Search This Blog

Sunday, September 21, 2014

அருள்வாக்கு - எல்லா உலகுகளையும் ஆண்டு அநுபவிப்பவர்


பூராதி புவந போக்த்ரே :‘பூ’ என்றால் பூமி. ‘பூராதி’ - பூமி முதலிய; ‘புவந’ - உலகங்கள். கணக்கில்லாத லோகங்களைப் பதிநாலு லோகம் என்றும், அதில் கீழ் லோகங்கள் ஏழு போக பூமியிலிருந்து ஏழு லோகம் என்றும் Classify பண்ணி, மேலும் சுருக்கமாக பூர்-புவஸ்-ஸுவர் லோகம் என்று மூன்றாகச் சொல்வது வழக்கம்.

பூலோகம் அடி. புவர் லோகம் நடு. ஸுவர் லோகம் உச்சி. மூன்றையும் சேர்த்து ‘வ்யாஹ்ருதி’கள் என்பதாக ஓம்காரத்துடன் சேர்த்துச் சொல்வது வேத ஸம்ப்ரதாயம். நாம் வைதிகமாகப் பண்ணும் கர்மமோ, ஜபமோ, த்யானமோ எதுவானாலும் ஸமஸ்த லோகங்களுக்கும் அதனால் நல்லது ஏற்பட வேண்டும் என்ற உசந்த அபிப்ராயத்தில் அப்படிச் சொல்வது.

மறுபடியும் காயத்ரி வந்து விடுகிறது! காயத்ரி ஆரம்பத்திலும் வ்யாஹ்ருதிகளைச் சேர்த்திருக்கிறது. முன்னேயே ‘பூஸுராதி’ என்ற இடத்தில் ‘பூ’வை (தீக்ஷிதர்) கொண்டு வந்தார். அப்புறம் ‘வாஸவாதி ஸகல தேவ’ர்களைச் சொன்னபோது அவர்களுடைய வாஸ ஸ்தானமான ஸுவர் லோகத்தை Understood ஆக, உள்ளுறை பொருளாகக் குறிப்பிட்டார். இப்போது கீர்த்தனம் முடிகிற ஸமயத்தில் ‘பூராதி புவநம்’ என்று அத்தனை லோகங்களையும் சொல்கிறார்.

பூராதி புவநங்களில் நடக்கும் ஸகல காரியமும் ஒரு பராசக்தியின் லீலா அநுபவத்திற்குத்தானே? அந்த மஹா சக்தியாக இருந்து கொண்டு ப்ரபஞ்சங்கள் எல்லாவற்றையும் ஆண்டு அநுபவித்துக் கொண்டிருக்கும் ‘போக்தா’ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியே என்கிறார். ‘பூராதி புவந போக்த்ரே’.

No comments:

Post a Comment