாலர் அளவிலான திட்டங்களுக்குத் தேவை இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் 650 பில்லியன் டாலர் (சுமார் 39.65 லட்சம் கோடி ரூபாய்) அளவுக்கு முதலீடு தேவைப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கட்டுமானப் பணிகள் இந்திய ஜிடிபியில் 10 சதவிகிதப் பங்களிப்பை அளிப்பதால், இந்தத் துறையில் முதலீடு வரவேற்கப்படுகிறது.

4  கனிமவளத் துறையில் இந்தியா உலக அளவில் ஆறாவது இடத்திலும், இரும்பு உலோக இருப்பில் ஐந்தாவது மிகப் பெரிய நாடாகவும் இருக்கிறது.
இந்தியாவில் இன்னமும் 302 பில்லியன் டன் நிலக்கரி இருப்பு உள்ளதால், அடுத்த 20-30 வருடங்களுக்குக் குத்தகைக்கு விடும் அளவுக்கு சக்தி உள்ளது. இந்தியப் பொருளாதார வளர்ச்சியானது மின்சாரம் மற்றும் சிமென்ட் துறையை அதிகம் சார்ந்துள்ளதால், இந்தத் துறைகளில் அதிக முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன.

5 துறைமுகங் களைப் பொறுத்த மட்டில், 2009-ம் ஆண்டு 575 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்த சரக்கு பயன்பாட்டு வசதி தற்போது 800 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 43,000 கோடி ரூபாய்  அளவிலான முதலீடு கள் 2014-ம் ஆண்டில் ஏற்பட்டுள்ளதும் இந்தத் துறையில் முதலீடு செய்யக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், புதிதாக 87 துறைமுகங்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேபோன்று பாதுகாப்புத் துறை, தகவல் தொழில்நுட்பம், பார்மா, மாற்று எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுற்றுலா போன்ற துறைகளில் உள்ள சிறப்பம்சங்களையும் மோடி அரசு முன்வைத்து இந்தத் திட்டங்களை உருவாக்கியுள்ளது. 

இந்த அறிவிப்புகளை எல்லாம் பார்க்கும்போது, ஆஹா, அற்புதம் என்றுதான் சொல்லத் தோன்றும். ஆனால், இவையெல்லாம் நிறைவேறும் சாத்தியம் கொண்ட திட்டங்கள்தானா, சர்வதேச அளவில் உற்பத்தித் துறையில் இன்றைக்கும் நம் நாடு எங்கே இருக்கிறது என்கிற கேள்விகள் முக்கியமானவை. உலகில் உற்பத்திரீதியாக முன்னிலை வகிக்கும் 189 நாடுகளில் இந்தியா 134வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு வெறும் 16%தான். ஆனால், சீனாவின் உற்பத்தி அதன் ஜிடிபியில் 36%, தென்கொரியா 34% பங்களிப்பை கொண்டுள்ளன. நம் அண்டை நாடு களான பாகிஸ்தானும், பங்களாதேஷும் நம்மைவிட அதிக பங்களிப்பைதான் ஜிடிபிக்கு வழங்குகின்றன.

2022-ல் நமது மொத்த ஜிடிபியில் 25 சதவிகித பங்களிப்பை உற்பத்தித் துறை செய்ய வேண்டும் என்கிற இலக்கு தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை நம்மால் அடைய முடியுமா என்றால், கடினம்தான்.

 இந்தியாவில் தொழில் துவங்க 12   முக்கிய அனுமதி பெற வேண்டும். இதற்கு 27 நாட்கள்  செலவாகும்.  கட்டுமான அனுமதி பெற 35 அனுமதி பெற வேண்டும். இதற்கு 168 நாட்கள் செலவாகும். ஆக மொத்தம், அனைத்து அனுமதிகளையும் பெற 1,420 நாட்கள் (அதாவது, 3 ஆண்டுகள் 89 நாட்கள்) தேவைப்படும் என ஆய்வுகள் சொல்கின்றன. இந்த நிலையில் 10 கோடி புதிய வேலைகளை எப்படி உருவாக்க முடியும்  என்கிற கேள்வி எழவே செய்கிறது.

இருப்பினும் தொலைதொடர்பு, ரயில்வே துறையின் உள்கட்டமைப்பு களில் 100 சதவிகித அந்நிய முதலீட்டை யும், பாதுகாப்புத் துறையில் 49 சதவிகித அந்நிய முதலீட்டுக்கும் அரசு அனுமதி தந்திருப்பது இந்தத் திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. தவிர,  பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் நிச்சயம் எதாவது ஒரு திட்டம் அந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்படுவதால், தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சிக்கு  வழிவகுக்கும்.

மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டமானது கேட்பதற்கு உற்சாகம் தரு வதாக இருந்தாலும், இதைச் செயல்படுத்த தேவையான நிலங்கள், மின்சாரம் போன்றவை பெரும் தட்டுப்பாடாகவே  உள்ளன. இந்தத் தடைகளை தகர்க்க மத்திய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்துதான் இந்தத் திட்டத்தின் வெற்றி அமையும்.






மிஸ்டர் கூல் தோனி !

வெற்றி பெற்றால் மகிழ்ச்சி,  தோற்றால் வருத்தம் அடைவது  சாதாரண மனிதனின் இயல்பு. இதனை மாற்றி எந்தநிலையிலும் நிதானமாகச் செயல்படுபவர்களே சிறந்த தலைவர்களாக மாறுவார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி.

ஜூலை 7, 1981-ல் ராஞ்சியில் பிறந்த தோனி, சிறுவயதில் மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் வளர்ந்தவர். சிறுவயதில் இருந்தே கால்பந்தாட்டத்தில் கோல் கீப்பராக வேண்டும் என்று அவருக்கு ஆசை. ஒருநாள் அவரது நண்பர்கள் விளையாடும் கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்பட, தோனி விக்கெட் கீப்பராக அழைக்கப்பட்டார். அதிலிருந்து கிரிக்கெட் ஆர்வம் அவரைத் தொற்றிக்கொண்டது. பீகார் அணியில் இடம்பிடித்த தோனி, நன்கு ஆடினாலும், அவரது அணி தோல்வியைச் சந்தித்த தால், தோனியின் திறமை வெளிச்சத்துக்கு வராமலேயே இருந்தது.


இந்திய ஏ அணியில் இடம் பிடித்த தோனி, கென்யாவுக்கு எதிராக அடித்த சதம் அப்போதைய கேப்டன் கங்குலியின் கண்ணில் பட்டது. பங்களாதேஷ் தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கினார் கங்குலி. முதல் ஆட்டத்தில் ‘டக் அவுட்’ ஆகி தோனி வெளியேற, இனி அவர் இந்திய அணியில் இடம் பிடிப்பது கனவுதான் என எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், பாகிஸ்தான் தொடரில் ஆடக் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்ட தோனி 148 ரன்களையும், இலங்கைக்கு எதிராக 183 ரன்களையும் அடித்து உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையைத் தன்பக்கம் திருப்பினார்.


பின்னர் டி20 உலகக் கோப்பையிலிருந்து முக்கிய வீரர்கள் விலக, தோனி கேப்டன் ஆனார். 2011-ல் ஒருநாள் போட்டிக்கான  உலகக் கோப்பையை வென்றார். அடுத்து அவர் தலைமையில்தான் இந்திய அணி அதிகளவில் வெற்றி பெற்றது.
கிரிக்கெட் வீரரான தோனி, இந்தியாவில் கால் பந்து விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்த மாதம் தொடங்க இருக்கும் ஐஎஸ்எல் போட்டியில் விளையாடும் சென்னை அணியில் முதலீடு செய்து இணை உரிமையாளராக ஆகியுள்ளார். தோல்வியோ, வெற்றியோ நிதானமாகச் செயல்பட்டால் தலைவனாகலாம் என்பதற்கு ‘மிஸ்டர் கூல் தோனி’ மிகச் சிறந்த உதாரணம்.

ஹெச்.பி 10 பிளஸ் டேப்லெட்!

இன்றைய  உலகில் டேப்லெட்களின் பங்களிப்பு ஏராளம். ஆபீஸ் டாக்குமென்ட்ஸ் எடிட்டிங், நெட் ப்ரவுஸிங், இ-புக் வாசிப்பு என டேப்லெட்டின் உபயோகம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் ஹெச்.பி நிறுவனம் தனது புதிய டேப்லெட்டான, ‘ஹெச்.பி 10 பிளஸ்’ டேப்லெட்டை (HP 10 PLUS Tablet) அமெரிக்காவில் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ரூ.17,000 விலையில் விற்பனைக்கு வெளியிடப்போவதாக ஹெச்.பி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.18,500-க்கு  விற்பனையாகும் சாம்சங் கேலக்ஸி டேப் 3 டேப்லெட் ஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி-பீன் இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும்போது இந்த டேப்லெட், ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்-கேட் புதிய இயங்கு தளத்தைக் கொண்டு இயங்குவது இதற்குச் சாதகமான விஷயம்.


10.1 இன்ச் HD தொடுதிரையைக் கொண்டுள்ள ஹெச்.பி 10 பிளஸ் டேப்லெட், 1 GHz குவாட்-கோர் கோர்டெக்ஸ் A7 பிராசஸர் மற்றும் 2GB DDR3L ரேம்மைக் கொண்டு இயங்குகிறது. ஆனால், 7 இன்ச் தொடுதிரையைக் கொண்டுள்ள சாம்சங் கேலக்ஸி டேப் 3 டேப்லெட், 1.2 GHz டுயல் - கோர் பிராசஸர் மற்றும் 1GB ரேம்மைக் கொண்டுதான் இயங்குகிறது.

5 மெகா பிக்ஸல் பின்புற கேமரா மற்றும் 2 மெகா பிக்ஸல் - கேமராவைப் பெற்றுள்ள இந்த டேப்லெட், 16 GB இன்டர்னல் மெமரி யோடு வருகிறது. இதை SD கார்டு மூலம் 32 GB வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இதன் மொத்த எடை 662 கிராம் மட்டுமே.  ஆனால் 3 மெகா பிக்ஸல் பின்புற கேமரா மற்றும் 1.3 மெகா பிக்ஸல் கேமராவைப் பெற்றுள்ள சாம்சங் கேலக்ஸி டேப் 3 டேப்லெட், 8 GB இன்டர்னல் மெமரியோடு தான் வருகிறது. இதையும் SD கார்டு மூலம் 32 GB வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம். Wi-Fi 802.11 b/g/n, GPS, ப்ளூ-டூத் 4.0 மற்றும் மைக்ரோ USB ஆகிய வசதிகளோடு  7700 mAh சக்தி வாய்ந்த பேட்டரியைக் கொண்டிருப்பதும் சாதகமான விஷயமே!

செ.கிஸோர் பிரசாத் கிரண்

Saturday, October 11, 2014

மரியாதை


நம் காலத்தில் நமக்குமுன்னே கண்ணுக்குத் தெரிகிற பெரியவர்களுக்கு வந்தால், இங்கேதான் மரியாதை என்ற அம்சம் ரொம்பவும் முக்ய ஸ்தானத்தில் இடம் பெறுகிறது. தெய்வசக்தி என்பதைப் பற்றிய நம் கணக்குப்படி அது ஸரியா, தப்பா என்பது வேறு விஷயம்; ஆனால் அதுதானே நடைமுறையில் இருக்கிறது?

அந்தக் கணக்குப்படி பார்த்தால் தெய்வங்கள், பூர்வகால மஹான்கள், நம் காலத்துப் பெரியவர்கள் ஆகிய மூன்று பேருக்கு எப்படி மார்க் போடுகிறோமோ அதற்கு ‘இன்வர்ஸ் ப்ரபோர்ஷ’னிலேயே (எதிரிடை விகிதாசாரத்திலேயே) நாம் அவர்களிடம் காட்டுகிற மரியாதை இருக்கிறது!

ப்ரியம், பந்துத்வம், ஸ்வாதீனம் என்றெல்லாம் இருக்கிற பக்தியம்சங்கள் ப்ரத்யக்ஷப் பெரியவர்களிடம் தூக்கலாக இல்லாமல், அதனாலேயேதானோ என்னவோ, மரியாதையம்சம் இங்கேதான் தலைதூக்கிக் கொண்டு முக்யமாக நிற்கிறது.

மதஸம்பந்தமாகப் பெரியவர்கள் என்றிருக்கிற ஸ்வாமியார்கள் மட்டுந்தான் என்றில்லை; அரசியல் ப்ரமுகர்கள், கட்சித் தலைவர்கள், அறிவாளிகளாக இருக்கப்பட்டவர்கள், கலைகளில் சிறப்புப் பெற்றவர்கள், பணபலம் படைத்தவர்கள் என்று யாரை எடுத்தாலும், எந்தத் துறையிலும் பெரியவர்களாக உள்ளவர்களிடம் மரியாதைதான் நம் அப்ரோச்சில் முக்யமாயிருக்கிறது. ‘மரியாதை’ என்பதைவிட ‘ரெஸ்பெக்ட்’ என்று சொன்னால் இந்த விஷயம் நன்றாகப் புரியும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Thursday, October 09, 2014

முதுகுவலி... தீர்வுகள்!

 
முதுகுவலி... அனுபவிப்பவர்களுக்கே அதன் வேதனை புரியும்.
 
''முதுகுவலி என்று சொல்வது, ஏதோ சிறிய பிரச்னையாகத் தோன்றலாம். உண்மையில் இது முதுகுத் தண்டுவடம் சார்ந்த பிரச்னை! கழுத்தில் உள்ள 7 எலும்புகள், மார்பகத்தின் பின்புறம் உள்ள 12 எலும்புகள், வயிற்றுப் பகுதியின் பின்புறம் உள்ள 5 எலும்புகள்... இவற்றை உள்ளடக்கியதே முதுகுத் தண்டுவடம். தண்டுவடத்தில் ஏராளமான நரம்புகள் உள்ளன. இதில் உள்ள நரம்புகள் மூளையிலிருந்து கை - கால்களுடன் இணைக்கப்படுகின்றன. இந்த எலும்பு, நரம்பில் ஏற்படும் பிரச்னைகளே ஒருவருக்கு முதுகுவலியை ஏற்படுத்தும்.
 
காரணங்கள்: அதிக நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்வது, முறையான பொஸிஷனில் இல்லாமல் கனமான பொருட்களைத் தூக்குவது, பெண்களுக்கு கர்ப்பப்பை, நீர்ப்பை போன்றவற்றில் ஏற்படும் கிருமித்தொற்று, 40 வயதைக் கடந்த பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாறுபாட்டால் எலும்புகளில் உண்டாகும் கால்சியம் குறைவு, குடல்நோய் பாதிப்பு, அதிக அயற்சி (ஸ்ட்ரெய்ன்), கிருமிகளின் தாக்குதல் (காய்ச்சல், வைரஸ், பாக்டீரியா தாக்குதல்), எலும்புப் புற்றுநோய்... இவையெல்லாம் முதுகுத் தண்டுவடத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், முதுகுவலி வரலாம்.
 
வயது: எல்.கே.ஜி குழந்தைகள் முதல் கோலூன்றும் வயது வரை யாருக்கும் வரலாம்
 
கண்டறிவது எப்படி: சிலருக்கு முதுகுவலியுடன் கூடிய கால்வலி வரக்கூடும். சிலர் இருமும்போது, தும்மும்போதுகூட முதுகுவலியை உணரலாம். சிலருக்கோ குறுகிய தூரம் நடப்பது மட்டுமின்றி, சிறிது நேரம் அமர்வதுகூட இயலாததாக இருக்கும். தண்டுவடத்தில் நாள்பட்ட பாதிப்பு கண்ட சிலருக்கு கூன் விழலாம். திடீரென முதுகுவலி வந்தால், சமீபத்திய ஏதாவதொரு செயலின் விளைவு என்று, தேவையான ஓய்வெடுப்பது போதுமானது. தொடர்ந்து முதுகுவலியால் பாதிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். சாதாரண எக்ஸ்ரேவில் என்ன பிரச்னை என்பதைக் கண்டறிய முடியாது என்பதால், எம்.ஆர்.ஐ ஸ்கேன் அவசியம்.
 
சிகிச்சைகள்: ஆரம்பகட்டம் அல்லது பழக்கவழக்கத்தால் ஏற்பட்ட முதுகுவலி உள்ளவர்களுக்கு ஓய்வு, வலிநிவாரணி, நரம்புக்குத் தேவையான விட்டமின் மாத்திரைகள், மருத்துவ ஆலோ சனை சொல்லும் வாழ்க்கை முறை மாற்றம் போதுமானது. இதுவே, அதிகப்படியான பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு அறுவை சிகிச்சையே நிரந்தர தீர்வைத் தரும்.
 
இன்றைய காலகட்டத்தில், தண்டுவட பிரச்னைகளுக்கு மைக்ரோ, லேசர் சர்ஜரி என பல சிகிச்சைகள் மூலம் தீர்வு காணப்படுகிறது. அதேநேரத்தில் இத்தகைய சிகிச்சைகள் சரியான உடல்தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுவதால் வேறுவிதமான பிரச்னைகள் எழ வாய்ப்பில்லை.
 
எவ்வளவு செலவாகும்: எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்றவற்றுக்கு 3 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். ஆரம்பகட்ட பிரச்னை என்றால் மருந்து, மாத்திரை என சில ஆயிரங்கள் செலவாகும். அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அரசு வழங்கும் காப்பீடு திட்டத்தின் மூலமாக இலவசமாகவும், குறைந்த செலவுடனும் செய்துகொள்ளமுடியும்.
 
வராமல் தடுக்க: நீண்ட நேரம் ஒரே இடத்தில், ஒரே பொஸிஷனில் அமர்ந்து வேலை செய்வதைத் தவிர்ப்பது, சேரில் அமர்ந்து வேலை செய்யும்போதும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போதும் 90 டிகிரி நேராக நிமிர்ந்து அமர்வது, குழந்தைகள் அதிக சுமை கொண்ட புத்தகப்பை தூக்குவதை தவிர்ப்பது, தினமும் குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா இவற்றில் ஏதாவது ஒன்று, வாரத்தில் இரண்டு நாட்கள் குறைந்தது 40 நிமிட நீச்சல் பயிற்சி, தினமும் சத்தான உணவு எடுத்துக்கொள்வது...

இந்தச் செயல்பாடுகள் எல்லாம் உங்கள் தண்டுவடத்துக்கு பாதிப்பு ஏதும் நேராமல் காக்கும். மேலும் முதுகுவலிக்கு மருத்துவ ஆலோசனை இன்றி நீங்களாகவே வலி நிவாரணி எடுத்துக்கொள்வது, பாதிப்பை அதிகப்படுத்துவதோடு, சிறுநீரகப் பிரச்னை வரை இழுத்துச் சென்றுவிடும். முதுகுவலிக்காக கடைகளில் கிடைக்கும் தைலங்கள், பாம் போன்றவற்றை பயன்படுத்துவது தற்காலிக தீர்வு மட்டுமே என்பதை மனதில் கொள்ளுங்கள்!''

சண்முகசுந்தரம் - எலும்பு முறிவு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்
 

கூகுள் மேப், துல்லிய வழிகாட்டி!

அத்தியாவசியத் தேவைகளின் வரிசையில், இன்டர்நெட்டையும் சேர்க்க வேண்டும் எனுமளவு இணையம் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. அதிலும், இன்டர்நெட்டை பயன்படுத்தும் பள்ளி மாணவர் முதல் இன்டர்நெட் மூலம் கோடி, கோடியாக சம்பாதிப்பவர்கள் வரை அனைவரும் நாடுவது... கூகுள் சேவையைத்தான்! அந்தச் சேவைகளின் பட்டியலும், பயன்பாடும் இங்கே..!

கூகுள் மேப், துல்லிய வழிகாட்டி!

தெருவிட்டு தெரு, ஊர்விட்டு ஊர், மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் என்று இனி எங்கு செல்ல வேண்டுமென்றாலும், வழி சொல்ல நம் கணினியில், கைப்பேசியில் கூடவே வருவார் மிஸ்டர் கூகுள் மேப். நாம் நிற்கும் புள்ளியில் இருந்து செல்ல வேண்டிய இடத்துக்கான சாலை வழி மட்டுமல்லாது, அதற்கு அருகே உள்ள லேண்ட் மார்க் உள்ளிட்ட தகவல்களையும் துல்லியமாக வழங்கவல்லது கூகுள் மேப். https://www.google.co.in/maps/ என்ற வலைதளம் சென்றால், உலகின் எந்தச் சாலைக்கும் வழி தெரிந்துகொள்ளலாம்.


பெர்சனல் பி.ஏ... கூகுள் காலண்டர்!

எந்த நாளில், எந்த நேரத்தில் யாரைப் பார்க்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்ற அட்டவணைக் குறிப்பு தொடங்கி, பர்சனல் விஷயங்கள் வரையான பதிவுக்கு டைரியை மொத்தமாக ரீ-பிளேஸ் செய்கிறது கூகுள் காலண்டர். www.google.com/calendar

உங்களுக்கே உங்களுக்கென ஒரு பக்கம்... உலகம் பார்க்க!
உங்களின் கற்பனையை, கருத்துக்களை, திறமையைப் பதிவேற்ற உங்களுக்கென சொந்தமாக ஒரு பக்கத்தை இணையத்தில் உருவாக்கிக்கொள்ள வழியமைத்துக் கொடுக்கிறது, கூகுள். https://www.blogger.com’ பக்கத்துக்கு சென்று, 'பிளாக்கர்’ என்ற கூகுள் சேவையைப் பயன்படுத்தி உங்களுக்கென ஒரு இலவசப் பக்கத்தை தொடங்கிக்கொள்ளலாம். இதில் பதிவேற்றும் விஷயங்களை உலகத்தின் பார்வைக்கு வைக்கலாம். 'பிளாக்’-ல் எழுத ஆரம்பித்து, புத்தகம் எழுதும் வரை எழுத்துலகில் இந்தத் தளத்தில் வளர்ந்தவர்கள் பலர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுடச் சுட நியூஸ்!

ஒரு சம்பவம் நடந்த அடுத்த சில நொடிகளிலேயே அதுகுறித்து அனைத்து தகவல்களையும், புகைப்படம் மற்றும் வீடியோவோடு இன்டர்நெட் மூலமாக தெரிந்துகொள்ளும் அளவுக்கு இன்றைக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அதிலும் சிறப்புப் பெறும் விதமாக, https://news.google.co.in/   கூகுள் நியூஸ் பக்கத்தில் தமிழ் தினசரி தொடங்கி, ஆங்கில செய்தித்தாள்கள் வரை ஒவ்வொரு நிமிடத்துக்கு இடைப்பட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

சா.வடிவரசு

Sunday, October 05, 2014

கேட்ஜெட்:அமேசானின் கிண்டில் இ-புக் ரீடர்!

ஸ்மார்ட் போன், டேப்லெட், பேப்லெட், லேப்டாப், டெஸ்க்டாப் என்று பல தொழில்நுட்ப சாதனங்கள் வந்தாலும், ஒரு புத்தகத்தில் படிக்கும் சுவைக்கு நிகரானதாக எந்தத் தொழில்நுட்ப கேட்ஜெட்டும் அமையவில்லை. இந்த இடைவெளியை சரிசெய்ய உருவாக்கப் பட்டதே இ-புக் ரீடர்ஸ். சோனி, கோபோ, பார்னஸ் போன்ற பல பிராண்ட்கள் இ-புக் ரீடர்களைத் தயாரித்தாலும், வாடிக்கையாளர் களுக்கு முதல் சாய்ஸாக அமைவது அமேசான் நிறுவனத்தின் ‘கிண்டில்’ என்னும் இ-புக் ரீடர்.

அமேசான் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ‘கிண்டில்’ இ-புக் ரீடரை வெளியிட உள்ளது. வரும் அக்டோபர் 9-ம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் இந்தப் புதிய கிண்டில் இ-புக் ரீடர், பழைய கிண்டில் இ-புக் ரீடரைக் காட்டிலும் பல புதிய தொழில்நுட்ப மாற்றங்களைக் கொண்டு உள்ளது.

கிண்டில் இ-புக் ரீடரின் சிறப்பம்சம், அதன் ‘Ink Display’ தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களுக்குப் புத்தகத்தில் படிக்கக்கூடிய அதே உணர்வைத் தரும் சிறப்பைக் கொண்டது. மேலும், எத்தனை மணி நேரம் தொடர்ந்து படித்தாலும் எந்தவிதப் பாதிப்பும் கண்களுக்கு ஏற்படாது.


தற்போது தொடுதிரை வசதியோடு வரும் புதிய ‘கிண்டில்’, சூரிய ஒளியிலும் எந்தவிதக் குறையும் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய ‘Glare-Free’ தொழில்நுட்பத்தோடு வருகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் ஏதேனும் புத்தகத்தை வாசிக்கும்போது, ஒரு சொல்லின் பொருளை அறிய இன்-பில்டாக அமைந்துள்ள அகராதி மற்றும் விக்கிபீடி யாவும் இருக்கிறது.

WiFi வசதியோடு வரும் இந்த கிண்டில், மூன்று விலைகளில் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. ரூ.5,999-க்கு கிடைக்கும் கிண்டிலில் 3G மற்றும் ‘Built-in light’ வசதிகள் கிடையாது. ரூ.10,999 மற்றும் 13,999 ஆகிய இரு கிண்டிலிலும் ‘Built-in light’ வசதி இருக்கிறது. இந்த ‘Built-in light’ வசதி ஒளியை திரைக்கு உள்ளே தருவதனால், கண்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ரூ.13,999 கிண்டிலில் மட்டும் 3G வசதி யுண்டு. 6 இன்ச் தொடுதிரையைக் கொண்டுள்ள இந்த மூன்று மாடல்களும் ‘Amazon.in’-னில் மட்டுமே விற்கப்படுகிறது.

செ.கிஸோர் பிரசாத் கிரண்

Friday, October 03, 2014

ஏ.டி.எம். எச்சரிக்கைகள்!


ஏ.டி.எம். எனப்படும் Automated Telling Machine இப்பொழுது நகரங்கள் மட்டுமல்லாது கிராமங்களிலும் புழக்கத்துக்கு வந்துவிட்டன. அது போலவே ATM–களில் நடக்கும் தவறுகளும் குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இவற்றிலிருந்து நுகர்வோர் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள, சில வழிமுறைகளை இப்பொழுது பார்ப்போமா?

ஏ.டி.எம்-ல் நடத்தப்படும் குற்றங்கள்:-

* கார்டில் உள்ள பின் எண்ணையும் மற்ற தகவல்களையும் தெரிந்து கொள்வது.

* இ-மெயில்கள் அனுப்பி, கணக்கு வைத்திருப்பவரின் தகவல்களைத் தெரிந்து கொள்வது.

* ‘ஸ்கிம்மர்’ போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி ஏ.டி.எம்.களில் உள்ள பணத்தை எடுப்பது.

நாம் கவனித்தில் கொள்ள வேண்டியவை:-

* எந்த வங்கியில் இருந்து ஏ.டி.எம். அட்டை வாங்கப்பட்டதோ, அந்த வங்கியின் ஏ.டி.எம்-ஐ கூடிய வரை பயன்படுத்துங்கள்.

* பின் நம்பர் என்பது Personal Identification Number ஐ குறிக்கும். இந்த எண்ணை கீ-போர்டில் அழுத்தும் போது யாரும் பார்க்காமல் கீ-போர்டு மறைந்து இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

* ஏ.டி.எம்.க்குள் வங்கிகள் அமைத்திருக்கும் ‘கேமராக்கள்’ மூலம் இந்த தகவல்களை மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இது தவிர வேறு நபர்களாலும் இத்தகைய கேமராக்கள் பொருத்த வாய்ப்பு உள்ளது.

* பணம் எடுத்தவுடன் நீங்கள் எடுத்த தொகை, உங்கள் கணக்கில் மீதம் உள்ள தொகையை வெளியேறும் சீட்டு மூலம் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

* பணம் எடுத்த பின், திரையில் கூறியுள்ள அறிவுரைகளின் படி, உங்கள் நடவடிக்கைகளை முடித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் ‘கார்டை’ வெளியே எடுக்க மறக்காதீர்கள் ஏ.டி.எம்.ஐ விட்டு வெளியே வரும் போது உங்கள் பர்ஸ், மொபைல் ஃபோன் போன்றவற்றை மறந்து விட்டுவிடாதீர்கள்.

* உங்கள் ‘கார்டு’ இயந்திரத்திற்குள் வேகமாக உள்ளே இழுக்கப்பட்டால், அது தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு.

* நடவடிக்கைகள் முடிந்த உடனேயே உங்கள் கார்டை வெளியே எடுத்து விட வேண்டும் (அதிக பட்சம் 30 விநாடிக்களுக்குள்)

* உங்கள் பின் எண்ணை உங்கள் டயரி மற்றும் வேறு புத்தகங்களில் எழுதி வைக்காதீர்கள். எண்களைத் தவறாக அழுத்தினால், உடனே ""Cancel'' என்ற பட்டனை அழுத்தவும்.

* ஒவ்வொரு ஏ.டி.எம்.மிலும் புகார் செய்ய வேண்டிய தொலைபேசி எண் எழுதப்பட்டு இருக்கும். உங்கள் புகாரை உடனே அந்தத் தொலைபேசி எண்ணுக்குத் தெரியப்படுத்தவும்.

* ஏ.டி.எம். தொடர்பான குறைகளை, நுகர்வோர் தெரிவித்தால் 7 நாட்களுக்குள் குறைதீர்க்கப்பட வேண்டும் என்பது ரிஸர்வங்கியின் அறிவுரை. இவ்வாறு தீர்க்கப்படாவிட்டால் ஒருநாளைக்கு ரூ. 100 மீதம் இழப்பீடு தரப்பட வேண்டும்.

* மேலும் ஆர்.பி.ஐ. உத்தரவின்படி, நுகர்வோரின் பெயர், கணக்கு எண், கார்ட் எண், ஏ.டி.எம். முகவரி, வங்கியின் பெயர், புகாரின் விவரம் போன்ற விவரங்கள் அடங்கிய புகார் படிவங்கள் ஒவ்வொரு ஏ.டி.எம்.லும் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

பலி வாங்கும் சுனாமி


‘சுனாமி’. இந்தச் சொல்லைக் கேட்டாலே 2004ம் ஆண்டில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளைத் தாக்கிய சுனாமிதான் பலருக்கும் நினைவுக்கு வரும். அந்தச் சுனாமி தமிழகத்தை மட்டுமன்றி 14 நாடுகளைத் தாக்கி, இரண்டரை லட்சம் பேரை பலிகொண்டது. கடலினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலேயே சுனாமி தான் மிகப்பெரிய ஆபத்து.

கடலடித் தரைக்குக் கீழே ஏற்படுகிற பூகம்பத்தின் விளைவாகத்தான் சுனாமி தோன்றுகிறது. ஆனால் இப்படியான பூகம்பங்கள் அனைத்துமே சுனாமியை உண்டாக்குவதில்லை. மிகக் கடுமையான கடலடி பூகம்பம் தான் சுனாமியை உண்டாக்குகிறது.

கடலடி பூகம்பம் சில ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் நிகழ்வதாக இருக்கலாம். ஆனால் அப்படியான பூகம்பம் ஏற்பட்ட இடத்திலிருந்து பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கின்ற நிலப்பகுதி சுனாமியால் தாக்கப்படலாம்.

சுனாமி ஏற்படும்போது 10 அல்லது 30 மீட்டர் உயரத்துக்கு கடல் நீர் பெரும் பிரவாகமாக நிலப் பகுதிக்குள் பாய்கிறது. பின்னர் சற்று நேரம் கழித்து அந்த நீர் வேகமாக வந்த வழியே கடலுக்குத் திரும்புகிறது. இப்படிக் கடல் நீர் திரும்பிச் செல்லும்போது அனைத்தையும் ஒரேயடியாக அடித்துச் செல்கிறது. இதன் விளைவாகப் பெரும் உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் ஏற்படுகின்றன.

சுனாமியிலிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழி உண்டு. சுனாமி தாக்குவதற்கு முன்னர் கடல் நீரானது உள்வாங்கும். கடல் நீர் ஒரேயடியாகப் பின்னுக்குப் போவது என்பது அசாதாரண நிகழ்ச்சி. ஆகவே கடலோரமாக வசிப்பவர்களும் அந்த வட்டாரத்துக்கு வர நேர்ந்தவர்களும் இதை அதிசயமாகக் கருதி வேடிக்கை பார்க்கச் செல்வர். உள்வாங்கிய கடல் பின்னர் வேகத்துடன் கரையை நோக்கிப் பாயும் போது தப்பிப்பதற்கு நேரம் இருக்காது.

ஆகவே கடல் அசாதாரணமான அளவுக்கு உள்வாங்கி அதே நேரத்தில் சுனாமி எச்சரிக்கை விடப்படுமானால், திரும்பிப் பார்க்காமல் மேடான இடத்தை நோக்கி அல்லது உறுதியான கட்டடங்களின் மேல் மாடியை நோக்கி ஓடினால் உயிர் பிழைக்கலாம்.

2004ம் ஆண்டில் தோன்றிய சுனாமி தாய்லாந்து நாட்டின் கரையோரப் பகுதிகளையும் தாக்கியது. அப்போது புகேட் என்னுமிடத்தில் கடல் உள்வாங்கியபோது இங்கிலாந்திலிருந்து சுற்றுலா வந்திருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 வயதான டெல்லி ஸ்மித் என்னும் சிறுமி சுனாமி தாக்கப் போகிறது என்பதை உணர்ந்து எல்லோரும் ஓடிப் போய்விடலாம்" என்று உஷார் படுத்தவே அவளது குடும்பத்தினரும் மற்றும் பலரும் அவ்விதமே மேடான இடத்தை நோக்கி ஓடி உயிர் தப்பினர். பள்ளியில் அவளது ஆசிரியர் சுனாமி பற்றி சொல்லிக் கொடுத்திருந்ததால் அவளால் மற்றவர்களை எச்சரிக்க முடிந்தது.

சுனாமி அலைகளின் உயரம் இந்த அளவுக்குத் தான் இருக்கும் என்று யாராலும் கணித்துக் கூற முடியாது. ஒருசமயம் அலாஸ்காவைத் தாக்கிய சுனாமியின் உயரம் 524 அடி அளவுக்கு இருந்தது.

ஜப்பானில் கிழக்குக் கரை ஓரமாக அமைந்த புகு ஷிமா நகரை 2011ம் ஆண்டில் ஒரு சுனாமி தாக்கியது. இதன் விளைவாக அங்கிருந்த அணுமின் சார நிலையத்திலும் கடல் நீர் புகுந்து விபரீத விளைவுகள் ஏற்பட்டன. சுனாமியின் விளைவாக பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதில் வேதனை என்னவென்றால் கடலில் தடுப்புச் சுவர்களை எழுப்பினால் சுனாமியைத் தடுத்து விடலாம் என்று கருதி கரையோரமாகக் கடலின் நடுவே நெடுக 10 மீட்டர் உயரத்துக்கு தடுப்புச் சுவர்களை எழுப்பியிருந்தார்கள்.சுனாமி அலைகள் 15 மீட்டர் உயரத்துக்கு இருந்ததால் தடுப்புச் சுவர்களால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.  தடுப்புச் சுவர்களால் பலன் இல்லாமல் போகலாம் என்று பல நிபுணர்கள் ஏற்கெனவே கூறியிருந்தனர். அதைப் பொருட்படுத்தாமல் இந்தச் சுவர்கள் எழுப்பப்பட்டன. அது மட்டுமன்றி தடுப்புச்சுவர்கள் கட்டுவதில் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டதாக விழாவும் கொண்டாடினர்.தமிழகத்தைத் தாக்கிய சுனாமி எப்படி நிகழ்ந்தது என்பதைக் கவனித்தால் சுனாமி பற்றி மேலும் நன்கு அறிந்துகொள்ள இயலும்.அந்தமான் தீவுகளுக்கு கிழக்கே கடலுக்கு அடியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் அடி நிலப் பாறைகள் பூமிக்குள் இறங்கின. 1300 கிலோ மீட்டர் நீளத்துக்கு இவ்விதம் பாறைகள் உள்ளே இறங்கியபோதுதான் கடலடியில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் அங்கு கடலடித் தரை பல மீட்டர் உயரத்துக்கு மேல் எழும்பிக் கீழே இறங்கியது. கடலடித் தரை இவ்விதம் மேலே எழும்பியபோது அங்கு கடல் நீரும் மேலே எழும்பியது. இதுவே சுனாமி அலைகளை உண்டாக்கியது.கடலுக்கு அடியில் பிரம்மாண்டமான பாறைப் பாளங்கள் பூமிக்குள் ஏன் இறங்க வேண்டும் என்பதைப் பின்னர் கவனிப்போம்.ஜப்பான் நாடு அடிக்கடி சுனாமியைச் சந்திக்கிற நாடு. மக்கள் அனைவருக்கும் சுனாமி என்றால் என்ன என்று நன்கு தெரியும். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டால் அதை மதிப்பவர்கள். ஆனால் பெரும் செலவில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர்கள் காப்பாற்றி விடும் என்று நம்பியதால் 2011ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பெரும் சேதத்தை உண்டாக்கியது.

சுனாமி அலைகள் விசித்திரமானவை. 2004ம் ஆண்டில் கடல் தரைக்கு கீழே 30 கிலோ மீட்டர் ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த இடம் சென்னையிலிருந்து சுமார் 2700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாகும். அந்த இடத்துக்கும் சென்னைக்கும் இடையிலான கடல் பகுதியில் இருந்த கப்பல்கள் எதுவும் சுனாமியால் பாதிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் சுனாமி அலைகள் தமிழக் கரையை நோக்கிச் செல்கிறது என்பது கூட கப்பலில் இருந்தவர்களுக்குத் தெரிந்திருக்காது.கடலில் கடும் புயல் உருவாகும்போது தோன்றுகிற அலைகளுக்கும் சுனாமி அலைகளுக்கும் இடையே பெருத்த வித்தியாசம் உண்டு. புயலின்போது நடுக்கடலில் அலையின் உயரம் 10 மீட்டர் அளவுக்கும் இருக்கலாம். கப்பல்கள் புயல் பகுதியில் சிக்கிக்கொண்டால் கப்பலின் தளத்தின் மீது பயங்கர அலைகள் தாக்கும். இத்துடன் ஒப்பிட்டால் நடுக்கடலில் சுனாமி அலைகளால் கப்பல்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. நடுக்கடலில் சுனாமி அலையின் உயரம் 30 செண்டி மீட்டருக்கு மேல் இருக்காது. சுனாமி அலைகள் கரையை அடையும்போதுதான் பயங்கர வடிவை எடுக்கின்றன. கரையை அடையும்போது அலையின் உயரம் 30 மீட்டராகக் கூட இருக்காலாம்

சுனாமி தாக்குதல் ஏற்படலாம் என்று தோன்றினால் துறைமுகத்தில் உள்ள கப்பல்கள் சுனாமி ஆபத்திலிருந்து தப்பிக்க நடுக்கடலுக்குச் சென்றுவிடும்.

என்.ராமதுரை

எபோலா என்றால் என்ன?


எபோலா (Ebola) என்பது ஒரு வைரஸ் கிருமி. இது உண்டாக்கும் நோய்க்கு எபோலா வைரஸ் நோய் என்று பெயர். 1976ம் ஆண்டு சூடான் மற்றும் காங்கோ நாடுகளில் ஒரே நேரத்தில் இது தோன்றியது. காங்கோ நாட்டின் எபோலா நதிக் கரையில் முதன்முதலில் இது பரவிய காரணத்தால், இந்தக் கிருமிக்கு ‘எபோலா வைரஸ்’ என்று பெயரிடப்பட்டது. இந்த நோ இப்போது கினி, லைபேரியா, நைஜீரியா, சியாரா லியோன் ஆகிய மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருகிறது. பார்ப்பதற்கு நாகப்பாம்பு படம் எடுத்த மாதிரி இருக்கிற எபோலா வைரஸ், பழம் தின்னும் வௌவால்கள் மூலமும், ஆடு, மாடு, பன்றி, மான், எலி, குரங்கு போன்ற விலங்குகள் மூலமும் மக்களுக்குப் பரவுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிப் பழகினால், அவருடைய இருமல், சளி, தும்மல், உமிழ் நீர், சிறுநீர், ரத்தம், மலம், வியர்வை போன்ற உடல் திரவங்கள் மூலம் மற்றவர்களுக்கும் இது எளிதில் பரவிவிடும். கடுமையான காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி, தசைவலி, தொண்டை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, அம்மைக் கொப்புளங்கள், நெஞ்சுவலி, ரத்தக்கசிவு போன்றவை இதன் அறிகுறிகள். இந்த நோய்க்கு சிகிச்சை எதுவுமில்லை. உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆகவே, சுய சுத்தம் காப்பது, பொது சுகாதாரம் பேணுவது போன்றவற்றின் மூலமே இதைத் தடுக்க முடியும். கைகளை சோப்பினால் அடிக்கடி சுத்தமாகக் கழுவ வேண்டும். நோய் பரவும் காலத்தில் விலங்குகளின் இறைச்சியைச் சாப்பிடக்கூடாது. நோயாளியுடன் நெருங்கிப் பழகக் கூடாது.

பில்கேட்ஸ்!

 
கம்ப்யூட்டர் வித்தகர், கொடைவள்ளல், தொழில் அதிபர் எனப் பன்முக ஆளுமை படைத்தவர்தான் பில்கேட்ஸ்! பள்ளிப் பெயர் வில்லியம் ஹென்றி கேட்ஸ். இவரது பிறந்த நாள் அக்டோபர் 28ஆம் தேதி. பிறந்த ஆண்டு 1955. உலகத்தின் மிகப் பெரிய கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி மற்றும் சேர்மனாக இருந்தவர். இந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை 1975ஆம் ஆண்டு தனது இளைமைக்கால நண்பரான பால் ஆலன் என்பவரோடு சேர்ந்து துவங்கினார். பில்கேட்ஸ் பல கம்ப்யூட்டர் நிறுவனங்களை உருவாக்கி இருக்கிறார். ஃபோர்ப்ஸ் என்ற அமெரிக்க வணிக இதழ் ஆண்டுதோறும் உலகக் கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில் 1995ஆம் ஆண்டில் இருந்து தவறாமல் இடம்பிடித்து வருகிறார் பில்கேட்ஸ். பல புத்தகங்களை எழுதி இருக்கிறார். பல புத்தகங்களின் துணை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். ஆவணப் படங்களிலும் தோன்றியிருக்கிறார்.
 
பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பை 2000ஆம் ஆண்டில் துவக்கி, அதன் மூலம் பல அறக்கட்டளைகள் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்குப் பெருமளவு பண உதவி செய்து வருகிறார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள சியாட்டில் என்ற பகுதியில் பிறந்தவர் இவர். தந்தை புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆவார். தாயார் பெயர் மேரி மேக்ஸ்வெல். இவர் யுனைடெட் வே மற்றும் இன்டர்ஸ்டேட் பேங்க் நிறுவனத்தில் பணியாற்றிவர். கம்ப்யூட்டரோடு விளையாடும் கேம்ஸ் பலவற்றைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா? உங்களைப் போல பள்ளி செல்லும் மாணவனா பில்கேட்ஸ் இருந்தபோது - தனது 13வது வயதிலேயே - கம்ப்யூட்டர் விளையாட்டுகளுக்கான புரோகிராம்களைத் தானே எழுதி இருக்கிறார் என்பது ஆச்சரியம்தானே!
 

Wednesday, October 01, 2014

செவ்வாயில் மங்கள்யான்.

முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை எட்டிய முதல் நாடு, முதல் ஆசிய நாடு, செவ்வாயை அடைந்த நான்காவது நாடு... எனப் பல சாதனைகளைப் படைத்து, இந்தியாவுக்குப் பெருமை பெற்றுத்தந்துள்ளது  மங்கள்யான்.

பூமியில் தொடங்கி செவ்வாயை அடைந்தது வரையிலான நிகழ்வுகள், சாதனை படைத்த விஞ்ஞானி களுக்குப் பாராட்டுக்கள் என, பரபரப்பான மகிழ்ச்சி நாட்களாக உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது மங்கள்யான் சாதனை.
 செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் செலுத்தப்பட்டது,  அது செயல்படும் விதம் பற்றி சில துளிகள்...

மங்கள்யான் விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கு, பி.எஸ்.எல்.வி ராக்கெட் பயன்படுத்தப்பட்டது. ஆனால், விண்வெளிக்குச் சென்றபின் விண்கலத்தை இயக்க, LAM (Liquid Apogee Moto) எனப்படும் சிறப்புத் திரவ இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. 440 நியூட்டன் விசை தரும் இந்த இன்ஜினைக் கொண்டுதான், கோள்களுக்கு இடையேயான விண்வெளிப் பயணத்தையும் செவ்வாய் கிரகத்தின் பாதையில் புகுவதையும் இஸ்ரோ விஞ்ஞானி கள் செயல்படுத்தினர். இந்த இன்ஜின், இஸ்ரோ மையத்தில் உள்ள இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது.

செவ்வாயில் இறங்கியதும், உறக்கத்தில் இருந்த இந்த இன்ஜின், திட்டமிட்டபடி செப்டம்பர் 22-ம் தேதி, விழித்துக்கொண்டு செயல்பட்டது. முக்கிய LAM இன்ஜின் தவிர, மங்கள்யானில் எட்டு சிறிய நெக்கி இன்ஜின்கள் (Thrusters) இருக்கின்றன.

அது என்ன நெக்கி இன்ஜின்கள்? 

விண்வெளியில், ஆன்டெனாவை  பூமிக்கு நேரே வைக்க, விண்கலத்தைத் திருப்ப வேண்டும். தரையில் ஒரு காரையோ, ஆகாயத்தில் ஒரு விமானத்தையோ இயக்க, உராய்வு விசை பயன்படும். ஆனால், விண்வெளியில் காற்றும் இல்லை, உராய்வும் இல்லை. அந்தச் சவாலை சந்திக்கத்தான் இந்த நெக்கி இன்ஜின்கள்.

காற்றடைத்த பலூனில் இருந்து அழுத்தக்காற்று வெளிவரும்போது, பலூன் எதிர்த்திசையில் நியூட்டனின் மூன்றாம் விதிப்படி செல்வதுபோல, இந்த இன்ஜினிலிருந்து அழுத்தவாயு பீய்ச்சிக்கொண்டு வெளியாகும். விண்கலம் எதிர்த்திசையில் நெக்கித் தள்ளப்படும். இவ்வாறுதான், விண்கலத்தை விண்வெளியில் திருப்ப முடியும்.

செவ்வாய் கிரகப் பாதையில் மங்கள்யான் புகுந்த  அன்று நடந்த இயக்கங்கள், சாகசம் நிறைந்தவை. அன்று இன்ஜின் இயங்கி, விண்கலத்தின் விசையைச் சரியான அளவு குறைக்க வேண்டும். இன்ஜின் வாயை விண்கலம் போகும் திசையில் இருக்கும்படி செய்ய, விண்கலத்தில் உள்ள நெக்கி இன்ஜின்களை இயக்கி, விண்வெளியில் அதை பல்டி அடிக்கும்படிச் செய்தார்கள்.

முதலில் LAM இன்ஜின் தொடர்ந்து 23.18 நிமிடங்கள் எரிந்து, விசை தந்தது. அவ்வாறு இன்ஜின் இயங்கும்போது, முதல் 4 நிமிடங்களே பூமியின் பார்வையில் இருக்கும். பின்னர், செவ்வாய் கிரகத்தின் பின்புறம் விண்கலம் சென்றுவிடும். விண்கலத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாது. எனவே,  விநாடிக்கு 1,098 மீட்டர் என்ற எதிர் கதிவேகம் அடைந்ததும், இன்ஜின் தானாக நின்றுவிடும்படி  ஆணைகளை விண்கலத்தில் ஏற்றியிருந்தனர்.


‘கரணம் தப்பினால் மரணம்’ என்பார்களே அதுபோல, கதிவேகம் கூடினால், விண்கலம் செவ்வாயின் பிடியில் இருந்து நழுவிவிடும். கதிவேகம் குறைந்தால், செவ்வாய் கிரகத்தில் மோதி, சுக்குநூறாக உடைந்துவிடும். செவ்வாயை நெருங்கிய மங்கள்யான், முக்கிய நிகழ்வுகள் நடக்கும்போது, செவ்வாயின் பின்புறம் சென்றுவிட்டது. எனவே, விண்கலத்தோடு உள்ள ரேடியோ தொடர்பு அறுந்துவிட, ‘்குருட்டு’ நிலை எனப்படும் நிலையில்தான் விண்கலத்தை வெற்றிகரமாக இயக்கினர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

அதுமட்டுமா... அன்று, விண்கலம் சுமார் 223 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. எனவே, ரேடியோ தகவல் வர 12 நிமிடங்கள் ஆனது. எனவே, விண்கலம் செவ்வாய் கிரகத்தின் பின்புறத்தில் இருந்து 7:47-க்கு வெளிவந்தாலும், சுமார் 8 மணிக்குதான் பூமியில் ரேடியோ சிக்னல் கிடைத்தது. அதன் பின்னரே, திட்டம் வெற்றி என அறிவித்தனர்.

மங்கள்யானில் மொத்தம் ஐந்து அறிவியல் கருவிகள் இருக்கின்றன. இதில், கேமரா அன்றே இயக்கப்பட்டு, சோதனை படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. தற்செயலாக, ‘சைடிங் ஸ்ப்ரிங்’ எனும் வால்மீன், செவ்வாய் கிரகத்துக்கு அருகே அக்டோபர் 18 அன்று செல்ல இருக்கிறது. அதனையும் கூடுதலாக மங்கள்யான் மூலம் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.

கிங் ஆஃப் இந்தியாவாக செவ்வாய் கிரகத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ள மங்கள்யான், மேலும் பல சாதனைகள் படைப்பது நிச்சயம்!

சனீஸ்வரர்

சனி - சூரியன்:

சனியும் சூரியனும் ஒருவருக்கு ஒருவர் பகைவர்் என்பதால், இந்தச் சேர்க்கை சிலாக்கியம் இல்லை. தந்தைக்கும் பிள்ளைக்குமான உறவு சுமுகமாக இருப்பதற்கில்லை. சொத்துக்கள் சம்பந்தமாக கோர்ட்டுக்குச் செல்லவும்கூடும். ஒருவிதத்தில் இந்தச் சேர்க்கையானது பித்ரு தோஷத்தைக் குறிப்பதாகச் சொல்லலாம். சங்கீதத்திலும் கலைகளிலும் ஆர்வமும், அழகாகப் பேசும் திறனும் இவர்களிடம் காணப்படும். அதிக செல்வாக்கும் செல்வமும் பெற்றிருந்தாலும், கலகம் செய்வதிலும், மற்றவர்களை ஏமாற்றுவதிலும் சாமர்த்தியம் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு சனிதசை சூரியபுக்தி அல்லது சூரியதசை சனிபுக்தி நடைபெறும் காலங்களில், உரிய பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.  

சனி - சந்திரன்:

அழகான தோற்றத்துடன் திடகாத்திரமாகக் காணப்படும் இவர்கள் ஊர் சுற்றுவதில் பிரியம் கொண்டிருப்பார்கள். மந்தமாகக் காணப்படுவார்கள். மாந்த்ரீக விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர்களாகவும், அதை வியாபாரரீதியாகப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்குப் பழங்களைச் சாப்பிடுவதில் பிரியம் அதிகம் இருக்கும். உடல் நலனைப் பராமரிப்பதில் சிரத்தையுடன் இருப்பார்கள். இவர்களில் ஒருசிலர் இளம் வயதிலேயே தாயை இழக்க நேரிடலாம். இயல்பிலேயே சாமர்த்தியசாலிகளான இவர்கள் பகைவர்களை சுலபமாக வெல்லக்கூடிய ஆற்றலைப் பெற்றிருப்பார்கள்.

 சனி - செவ்வாய்:

நீண்ட கைகளைப் பெற்றிருக்கும் இவர்கள் நல்ல கல்வியறிவும், புத்திக்கூர்மையும், திறமையும் ஒருசேரப் பெற்றிருப்பார்கள்.எல்லாவிதமான சுகசெளகர்யங்களைப் பெற்றிருக்கும் இவர்கள் மற்றவர்களால் பெரிதும் புகழப்படுவார்கள். தன்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உபகாரம் செய்வார்கள். அதேநேரம், தவறு செய்பவர்களைக் கண்டால் தயவுதாட்சண்யம் பார்க்கமாட்டார்கள். கெமிக்கல், இரும்பு தொடர்பான தொழிலிலோ, வியாபாரத்திலோ ஈடுபட்டுப் பணம் சம்பாதிப்பார்கள். எப்போதும் சிந்தனைவயப்பட்டவர்களாகக் காணப்படுவார்கள்.

 சனி - புதன்:

நிறைந்த கல்வியறிவு பெற்றிருக்கும் இவர்கள், சாஸ்திர ஆராய்ச்சிகளிலும், வாதப் பிரதிவாதங்களிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். மற்றவர்களைவிடவும் தான் மேலானவன் என்பது போன்ற கர்வமும் இவர்களிடம் காணப்படும். ஆசிரியராகவோ மதாசாரியராகவோ புகழ் பெறுவார்கள். அரசாங்கம் தொடர்பான சட்ட நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.   எந்தத் துறையாக இருந்தாலும், அதில் அதிகாரம் மிக்க பணியில் இருப்பார்கள். நல்ல தேஜஸுடன் காணப்படும் இவர்களுக்குச் சொந்த வீடு, நிலங்கள் போன்றவை அமைவதுடன், மனைவி வழியிலும் சொத்துக்கள் சேரும்.

 சனி - குரு:

இவர்கள் நிறைந்த கல்வியறிவும் ஞானமும் பெற்றிருந்தாலும், அதனால் இவர்கள் அடையக்கூடிய பலன்கள் மிகக் குறைவாகவே இருக்கும். தாய்மாமன் வகையில் மிகுந்த ஆதரவு உண்டு. தாயார்வழி மாமாக்களுடைய ஆதரவைப் பெற்றிருப்பர். இந்தச் சேர்க்கையானது புத்திர தோஷத்தையும், புத்திரர்களால் அவப்பெயரையும் ஏற்படுத்தக்கூடும். 30 வயதுக்குப் பிறகு ஜாதகருக்கு எதிர்பாராத பதவி கிடைப்பதுடன், சொத்துச் சேர்க்கையும் உண்டாகும். இவர்களில் பலரும் பணம் கொடுக்கல் வாங்கலிலும், பணம் புழங்கக்கூடிய இடங்களிலும் வேலை செய்து பணம் சம்பாதிப்பர். பூமி வகையிலும் இவர்களுக்கு லாபம் உண்டாகும்.  

சனி - சுக்ரன்:

செல்வம், செல்வாக்கு, புகழுடன் திகழ்வார்கள். அந்தஸ்தும் அதிகாரமும் உள்ள பதவிகளில் இருப்பார்கள். சகோதர சகோதரிகளிடம் அதிக அன்பும் பாசமும் கொண்டிருக்கும் இவர்களுக்கு, அவர்களுடைய ஆதரவும் கிடைக்கும். வைரம், பொன், வஸ்திர ஆபரணங்களுடன் உன்னதமான நிலையில் இருப்பார்கள். பல  ஆட்களை வைத்து வேலை வாங்கும்படியான அதிகார யோகமும் இவர்களுக்கு உண்டு. சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றுப் புகழுடன் திகழ்வார்கள். சாஸ்திரங்களில் உள்ளவற்றை நம்பிக்கையுடன் பின்பற்றுவார்கள். பக்தியும் தெய்வ நம்பிக்கையும் கொண்டிருக்கும் இவர்கள், எது நடந்தாலும் நன்மைக்கே என்னும் மனப் பக்குவத்தைப் பெற்றிருப்பார்கள்.  

 சனி - ராகு:

மிகுந்த கல்வியறிவுடன் இருக்கும் இவர்கள் நிலங்கள், வீடு வாசல், மாடு, கன்றுகள், பால்பாக்யம், கீர்த்தி, வண்டி, வாகனங்கள் முதலியவற்றுடன் பலரும் மதிக்கும்படியாக வாழ்வார்கள். அரசருக்கு நிகராக பணியாள்கள் சூழ இருப்பார்கள். பெண்களால் சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். இவர்களில் பலர் சட்டம் படித்து, நீதித் துறையில் உயர்பதவி வகிப்பதுடன், நீதியை மிக நேர்மையுடன் கடைப்பிடிப்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்குச் சகோதர, சகோதரி வகையில் இடைஞ்சல்கள் ஏற்படக்கூடும்.

சனி - கேது:

இந்தச் சேர்க்கையானது நல்ல இடத்தில் அமையப் பெற்றிருந்தால், ஆன்மிகத்தில் நாட்டமும், தெய்வ பக்தியும் கொண்டவர்களாக இருப்பார்கள். உடலில் அடர்த்தியான ரோமம் காணப்படும். கோபமும், பிறரை ஏமாற்றும் குணமும் கொண்டிருப்பார்கள். இவர்களில் சிலருக்கு காம உணர்ச்சி சற்று மிகுதியாகக் காணப்படும். பெயருக்கு ஆசைப்பட்டு, தான தர்மங்களைச் செய்வார்கள். மற்றவர்கள் வீட்டில் உணவு உண்பதில் பிரியம் இருக்கும். பித்த சம்பந்தமான நோய்கள் இவர்களுக்கு ஏற்படக்கூடும்.

சைனஸ் அலர்ஜியைத் தடுக்க எளிமையான டிப்ஸ்



தும்மல் என்பது இயல்பான ஒன்று. ஆனால், சிலர் பக்கத்தில் இருப்பவர்கள் பதறும் அளவுக்கும், வீடே அதிரும் அளவுக்கும் தும்முவார்கள். இது காலம், காலமாகவே இருந்து வரும் பிரச்னைதான். வயது முதிர்ந்த‌வர்களுக்கே அதிர வைக்கும் தும்மல் பிரச்னை அதிக அளவில் காணப் படுகிறது. இப்படி தும்மல் அதீத சத்தத்துடன் வெளிப்படுவதற்கு என்ன காரணம், அடுக்கடுக்கான தும்மல் எதனால் ஏற்படுகிறது, இதனால் உடலுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்.

  இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலையணை உறையை மாற்றி சுத்தப்படுத்த வேண்டும். 

 வீட்டை சுத்தப்படுத்தும் போது மூக்கை துணியால் கட்டிக்கொள்ள வேண்டும்.  

 தூசி படியும் பொருட்களைப் படுக்கை அறையில் வைக்காதீர்கள்.  

 வெளியே செல்லும்போது, முகத்தில் மாஸ்க் அல்லது துணி கட்டிச் செல்வதை வழக்கப் படுத்திக் கொள்ளுங்கள்.  

 தினமும் காலை மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் தும்மலைத் தூர விரட்டலாம்.  

 வாரம் இரு முறை ஆவி பிடிக்கலாம்.

 கை நகங்களை வெட்டி சுத்தமாக வைக்கலாம்.

 அதிக எண்ணெய் ஆகாரங்கள், கொழுப்புச் சத்து உள்ள உணவுகளைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் அதிக எடை காரணமாக, தொண்டை மற்றும் மூச்சுப்பகுதியில் உள்ள சதைப்பற்று தடிமனாகலாம். இது சுவாசப் பிரச்னைக்கும், தும்மலின்போது அதிக சிரமத்துக்கும் வழிவகுக்கும்.


தண்ணீர் - எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது?

மூச்சிரைக்க விளையாடிவிட்டு, வரும் வழியில் கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. இன்று நாம் குடிக்கும் தண்ணீரில் இருந்து உண்ணும் உணவு வரை அனைத்துமே ரசாயனக் கலப்பாகிவிட்டது.


வீட்டில் காய்ச்சி ஆறிய தண்ணீரைக் குடித்துவிட்டு வேறு இடங்களுக்கோ, விசேஷங்களுக்கோ செல்லும்போது அங்குள்ள தண்ணீரைக் குடித்தால், அடுத்த நாளே சளிபிடித்துவிடுகிறது.

மினரல் வாட்டர் என்று பாட்டில்களில், கேன்களில் கிடைக்கும் தண்ணீரைக்  குடித்துப் பழகிவிட்டோம். உண்மையில் அதில் ஊட்டச் சத்துக்கள் உள்ளனவா, சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் தண்ணீரில் உள்ள சத்துக்கள் நீக்கப்பட்டு வெறும் சக்கையான நீரைத்தான் பருகுகிறோமா என்று பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. 

'நம் உடலில் 50 முதல் 60 சதவிகிதம் வரை நீர்தான். ஒரு மனிதனுக்கு சராசரியாகத் தேவைப்படும் தண்ணீரின் அளவு என்பது அவனுடைய உடல், வாழும் இடத்தின் சுற்றுச்சூழல், வேலை ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடும். ஒருவருடைய உடல் எடையை வைத்து, அவருக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவைக் கணக்கிடலாம்.    அந்தக் காலத்தில் இயற்கையிலேயே மூலிகைகள் கலந்த, சூரிய ஒளிபட்ட, கிருமிகளை மீன் தின்று சுத்தம் செய்த நீரைத்தான் குடித்து வந்தோம். அப்படிப்பட்ட சுத்தமான தண்ணீர், இன்று மனிதர்களால் மாசுபட்டுள்ளது.  நம் நாட்டில், சுத்தமான குடிநீர் என்பது வெறும் 33 சதவிகிதம் மட்டுமே. இதனால்தான் கிருமியால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது'' . 

நாம் பருகும் நீர் எப்படி சுத்திகரிக்கப்படுகிறது?. 

'வீட்டில் பொருத்தப்படும் வாட்டர் பியூரிஃபையரிலும், தண்ணீர் கேன் நிரப்பும் தொழிற் கூடங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்படுகிறது.  முதலில் கேண்டில் பில்டர் என்று சொல்லப்படும் தொழில்நுட்ப முறையில், இயற்கை மாசு வெளியேற்றப்பட்டு தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. எதிர்சவ்வூடு பரவல் தொழில் நுட்பத்தின்படி மைக்ரான் அளவிலான சவ்வு வழியாக சுத்திகரிக்கப்பட்ட நீர் செலுத்தப்படுகிறது. அதையடுத்து கார்பன் ஃபில்டர் செய்யப்படுகிறது. பின்னர் ஒரு மைக்ரான் சவ்வு வழியாகவும், அதனையடுத்து 0.0001 மைக்ரான் அளவிலான சவ்வு வழியாகவும் அனுப்பப்பட்டு, தண்ணீரில் இருக்கும் மாசுக்கள் அகற்றப்படுகின்றன. இப்படிக் கிடைக்கும் தண்ணீர் மிகவும் சுத்தமானது.

வீட்டில் பயன்படுத்தும் சில சுத்திகரிப்பான்களிலும், தொழிற்கூடங்களிலும் அல்ட்ராவயலட் கதிர்களால் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் கிருமிகள் முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன. இந்த முறையில் இருந்து பெறப்படும் நீரின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.

கேன் நிறுவனங்களில் தண்ணீர் சுத்திகரிக்கப்படும் முறை

இந்தியத் தர நிர்ணய விதிகளை, சில  நிறுவனங்கள் முறையாகக் கடைப்பிடிக்கின்றன. ஆனால், சில நிறுவனங்கள், தரமற்ற கேன்களை உபயோகப்படுத்துவதும் நடக்கிறது. சுத்திகரித்த தண்ணீர் சுகாதாரமற்ற கேன்களில் சேரும்போது, மீண்டும் தண்ணீரின் தரம் கெட்டுவிடுகிறது.

மினரல் வாட்டர் என்றால் என்ன? 

காசு கொடுத்து வாங்கும் பாட்டில்களில் உள்ள தண்ணீர்தான் மினரல் வாட்டர் என்று நினைக்கிறோம். ஆனால், அது உண்மை  இல்லை. நாம் வாங்கும் பாட்டில்களில் இருக்கும் தண்ணீர்  'சுத்திகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட குடிநீர்’ (packaged Drinking water) அவ்வளவு தான்.  மினரல் வாட்டர் என்பது கனிமங்கள் சரியான அளவில் கலக்கப்பட்ட சத்தான குடிநீர். ஒரு லிட்டர் தண்ணீரைத் தயாரிக்கவே 100 ரூபாய்க்கும் அதிகமாக செலவாகும்' என்றார்.

'தண்ணீரைச் சுத்தம் செய்ய, பல நவீன வசதிகள் வந்து விட்டாலும், அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் தண்ணீரைத் தூய்மைப்படுத்தப் பயன்படுத்திய முறைகள், அவற்றுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல'.

 'தண்ணீரின் கடினத்தன்மையை மாற்றுவதற்கு, அந்தக் காலத்தில் நெல்லிமரக் கட்டையையும் தேற்றாங் கொட்டையையும் (தேத்தா விதை) பயன்படுத்தினார்கள். அதில் இருக்கும் பாலிபீனால் என்னும் பொருள், தண்ணீரில் இருக்கும் தாதுக்களை மென்மையாக்குவதால், நீரின் கடினத்தன்மை குறைந்துவிடுகிறது.முன்பெல்லாம் வீட்டுக் கொல்லையில் இருக்கும் கிணற்றில், நெல்லிமரக் கட்டையைப் போட்டுவைப்பது வழக்கம். அல்லது, தேற்றாங் கொட்டைகளைப் பொடித்து, ஒரு துணியில் கட்டி இறக்கிவிடுவார்கள். 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றுவார்கள். கிணற்றில் மட்டுமல்ல, பானையில் கூட தேத்தா விதைகளைப் பொடித்து, துணியில் கட்டிப் போட்டுவைக்கலாம்.இப்போதும் நம் வீடுகளில் வரும் நீர் கடின நீராக இருந்தால், சம்ப் மற்றும் மேல்நிலைத் தண்ணீர் தொட்டிகளில் நெல்லிக் கட்டை அல்லது தேத்தாங் கொட்டையைப் போட்டுவைக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்.  

நீரைக் குடிக்கும் முறை 

மோர் பெருக்கி, நீர் சுருக்கி, நெய் உருக்கி உண்பவர்தம் பேர் சொல்லப்போகுமே பிணி’ என்பது தேரையர் பாடல்.

நீர் சுருக்கி’ என்பது நீரைக் காய்ச்சி (அதாவது வற்ற வைத்து) குடிக்க வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. எனவே, காய்ச்சிய தண்ணீரைக் குடிக்கும் பழக்கமும் பாரம்பரியமாக   இருந்துவந்ததுதான். அதிலும், செம்புப் பாத்திரத்தில் காய்ச்சிக் குடித்தால், உடலில் இருக்கும் நிறமிகள் மற்றும் சருமத்துக்கு மிகவும் நல்லது.

தண்ணீர் சில மருத்துவப் பலன்கள் 

  மருதம்பட்டையை, வெதுவெதுப்பான தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்திருந்து, காலையில் அருந்தினால், இதயம் பலப்படும். ரத்தம் உறையாமைப் பிரச்னையைத் தடுக்கும் நல்ல மருந்து இது.

  சுத்தமான சந்தனத்தை உரைத்து, அதை மிளகு அளவு எடுத்து, 60 மி.லி. தண்ணீரில் கரைத்துக் குடித்தால், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும்.

  பெருஞ்சீரகம் சிறிதளவு எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு வைத்திருந்து, மறுநாள் முழுக்கக் குடிப்பதற்கு அந்த நீரையே பயன்படுத்தி வந்தால், போதைப் பொருட்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்தும். மேலும், செரிமானத்தையும் சீராக்கும்.

  ஓமம் ஊறவைத்த தண்ணீரை, குழந்தைகளுக்குக் கொடுத்தால், செரிமானக் கோளாறுகள் நீங்கும். வயிற்றுப்போக்கு இருந்தாலும் கட்டுப்படுத்தும். நம் வீடுகளில் முன்பெல்லாம் 'ஓமவாட்டர்’ கண்டிப்பாக இருக்கும். பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வயிற்றுப் பிரச்னைகள் ஏற்பட்டால், நல்ல மருந்து அது.

  நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும் சதகுப்பையை, கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அருந்தினால் செரிமானத்தைச் சீராக்குவதுடன், வயிற்றை இழுத்துப் பிடித்து வலிப்பதற்கும் நல்ல மருந்தாகும். அந்தக் காலத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் 'கிரைப் வாட்டர்’ போன்று செயல்படும்.

  கொதிக்கும் தண்ணீரில் புதினா இலையைப் போட்டு வைத்திருந்து, அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதுடன், கிருமிகள் வராமல் தடுக்கும். வீட்டிலேயே செய்துகொள்ளக் கூடிய மவுத்வாஷ் இது.

  வில்வ நீர், துளசி நீர் இரண்டுமே நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த உதவும்.

காய்ச்சிய தண்ணீர் 
தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள்’ என்கிறார்கள். தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது, 99.9 சதவிகிதம் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் அழிகின்றன. ஆனால், பலருக்கு முறையான கொதிக்கவைத்தல்’ பற்றிச் சரியான புரிதலோ வழிகாட்டுதலோ இல்லை. தண்ணீரை அடுப்பில் வைத்து, லேசாகச் சூடு வந்ததுமே அடுப்பை அணைத்துவிடுகின்றனர். நீரை நன்றாகக் கொதிக்கவைத்து, குமிழ்கள் வரும்போது, அந்தக் கொதிநிலையிலேயே 10 நிமிடங்கள்் இருக்கவேண்டும். இந்த நீரை ஆறவைத்து, வடிகட்டி அன்றே குடித்துவிட வேண்டும். முதல் நாள் காய்ச்சிய நீரை மறுநாள் பருகுவதால், எந்த நன்மையும் இல்லை. மேலும், பானையில் வைத்திருக்கும் நீராக இருந்து, ஒவ்வொரு முறையும் கையை விட்டு்த் தண்ணீரை எடுக்கும்போது, நம் கை மூலம் சில கிருமிகளை உள்ளேவிடுகிறோம். எனவே, தண்ணீரை முகந்து குடிக்காமல், ஊற்றிக் குடிப்பதுதான் நல்லது' .


  டாக்டர் எழிலன்.

Sunday, September 28, 2014

செல்போன் விற்பனை... ஆன்லைன் Vs ரீடெயில்

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை  மதியம் 2 மணி அளவில் இந்தியா முழுக்க பல இளைஞர்களும் பரபரப்பாக இருந்தார்கள். காரணம், சீனாவின் ஆப்பிள் என்றழைக்கப்படும் ஷியோமி நிறுவனம் தனது லேட்டஸ்ட் செல்போன்-ஆன ரெட்மீ 1எஸ் என்கிற போனை ஃப்ளிப்கார்ட் மூலம் அன்று புக்கிங்   தொடங்கியது.

சில லட்சம் எண்ணிக்கையில் விற்பனைக்கு வந்த போனை வாங்க பல லட்சம் பேர் கம்ப்யூட்டர் முன்பு பல மணி நேரம் காத்துக்கிடந்தனர். மிகச் சரியாக இரண்டு மணிக்குத் தொடங்கிய ‘புக்கிங்’ அடுத்த சில நொடிகளிலேயே முடிந்தது. இந்த சில நொடிகளில் போனை புக் செய்ய முடியாதவர்கள் அடுத்து எப்போது புக்கிங் அறிவிப்பு வரும் என்று காத்துக்கிடக்கிறார்கள்.

புத்தம் புதிதாக சந்தைக்கு வரும் செல்போன்களை இன்றைய இளைஞர் கள் வாங்கத் துடிப்பதை  ஆன்லைன் நிறுவனங்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள தொடங்கிவிட்டன. இனி எந்த போனையும் தொட்டுப் பார்த்து வாங்கத் தேவையில்லை. நல்ல பிராண்ட் நிறுவனங்கள் வெளியிடும் செல்போன் கள் நன்றாகவே இருக்கும் என எல்லோரும் நினைப்பதால், பலரும் ஆன்லைனிலேயே வாங்க விரும்பு கின்றனர்.

தவிர, கடைகளைவிட 10% விலையும் குறைவாகக் கிடைப்பது, வீடு தேடி பொருள் வந்துவிடுவது ஆகிய காரணங்களினாலும் பலரும் ஆன்லைன் மூலம் வாங்குவதையே விரும்புகின்றனர்.  இதனால் கடைகளில் செல்போன் விற்பனை 12 - 14% குறைந்துள்ளதாம்.
 
இத்தனை நாட்களாக ஆன்லைன் நிறுவனங்களின் நடவடிக்கைகளை  பொறுமையாகப் பார்த்துவந்த நேரடி விற்பனை நிறுவனங்கள், இப்போது அதற்கு எதிராக களம் இறங்கி இருக்கின்றன. முதல் முயற்சியாக, செல்போன்களை நேரடியாக விற்பனை செய்யும் அனைத்து நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றன.
 
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்கிற மாதிரி நேரடி விற்பனைக்  கடைகளுக்கும், ஆன்லைன் நிறுவனங்களுக்கும் நடக்கும் போட்டி யில், அதிக சலுகைகளை யார் அள்ளித் தருகிறார்களோ, அவர்களின் பக்கமே வாடிக்கையாளர்கள் நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

மோட்டோரோலா ஹின்ட்!

சமீபத்தில் மோட்டோரோலா, மோட்டோ ஜி மற்றும் மோட்டோ எக்ஸ் (இந்த இரண்டுமே 2nd Gen) ஆகிய இரு ஸ்மார்ட் போன்களை வெளியிட்டது. இது தவிர, ‘ஹின்ட்’ என்ற ‘Wireless Earbud’ கருவியையும் வெளியிட்டுள்ளது.

பார்ப்பதற்கு சிறியதாகவும் கவர்ச்சிகரமா கவும் தோன்றும் இந்த ‘ஹின்ட்’, ப்ளூ-டூத் மூலம் செயல்படுகிறது. இதை ஸ்மார்ட் போன் ப்ளூ-டூத்-வுடன் இணைத்துவிடலாம். இணைத்தபின் தொலைபேசி அழைப்பு களைப் பெறுவது, குறுந்தகவல் அனுப்புவது, மின் அஞ்சல் அனுப்புவது,  அலாரம் செட் செய்வது, கூகுள் மேப்பில் வழிகளைக் கேட்டறிவது போன்ற அனைத்து செயல்களையும் ஸ்மார்ட் போனைத் தொடாமலே, இருந்த இடத்தில் இருந்தபடி நம் வேலைகளை செய்து கொண்டே அனைத்து செயல் களையும் இதன் மூலம் செய்ய லாம்.


ஒரு நபரிடம் உரையாடுவது போல் ஹின்ட் கருவிக்குத் தெரிந்த கமான்ட்களைக் கொண்டு தேவையான செயல் களை உச்சரிப்பதன் மூலமே செய்துவிடலாம். இதற்கு 150 அடி சுற்றுவட்டாரத்தில் உங்கள் ஸ்மார்ட் போன் இருந்தால் போதும். 100 மணி நேரம் ஸ்டாண்ட்-பை டைமுடன் வரும் இந்த ‘ஹின்ட்’ ஒரு சார்ஜர் கேஸோடு வருகிறது. இதைப் பயன்படுத்தாத நேரத்தில் இந்த சார்ஜர் கேஸில் பொருத்தி சார்ஜ் செய்து கொள்ளலாம். சுமார் 10 மணி நேரம் இந்த சார்ஜ் இருக்கும்.

மேலும், மிஸ்டு கால், மெசேஜ், இ-மெயில் போன்றவை வந்தால் ஒரு சிறிய அலெர்ட் ஒலியும் இந்தக்  கருவியில் கேட்கும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு மெசேஜ், இ-மெயில் அல்லது மிஸ்டு கால் வந்துள்ளது என்பதை போனை பார்க்காமலே தெரிந்துகொள்ளலாம். $149.99 என்கிற விலையில் தற்போது விற்பனையாகிவரும் இந்த ‘மோட்டோரோலா ஹின்ட்’ ஸ்மார்ட் போன்’ உலகத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கிஸோர் பிரசாத் கிரண்

‘மேக் இன் இந்தியா’

‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் உற்பத்தி செய்வோம்!) என்கிற புதிய கருத்தாக்கத்தை முன்வைத்து, உலக அளவில் நம் நாட்டை ஒரு பெரிய உற்பத்திக் கேந்திரமாக ஆக்கி, அதன்மூலம் வேலைவாய்ப்பை பெருக்கி, பொருளாதார வளர்ச்சியைக் காண வைக்கும் முயற்சியை வெற்றிகரமாக விதைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. முந்தைய காங்கிரஸ் அரசாங்கம், நாட்டில் தொழில் வளர்ச்சியைப் பெருக்க முக்கிய நடவடிக்கைகளை எடுக்காதபோது, இந்த அரசாங்கமாவது உற்பத்தித் துறையில் முத்திரை பதிக்க முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கதே.
உற்பத்தித் துறையை வளர்த்தெடுப்பதன் மூலம் பொருளாதாரத்தை வெகுவாக உயர்த்த முடியும் என்பதை கடந்த அறுபது ஆண்டுகளில் நாம் உணரத் தவறினோம். ஐம்பதுகளில் ஜப்பான் செய்ததை, எழுபதுகளில் தென் கொரியாவும் சிங்கப்பூரும் செய்ததை, எண்பதுகளில் சீனா செய்ததைத்தான் இன்றைக்கு நாம் செய்ய நினைக்கிறோம். இனியாவது சேவைத் துறையை மட்டும் வளர்த்தால் போதும் என்று நினைக்காமல், உற்பத்தித் துறையில் கவனம் செலுத்தினால் தான் வேலைவாய்ப்புகள் பெருகும்.

கேட்பதற்கு சிறப்பாக இருக்கும் இந்த கருத்தாக்கத்தை நடைமுறையில் செயல்படுத்த அடிப்படையான பல மாற்றங்களை நாம் செய்தாக வேண்டும். தொழிற்சாலைகளுக்குத் தேவையான மின்சாரத்தைத் தருவதில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். புதிய மின் உற்பத்தித் திட்டங்களை உருவாக்கி, தடையில்லா மின்சாரம் தருவதுடன், சாலை, தண்ணீர், கட்டுமான வசதிகளையும் தந்தால்தான், புதிதாக பலரும் தொழில் தொடங்க முன்வருவார்கள்.

தொழிற்சாலைகளைத் தொடங்கத் தேவையான நிலங்களை கையகப்படுத்து வதிலும் பெரும் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. தவிர, திறமையான தொழிலாளர்களை அதிக அளவில் உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கு தொழிலாளர் தொடர்பான பல சட்டங்கள் இன்றைய தேவைக்கேற்ப மாற்றம் காணப்பட வேண்டும். தொழில் தொடங்கத் தேவையான நிதியையும் பெரிய அளவில் உருவாக்கியாக வேண்டும்.

இது தொடர்பாக மத்திய அரசு செய்ய நினைக்கும் ஒவ்வொரு செயலை யும் மாநில அரசின் உதவியோடு நிறைவேற்ற வேண்டும். எல்லா மாநிலங்களும் ஒன்று கூடி செயல்பட்டால்தான், உலக உற்பத்திக் கேந்திர மாக இந்தியா மாறும். பிரதமர் மோடி இதை எப்படி செய்யப்போகிறார்?

Tuesday, September 23, 2014

பெண் இயக்குநர்கள்!

உலக சினிமாவில் பெண்களின் பங்களிப்பு தனித்துவமானது. இந்த வகையில் மனதை வசீகரிக்கும், சிந்தனையைக் கீறிப்பார்க்கும் உன்னத சினிமாக்களை இயக்கிய பெண் இயக்குநர்கள் சிலரைப் பற்றிய சினி மினி அறிமுகம் இங்கே!

சமீரா மக்மல்பஃப்

'உலக சினிமா’ என்று கொண்டாடப்படும் ஈரானிய சினிமாவின் மிகமுக்கிய இயக்குநரான மோஹ்சென் மக்மல்பஃப்பின் மகள், சமீரா. 8 வயதில் அப்பாவின் புகழ்பெற்ற படமான 'தி சைக்ளிஸ்ட்’ல் குழந்தை நட்சத்திரமாக நுழைந்த இவர், 17-வது வயதில் 'தி ஆப்பிள்’ என்ற படத்தை இயக்கினார். ஈரானில் தன் பெற்றோர்களால் 11 வருடங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு, பின்பு பக்கத்து வீட்டினர் உதவியால் மீட்கப்பட்ட இரண்டு சிறுமிகளைப் பற்றிய கதை இது. 'கேன்ஸ்’ திரைப்பட விழாவில் உலகின் இளம் இயக்குநர் இயக்கிய படம் என்கிற பிரிவில் 98-ம் ஆண்டில் இந்தப் படம் தேர்வானது.


இரண்டே ஆண்டுகளில் நூற்றுக்கும் அதிகமான உலகத்திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு அருமையான துவக்கத்தை சமீராவுக்கு 'ஆப்பிள்’ தர, 'பிளாக் போர்ட்ஸ்’, 'செப்டம்பர் 11’, 'அட் ஃபைவ் இன் தி ஆஃப்டர்நூன்’, 'டூ லெக்டு ஹார்ஸஸ்’ என பெண் கல்வியையும், போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களையும் களமாகக்கொண்ட படங்களாகத் தொடர்ந்து இயக்கினார். இப்போது 34 வயதாகும் சமீரா, 2007-ல் ஆப்கானிஸ்தானுக்கே போய் தீவிரவாதிகளின் மிரட்டல்களுக்கும் குண்டுவீச்சுக்கும் இடையே 'டூ லெக்டு ஹார்ஸஸ்’ படத்தை இயக்கினார். இப்போது, அடுத்த படத்துக்காக நீண்ட இடைவெளிவிட்டுக் காத்திருக்கிறார் சமீரா.

தீபா மேத்தா

பிறப்பால் இந்தியரான தீபா, இப்போது கனடாவில் குடியுரிமை பெற்று டொராண்டோ நகரில் வசிக்கிறார். பஞ்சபூதங்களில் முக்கியமான நீர், நிலம், நெருப்பு போன்றவற்றை மையமாக வைத்து 'ட்ரையாலஜி’ எனப்படும் மூன்று வெவ்வேறு உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சினிமாக்களை இயக்கியதால் உலகின் கவனத்தை ஈர்த்தவர். சமூகம் பேசத் தயங்கும் விஷயங்களைக் கதைக்களமாக அமைத்து சினிமாக்களை உருவாக்குவது தீபா மேத்தாவின் பிரத்யேக ஸ்டைல். 'ஃபயர்’ படம் சர்சைக்குரிய விஷயமாகக் கருதப்படும் பெண் ஓரினச்சேர்க்கை விஷயத்தை தைரியமாகப் பேசியது. 'வாட்டர்’ திரைப்படம் பாப்ஸி சித்வா என்பவர் எழுதிய 'வாட்டர்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இளம்வயதில் விதவையான ஒரு பெண்ணை, முதிய விதவைகள் வாழும் இல்லத்தில் வாழ்நாள் முழுக்க வசிக்கவைக்க முனையும் சமூகத்தைப் பற்றி காட்டமாகப் பேசியது. கலாசார காவலர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சில அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு, படம் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு மிரட்டல்கள்கூட விடப்பட்டன. ஆனாலும், படம் உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்தது. 1998-ல் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பட்டது, இவரின் 'எர்த்’ படம். 1947-ல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்த சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான் இந்த எர்த்!


மீரா நாயர்
பத்மபூஷண் விருதுபெற்ற நம் இந்திய பெண் இயக்குநர், மீரா. மும்பை மாநகரின் அழுக்குப் பக்கங்களை படையல் வைத்தது இவர் இயக்கிய முதல் படம் 'சலாம் பாம்பே’. மும்பையில் வாழும் சாலையோர சிறுவர்களைப் பற்றிய இப்படம் உலகத்திரைப்பட விழாக்களில் இந்தியாவின் மீது கவனம் விழ காரணமாக அமைந்தது. 'காமசூத்ரா: ஏ டேல் ஆஃப் லவ்’, 'மான்சூன் வெட்டிங்’, 'அமீலியா’, 'நேம்சேக்’, 'வானிட்டி ஃபேர்’ போன்ற முக்கியப் படங்களை இயக்கிய இவர், தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று நியூயார்க்கில் வசித்து வருகிறார்.

கேத்ரின் பிகலோ
2008-ல் வெளியான, காத்ரின் இயக்கிய 'தி ஹர்ட் லாக்கர்’ படம், சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதோடு சேர்த்து உலகம் முழுவதும் 42 உயரிய விருதுகளைக் குவித்தது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், 2008-ல் இந்தப் படத்துக்கு போட்டியாக இறுதிச் சுற்றுவரை நாமினேட் செய்யப்பட்டது, 'அவதார்’. இதில் விசேஷம்... 'அவதார்’ படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன், இவருடைய முன்னாள் கணவர். அகில உலக ஊடகங்கள் தொழில்நுட்ப ரீதியாக மிரட்டிய 'அவதார்’ படத்துக்கே ஆஸ்கர் என ஆரூடங்கள் சொன்னபோது, அமெரிக்க பாம்ப் ஸ்குவாடு, ஈராக்கில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அழித்தொழிக்கும் சம்பவங்களின் கோவையான 'தி ஹர்ட் லாக்கர்’ படம், வித்தியாசமான திரைக்கதை உத்தியால், பணியில் இருக்கும் வீரர்களின் நுண்ணுணர்வை எடுத்துச் சொல்லி, ஆஸ்கரை வென்றது.

2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல் சம்பவம் தொடங்கி, பாகிஸ்தானின் அபோடாபாத்தில் மே 2, 2011-ல் ஒசாமா பின்லேடனை சுற்றிவளைத்து சுடப்பட்டது வரை அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத்துறையின் பணிகளை கேண்டிட் கேமரா பாணியில் விவரித்திருந்தது இவருடைய இன்னொரு படமான 'ஜீரோ டார்க் தர்ட்டி’. கற்பனைக்கு எட்டாத உழைப்போடு இவர் உருவாக்கியது இப்படம். ஆனால், நாட்டின் மிகமுக்கியமான ரகசிய தகவல்களைப் படத்துக்காக எப்படியோ திருடிவிட்டனர் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் சில மாதங்கள் முன்புவரை இவரை விசாரணை வளையத்தில் வைத்திருந்து, அண்மையில்தான் விடுவித்தது. அந்த அளவுக்கு தத்ரூபமாக பின்லேடன் வேட்டையை படமாக்கி இருந்தார் கேத்ரின்.


சோஃபியா கப்போலா

'தி காட் ஃபாதர்’ படத்தை இயக்கிய, பிரபல அமெரிக்க சினிமா இயக்குநர் ஃபிரான்சிஸ் ஃபோர்டு கப்போலாவின் செல்ல மகள். 43 வயதாகும் சோஃபியாவின் இரண்டாவது படமான 'லாஸ்ட் இன் டிரான்ஸ்லேஷன்’, 2003-ல் ரிலீஸ் ஆகி பலத்த வரவேற்பைப் பெற்றது. டோக்கியோ நகரில் எதேச்சையாக சந்தித்துக்கொள்ளும் வயதான நடிகருக்கும், இளம் கல்லூரி மாணவிக்கும் இடையே நிகழும் ரொமான்ஸ்தான் படத்தின் கதை. வசூலை வாரிக்குவித்த இப்படம், ஆஸ்கர் விருதுப் பட்டியலில் சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை பிரிவில் நாமினேட் செய்யப்பட்டது. முதன்முதலாக சிறந்த இயக்குநருக்கான பிரிவில் ஒரு பெண் இயக்குநர் பெயர் நாமினேட் செய்யப்பட்டது இந்தப் படத்துக்காகத்தான். இயக்கத்துக்கான விருது கிடைக்காவிட்டாலும், 'சிறந்த ஒரிஜினல் ஸ்க்ரீன்ப்ளே’ பிரிவில் விருதை வாங்கி, தலைமுறை பெருமையைக் காப்பாற்றினார் சோஃபியா. ஆம்... தாத்தா கார்மைன் கப்போலா, அப்பா ஃபிரான்சிஸ் ஃபோர்டு கப்போலா என குடும்பமாய் வாங்கிய ஆஸ் கர் பட்டியலில் தன் பெயரையும் சேர்த்துக்கொண்டார்.

பெண்களின் பார்வையில் இன்னும் அழகாகவும், ஆழமாகவும் விரிகிறது திரை!

ஆர்.சரண்

கிண்டில்!

கிண்டில்! 

செய்தித்தாள்கள் தொடங்கி, புத்தகங்கள் வரை இளைய தலைமுறையின் சாய்ஸ்... இ-பேப்பர்தான். இதைத் தனக்கான வாய்ப்பாக்கிக் கொண்டுவிட்ட 'அமேசான்’ நிறுவனம், 'கிண்டில் பேப்பர்வொயிட்' (Kindle Paperwhite) எனும் சாதனத்தை வெளியிட்டுள்ளது. இ-புத்தகங்களைப் படிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள இதன் மூலமாக, 1,100 இ-புத்தகங்களை சேமித்துப் படிக்கலாம். ஆன்லைனில் உள்ள 30 ஆயிரம் இலவச இ-புத்தகங்கள் உள்ளிட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான கட்டண இ-புத்தகங்களையும் டவுன்லோடு செய்து படிக்கலாம். செல்போன் போலவே சார்ஜ் செய்து, அதிக பட்சம் ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். இது 6,000 ரூபாய் முதல் கிடைக்கும்.


Redmi Note!
செல்போன் மற்றும் நோட் பேடுகளால் கவரப்பட்டு, எந்த மாடலை வாங்கு வது, எதை விடுவது என்று யோசிப்பதற்குள், அவற்றைவிட கூடுதல் சிறப்பு மற்றும் வசதிகளு டன் அடுத்த மாடல் வந்து நம் கவனத்தை ஈர்க்கிறது. இந்த வரிசையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் 'Xiaomi Redmi Note’  பலருக்கும் பிடித்துப் போய் பில் போட வைத்துவிட்டது. இரண்டு சிம் கார்டு, எடை (199கிராம்), 8 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை எக்ஸ்டர்னல் மெமரி, வய்ஃபை, 13 மெகாபிக்ஸல் கேமரா, 5 மெகாபிக்ஸல் முன்புற கேமரா, ஆண்ட்ராய்டு ஓ.எஸ் என்று அடங்கிக் கிடக்கும் ஆச்சர்யங்கள் பலப்பல! இதன் விலை 9,999 தொடங்கி, 14,499 வரை.! 

இனி எந்நாளும் 'குட் நைட்’!
தாம்பத்யம் திருப்திகரமாக அமையாமல் போக, பதற்றம் (anxiety), பயம் (fear) மற்றும் அறியாமை (ignorance) ஆகியவைதான் முதன்மைக் காரணங்கள். இதில் அறியாமையைக் களைவதற்கான வழிகளை தரமானதாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அழகாக வலியுறுத்துகிறது இந்தப் புத்தகம்.
புத்தகத்திலிருந்து சில வரிகள்...

முகேஷ் - சரண்யாவுக்கு முதல் நாள்தான் திருமணம். அன்று அவர்களின் தலை மேல் விழுந்த அட்சதைகளின் எண்ணிக்கையைவிட, இன்று அதிகாலையில் மணமகனை நோக்கித் தெறித்த வார்த்தைகள் அதிகம். திருமணம் ஆன அன்றே அவர்களுக்கு முதல் இரவு. வாலிபமும் வளமையும் சேர்ந்து எத்தனை தடவை கியர் போட்டாலும் முகேஷால் சரண்யாவை திருப்திப்படுத்தவே முடியவில்லை. ஒரு பெண்ணை முதல் இரவில் திருப்திப்படுத்தத் தெரியாதவனுக்கு இந்த சமூகம் தருகிற பெயர் 'ஆண்மைஇல்லாதவன்’. இதற்கெல்லாம் தீர்வு வழக்கறிஞரும் மருத்துவரும் மட்டும்தானா?


ரைஸ் பக்கெட் சேலஞ்ச்!
பக்கெட் சேலஞ்ச் வரிசையில், ஊடக வியலாளர் மஞ்சுலதா உருவாக்கி இருக்கும் 'ரைஸ் பக்கெட் சேலஞ்ச்' செம ஹிட். 'ஏழைகளுக்கு ஒரு பக்கெட் அரிசியோ அல்லது 100 ரூபாய் பணத்தையோ தர வேண்டும். புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்ய வேண்டும்' என்பதுதான் சேலஞ்ச்.

தன் பகுதியில் வசிக்கும் சிலருக்கு அரிசியைக் கொடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பினார் மஞ்சு. அவரின் நண்பர்களும் இதைத் தொடர, 10 நாட்களுக்குள்ளாகவே 5 லட்சத்துக்கும் அதிகமான வர்களைச் சென்று சேர்ந்தது. இந்தியா முழுக்க பிரபலமாகியிருக்கும் இந்த ரைஸ் பக்கெட் சேலஞ்ச் மூலமாக ஆகஸ்ட் மாதம் தொடங்கி தற்போது வரை 25,000 பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

இதற்காக, மஞ்சுவுக்கு, 'ஐகாங்கோ' (iCONGO) எனும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பும், ஐ.நா-வும் இணைந்து கர்மவீர் விருதை வழங்கவிருக்கின்றன. 2015 மார்ச் 23-ல் டெல்லியில் நடைபெறும் விழா வில் இந்த விருது வழங்கப்படும்.

'வாட்ஸ்ஆப்’ சிக்கல்ஸ்... தவிர்ப்பது எப்படி?

மூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும் பிரச்னைகளும் ஆபத்துகளும் அனைவரும் அறிந்த ஒன்றே! தற்போது, உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாகி வரும் 'வாட்ஸ்ஆப்' எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பிரச்னைகள் பல. 'வாட்ஸ்ஆப் என்பது தனிநபர், தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ்தானே... இதில் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?’ என்பது உங்களின் கேள்வியாக இருந்தால்... இதோ பதில் விரிவாக!

என்னென்ன ஆபத்துகள்?

தெரிந்தவரோ, தெரியாதவரோ... உங்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, உங்களின் செல்போன் நம்பர் கிடைத்தால் போதும்... அவர்களால் உங்கள் 'வாட்ஸ்ஆப்’ கணக்கைப் பார்க்கவும், அதிலிருக்கும் புகைப்படங்களை டவுன்லோடு செய்யவும் முடியும். உங்களுக்குத் தெரியாத நபர்கள்கூட, உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களைத் தொடர முடியும். போலி பெயருடன் ஒருவர் ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்து தோன்றும்போது, எதிர்முனையில் இருக்கும் நபர் இவர்தான் என்று உங்களால் உறுதிபடுத்த முடியாத சூழலில், அவர் உங்களைத் தொடர்புகொண்டு, உங்களது தகவல்களைப் பெற வாய்ப்புள்ளது. தோழிகளால் 'வாட்ஸ்ஆப்’ குரூப்களில் உங்கள் பெயர் இணைக்கப்படும்போது, உங்கள் எண் அந்த குரூப்பில் ஏற்கெனவே உள்ள அனைவரிடமும் பகிரப்பட வாய்ப்புள்ளது.

எப்படித் தவிர்க்கலாம்?

பிரச்னைகளைத் தவிர்க்க, 'வாட்ஸ்ஆப்’ செட்டிங்கில் உள்ள, பிரைவஸி செட்டிங்கை மாற்றியமைக்க வேண்டும். அதாவது,  பிரைவஸி செட்டிங் பகுதிக்குச் சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், 'லாஸ்ட் ஸீன்’ ஆகியவற்றை, மைகான்டாக்ஸ் அல்லது ஒன்லி மீ ஆப்ஷன்களைப் பயன்படுத்தி பாதுகாத்துக்கொள்ளலாம். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அறிவுறுத்தும் ஸ்டேட்டஸ்களைப் பதிவு செய்யாதீர்கள். குரூப்களில் இணைவதிலும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருங்கள். 'ப்ளாக்' (Block) ஆப்ஷனை பயன்படுத்தி, உங்களுக்குத் தொல்லை தருபவரை உங்கள் கணக்கைத் தொடராமல் தடுக்கும் வசதியும் இதில் உள்ளது. இப்படிப்பட்ட நபர்களின் செல்போன் எண்களை உங்கள் மொபைல் போனில் இருந்து நீக்கிவிட்டால்... போயே போச்!
தெரிந்தவர்களோடு மட்டும் 'வாட்ஸ்ஆப்’ பேசுவது எப்போதுமே பாதுகாப்பானது.

ஆபத்துதவி ஆப்ஸ்!

ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது, அதி லிருந்து தப்பிப்பதற்கு உதவக்கூடிய ஆப்ஸ் ஒன்று, ஆண்ட்ராய்டு போன்களில் பிரபலமடைந்துள்ளது. இது இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவான 'நாஸ்காம்’ அமைப்பு நடத்திய, பெண்கள் பாதுகாப்புக்கான ஆப்ஸ் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


நீங்கள் ஏதாவது பிரச்னையில் மாட்டிக்கொண்டால், 'ஆபத்துதவி'யாக யார் இருப்பார்களோ அவருடைய செல்போன் நம்பர் மற்றும் இ-மெயில் முகவரியை இந்த ஆப்ஸில் பதிவு செய்ய வேண்டும். ஆபத்து நேரத்தில் செல்போன் திரையில் இருக்கும் இந்த ஆப்ஸை விரல் நுனியில் அழுத்தினாலே, வாய்ஸ் ரெக்கார்டர் வேலை செய்ய செய்ய ஆரம்பித்துவிடும். 45 விநாடிகள் பதிவானதும், நீங்கள் இருக்கும் இடத்தின் விவரத்தோடு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் இரண்டும், அந்த ஆபத்துதவிக்கு போய்ச் சேர்ந்துவிடும். ஒருவேளை நீங்கள் அப்போது இருப்பது இன்டர்நெட் வசதி இல்லாத இடமாக இருந்தால், குறுஞ்செய்தி மட்டும் சென்று சேர்ந்துவிடும்.

பின்குறிப்பு:  

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.zayaninfotech.security

ச.ஸ்ரீராம்

Sunday, September 21, 2014

அருள்வாக்கு - எல்லா உலகுகளையும் ஆண்டு அநுபவிப்பவர்


பூராதி புவந போக்த்ரே :‘பூ’ என்றால் பூமி. ‘பூராதி’ - பூமி முதலிய; ‘புவந’ - உலகங்கள். கணக்கில்லாத லோகங்களைப் பதிநாலு லோகம் என்றும், அதில் கீழ் லோகங்கள் ஏழு போக பூமியிலிருந்து ஏழு லோகம் என்றும் Classify பண்ணி, மேலும் சுருக்கமாக பூர்-புவஸ்-ஸுவர் லோகம் என்று மூன்றாகச் சொல்வது வழக்கம்.

பூலோகம் அடி. புவர் லோகம் நடு. ஸுவர் லோகம் உச்சி. மூன்றையும் சேர்த்து ‘வ்யாஹ்ருதி’கள் என்பதாக ஓம்காரத்துடன் சேர்த்துச் சொல்வது வேத ஸம்ப்ரதாயம். நாம் வைதிகமாகப் பண்ணும் கர்மமோ, ஜபமோ, த்யானமோ எதுவானாலும் ஸமஸ்த லோகங்களுக்கும் அதனால் நல்லது ஏற்பட வேண்டும் என்ற உசந்த அபிப்ராயத்தில் அப்படிச் சொல்வது.

மறுபடியும் காயத்ரி வந்து விடுகிறது! காயத்ரி ஆரம்பத்திலும் வ்யாஹ்ருதிகளைச் சேர்த்திருக்கிறது. முன்னேயே ‘பூஸுராதி’ என்ற இடத்தில் ‘பூ’வை (தீக்ஷிதர்) கொண்டு வந்தார். அப்புறம் ‘வாஸவாதி ஸகல தேவ’ர்களைச் சொன்னபோது அவர்களுடைய வாஸ ஸ்தானமான ஸுவர் லோகத்தை Understood ஆக, உள்ளுறை பொருளாகக் குறிப்பிட்டார். இப்போது கீர்த்தனம் முடிகிற ஸமயத்தில் ‘பூராதி புவநம்’ என்று அத்தனை லோகங்களையும் சொல்கிறார்.

பூராதி புவநங்களில் நடக்கும் ஸகல காரியமும் ஒரு பராசக்தியின் லீலா அநுபவத்திற்குத்தானே? அந்த மஹா சக்தியாக இருந்து கொண்டு ப்ரபஞ்சங்கள் எல்லாவற்றையும் ஆண்டு அநுபவித்துக் கொண்டிருக்கும் ‘போக்தா’ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியே என்கிறார். ‘பூராதி புவந போக்த்ரே’.

ஸ்டீவன் ஆலன் ஸ்பீல்பெர்க்

சிறு வயதில் ஒருவரைப் பார்த்து நீ என்னவாக ஆசைப்படுகிறாய் என்றால், நான் டாக்டர் ஆவேன், இன்ஜினீயர் ஆவேன் என்று சொல்வார்கள். ஆனால், எனக்கு சினிமா பிடிக்கும். நான் சினிமா எடுக்கப் போகிறேன் என்று சொன்னால், ஆச்சர்யமாகத்தானே பார்ப்பார்கள். அந்த ஆச்சர்யத்தை நிஜமாக்கிக் காட்டியவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். இதற்காக அவர் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல.

1946–ம் ஆண்டு ஸ்டீவன் ஆலன் ஸ்பீல்பெர்க் அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி நகரில் பிறந்தார். சிறுவயதில் ஸ்பீல்பெர்க்கின் பெற்றோர் அவருக்குப் பரிசாக அளித்த உடைந்த ஸ்டில் கேமராதான் இவரது சினிமா ஆர்வத்துக்கு வித்திட்டது. பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே எட்டு சிறிய குறும்படங்களை எடுத்து அசத்தியவர். தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நாடகக் கல்லூரிக்குப் படிக்க விண்ணப்பித்த ஸ்பீல்பெர்க்கின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மனம் தளராமல் கலிபோர்னியா மாகாண பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால், சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே படிப்பு பிடிக்காமல் அங்கிருந்தும் வெளியேறினார்.


சினிமா பற்றி படிக்கவே முடியாத இவன் எங்கே சினிமா எடுக்கப் போகிறான் என்று எல்லோரும் இளக்காரம் பேசினார்கள். ஆனால், ஸ்பீல்பெர்க் அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், யுனிவர்சல் ஸ்டுடியோவில் சம்பளம் வாங்காத எடிட்டிங் துறை மாணவராகச் சேர்ந்தார். அதுவும் அந்த வேலையில் விடுமுறை என்பதே கிடையாது. கல்லூரியில் சொல்லித்தரப்படும் தியரியைவிட யுனிவர்சல் ஸ்டுடியோவில் அவர் பிராக்டிகலாக செய்து தெரிந்துகொண்டது ஏராளம்.

தான் பணிபுரிந்த யுனிவர்சல் ஸ்டுடியோவுக்காக 25 நிமிடம் ஓடக்கூடிய ஆம்ப்ளின் என்கிற குறும்படத்தை இயக்கினார். இதில் ஓர் இளைஞன் ஒரு பெண்ணோடு பாலைவனத்தைக் கடப்பதை வசனமே இல்லாமல் சொல்லியிருந்தார். இதுதான் அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அவரது முதல் கமர்ஷியல் சினிமாவான டூயல், உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அடுத்து அவர் எடுத்த ஜாஸ், இண்டியானா ஜோன்ஸ், ஜுராஸிக் பார்க் போன்ற படங்கள் வசூல் சாதனை புரிந்தது. அவர் எடுத்த ஸ்ண்ட்லர் லிஸ்ட் அவருக்கு ஆஸ்கார் விருதை வாங்கித் தந்தது.

இன்றைக்கு உலகின் நம்பர் ஒன் இயக்குநராக இருக்கும் ஸ்பீல்பெர்க் நமக்குச் சொல்லும் ஒரே பாடம்:  போராடினால்தான் லட்சியம் நிறைவேறும்!

ஆண்ட்ராய்டு ஒன்!

கடந்த ஜூன் மாதம் கூகுள் நிறுவனம் ‘Google I/O’ மாநாட்டில் ‘ஆண்ட்ராய்ட் ஒன்’ என்ற திட்டத்தை அறிவித்தது. சிறந்த தொழில்நுட்பத்துடன் இயங்கும் குறைந்த விலை ஸ்மார்ட் போன்களைத் தயாரிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின்படி, ‘ஆண்ட்ராய்ட் ஒன்’ ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில்தான் முதலில் வெளியாகும் என்று கூறப்பட்டது. அதன்படியே கடந்த வாரம் ஆண்ட்ராய்ட் ஒன் ஸ்மார்ட் போன் இந்தியாவில் வெளியானது.

முதல்கட்டமாக இந்த ஸ்மார்ட் போனை ‘ஸ்பைஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஸ்பைஸ் ஆண்ட்ராய்ட் ஒன் ட்ரீம் UNO (Spice Android One Dream UNO) என்ற பெயரில் வெளியாகி இருக்கும் இந்த ஸ்மார்ட் போன், 4.5 இன்ச் ‘LCD Capacitive’ டிஸ்ப்ளேயுடன் வருகிறது.

 

1.3 GHz ‘Quad Core’ ப்ராஸஸர் மற்றும் 1GB ரேம் வசதியோடு வரும் இந்த ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்ட் கிட்-கேட் 4.4.4 இயங்குதளத்தில் இயங்குகிறது. மேலும், பிரத்யேகமான ‘Mali-400 MP’ என்ற கேமிங் ப்ராஸஸரும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும். 5 மெகா பிக்ஸல் பின்புற கேமரா, 2 மெகா பிக்ஸல் முன்புற கேமரா வசதியோடு வரும் இந்த ஸ்மார்ட் போனால் முழுநீள HD வீடியோவை ரெக்கார்டு செய்ய முடியும்.

4 GB இன்டர்னல் மெமரியுடன் வரும் இந்த ஸ்மார்ட் போனை 32GB வரை SD கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம். இந்த ஸ்மார்ட் போனின் 1700 mAh ‘Li-Polymer’ பேட்டரி, 2G நெட்வொர்க்கில் 17 மணி நேரமும் 3G நெட்வொர்க்கில் 10 மணி நேரமும் நீடித்திருக்கும்.

Wi-Fi, ப்ளூ-டூத், இரட்டை சிம் வசதிகளோடு வரும் இந்த ஸ்மார்ட் போன் 10GB ஸ்பைஸ்   Cloud Storage, 15 GB google storage வசதியுடன் இலவசமாக வருகிறது. தற்போது இந்த ஸ்மார்ட் போன் ‘Flipkart’ மற்றும் ‘snapdeal.com’ இணையச் சந்தையில் ரூபாய் 6,299 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. விரைவில், மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன் நிறுவனங்களின் ஆண்ட்ராய்ட் ஒன் ஸ்மார்ட் போன்களும்  இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செ.கிஸோர் பிரசாத் கிரண்