Search This Blog

Tuesday, September 23, 2014

பெண் இயக்குநர்கள்!

உலக சினிமாவில் பெண்களின் பங்களிப்பு தனித்துவமானது. இந்த வகையில் மனதை வசீகரிக்கும், சிந்தனையைக் கீறிப்பார்க்கும் உன்னத சினிமாக்களை இயக்கிய பெண் இயக்குநர்கள் சிலரைப் பற்றிய சினி மினி அறிமுகம் இங்கே!

சமீரா மக்மல்பஃப்

'உலக சினிமா’ என்று கொண்டாடப்படும் ஈரானிய சினிமாவின் மிகமுக்கிய இயக்குநரான மோஹ்சென் மக்மல்பஃப்பின் மகள், சமீரா. 8 வயதில் அப்பாவின் புகழ்பெற்ற படமான 'தி சைக்ளிஸ்ட்’ல் குழந்தை நட்சத்திரமாக நுழைந்த இவர், 17-வது வயதில் 'தி ஆப்பிள்’ என்ற படத்தை இயக்கினார். ஈரானில் தன் பெற்றோர்களால் 11 வருடங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு, பின்பு பக்கத்து வீட்டினர் உதவியால் மீட்கப்பட்ட இரண்டு சிறுமிகளைப் பற்றிய கதை இது. 'கேன்ஸ்’ திரைப்பட விழாவில் உலகின் இளம் இயக்குநர் இயக்கிய படம் என்கிற பிரிவில் 98-ம் ஆண்டில் இந்தப் படம் தேர்வானது.


இரண்டே ஆண்டுகளில் நூற்றுக்கும் அதிகமான உலகத்திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு அருமையான துவக்கத்தை சமீராவுக்கு 'ஆப்பிள்’ தர, 'பிளாக் போர்ட்ஸ்’, 'செப்டம்பர் 11’, 'அட் ஃபைவ் இன் தி ஆஃப்டர்நூன்’, 'டூ லெக்டு ஹார்ஸஸ்’ என பெண் கல்வியையும், போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களையும் களமாகக்கொண்ட படங்களாகத் தொடர்ந்து இயக்கினார். இப்போது 34 வயதாகும் சமீரா, 2007-ல் ஆப்கானிஸ்தானுக்கே போய் தீவிரவாதிகளின் மிரட்டல்களுக்கும் குண்டுவீச்சுக்கும் இடையே 'டூ லெக்டு ஹார்ஸஸ்’ படத்தை இயக்கினார். இப்போது, அடுத்த படத்துக்காக நீண்ட இடைவெளிவிட்டுக் காத்திருக்கிறார் சமீரா.

தீபா மேத்தா

பிறப்பால் இந்தியரான தீபா, இப்போது கனடாவில் குடியுரிமை பெற்று டொராண்டோ நகரில் வசிக்கிறார். பஞ்சபூதங்களில் முக்கியமான நீர், நிலம், நெருப்பு போன்றவற்றை மையமாக வைத்து 'ட்ரையாலஜி’ எனப்படும் மூன்று வெவ்வேறு உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சினிமாக்களை இயக்கியதால் உலகின் கவனத்தை ஈர்த்தவர். சமூகம் பேசத் தயங்கும் விஷயங்களைக் கதைக்களமாக அமைத்து சினிமாக்களை உருவாக்குவது தீபா மேத்தாவின் பிரத்யேக ஸ்டைல். 'ஃபயர்’ படம் சர்சைக்குரிய விஷயமாகக் கருதப்படும் பெண் ஓரினச்சேர்க்கை விஷயத்தை தைரியமாகப் பேசியது. 'வாட்டர்’ திரைப்படம் பாப்ஸி சித்வா என்பவர் எழுதிய 'வாட்டர்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இளம்வயதில் விதவையான ஒரு பெண்ணை, முதிய விதவைகள் வாழும் இல்லத்தில் வாழ்நாள் முழுக்க வசிக்கவைக்க முனையும் சமூகத்தைப் பற்றி காட்டமாகப் பேசியது. கலாசார காவலர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சில அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு, படம் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு மிரட்டல்கள்கூட விடப்பட்டன. ஆனாலும், படம் உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்தது. 1998-ல் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பட்டது, இவரின் 'எர்த்’ படம். 1947-ல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்த சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான் இந்த எர்த்!


மீரா நாயர்
பத்மபூஷண் விருதுபெற்ற நம் இந்திய பெண் இயக்குநர், மீரா. மும்பை மாநகரின் அழுக்குப் பக்கங்களை படையல் வைத்தது இவர் இயக்கிய முதல் படம் 'சலாம் பாம்பே’. மும்பையில் வாழும் சாலையோர சிறுவர்களைப் பற்றிய இப்படம் உலகத்திரைப்பட விழாக்களில் இந்தியாவின் மீது கவனம் விழ காரணமாக அமைந்தது. 'காமசூத்ரா: ஏ டேல் ஆஃப் லவ்’, 'மான்சூன் வெட்டிங்’, 'அமீலியா’, 'நேம்சேக்’, 'வானிட்டி ஃபேர்’ போன்ற முக்கியப் படங்களை இயக்கிய இவர், தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று நியூயார்க்கில் வசித்து வருகிறார்.

கேத்ரின் பிகலோ
2008-ல் வெளியான, காத்ரின் இயக்கிய 'தி ஹர்ட் லாக்கர்’ படம், சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதோடு சேர்த்து உலகம் முழுவதும் 42 உயரிய விருதுகளைக் குவித்தது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், 2008-ல் இந்தப் படத்துக்கு போட்டியாக இறுதிச் சுற்றுவரை நாமினேட் செய்யப்பட்டது, 'அவதார்’. இதில் விசேஷம்... 'அவதார்’ படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன், இவருடைய முன்னாள் கணவர். அகில உலக ஊடகங்கள் தொழில்நுட்ப ரீதியாக மிரட்டிய 'அவதார்’ படத்துக்கே ஆஸ்கர் என ஆரூடங்கள் சொன்னபோது, அமெரிக்க பாம்ப் ஸ்குவாடு, ஈராக்கில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அழித்தொழிக்கும் சம்பவங்களின் கோவையான 'தி ஹர்ட் லாக்கர்’ படம், வித்தியாசமான திரைக்கதை உத்தியால், பணியில் இருக்கும் வீரர்களின் நுண்ணுணர்வை எடுத்துச் சொல்லி, ஆஸ்கரை வென்றது.

2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல் சம்பவம் தொடங்கி, பாகிஸ்தானின் அபோடாபாத்தில் மே 2, 2011-ல் ஒசாமா பின்லேடனை சுற்றிவளைத்து சுடப்பட்டது வரை அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத்துறையின் பணிகளை கேண்டிட் கேமரா பாணியில் விவரித்திருந்தது இவருடைய இன்னொரு படமான 'ஜீரோ டார்க் தர்ட்டி’. கற்பனைக்கு எட்டாத உழைப்போடு இவர் உருவாக்கியது இப்படம். ஆனால், நாட்டின் மிகமுக்கியமான ரகசிய தகவல்களைப் படத்துக்காக எப்படியோ திருடிவிட்டனர் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் சில மாதங்கள் முன்புவரை இவரை விசாரணை வளையத்தில் வைத்திருந்து, அண்மையில்தான் விடுவித்தது. அந்த அளவுக்கு தத்ரூபமாக பின்லேடன் வேட்டையை படமாக்கி இருந்தார் கேத்ரின்.


சோஃபியா கப்போலா

'தி காட் ஃபாதர்’ படத்தை இயக்கிய, பிரபல அமெரிக்க சினிமா இயக்குநர் ஃபிரான்சிஸ் ஃபோர்டு கப்போலாவின் செல்ல மகள். 43 வயதாகும் சோஃபியாவின் இரண்டாவது படமான 'லாஸ்ட் இன் டிரான்ஸ்லேஷன்’, 2003-ல் ரிலீஸ் ஆகி பலத்த வரவேற்பைப் பெற்றது. டோக்கியோ நகரில் எதேச்சையாக சந்தித்துக்கொள்ளும் வயதான நடிகருக்கும், இளம் கல்லூரி மாணவிக்கும் இடையே நிகழும் ரொமான்ஸ்தான் படத்தின் கதை. வசூலை வாரிக்குவித்த இப்படம், ஆஸ்கர் விருதுப் பட்டியலில் சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை பிரிவில் நாமினேட் செய்யப்பட்டது. முதன்முதலாக சிறந்த இயக்குநருக்கான பிரிவில் ஒரு பெண் இயக்குநர் பெயர் நாமினேட் செய்யப்பட்டது இந்தப் படத்துக்காகத்தான். இயக்கத்துக்கான விருது கிடைக்காவிட்டாலும், 'சிறந்த ஒரிஜினல் ஸ்க்ரீன்ப்ளே’ பிரிவில் விருதை வாங்கி, தலைமுறை பெருமையைக் காப்பாற்றினார் சோஃபியா. ஆம்... தாத்தா கார்மைன் கப்போலா, அப்பா ஃபிரான்சிஸ் ஃபோர்டு கப்போலா என குடும்பமாய் வாங்கிய ஆஸ் கர் பட்டியலில் தன் பெயரையும் சேர்த்துக்கொண்டார்.

பெண்களின் பார்வையில் இன்னும் அழகாகவும், ஆழமாகவும் விரிகிறது திரை!

ஆர்.சரண்

No comments:

Post a Comment