Search This Blog

Sunday, December 07, 2014

ரெட்மி நோட்

சிறப்பான தொழில்நுட்பம், எளிமையான டிசைன் மற்றும் குறைந்த விலை, இது தான் ஸியோமி நிறுவனத்தின் சிறப்பம்சம். இந்நிறுவனத்தின் எம்.ஐ.3 மற்றும் ரெட்மி 1எஸ் ஆகிய இரு ஸ்மார்ட் போன்களும் இந்திய மார்கெட்டில் பயங்கர ஹிட்.  ரெட்மி 1எஸ் ரக போன் சூடாகிறது என்ற குறைபாடு பற்றி பேசப்பட்டாலும், அதன் புதிய 4.5 வர்சனை அப்டேட் செய்த பிறகு சூடாவது குறைந்திருக்கிறது. தற்போது ஷியோமி நிறுவனத்தின் புதிய கேட்ஜெட்டான ‘ஸியோமி ரெட்மி நோட்’ இந்தியாவில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

வடிவமைப்பு:

ரெட்மி நோட்டின் வடிவமைப்பும் ரெட்மி 1S-ன் வடிமைப்பு கிட்டத்தட்ட ஒன்று தான். எளிமையான டிசைனை கொண்ட ரெட்மி நோட் முற்றிலும் பிளாஸ்டிக்கால் ஆனது. ரெட்மி நோட்டின் முன்புறம் கருப்பு நிறத்திலும் பின்புறம் வெள்ளை நிறத்திலும் அமைந்துள்ளது.

டிஸ்ப்ளே:

ரெட்மி நோட் அகலமான 5.5 இன்ச் 1280*720 IPS LCD ஸ்க்ரீன் HD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. 267 ppi கொண்டுள்ள இந்த துல்லியமான டிஸ்ப்ளே படம் பார்க்க, ஈ-புக் படிக்க, இன்டர்நெட் ப்ரௌஸ் செய்ய மிகவும் எளிதாகவும் வசதியாகவும் இருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ‘Corning Gorilla Glass 3’ என்ற சக்திவாய்ந்த ஒரு கிளாஸால் பாதுகாக்கப்பட்டுள்ளது.

ப்ராஸஸர்:

ரெட்மி நோட் சக்திவாய்ந்த MediaTek MT6592 ப்ராஸஸரை கொண்டு இயங்குகிறது. இந்த MediaTek MT6592 ப்ராஸஸர் எட்டு CPU கோர்களை கொண்டுள்ளது. 1.7 GHzஇல் இயங்கக்கூடும் இந்த ப்ராஸஸரோடு பிரத்யேகமான Mali 450 GPU என்ற கிராபிக்ஸ் ப்ராஸஸரும் அடங்கும். 2GB ரேமோடு வரும் இந்த ஸ்மார்ட் போனின் செயல்பாட்டில் எந்த குறைப்பாடும் இருக்காது. 8GB இன்டெர்னல் மெமரியுடன் வரும் இந்த ரெட்மி நோட்டை 32GB SD கார்ட் மூலமும் விரிவுபடுத்திக்கொள்ளலாம்.

கேமரா:

13 மெகா பிக்ஸல் பின்புறக் கேமராவும் 5 மெகா பிக்ஸல் முன்புறக் கேமராவும் கொண்டுள்ள இந்த ஒன் பிளஸ் ஒன் ஸ்மார்ட் போன் 1080P HD வீடியோவை ரெகார்ட் செய்யும் திறனை கொண்டுள்ளது.

பேட்டரி:

3100 mAh பேட்டரியை கொண்டுள்ள ரெட்மி நோட், நீடித்து உழைக்கும் தன்மையை கொண்டுள்ளது. கிட்டதட்ட 15 மணி நேரம் வரை இந்த பேட்டரி உழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் ரெட்மி நோட்டுடன் கொடுக்கப்படும் 2A சார்ஜர் சில மணி நேரங்களிலேயே இந்த பேட்டரியை சார்ஜ் செய்யும் திறனை பெற்றுள்ளது என்பது கூடுதல் சிறப்பம்சம்.

ஓ.எஸ்:

ரெட்மி நோட் ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் ஓ.எஸ் கொண்டு இயங்குகிறது. ரெட்மி 1S மற்றும் எம்.ஐ.3யில் பயன்படுத்தப்பட்ட ஷியோமி நிறுவனத்தின் பிரத்யேக MIUI ஓ.எஸ். டிசைனும் இந்த ரெட்மி நோட்டில் அடங்கும். பார்பதற்கு கவர்ச்சியாகவும் பயன்படுத்த எளிதாகவும் இருக்கும் இந்த MIUI, வாடிகையாளர்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் வண்ணத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

பிளஸ்:

* சிறப்பான தொழில்நுட்பம்.
*  கேமரா.
* விலை.

மைனஸ்:

* பழைய ஓஸ்.
* சிம்பிள் டிசைன்.

ரெட்மி நோட் ‘Flipkart’ இணையதளத்தில் ரூபாய் 8,999 என்ற விலையில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

-செ.கிஸோர் பிரசாத் கிரண்.

சோனி வாக்மேன்!

உலகம் முழுக்க இன்றைக்கு இசைப் பிரியர்களது எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. இன்று செல்போனிலும் மெமரி கார்டிலும் பதுங்கிக் கிடக்கும் இசையை, ஒரு காலத்தில் மனிதன் தேடிச் சென்றுதான் கேட்க வேண்டி இருந்தது.

முதலில், பிறர் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்த மனிதன், பிற்பாடு இசைத்தட்டின் மூலம் கேட்டு சந்தோஷமடைந்தான்.பிற்பாடு வந்த டேப் ரிக்கார்டர் சாதாரண மனிதனும் இசையைக் கேட்டு மகிழக் காரணமாக இருந்தது.

என்றாலும், இந்தத் தொழில்நுட்பங்கள் எல்லாம், எல்லோருடைய காதுகளை யும் ஒரேநேரத்தில் சென்று சேருகிற மாதிரியே இருந்தது. இசையில் ஆயிரம் வகை உண்டு. ஒருவருக்குப் பிடித்த இசை மற்றவருக்குப் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. தனக்குப் பிடித்த இசையை மற்றவர்களுக்குத் தொல்லைதராமல், தான் மட்டுமே கேட்க முடிகிற மாதிரி ஒரு தொழில்நுட்பம் இருந்தால்..? அதுவும், நடக்கிறபோது, பஸ்ஸில் பயணிக்கிறபோது, விமானத்தில் பறக்கிறபோது மனதுக்குப் பிடித்த இசையைக் கேட்க முடிகிறமாதிரி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?


இப்படி எல்லாம் சோனி நிறுவனம் யோசித்ததன் விளைவாகப் பிறந்ததுதான் ‘வாக்மேன்’ என்னும் அற்புதம். 1978-ம் ஆண்டு சோனியின் ஆடியோ பிரிவு இன்ஜினீயர் நொபுடோஷி, சோனியின் நிறுவனர்களில் ஒருவரான மசரு இபுகாவுக்கு விமானப் பயணங்களின்போது பாடல் களைக் கேட்க ஓர் அமைப்பை வடிவமைத்தார். அதுதான் 1979-ம் ஆண்டு சோனி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கண்டுபிடிப்பான வாக்மேனாக வெளியாகியது. இதில் ஒலிநாடா அமைப்புள்ள கேசட் மூலம் சிறிய கருவியில் ஹெட்போன் வசதியுடன் பாடல்களை நடந்து கொண்டே கேட்கலாம் என்ற அளவுக்கு இந்தக் கண்டுபிடிப்பு பிரபலமா கியது.

உலகம் முழுக்க வாக்மேன் அறிமுகமான சிறிது காலத்திலேயே 20 கோடி பேர் வாங்கினர். ஆனால், சோனியின் மற்றொரு நிறுவனரான அகியோ மொரிடாவுக்கு வாக்மேன் என்ற பெயர் பிடிக்கவில்லை. இதன் பெயரை மாற்றும்படி கூறினார். ஆனால், இந்தப் பெயர் மக்கள் மனதில் நிலைத்துவிட்டது. தவிர, பெயர் மாற்றத்துக்கு நிறைய செலவு செய்ய வேண்டும் என சோனி அதிகாரிகள் சொல்ல, வாக்மேன் என்ற பெயரே வரலாற்றில் நிலைத்தது.

2010-ம் ஆண்டோடு வாக்மேன் தயாரிப்பை சோனி நிறுத்திவிட்டது. என்றாலும், மனதுக்குப் பிடித்த இசையை ரசித்துக் கேட்க, வாக்மேன் இருந்தால் மட்டுமே முடியும் என்கிற அளவுக்குப் புதுமையை ஏற்படுத்திய கண்டுபிடிப்பு அது!

ச.ஸ்ரீராம்
 

Saturday, December 06, 2014

நம்பிக்கை தரும் 10 இந்தியர்கள்!

இந்தியாவின் நம்பிக்கை மனிதர்களின் பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்தில் இருப்பவர் பிரதமர் மோடி! 1950-ல் வட் நகரில் பிறந்த மோடி, கடந்த மே மாதம் இந்தியாவின் 15-வது பிரதமராகப் பதவியேற்றார். தேர்தலுக்குமுன் இவர் பேசிய மேடை பேச்சுகளும், டிஜிட்டல் புரட்சியும்தான் இவரது வெற்றிக்கு வழிவகுத்தன. பல வாக்குறுதிகளைத் தந்த மோடி, பதவியேற்றதும் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆயத்தமானார். தற்போது இந்தியாவையும், இந்திய பொருளாதாரத்தையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல மேக் இன் இந்தியா, க்ளீன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என பல புதுமையான திட்டங்களை உருவாக்கி மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இவரது தலைமையில் இந்தியா நவீனமயமாகும் என்ற நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறார்.  இந்தியா இதுவரை கண்ட பிரதமர்களில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடியவராக மோடி இருப்பார். 65 வயதான அவரது  செயல்பாடுகளும், வெளிநாடுகளில் அவர் செய்யும் பொருளாதார ஒப்பந்தங்களும் இந்தியாவை வல்லரசாக்க உதவும். பல நாடுகள் அவரது வருகைக்காக காத்திருக்கின்றன என்பது சர்வதேச அளவில் அவர் சக்தி வாய்ந்தவராக வளர்கிறார் என்பதைக் காட்டுகிறது!

இன்று சமூக வலைதளங்களுக்குப் போட்டியாக மாறிவரும் உடனடித் தகவல் ஆப்ஸ்களில் முக்கியத்துவம் வாய்ந்தது வாட்ஸ் அப். இதன் பின்னணியில் இருப்பவர் நீரஜ் அரோரா என்கிற இந்தியர்தான். ஐஐடி டெல்லியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கும், இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ-வும் படித்த நீரஜ் அரோரா, நான்கு வருடம் கூகுளின் தயாரிப்புப் பிரிவில் பணிபுரிந்தார். அதன்பின் வாட்ஸ் அப்பில் தன் பணியைத் துவங்கிய நீரஜ், தற்போது சர்வதேச வர்த்தக மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவராக உள்ளார். இவரது செயல்பாடுகள் வாட்ஸ் அப்பின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது.
ரிலையன்ஸ் போனில் மாதாந்திர வாட்ஸ் அப் சேவையை 16 ரூபாய்க்கு விற்றது இவரது மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று. 35 வயதாகும் இவர், வாட்ஸ் அப்பை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எதிர்காலத்தில் சமூக வலைதளங்கள் பிஸினசில் இவர் முக்கிய இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

சண்டிகரில் பிறந்த சச்சின் பன்சால், டெல்லி ஐஐடியில் பட்டம் பெற்றவர். அவரது ஐஐடி நண்பரான பென்னி பன்சாலுடன் இணைந்துதான் ஃப்ளிப்கார்ட் என்னும் ஆன்லைன் இணையதளத்தை அமைக்கும் வேலையில் ஈடுபட்டார். சச்சினும் பென்னியும் பள்ளியில் ஒன்றாகப் படித்தாலும், ஐஐடியில் இணையும்வரை ஒருவரையொருவர் அறியாமலே இருந்தனர். பட்டம் பெற்றபிறகு இருவரும் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டு அமேசானில் கிடைத்த வேலை மூலம் மீண்டும் இணைந்தனர். இதன்பின்  ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை இருவரும் ஆளுக்கு ரூ.2 லட்சம்  முதலீடு செய்து ஆரம்பித்தனர்.
2007-ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தை அடுத்த ஏழு ஆண்டுகளில், அதாவது 2014-லேயே பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் செய்யும் நிறுவனமாக மாற்றினர். இனிவரும் காலத்தில் சர்வதேச நிறுவனங்களுக்கு சவால் விடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையில் அலிபாபா பட்டியலிட்டு சாதனை புரிந்த மாதிரி, ஃப்ளிப்கார்ட்டும் விரைவில் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிட்டு சாதனை புரியும் என்கிற நம்பிக்கையை இந்த நண்பர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இந்தியாவின் வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பொறுப்பில் உள்ள நிர்மலா சீதாராமன் 1959-ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். பாரதிய ஜனதா கட்சியில் முக்கியப் பங்காற்றிய இவர், தனது இளங்கலை படிப்பை திருச்சியிலும், முதுகலைப் படிப்பை டெல்லியிலும் பயின்றார். தேசிய பெண்கள் ஆணையத்தில் உறுப்பினராக இருந்த இவர், தற்போது நாட்டின் வணிகத் துறை அமைச்சராக மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
இந்திய அரசின் தொழிற்துறை ஊக்குவிப்புத் திட்டங்களான மேக் இன் இந்தியாவில் இவரது பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்நிய முதலீடுகளை வரவேற்கும் அரசில் இவரது பங்களிப்பு அதிகம் இருக்கும் என்ற நம்பிக்கை தொழிற்துறையில் நிலவி வருகிறது. இந்த ஆட்சியில் தொழிற்துறைக்கு நம்பிக்கையாக இருக்கும் இந்தியர்களில் இவர் அதிகம் கவனிக்கப்படுவார்.

1972-ல் சென்னையில் பிறந்த சுந்தர் பிச்சை, ஐஐடி கரக்பூரில் தொழில்நுட்பவியல் படித்தவர். ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பும் வார்டன் ஸ்கூலில் எம்பிஏ பட்டமும் பெற்ற இவர், 2004-ம் ஆண்டு கூகுளில் சேர்ந்தார். புதுமைகளை அறிமுகப்படுத்தும் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார் சுந்தர். கூகுள் குரோம், கூகுள் டிரைவ் ஆகியவற்றைத் தயாரித்த பெருமை இவரையேச் சாரும். அடுத்ததாக, ஆப்ஸ் மேம்பாட்டு துறைக்குத் தலைமை தாங்கினார். ஜி-மெயில் ஆப்ஸ் மற்றும் கூகுள் மேப்ஸ்களை உருவாக்கியதில் இவரது பணி அளப்பறியது.
இதற்கிடையில் மைக்ரோசாஃப்டின் சிஇஓ பதவிக்கு இவரைத்தான் பரிந்துரை செய்திருப்பதாக பலமான வதந்தி கிளம்பியது. ஆனால், கூகுள் இவரைத் தனது ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஆண்ட்ராய்டு ஒன் செல்போன்களை உருவாக்கும் பொறுப்பை வழங்கியது. உலகமே தன் சந்தேகங்களை கூகுளில் தேட, கூகுள் தேடிய பொக்கிஷமாக இருக்கிறார் சுந்தர் பிச்சை. அவரது பெயரை வருங்காலத்தில் கூகுளின் முக்கிய தலைமை பதவிகளில் எதிர்பார்க்கலாம்.

சர்வதேச நிதி ஆணையத்தில் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த ராஜன், 2012-ல் இந்திய பிரதமரின் பொருளாதார ஆலோசகராக ஆனார். கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி ரிசர்வ் வங்கியின் கவர்னராகப் பதவியேற்றார். குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதம், சிஆர்ஆர், எஸ்எல்ஆர் ஆகியவற்றைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசு பலமுறை கோரிக்கை வைத்தும், எந்த விதத்திலும் வளைந்து தராமல் நாட்டின் வளர்ச்சிக்காகத் தனக்கு சரியென்று பட்டதையே செய்தார்.
பணவீக்கத்தைக் குறைத்தே ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் குறியாக இருக்கும் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டில் முடிவுக்கு வருகிறது. பிரிக்ஸ் வங்கியின் தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடிய தகுதிகள் அனைத்தும் ரகுராம் ராஜனுக்கு இருப்பதால், அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. பிரிக்ஸ் நாடுகளில் அதிகம் கவனிக்கப்படும் ரகுராம் ராஜன், இந்த நாடுகளின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவுவார் என்று நம்பலாம்.

கர்நாடகாவின் மணிபால் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் படித்தவர் ராஜீவ் சூரி. முதுகலைப் பட்டம் ஏதும் படிக்காமல் நோக்கியாவின் வளர்ச்சியில் பல சாதனைகளைப் படைத்தவர். கால்காம் நிறுவனத்தில் 1989-ம் ஆண்டு உற்பத்திப் பிரிவில் தன் பணியைத் தொடங்கிய சூரி, 1995-ல் நோக்கியாவில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணியில் சேர்ந்தார். 19 வருடங்களாக நோக்கியாவில் பல உயர் பொறுப்புகளில் தன் பணியைத் தொடர்ந்துவந்த சூரி, செல்போன் விற்பனையில் நீண்ட காலமாக லாபமின்றி இயங்கிக் கொண்டிருந்த நோக்கியா நெட்வொர்க் யூனிட்டின் செலவுகளைக் குறைத்து, கடந்த 2012-ல் மீண்டும் லாபப் பாதைக்கு கொண்டு வந்தார்.
நோக்கியாவின் செல்போன் தயாரிப்புப் பிரிவை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கியபோதும், நோக்கியா நிறுவனம் நெட்வொர்க் மற்றும் மேப்பிங் தொழில்நுட்பத் துறையில் தொடரும் என்று சொல்லப்பட்டது. அந்தப் பிரிவுகளுக்காக நோக்கியாவின் புதிய தலைமை நிர்வாகியாக இந்தியாவைச் சேர்ந்த ராஜீவ் சூரி நியமிக்கப்பட்டார். தொழில்நுட்ப உலகை ஆளுகிற இந்தியர்களின் பட்டியலில் இவரது பெயரும் முக்கிய இடம்பிடித்துள்ளது.

ஐஐஎம் அஹமதாபாத்தில் பட்டம் பெற்ற இவர், இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங்கில் கிடைத்த வேலையை எழுத்தின் மீது உள்ள ஆர்வம் காரணமாக புறக்கணித்துவிட்டு புத்தகம் எழுதுவதைத் தொடர்ந்தார். இவரது புத்தகங்கள் எளிய நடையிலும், இளைஞர்களைக் கவரும் விதமாகவும், கல்லூரி வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவும் இருந்து வருகிறது. அதனால் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை சேத்தன் பகத் பெற்றுள்ளார்.
இவர் எழுதிய ஏழு புத்தகங்களுமே ஹிட் ஆனதுடன், மூன்று புத்தகங்கள் படமாக எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அதிகம் விற்கும் இந்திய எழுத்தாளர்களில் இவரது புத்தகங்கள் முதலிடம் பிடித்துள்ளன. இவரது கடைசிப் புத்தகமான ஹாஃப் கேர்ள் ஃப்ரெண்ட் புத்தகம்  ஆன்லைனில் ஹிட் அடித்து விற்பனைக்கு வருவதற்கு முன்பே முன்பதிவில் விற்றுத் தீர்ந்தது. விரைவில் உலகின் முக்கிய ஆங்கில எழுத்தாளர்களின் வரிசையில் சேத்தன் பகத் இடம் பிடிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாகப் பதவியேற்றுள்ள விஷால் சிக்கா, அமெரிக்காவின் ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் அல்லாத ஒருவர் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார் என்றால் அது விஷால் சிக்காதான். இன்ஃபோசிஸின் நிறுவனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தி நிர்வாகப் பொறுப்பைத் திரும்ப ஏற்றபின் ஓராண்டுக்குள் இன்ஃபோசிஸின் புதிய சிஇஓ அறிவிக்கப்படுவார் என்று அறிவித்தப்படி சிக்காவின் பெயரை நம்பிக்கையோடு அறிவித்தார்.
தற்போது விஷால் சிக்காவின் பணி வர்த்தகரீதியாக மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும், போட்டியைச் சமாளிக்க புதிய நடவடிக்கைகளைக் கையாள்வதும், புதுமைகளை அறிமுகப்படுத்தும் விதமாக இருக்கிறது. இதனால் இந்தியாவில் இன்ஃபோசிஸின் தாக்கத்தை அதிகப்படுத்தவும், சர்வதேச அளவில் முன்னிறுத்தவும் விஷால் சிக்காவால் முடியும் என்றால், நிச்சயம் இன்ஃபோசிஸின் வளர்ச்சிக்கு இவர் பெரிய பங்களிப்பை அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அதோடு இந்தியாவின் ஐ.டி துறை வளர்ச்சியிலும் இவரது பிரதிபலிப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பிறந்த கைலாஷ் சத்யார்த்தி அடிப்படையில் ஒரு எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயர். இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை  பாகிஸ்தானைச் சேர்ந்த அமைதிப் போராளி மலாலாவுடன் இணைந்து பெற்றிருக்கிறார் கைலாஷ் சத்யார்த்தி. குழந்தை தொழிலாளர் முறை இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது. அதுவும், மத்தியப்பிரதேசத்தில் மிக அதிகம். இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து தனது 26 வயதில் ‘பச்பன் பசாவோ அந்தலன்’ (குழந்தைப் பருவத்தைக் காப்போம்) என்ற அமைப்பை ஏற்படுத்தி அறவழிப் போராட்டத்தைத் தொடங்கினார். இவரது தீவிர முயற்சியால் இதுவரை 83,000 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இவரது சேவை இந்தியாவின் ஒரு சில மாநிலங்கள் என்ற அளவிலேயே இருந்து வந்திருக்கிறது. இந்தியாவில் கொத்தடிமைகளாக சிக்கித்தவிக்கும் குழந்தை தொழிலாளர்கள் அதிகம். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் சத்யார்த்தி இறங்கினால், கோடிக்கணக்கான குழந்தைகளை மீட்டு குழந்தை தொழிலாளர் இல்லா இந்தியாவை உருவாக்குவார் என நம்பலாம்.

ச.ஸ்ரீராம்

ஸ்மார்ட்டாக 10 ஆப்ஸ்கள் !

எந்த வேலையை எப்படி செய்து முடிக்கப் போகிறோம் என்பது தெரியாமல் தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், நம் அலுவலகம் மற்றும் தனிப்பட்ட வேலைகளை எளிதாக, ஸ்மார்ட்டாக செய்து முடிக்க உதவும்.

10 ஆப்ஸ்கள் இதோ:

ட்ரெல்லோ!

நீங்கள் செய்ய நினைக்கும் வேலைகளைக் குறித்த நேரத்தில் கச்சிதமாக செய்துமுடிக்க இந்த ஆப்ஸ் நிச்சயம் உதவும். இந்த ஆப்ஸை பயன்படுத்தி நீங்கள் செய்ய வேண்டிய வேலை களைப் பதிவு செய்துவிட்டால், அதுவே சரியான நேரத்தில் உங்களுக்கு நினைவூட்டிவிடும்.அதுமட்டுமின்றி உங்கள் அலுவலகத்தில் உங்களின் கீழ் பணிபுரிபவர்கள் செய்ய வேண்டிய வேலையைப் பட்டியலிட்டு, அதை அவர்களுக்கு அனுப்பிவிட்டால், அந்த வேலையைச் செய்யச் சொல்லி அவர்களுக்கு நினைவுபடுத்தும். வேலை முடிந்து அவர்கள் அப்டேட் செய்தவுடன் அந்தத் தகவலும் உங்களுக்கு வந்துசேரும்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்ஸ் இலவசமாகக் கிடைக்கும். இந்த ஆப்ஸ் 5-க்கு 4.5 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.

இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.trello


இன்பாக்ஸ் பை  ஜி-மெயில்:
கூகுள் மெயிலான ஜி-மெயிலுக்காக தனியொரு ஆப்ஸை உருவாக்கியுள்ளது கூகுள். இதைப் பயன்படுத்தி மற்ற மின்னஞ்சல் சேவை களான யாகூ, ஹாட்மெயில் போன்றவற்றில் ஒருவர் வைத்திருக்கும் கணக்குகளையும் இணைத்துக்கொள்ள முடியும். அதற்கு வரும் மெயில்்களையும் இதில் பெற முடியும். பதிலளிக்க வும் முடியும். ஒரே ஆப்ஸ் அனைத்து மெயில்களை யும் பெறுவதால், தனித்தனியே ஆப்ஸ்களை டவுன்லோடு செய்ய வேண்டிய அவசியமில்லை.

இந்த ஆப்ஸ் வெளியாகி ஒரு மாதமே ஆகியிருந்தாலும், 50 லட்சத்துக்கும் அதிகமான வர்கள் இதை  டவுன்லோடு செய்து   பயன்படுத்து கின்றனர்.

இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inbox

ஸ்வைப் கீபோர்டு:

முன்பு எஸ்எம்எஸ் அனுப்ப பட்டன்கள் உள்ள கீபோர்டுகளைப் பயன்படுத்தி வந்தோம். அடுத்து, ஸ்மார்ட் போன் ஸ்கிரீனில் தொடுதிரையைப் பயன்படுத்தி டைப் செய்தோம். அதற்கடுத்து டிக்‌ஷனரி ஆப்ஷன் மூலம் வார்த்தைகளைத் தேர்வு செய்தோம்.  தற்போது கீபோர்டில் நாம் டைப் செய்ய வேண்டிய வார்த்தையை அந்த எழுத்துக்களில் வைத்து ஸ்வைப் செய்தாலே போதும் அந்த வார்த்தை டைப் ஆகிவிடும் .

ஆங்கிலம் மற்றும் குறிப்பிட்ட சில மொழி களிலும் வார்த்தைகளை அடையாளம் காணும் இந்த ஆப்ஸ் இன்னும் சில மொழிகளுக்கும் அப்டேட் செய்யப்பட உள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் 60 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த ஆப்ஸ் 5-க்கு 4.2 ரேட்டிங்களைப் பெற்றுள்ளது.

இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.nuance.swype.dtc

கூகுள்அனலிடிக்ஸ்:

நாம் செய்யும் வேலைகள் சரியான வேகத்தில் உள்ளதா, அந்த வேலையை இதே வேகத்தில் சென்றால், நம் டார்கெட்டை முடிக்க முடியுமா என்பதை அனலைஸ் செய்து, எக்ஸ்எல் மற்றும் பிடிஎஃப் ஃபைல்களாக வழங்குகிறது கூகுளின் அனலிடிக்ஸ் ஆப்ஸ். உங்கள் அலுவலக இணையதளங்களை இதனுடன் இணைத்துக்கொள்வதன் மூலம் எத்தனை பேர் அதனைப் பார்வையிட்டு உள்ளனர், அதில் குறிப்பிட்ட ஒரு பிரிவை எத்தனை பேர் பார்த்துள்ளனர்  என்பதையும் சொல்கிறது இந்த ஆப்ஸ்.

ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கும் இந்த ஆப்ஸ் 5-க்கு 4.2 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.

இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.giant

வுண்டர்லிஸ்ட்: 

நாம் செய்யும் வேலைகள் சிலவற்றை நாம் மறந்துவிடுவோம். சிலசமயம் வேலைகளைத் தாண்டி இன்று உறவினர் ஒருவருக்குப் பிறந்தநாள், ஒரு முக்கியமான நபரை வியாபார ரீதியாகச் சந்திக்க வேண்டும் என்று நினைத்து இருப்போம். இந்தப் பிரச்னையைத் தீர்க்கத்தான் வுண்டர்லிஸ்ட் ஆப்ஸ் உதவுகிறது. நமது தினசரி வேலைகள், சந்திக்க வேண்டிய நபர்கள் மற்றும் மறக்கக்கூடாத தினங்களைப் பதிவு செய்துவிட்டால், சரியாக நமக்கு நினைவுபடுத்தி நமது வேலைகளை மறக்காமல் செய்ய இந்த ஆப்ஸ் உதவுகிறது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கும்

இந்த ஆப்ஸை இதுவரை 50 லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். 5-க்கு 4.4 ரேட்டிங்கையும் இந்த ஆப்ஸ் பெற்றுள்ளது.

இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.wunderkinder.wunderlistandroid

மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் மொபைல்:

நாம் தயாரிக்கும் வேர்டு டாக்குமென்ட்டுகள், பவர் பாயின்ட் ஸ்லைடுகள், எக்ஸ்எல் படிவங்கள் ஆகியவற்றை மொபைல் மூலமாகவே தயாரித்து, நீங்கள் அனுப்ப நினைக்கும் நபருக்கு மெயில் மூலமாக அனுப்ப முடியும். நாம் கணினியில் செய்யும் அனைத்து ஆபீஸ் வேலை களையுமே இதில் செய்ய முடியும். இது ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. 5-க்கு 4 ரேட்டிங்கை இந்த ஆப்ஸ் பெற்றுள்ளது.  இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.officehub

இன் 5:
பிஸியான வேலைகளுக்கு நடுவே ரிலாக்ஸ் செய்ய நினைப்பவர்கள் பல்வேறு சமூக வலைதளங்களுக்குள் சென்று அங்கேயே மணிக்கணக்கில் தங்கிவிடுகிறார்கள். இதனால் அலுவலக வேலை மட்டுமல்ல, தனிப்பட்ட வேலைகள்கூட பாதிப்படையும். இதைத் தடுக்கிற வேலையை செய்வதுதான் இந்த ஆப்ஸ். இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்துவிட்டால், எந்த சமூக வலைதளத்திலும்  சரியாக ஐந்து நிமிடங்களுக்கு மேல் உங்களை இருக்க அனுமதிக்காது. காரணம், ஐந்து நிமிடங்களுக்குப்பிறகு நீங்கள் பார்க்கும் சமூக வலைதளத்தை உங்கள் கம்ப்யூட்டர் திரையிலிருந்து இந்த ஆப்ஸ் காணாமல் அடித்துவிடும்.

இந்த ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. 5-க்கு 4.3 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய:

ட்ராப் பாக்ஸ்:

செல்போனில் டவுன்லோடு செய்யும் புகைப்படம், வீடியோக்களை மெமரி கார்டுகளில் இடம் இல்லை என அழித்துவிடுவோம். அல்லது இ-மெயில்களில் இருந்து டவுன்லோடு செய்த ஃபைல்களில் சிலவற்றைகூட மறந்து போய் நீக்கி்விடுவோம். அதனைச் சேமித்து வைக்கத்தான் இந்த ட்ராப் பாக்ஸ் ஆப்ஸ் உதவுகிறது.

அதுமட்டுமின்றி, இதனை மற்றவர்களோடு பகிரவும், டிராப் பாக்ஸிலேயே மாற்றி எடிட் செய்யவும் இந்த ஆப்ஸ் உதவுகிறது.

இந்த ஆப்ஸ் ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. இதன் அளவு நாம் பயன்படுத்தும் போனை பொறுத்து மாறுபடும்.

இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.dropbox.android


க்ளீன் மாஸ்டர்:
நமது செல்போனில் நாம் சேமிக்காமலேயே நிறைய பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அதனை ‘cache’ மெமரி என்பார்கள்.

இது குறிப்பிட்ட அளவுக்குமேல் சேர்ந்தால், நமது செல்போனின் வேகம் குறையும். அதனைச் சரிசெய்ய இந்த ஆப்ஸ் உதவுகிறது.

டெம்ப்ரவரி ஃபைல்களை நீக்கி, நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஃபைல்களை அறிந்து அதனை நீக்க  பரிந்துரைக்கும். ப்ளே ஸ்டோர் ரேட்டிங் 5-க்கு 4.7 பெற்றுள்ளது.

இலவசமாகக் கிடைக்கும் இந்த ஆப்ஸை இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ளனர்.

இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.cleanmaster.mguard

அச்சிவ் (Achive) புரொடக்டிவிட்டி டைமர்:

ஒருநாளில் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதில் தொடங்கி, ஒரு மிகப் பெரிய புராஜெக்ட் முடிய எத்தனை நாட்கள் ஆகும் என்பது வரை கச்சிதமாக கணக்கிட்டு, அந்த வேலையைச் செய்து முடிக்க இந்த ஆப்ஸ் மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த ஆப்ஸில் ஒரு வேலை முடிய எவ்வளவு நேரம் ஆகும் என்பதை பதிந்துவிட்டால் போதும். அந்த வேலையைச் செய்து முடிக்க  இன்னும் எத்தனை மணி நேரம் மீதமிருக்கிறது, எவ்வளவு வேகத்தில் செயல்பட்டால் இலக்கை அடையலாம் என்ற தகவல்களை இந்த ஆப்ஸ் துல்லியமாகத் தந்துவிடும்.

இடையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப டாஸ்குகளை மாற்றியமைத்துக் கொள்ளும் வசதியும் இந்த ஆப்ஸில் உள்ளது.  இந்த ஆப்ஸின் மூலம் நம் வேலை செய்யும் திறன் எந்த அளவுக்கு இருக்கும் கணிக்க மிகவும் உதவியாக இருக்கும்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த ஆப்ஸ் 5-க்கு 4.1 ரேட்டிங்கை பெற்றுள்ளது.

இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=pl.thalion.achieve.productivity.timer

ச.ஸ்ரீராம்

குழந்தைகளுக்கும் யோகாசனம்


இந்தியப் பண்பாட்டில் யோகாசனத்துக்கு முக்கிய இடம் உண்டு. நம் சித்தர்கள் கண்டுபிடித்த இது, காலங்களைக் கடந்து நிற்கும் ஓர் அறிவியல்முறை ஆகும்.
ஆரோக்கியமற்ற குடும்பச் சூழல், இணக்கமற்ற சக மாணவர்கள், புரிந்தகொள்ளாத பெற்றோர், பாடத்திட்டப் பளு, தேர்வுகள் தரும் அழுத்தம் போன்றவற்றால் இந்தக் காலத்து மாணவர்கள் மன அழுத்த பாதிப்பால் ரொம்பவே அவதிப்படுகிறார்கள். தொடரும் மன அழுத்தம் காரணமாக உடலில் ஏற்படுகிற ரசாயன மாற்றங்கள் உடல் உறுப்புகளையும் சேதப்படுத்துகின்றன. இதனால் இளம் வயதிலேயே உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராடு பிரச்னை, முதுகுவலி, கால்வலி என்று நோய்களின் வரிசை நீள்கிறது. இதிலிருந்து விடுதலை பெற வேண்டுமானால் மாத்திரை மருந்துகள் மட்டும் போதாது; யோகாசனங்களும் தேவை.

குழந்தைக்கு இரண்டு வயதாகிவிட்டாலே யோகப் பயிற்சிகளைக் கற்றுத்தர ஆரம்பித்துவிடலாம். யோகாவைப் பொறுத்தவரை முறையாகப் பயிற்சிகளைச் செய்தால் மட்டுமே உரிய பலன் கிடைக்கும். எனவே, தரமான பயிற்சியாளர் உதவியுடன் யோகாவைக் கற்றுக் கொள்வது நல்லது.

தொடக்கத்தில் எளிய அசைவுகள் உள்ள பயிற்சிகளை மட்டுமே செய்ய வேண்டும். பயிற்சி ஒன்றுக்கு ஒரு நிமிடம் வீதம் சுமார் 15 நிமிடங்களுக்குச் செய்தால் போதும். யோகப் பயிற்சிகளை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.

சூரிய நமஸ்காரம், பிராணாயாமம், தனுராசனம்,சுகாசனம், சவாசனம், சேது பந்தாசனம், புஜங்காசனம், அர்த்த சர்வாசனம், சிங்காசனம், பிரம்மாசனம் பத்மாசனம். போன்றவற்றைத் தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி செய்ய வேண்டும். முதன்மை ஆசனங்களைச் செய்வதற்கு முன்பு கழுத்தை அசைப்பது, கை, கால்களை நீட்டி மடக்குவது, முதுகை வளைத்து, நிமிர்த்துவது போன்ற ஆரம்பகட்ட தசைப்பயிற்சிகளைச் செய்து கொள்வது நல்லது.

குழந்தைப் பருவத்திலேயே யோகா கற்றுக்கொண்டால், உடல் தசைகளின் இயக்கம் எளிதாகும். முகத்தில் தெளிவு பிறக்கும். மூட்டுகள் நெகிழ்வுத்தன்மை பெறும். சரியான முறையில் மூச்சுவிட முடியும். மூச்சு சுத்தமாகும். இதன் மூலம் ரத்தமும் சுத்தமாகும். செய்யும் பணியில் கவனம் கூடும். கவனச் சிதறல் மறையும். நினைவாற்றல் அதிகரிக்கும். ஆரோக்கிய உணவுமுறையைப் பின்பற்றுவார்கள். இதனால் உடல் ஆரோக்கியம் பலப்படும். தன்னம்பிக்கை பெருகும். மனதில் அமைதி குடிபுகும். மன அழுத்தம் மறையும். எரிச்சல், கோபம், வெறுப்பு போன்ற கெட்ட குணங்கள் விலகும். குழந்தைகளின் இன்றைய ஆரோக்கியம் மட்டுமல்ல எதிர்கால ஆரோக்கியமும் காக்கப்படும்.

மேரி கோம்!!


‘கும் கும்’ என்று எதிராளிகளைக் குத்துச் சண்டையில் குத்திக் கலக்குபவர் மேரி கோம்! லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலமும், ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கமும் கைப்பற்றிய குத்துச்சண்டை வீராங்கனையான இவரது வாழ்க்கை வரலாறு, ‘மேரி கோம்’ என்ற பெயரிலேயே ஹிந்தியில் தயாராகி வெளியிடப் பட்டது. நடிகை பிரியங்கா சோப்ரா நடித்த இந்தப் படம் வசூலிலும் வெற்றி பெற்றுள்ளது. கிரிக்கெட்டைத் தாண்டியும் விளையாட்டுகள் பல உள்ளன என்று பெரும்பாலான இந்தியர் களுக்குத் தெரிய வைக்க இது போன்ற திரைப்படங்களும் பயன்படும்தான்!

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நம் நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரர்கள் லியாண்டர் பயஸ், ரோகன் போபண்ணா, சோம்தேவ் தேவவர்மன் ஆகியோர் பங்கேற்கவில்லை. அந்தப் போட்டிகளில் பங்கேற்றால் உலகத் தர வரிசைப் பட்டியலில் முன்னேற முடியாது என்பதுதான் காரணமாம். இந்திய அரசின் பல்வேறு சலுகைகள், நிதி ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டிருக்கும் முன்னணி வீரர்களே இப்படிப் பங்கேற்காதது பெரும் அதிருப்தியை உண்டு செய்துள்ளது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில், “அங்கீகரிக்கப்பட்ட அனைத்து நட்சத்திர வீரர்களும்,தேவைப்படும் நேரத்தில் உடனடியாக எந்தக் காரணமும் சொல்லாமல் இந்தியாவிற்காகப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்” என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால், இந்திய டென்னிஸ் சங்கமோ, “தர வரிசைப் பட்டியலும் மிக முக்கியம். அப்போதுதான் சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ள முடியும்” என்று பதில் கூறியுள்ளது.

2008-ம் ஆண்டு சீனாவில் நடந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் தனி நபர் பிரிவில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவை ஞாபகம் இருக்கிறதா? சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் (ISSF)வீரர்கள் கமிட்டித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நிர்வாகக் குழு உறுப்பினராகவும் ஆக்கப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் நபர் பிந்த்ரா தான். மகிழ்ச்சியான செய்தி தானே?!

"Playing is my way' என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாறை சச்சின் டெண்டுல்கர் எழுதியுள்ளார். அதன் முதல் பிரதியை தனது தாயாரிடம் கொடுத்து ஆசி பெற்றுள்ளார் டெண்டுல்கர். ஈன்ற பொழுதினும் பெரிதுவந்த தாயார், மகிழ்ச்சியுடன் ஆசியளித்துள்ளார். பெற்றோரின் ஆசிகளை விடப் பெரிய சந்தோஷம் எதுவும் இருக்கிறதா என்ன?

விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது அல்லவா? இந்தோனேஷியாவில் நடந்த கால்பந்துப் போட்டியின் தகுதிச் சுற்றில் ஓர் அணியில் 5 தடவை ‘ஸேம் சைடு கோல்’ அடிக்கப்பட்டது. கால் பந்து ஆட்டங்களில் இது மிகவும் கேவலமாகக் கருதப்படும். அந்தச் சுற்றில் வெற்றி பெற்றால் அரை இறுதியில் மோதப் போகும் அணி பெரிய தாதாக்களின் ‘ஆசி’ பெற்ற அணியாம். தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று, அரை இறுதியில் போய் அவர்களிடம் உதை வாங்குவதை விட, கால் பந்தைத் தங்கள் பக்கமே உதைத்துத் தோற்றுப் போவோம் என்று முடிவெடுத்திருந்திருக்கிறார்கள் போலிருக்கிறது!

தென் கொரியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான ‘பாரா’ ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பெங்களூருவைச் சேர்ந்த ஷரத் கெய்குவாட், நீச்சல் போட்டிகளில் ஆறு பதக்கங்கள் வென்றார். 1986-ம் ஆண்டு ‘தங்க மங்கை’ பி.டி.உஷா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 5 பதக்கங்கள் வென்றதே இதுவரை சாதனையாக இருந்தது. ஷரத் அதனை முறியடித்து ‘தங்க மகன்’ பட்டம் பெறுகிறார். வாழ்த்துவோம் ஷரத்தை!

அருள்வாக்கு ‘நான்’ என்கிற மாயக் கிரணங்கள்


மாயைக்கு ஆளான ‘நான்’ என்பதன் சம்பந்தத்துக்கே இத்தனை ஆனந்தம் இருக்கிறது என்றால், எதிலும் சம்பந்தப்படாமல் பூரண ஞானமாக இருக்கின்ற அந்த வெறும் ‘நான்’ எத்தனை ஆனந்தமயமாக இருக்கும்! வெல்லம் போட்டால் கசப்பு பாகற்காக் கறியிலும் சிறிது தித்திப்பு இருப்பதை உணர்கிறோம். வெல்லத்தின் சம்பந்தத்துக்கே தித்திப்பு இருப்பதால், அசல் வெல்லம் தித்திப்பு மட்டுமே என்பதில் சந்தேகம் என்ன!

கசப்பான துக்க உலகத்தின் ‘நான்’ என்பதன் மாயக் கிரணங்கள் சம்பந்தப்படுகிறபோதே அதில் தித்திப்பு ஆனந்தத்தைப் பெறுகிறோம் என்றால், அந்த ‘நான்’ மட்டுமே ஸ்வச்சமாக நிற்கின்றபோது எத்தனை தித்திப்பாக, ஆனந்த மயமாக இருக்க வேண்டும்?

சிறிய பொத்தல்கள் கொண்ட ஒரு சட்டியால் ஒரு தீபத்தை மூடிவைத்தால் துவாரங்கள் வழியாக மெல்லிய ஒளிக்கிரணங்கள் வெளிவரும். மாயையால் மூடப்பட்ட ஆத்ம தீபத்திலும் இந்திரிய துவாரங்கள் வழியாகக் கொஞ்சம் கொஞ்சம் ஆனந்த ஒளியைப் பார்க்கிறோம். மாயச்சட்டியை உடைத்துவிட்டால் ஆனந்த ஜோதிர்மயமாகவே ஆகிவிடலாம். துவாரங்களின் அளவைப் பொறுத்து பல்வேறு அளவுகளில் ஒளி வெளிவந்தாலும் உள்ளேயிருப்பது ஏகஜோதி தான். நாம் மாயச் சட்டியை உடைத்துவிட்டால் உலகத்தில் பார்க்கும் வித்தியாசங்கள் எல்லாம் மறைந்து எல்லாம் ஒன்றான ஆனந்தரூபமாகவே தெரியும்.

Sunday, November 23, 2014

திரிவேணி சங்கமம்!

இன்றைய கண்டுபிடிப்புகளால் உலகியல் சுக சாதனங்கள் கணக்கின்றிப் பெருகிக்கொண்டே போவதில், எத்தனை பெற்றாலும் திருப்தி பெறாமல் மேன்மேலும் அதே தேட்டத்தில் ஓடி, சாந்த வாழ்வு என்னவென்றே அறியாதவர்களாக இருக்கிறோம். ‘சுவரை வைத்தே சித்திரம்’ என்றபடி உடல்நலனை ஓம்பத்தான் வேண்டுமாயினும், ‘சித்திரம் தீட்டவே இச்சுவர், உள்ளத்தின் உயர்வான உயிரின் நிறைவே அச்சித்திரம்’ என் பதையும் நாம் மறவாது பொன்னேபோல் மனத்தில் பொதிந்து கொள்ள வேண்டும். 

மீண்டும் மீண்டும் நலிவும் அழுக்கும் உறும் உலகியல் சுவரைக் கெட்டிப்படுத்துவதும் அழகுபடுத்துவதுமான ஓயா முயற்சியிலேயே ஈடுபட்டு, அதோடு சேர்ந்துவரும் போட்டி - பொறாமைப் போராட்டத்தில் அமைதியிழந்து, மேன்மேலும் தேவை தேவையெனும் குறைவாழ்வில் வாணாளை வீணாளாக்குவதோடு முடிந்து விட்டோமாயின், நாம் ஆறறிவு பெற்றும் அறியாதாராகவே முடிந்த பரிதாபமாகத்தான் ஆகும். 

குறைவாழ்வை நிறைவாழ்வாகவும், போராட்டப் பொறாமையை அன்பு வழியில் நின்று பெரும் அமைதியாகவும், வந்து வந்து மறையும் தாற்காலிக இன்பத்தை நிரந்தர ஆனந்தமாகவும் மாற்றும் உள்ளத்தின் உயர்வு என்ற சித்திரத்தைச் சுவரின் மீது தீட்டிக் கொள்வதற்கு உபாயம் காண்பதே நாம் செய்ய வேண்டுவது.

உள்ளவுயர்வை நல்கவல்ல அந்த உபாயம் நல்லொழுக்கமாம் தர்மமும், தெய்வ பக்தியும், ஆத்ம சிந்தனையும் திரிவேணியாகக் கலக்க வேண்டும்.

கேட்ஜெட் : பிசினஸ் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்!

தற்போதைய பரபரப்பான தொழில்நுட்ப உலகத்தில் எந்த நேரத்திலும் அலுவலக வேலைகளைச் செய்ய நேரலாம். ஆனால், எல்லா சமயத்திலும் டெஸ்க் டாப், லேப்டாப் போன்றவைகளை உடன் வைத்துக்கொண்டே இருக்க முடியாது. இவற்றுக்கு மாற்றாக தொழில்நுட்ப உலகை ஆக்கிரமித்திருக்கும் ஸ்மார்ட் போனை வைத்து அனைத்து விஷயங்களையும் செய்யும்விதமாக சில அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. அந்த அப்ளிகேஷன்கள் குறித்து இங்கே பார்க்கலாம்...
 
கூகுள் டாக்ஸ் (Google Docs)

இந்த ஆப்ஸைக் கொண்டு Spread sheet-களை பிரவுஸ் செய்யலாம். மேலும், எடிட்டும் செய்யலாம். இதுபோன்ற பல ஆபீஸ் ஆப்ஸ்கள் இருந்தாலும், இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதிகளையும் சிறந்த சேவையையும் அளிக்கிறது. கிராப்ஸ், சார்ட்ஸ், டேபிள்கள் போன்ற அனைத்தையும் இந்த குயிக் ஆபீஸ் ஆப்ஸ் மூலம் எளிதாக உங்கள் ஆபீஸ் பைல்களில் பொருத்திக்கொள்ளலாம்.

கூகுள் டிரைவ் (Google Drive)

இது ஒரு Cloud storage ஆப்ஸ். ஆபீ ஸில் பயன்படுத்தும் ஃபைல்களை உங்கள் கூகுள் டிரைவ் அக்கவுன்ட்டில் சேமித்துவைத்துவிட்டால், உங்களது கூகுள் அக்கவுன்ட்டைக் கொண்டு அந்த ஃபைல்களை வேறொரு ஸ்மார்ட் போன், டேப்லெட், டெஸ்க் டாப், லேப்டாப்பிலோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

கேம் ஸ்கேனர் (Cam Scanner)
இதுதான் தற்போதைய டிரென்டிங் ஆப்ஸ். உங்கள் ஸ்மார்ட் போன் கேமராவை ஒரு ஸ்கேனர் போல செயல்படுத்தும் தன்மை உடையது. ஒரு பேப்பரை ஸ்மார்ட் போன் கேமரா மூலம் போட்டோ எடுத்தால், இந்த ஆப்ஸ் அந்த பேப்பரை ஸ்கேன் செய்ததுபோல எடிட் செய்து விடும். இது தவிர, வேறு பல சிறப்பம்சங்களும் இந்த ஆப்ஸில் அடங்கும்.

எவர் நோட் (Ever Note)
இந்த ஆப்ஸ் மூலம் உங்களது வேலைகளை பட்டியலிட்டுக் கொள்ளலாம். மேலும், எந்த நேரத்திலும் நோட்ஸ் எடுக்கலாம். நோட்ஸை எழுத்து வடிவத்திலோ, ஒலி வடிவத்திலோ அல்லது வரைந்தோ சுலபமாக வாடிக்கையாளர்கள் எடுக்கலாம். மேலும், போட்டோக்களையும் இணைத்துக்கொள்ளலாம். எவர் நோட்டும் ஒரு ‘Cloud Storage’ அப்ளிகேஷனாகும்.

ஸ்கொயர் ரெஜிஸ்டர் (Square Register)

இது ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்த பிரத்யேகமான அப்ளிகேஷனாகும். இதற்கு ஒரு ஏடிஎம் கார்டு ‘Dongle’யை உங்களது ஸ்மார்ட் போனுடன் இணைக்க வேண்டும். இதன்மூலம் ஏடிஎம் கார்டுகளை ஸ்வைப் செய்துகொள்ளலாம். அல்லது சாதாரணமாக இ-பேங்கிங் முறையிலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.

க்ளவ்டு பிரின்ட் (Cloud Print)

இதுதான் ஆண்ட்ராய்டு உலகத்தின் புதுவரவு. இந்த ஆப்ஸை வைத்துக் கொண்டு உங்கள் ஸ்மார்ட் போன் அல்லது டேப்லெட்டில் உள்ள ஃபைல்களை உடனுக்குடன் பிரின்ட் செய்துவிடலாம். இதற்கு உங்களது பிரின்டர் ஒரு ‘e-printer’ஆக இருக்க வேண்டும்.

குயிக் புக்ஸ் (Quick Books)

இது பிரத்யேகமான ஒரு பிசினஸ் அப்ளிகேஷன். இதை குயிக் புக்ஸ் டெஸ்க் டாப் வெர்ஷனோடு ஸ்மார்ட் போன் / டேப்லெட் களுக்கு இலவசமாகப் பெறலாம். இந்தப் புதுமையான பிசினஸ் ஆப்ஸ் உங்களது நிதிக் கணக்குகளையும் வரவு, செலவுகளையும் கையாள கட்சிதமாக உதவும்.

லோக்கஸ் (Locqus)

இது உங்களது ஊழியர்களுக்கான ஒரு அப்ளிகேஷன். அதாவது, எந்த ஊழியருக்கு என்ன வேலை, பொதுவான, மீட்டிங் போன்றவற்றை இந்த அப்ளிகேஷனில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். மேலும், எந்த நேரத்திலும் ஓர் ஊழியர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதையும் ‘Geolocator’ மூலம் இந்த அப்ளிகேஷன் சொல்லிவிடும்.

குறைந்த விலை செல்போன்கள்: நம்பி வாங்கலாமா?

தொழில்நுட்ப  மாறுதலுக்கு ஏற்றவாறு செல்போன்களும் தினம் தினம் மாறி வருகின்றன. லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தில் அமைந்த இந்த செல்போன்களை குறைந்த விலை யில் வாங்க வேண்டும் என்பதே இன்றைய வாடிக்கையாளர்களின் மனநிலையாக உள்ளது. இதனைப் புரிந்துகொண்ட செல்போன் நிறுவனங்கள் குறைந்த விலையில் செல்போன்களை வழங்கத் துவங்கிவிட்டன. ஸ்மார்ட் போன் என்றாலே 10,000 ரூபாய்க்குமேல் இருக்கும் என்கிற நிலை மாறி, ரூ.1,500 ரூபாய்க்கும் அதற்குக் கீழேயும்கூட கிடைக்கும் என்கிற நிலை வந்துவிட்டது.

குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்கள் கிடைக்கும்போது, அதிக விலை தந்து ஏன் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் பலர். விலை குறைந்த ஸ்மார்ட் போன்களை வாங்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?

1.சிறப்பம்சங்களைக் கவனியுங்கள்!

குறைந்த விலை செல்போன்களை வாங்கும்போது அந்த போனை ஆன்லைன் மற்றும் ரீடெயில் கடைகளில் காட்சிக்கு வைத்திருப்பார்கள். அந்த போனில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை முதலில் சரியாக புரிந்துகொள்ளுங்கள். தவிர, அது இரண்டாம் தர அல்லது போலி பாகங் களைக் கொண்டு உருவாக்கப்பட்டி ருக்கலாம். உதாரணமாக, ரூ.10,000 செலவழித்து வாங்கும் செல்போனில் 2ஜிபி அளவுக்கு  மெமரி இருக்கும். ரூ.3,000-ல் வாங்கப்படும் செல்போனிலும் அதே அளவு மெமரி இருக்கும். ஆனால், குறைந்த தரத்தில் அதனை தயாரித்ததன் மூலம் விலை ஈடுகட்டப்பட்டிருக்கும். அது தெரியாமல் அந்த செல்போனை வாங்கினால், அது குறுகிய காலத்துக்கே பயனளிக்கும்.


2.பிராண்டுகளைத் தேர்ந்தெடுங்கள்!

சில நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் செல்போன்களில் எல்லா வசதிகளும் கிடைப்பதாக விளம்பரப் படுத்துவார்கள். ஆனால், அந்த செல்போனை தயாரித்த நிறுவனத்தின் பெயர் முன்பின் பரிச்சயம் இல்லாததாக இருக்கும். அதுபோன்ற நிறுவனங்களைத் தவிர்த்துவிட்டு, நன்கு தெரிந்த பிராண்டுகளை மட்டுமே தேர்வு செய்வது நல்லது. பிராண்டுகள் பலரது சாய்ஸாக இருப்பதால், அவை நன்கு உழைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

3.உத்தரவாதம் இல்லாமல் வாங்காதீர்கள்!

இன்றைக்கு எலெக்ட்ரானிக் சாதனங்கள் தரம் குறைந்த மூலப்பொருட் களால் தயாரிக்கப்படுவதும், கள்ளச் சந்தையில் விற்கப்படும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதும் அதிகரித் துள்ளது. இதுமாதிரி தயாரிக்கப்படும் செல்போன்களுக்கு எந்த உத்தரவாதமும் தரப்படுவதில்லை. உத்தரவாதம் இல்லாத பொருளை வாங்கி, நீங்கள் உங்கள் பணத்தை வீணடிப்பதைவிட, பணம் கொஞ்சம் அதிகமாகச் செலவானாலும், உத்தரவாதம் உள்ள, நல்ல, தரமான பொருளையே வாங்குவது புத்திசாலித்தனம். உத்தரவாதம் உள்ள செல்போன்கள் பழுதானால்கூட அதற்கென இருக்கும் சர்வீஸ் சென்டர் மூலம் சரிசெய்துகொள்ள முடியும். நீங்களும் வருடத்துக்கு இரண்டு, மூன்று செல்போன் வாங்க வேண்டிய கட்டாயம் இருக்காது.

4.ரிவியூகளைக் கவனியுங்கள்!

குறைந்த விலை செல்போனைத்தான் வாங்கப்போகிறீர்கள் எனில், முதலில் அந்த செல்போனின் பயன்பாடு எப்படி உள்ளது என்பதைக் கவனியுங்கள். அதனை ஏற்கெனவே பயன்படுத்தும் நண்பரோ அல்லது உறவினரிடமோ கருத்துக்களைக் கேளுங்கள். பின்னர் அதுகுறித்த ரிவியூகளை அந்த நிறுவனத்தின் தளத்திலோ அல்லது அதனை விற்கும் இ-காமர்ஸ் தளத்திலோ படிக்காமல், சமூக வலைதளங்களில் படியுங்கள். அந்த செல்போனை பயன்படுத்தியவர்கள் அதை விளக்கமாக விமர்சனம் செய்திருப்பார்கள். இதைவைத்து அந்த செல்போனை வாங்கலாமா, வேண்டாமா என முடிவு செய்யலாம்.

5.தரம் மற்றும் விலையை ஒப்பிடுங்கள்!

அனைத்தும் தரமாக உள்ளது. ஆனால், குறைந்த விலை என்று சொன்னால், எப்படி இது சாத்தியம் என நீங்களே ஆராய்ந்து பாருங்கள். தரம் இல்லை எனில், அதைத் தவிர்த்துவிடுங்கள். அல்லது இன்னும் விலையைக் குறைக்க முடியுமா என்று பாருங்கள்.


குறைந்த விலை என்பதை மட்டுமே மனதில் கொள்ளாமல், தரமான பொருளா என்று பார்த்து வாங்குங்கள்!


சூடாகும் செல்போன்கள்!

குறைந்த விலையில் செல்போன்களை விற்ற ஒரு நிறுவனம், செல்போனை மட்டும் விற்காமல், அதனை வாங்கிப் பயன்படுத்துகிறவர்களின் தகவல்களையும் சீனாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு விற்றுவிட்டது. அது மட்டுமின்றி, செல்போன் சார்ஜ் செய்யும்போது சூடாகிறது. அடிக்கடி ஹேங்கும் ஆகிவிடுகிறது என்ற புகார்கள் இந்தக் குறைந்த விலை செல்போன்கள் மீது சொல்லப்படுகின்றன. இந்தக் குறைந்த விலை செல்போன்களை வாங்கி, காதில் சூடு போட்டுக் கொள்ளாமல் இருப்பதே நல்லது!

ச.ஸ்ரீராம்

Friday, November 14, 2014

அண்ணாமலையார் தீபம்!

கார்த்திகை மாதத்து பௌர்ணமி பெரும்பாலும் கிருத்திகை நட்சத்திரத்துடன் சேர்ந்து வரும். அந்நாளே கார்த்திகை தீபம் என்று கொண்டாடப்படுகிறது. சில தருணங்களில் பௌர்ணமியும் கார்த்திகையும் முன்னும் பின்னுமாக வருவது உண்டு.

திருவண்ணாமலையில், கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர திருநாளிலேயே தீபவிழா கொண்டாடப்படுகிறது. அதன் சுற்று வட்டார ஊர்களிலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்படுகிறது. மற்றைய தலங்களில், குறிப்பாகக் கடலோரம் அமைந்த தலங்களில் பௌர்ணமியன்றே தீப விழா கொண்டாடப்படுகிறது.

இப்படி முன்னும் பின்னுமாக வரும்போது, கிருத்திகை நட்சத்திர நாள் தீபவிழாவை அண்ணாமலையார் தீபம் என்றும், பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்படுவதை சர்வாலய தீபம் என்றும் அழைக்கின்றனர்.


கார்த்திகை தீபத் திருநாளில், மாலை 6 மணிக்குச் சரியாக மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். அதேநேரம், கீழே ஆலயத்தில் கொடி மரத்துக்கு முன் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, அவர்களுக்கு மகா தீபாராதனை நடைபெறும். அப்போது, சிறு விமானத்தில் (வாகனத்தில்) எழுந்தருளும் அர்த்தநாரீஸ்வரர்... சுற்றிலும் தீவட்டிகள் ஒளி வீச, திருநடனம் (முக்தி நடனம்) புரிவது கண்கொள்ளாக் காட்சியாகும். ஆலயத்தின் உள்ளே இருந்து வரும் பெருமான் விரைவாக வந்து ஒருசில நிமிடங்கள் மட்டுமே திருநடனம் புரிந்துவிட்டு, உடனடியாக உள்ளே சென்றுவிடுகிறார்.

இதை தரிசிக்கும் அன்பர்களின் இருபத்தோரு தலைமுறைகளும் முக்தியை அடைகின்றன என்றும், உலக வாழ்வில் மேன்மை மிக்க இன்பங்களை அடைந்து சுகமாக வாழ்வர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வருடம், நவம்பர் 26ம் தேதியன்று திருவண்ணாமலையில் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. டிசம்பர் 5ம் தேதி வெள்ளிக்கிழமையன்று மகாதீபம். அன்று அதிகாலையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அருணை சிகரத்தின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

கார்த்திகை சோமவாரம்

சிவபெருமானைக் குறித்து நோற்கப்படும் விரதங்களுள் சோமவார விரதமும் ஒன்று. சந்திரனுக்குரிய நாளான திங்கட் கிழமையில் இது கடைப்பிடிக்கப்படுகிறது.

க்ஷயரோகத்தில் துன்புற்று அழியும்படி சபிக்கப்பட்ட சந்திரன், இந்த விரதத்தைக் கடைப்பிடித்து மேன்மை பெற்றான். அவனுக்குச் சிவபெருமான் அருள்புரிந்ததுடன், அவனுடைய ஒரு கலையைத் தனது முடிமேல் சூடிக்கொண்டு சந்திரசேகரர் என்ற பெயரையும் பெற்றார். சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள். அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய்நொடிகள் தாக்காதிருக்கவும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.



சோமவார விரதம் ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியதாகும். என்றாலும், கார்த்திகை மாதத்துச் சோமவாரங்கள் (திங்கட்கிழமைகள்) தனிச் சிறப்பு பெறுகின்றன.

இந்த நாட்களில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். சந்திரசேகரர் பவனி விழா நடைபெறும். 108 அல்லது 1008 சங்குகளில் நீரை நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்நீரால் சிவபெருமானுக்குத் திருமுழுக்காட்டுகின்றனர்.

கார்த்திகை சோமவார தினங்களில் இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், சிவாலயங்களில் அருளும் ஸ்ரீசந்திரசேகர மூர்த்திக்கு வெண்மலர்கள் சூட்டி, வெண்பட்டு அணிவித்து வழிபட்டால், ஆயுள் விருத்தியடைவதுடன் மன அமைதி கிட்டும், வம்சம் தழைக்கும்.

Thursday, November 13, 2014

ஷர்மிளா!

ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கும் போராட்டக்காரர்களை நாம் பார்த்திருப்போம். சிலர் ஒருவார காலம்கூட உண்ணா விரதம் இருந்து பெரும் பரபரப்பை உருவாக்குவார்கள். ஆனால், ஒரு பெண் 14 வருடங்களாக உண்ணா விரதம் இருக்கிறார். அந்த உண்ணாவிரதத்தை முடித்து வைக்க அரசாங்கமே தலைகீழாக நின்று முயற்சி எடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. அவர்தான் இரோம் சானு ஷர்மிளா.

1942-ம் ஆண்டு மணிப்பூரின் இம்பால் பகுதியில் பிறந்தார் ஷர்மிளா. சிறுவயதிலிருந்தே சமூகச் சிந்தனையோடும், சமுதாயம் சார்ந்த கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர், 2000-ம் ஆண்டு நவம்பர் 2 அன்று மணிப்பூரின் மலோம் பகுதியில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இருந்த பத்து பேரை ராணுவ வீரர்கள் சுட்டு கொன்றதைப் பார்த்தார். மனித உரிமைப் போராளியான ஷர்மிளா இதனைக் கடுமையாக எதிர்த்தார். ஆயுதப்படைக்கு அளித்துள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.

ராணுவம் அவரை கைது செய்தது. அப்போதும் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லை. ஆனால், அவர் இறந்துவிடுவாரோ என்கிற பயத்தில் ராணுவம் அவரை விடுதலை செய்தது. அதன்பிறகும் அவர்  உண்ணாவிரதத்தை கைவிட்டபாடில்லை. உண்ணாவிரதம் தற்கொலைக்கான முயற்சி. எனவே, ஷர்மிளாவை சாப்பிட வைக்கும்படி உறவினர்களை மிரட்டத் தொடங்கியது அரசு. ஆனாலும் ஷர்மிளாவோ தன் கோரிக்கையைக் கைவிடவில்லை.

உடல் உபாதைகளினால் அவரது ஒவ்வொரு உறுப்பும் வலுவிழந்தது. இப்போது அவரது மூக்கின் வழியே திரவ உணவு மட்டும் செலுத்தப்படுகிறது.

14 ஆண்டுகளாகத் தொடரும் இந்த உண்ணாவிரதத்தைப் பார்த்த மணிப்பூர் மக்கள், அரசியலுக்கு வாருங்கள். உங்களுக்கு ஓட்டுப் போடுகிறோம் என்று அழைத்தனர். ‘நான் வடகிழக்கு மக்களுக்காகப் போராடும் போராளி, அரசியல்வாதி அல்ல’ என்று கூறி மறுத்துவிட்டார்.

ஷர்மிளாவின் உண்ணாவிரதம் கடந்த வாரத்தில் 15-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. என் உயிர் போனாலும்  பரவாயில்லை. என்றாவது ஒருநாள் என் பகுதி மக்களின் நிலை மாறும்’ என்கிற விடாமுயற்சியில் ஷர்மிளாவின் உண்ணாவிரதம் தொடர்கிறது. ஷர்மிளாவின் விடா முயற்சி நம்மிடமும் இருந்தால், நம் வாழ்க்கையில் அடைய முடியாததே கிடையாது!

ஹெச்டிசி-ன் புதிய கேமரா!

இன்றைக்கு  ஸ்மார்ட்போன்களில் கேமராக்களின் பங்கு முக்கிய இடம் வகிக்கக்கூடியதாக மாறியிருக்கின்றது. ஆனால், கேமராக்களின் பங்கை வேறு ஓர் எல்லைக்கு எடுத்துச் செல்லும் வகையில் ஹெச்டிசி நிறுவனம் தனது புதிய கேமராவான, ஹெச்டிசி ரீ (HTC Re)  என்கிற கேமராவை வெளியிட்டுள்ளது.

புகைப்படங்களை எளிதாகவும் விரைவாகவும் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய ரக கேட்ஜெட்டை பற்றிப் பார்ப்போம்.


டிசைன்!

ஒரு சிறிய ‘பைப்’ அல்லது ‘ஏர்-இன்ஹேலர்’ போல காட்சியளிக்கும் இந்த கேமராவை கையில் பிடித்து எளிதாக பயன்படுத்த முடியும்.  இந்த கேமரா இரண்டு பட்டன்களைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் இருக்கும் பெரிய பட்டன் போட்டோ எடுக்க உதவுகிறது. இதே பட்டனை சிறிது நேரம் அழுத்தினால் ஒரு ‘beep’ சத்தத்துக்குப்  பிறகு வீடியோ ‘mode’ இயங்கத் தொடங்கும்.

முன்புறத்தில் இருக்கும் பட்டன் ஸ்லோமோஷன் வீடியோக்களை எடுக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த கேமராவில் உள்ள ஒவ்வொரு விஷயத்தையும்  எளிமையாகப் பயன்படுத்துகிற மாதிரி வடிவமைக்கப் பட்டுள்ளது இதன் முக்கியமான பிளஸ் எனலாம்.

மொபைல் ஆப்ஸ்!

இந்த கேமராவின் பிரத்யேகமான ஆப்ஸ், ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் என இரண்டு இயங்குதளத்திலும் கிடைக்கிறது. அதை ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து, இந்த கேமராவோடு ப்ளூ-டூத் அல்லது ‘WiFi Direct’ உதவியுடன் இணைத்துவிடலாம்.

இந்த அப்ளிகேஷன் உதவியோடு இந்த கேமராவில் எடுத்த படங்களை உடனுக்குடன் ஸ்மார்ட்போனில் பார்க்கலாம்.


பேட்டரி!
இந்த கேமரா 820mAh பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது. இது குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் வரை படங்களை எடுக்க உதவும்.

ஆனால், வீடியோக்களை எடுக்கும் போது இந்த நேரம் சற்றுக் குறையலாம். அதனாலே இந்த கேமராவின் மைனஸாக பேட்டரி அமையலாம்.


ஸ்டோரேஜ்!

இந்த கேமரா 8GB இன்டர்னல் மெமரியுடன் வருகிறது. மேலும், 128 GB எஸ்டி (SD) கார்டு மூலம் விரிவுபடுத்திக்கொள்ளலாம். ஆகையால், வாடிக்கையாளர்கள் அளவு பற்றிய கவலை இல்லாமல்  படங்களையோ, வீடியோக்களையோ எடுக்கலாம். எஸ்டி கார்டை பொருத்தும் இடம் இந்த  கேமராவின் அடிப்பாகத்தில் அமைந்துள்ளது.


கேமரா!

ஹெச்டிசி ரீ கேமரா, 16 மெகா பிக்ஸலைக் கொண்டது. சோனியின் ‘Exmor RS tech’ சென்சாரும் இந்த கேமராவில் அடங்கும். இந்த அதிநவீன தொழில்நுட்ப கேமரா 146 டிகிரி வரை போட்டோ அல்லது வீடியோக்களை எடுக்கும் திறனைப் பெற்றுள்ளது. ஹெச்டிசி ரீ கேமரா இந்தியாவில் ரூபாய் 9,990-க்கு Snapdeal.com-ல் பிரத்யேகமாக விரைவில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

கே்ஷமத்தை உத்தேசித்துதான்!

 
நம்முடைய சாஸ்த்ரங்களைத் தந்திருக்கிற பெரியவர்கள், நம் அறிவுக்குப் புரியவே முடியாததும், ஸ்வய ப்ரயத்னத்தால் அநுபவத்திற்கு வரவே முடியாததுமான ஆத்ம லோக ஸத்யங்களைக் கண்டறிந்து அநுபவித்து அவற்றை நாமும் அடைய வேண்டும் என்ற பரம கிருபையிலேயே சாஸ்திர விதிகளைக் கொடுத்திருக்கிறார்கள். 
 
அப்படிப்பட்டவர்கள் ‘சுத்து, சுத்திக்கோ, அதுகளை வலமாப் பண்ணு, மெதுவாப் பண்ணு’ என்று சொல்கிறார்களென்றால் அதெல்லாம் நம் கே்ஷமத்தை உத்தேசித்துத்தான். ஏதொன்று அவர்கள் சொன்னாலும் அர்த்தத்தோடு சொன்னதுதான். வேறே காரணம், எக்ஸ்ப்ளனேஷன் தேடவே வேண்டாம். புத்தி சும்மாயிருக்காமல் கேள்வி கேட்கிறதே என்றுதான் காரணத்தைத் தேடி எக்ஸ்ப்ளென் என்று பண்ணுவதெல்லாம்.

அவர்கள் சொன்னது அர்த்தத்தோடுதான்; அது ஜீவர்களுடைய கே்ஷமத்திற்காகத்தான் என்பதற்கு Proof வேண்டுமென்றால், பெரிய Proof அவர்கள் சொன்னபடியே பக்தி விச்வாஸத்தோடு பண்ணியதாலேயே அநாதி காலமாக, வேறே எந்த தேசத்திலும் இல்லாத அளவுக்கு, இங்கே தலைமுறைதோறும் எல்லா ஜனங்களுமே பொதுவாக சாந்தர்களாகவும் நல்லவர்களாகவும் இருந்து வந்திருப்பதும், அவர்களில் எத்தனையோ பேர் மஹான்களாகவே அநுக்ரஹம் பண்ணிக்கொண்டு இருந்ததும்தான். கேள்வி கேட்க ஆரம்பித்த நாளாக ஏற்பட்டிருக்கிற துர்த்தசையை ப்ரத்யக்ஷமாகவே பார்க்கிறோம்.
 

Tuesday, November 04, 2014

கறுப்புப் பணம் சர்ச்சை?


கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்போர் பட்டியலை மத்திய அரசு வெளியிடத் தொடங்கியிருக்கிறது. பிரதீப் பர்மன், சீமன் லால்லோடியா, ராதா சதீஷ் டிம்லோ பெயர் வெளிவந்துள்ளன. பெரிய மீன்கள் பெயர்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுவிட்ஸர்லாண்ட் நாட்டு வங்கிகளில் மட்டும் உள்ள கறுப்புப் பணத்தின் மதிப்பு சுமார் 84 லட்சம் கோடி ரூபாய். இப்படிச் சொன்னவர்கள் எந்த அடிப்படையில், எந்த அளவுகோலில் இவ்வளவு பெரிய தொகையைச் சொன்னார்கள் என்பது தெரியாது. ஆனால் இந்த மாதிரி ஒரு செய்தி இந்தியாவின் ஊடகங்களில் வெளியானவுடன், சுவிட்ஸர்லாண்ட் வங்கிகளின் சங்கம் இந்தத் தொகையின் அளவை மறுத்து ஒரு அறிக்கை விட்டது. தங்கள் வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் பணத்தின் அளவு சுமார் 12000 கோடி ரூபாய்தான் (அமெரிக்க டாலர் மதிப்பில் 2 பில்லியன் டாலர்).

2012-ல் இந்தத் தொகையின் அளவு 30 லட்சம் கோடி ரூபாய் என்று அப்போதைய சி.பி.ஐ.யின் தலைவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மே 2012-ல் அப்போதைய மத்திய அரசு (மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில்) ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின் சாராம்சம்: அன்னிய நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் சுமார் 15 ஆயிரம் கோடிதான். இது மொத்தமும் கறுப்புப் பணம் என்று சொல்ல முடியாது. ரிஸர்வ் வங்கியின் அங்கீகாரத்துடன் வெளிநாட்டு வங்கிகளில் நம் நாட்டு ஏற்றுமதியாளர்கள் வைத்திருக்கும் பணமும் இதில் அடங்கும்." இப்போது மத்தியில் பதவியில் இருக்கும் பாரதிய ஜனதா அரசு அதன் தேர்தல் வாக்குறுதியாக தாங்கள் பதவிக்கு வந்த மூன்று மாதங்களுக்குள் வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கறுப்புப் பணம் பூராவையும் இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் என்று சூளூரைத்தார்கள். அப்படி பணம் ஒன்றும் வரவில்லை. இப்போதைக்கு ஒருசில பெயர்கள் மட்டுமே வந்துள்ளன.

சில பொருளாதார நிபுணர்களின் அபிப்ராயப்படி வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தக் கறுப்புப் பணம் சுமார் 20,000 கோடிக்கும் குறைவாகத்தான் இருக்கும் என்பது. இதற்கு அவர்கள் சொல்லும் முக்கியக் காரணம் வெளிநாட்டு வங்ககளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தின் பெரும் பகுதி திரும்ப இந்தியாவுக்கு வந்துவிட்டது. அந்தப் பணம் பங்குச் சந்தையிலும், வீட்டு மனைகளிலும் மற்றும் அடுக்கு மாடி கட்டடங்களிலும் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது" என்பதுதான். இந்த மாதிரி பல அபிப்ராயங்கள் அவ்வப்போது வெளியாவதால், மக்களின் சந்தேகத்தைப் போக்க எல்லா விவரங்களும் அடங்கிய ஒரு வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.

வி.கோபாலன்

‘ஆன்லைன் ஷாப்பிங்’ - ‘இ காமர்ஸ்’


உலகம் முழுவதும் வேகமாகப் பரவிக் கொண்டிருப்பது ‘இ காமர்ஸ்’ என்று அறிமுகமாகி இன்று ‘ஆன்லைன் ஷாப்பிங்’ என்ற விஷயம்தான். இந்தத் துறையின் வளர்ச்சி கடந்த ஆண்டில் மட்டும் 300 சதவிகிதத்துக்கு மேல். வரும் ஆண்டுகளில் இன்னும் வேகமாக வளரும் எனக் கணித்திருக்கிறார்கள்.

அபரிமிதமான அன்னிய முதலீடுகளால் உலகின் பொருளாதார தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் சீனாவில் இந்த வர்த்தகம் இருக்கிறது. இதில் முன்னணி நிறுவனமான அலிபாபா நிறுவனம் அன்னிய நேரடி முதலீட்டுச் சந்தையில் பங்குகளை வெளியிட அனுமதி பெற்று நியுயார்க் பங்குச் சந்தையில் தனது டாலர் பங்குகளை கடந்த மாதம் வெளியிட்டது. 

IPOˆவின் (முதலில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலை) தொடக்க விலையாக 40 டாலர்களாகப் பட்டியலிடப்பட்டிருந்தது. மார்க்கெட் தொடங்கிய சில நிமிடங்களில் ஜிவ்வென்று விலை ஏறி 93.8 டாலர்களில் நாளின் விற்பனை முடிந்தது. மொத்தம் விற்ற பங்குகளின் மதிப்பு 25 பில்லியன் டாலர்கள். இது பங்கு மார்க்கெட்டில் ஒரு உலக சாதனை. இதுவரை எந்த கம்பெனியின் பங்கும் இந்த வேகத்தில் உயர்ந்ததில்லை. விற்றதில்லை. 

இதன் மூலம் அலிபாபா நிறுவனத்தின் நிகர மதிப்பு ஒரே நாளில் 231 பில்லியன் டாலர்கள் உயர்ந்தது. அதன் நிறுவனர் ஜாக் மாவின் பங்குகளின் மதிப்பு 26.5 பில்லியன் டாலர்கள். (ஒரு பில்லியன் என்பது 100 கோடிகள்). இந்தப் பங்கு வெளியீடு மூலம் ஜாக் மா ஆசியப் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திலிருக்கும் முகேஷ் அம்பானியையும், இரண்டாவது இடத்திலிருக்கும் சீனாவின் லீஷா கீ என்ற தொழிலதிபரையும் ஒரே பாய்ச்சலில் தாண்டி ஆசியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்துக்கு வந்துவிட்டார். 

ஒரு சீன நிறுவனம் முதன்முதலில் அமெரிக்கப் பங்குச் சந்தையில் இறங்கும் போது எப்படி இத்தகைய வரவேற்பு என்பதை உலகப் பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தை ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராயத் தொடங்கிவிட்டன. 

உலகில் அதிகமான இன்டர்நெட் இணைப்புகள் கொண்ட சீனாவில் ஆன்லைன் வர்த்தகத்தை அறிமுகப்படுத்தி அதை மிக வேகமாக வளர்த்து பல சாதனைகளைப் படைத்தவர்கள் இந்த அலிபாபாதான். 40க்கும்மேற்பட்டபொருட்களை 140க்கும்மேற்பட்ட நாடுகளில் விற்கிறார்கள். நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் இவர்கள் தளத்தைப் பார்வையிடுகிறார்கள். ஆன்லைன் ஷாப்பிங்கில் சில புதிய முறைகளை அறிமுகப்படுத்தியவர்கள். இன்டர்நெட்டில் பொருளைப் பார்த்து பணம் செலுத்தியபின் உங்கள் பகுதியிலிருக்கும் கடையில் அதைப் பெறலாம். இதன் விலை கடையில் வாங்குவதைவிட குறைவாக இருக்கும் (சில பொருட்கள் 50 சதவிகிதம் விலை குறைவு). 

கடையில் பொருளைப் பார்த்தபின் பிடிக்காவிட்டால் பணம் வாபஸ். விழாக் காலங்களில் கடைக்கே போக வேண்டாம். கல்லூரி, பள்ளி, அலுவலகக் கட்டடங்களில் கொட்டிக் குவித்து வைக்கிறார்கள். வீட்டுக்குப் போகும்போது பொருளை எடுத்துச் செல்லலாம். இப்படி பல புதிய ஐடியாக்களுடன் இப்போது இவர்கள் சீனாவின் கிராமங்களை குறிவைத்திருக்கிறார்கள். 

‘அடுத்த இரண்டாண்டில் 1000 நகரங்களில் 10,000 கிராமங்களிலும் எங்களது பொருள் வழங்கும் சென்டர்கள் (கடைகள் இல்லை) தொடக்கப்படும்’ என அறிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் அலிபாபா நிறுவனம் ஆன்லைன் ஷாப்பிங்கில் உலகின் முதல் நிறுவனமாக உயரும் என்கிறது ஒரு கணிப்பு. அமேசான், இபே போன்ற ஆன்லைன் நிறுவனங்களைவிட இவர்கள் மலிவான விலைக்குப் பொருட்களைத் தருவதுதான் இத்தனை வளர்ச்சிக்கு காரணம் என்பதும் ஒரு கணிப்பு.

இந்திய மார்க்கெட்டின் மதிப்பை உணர்ந்திருக்கும் இவர்கள் விரைவில் இந்தியாவுக்கு வரப்போகிறார்கள்.

உசரமான பாவம்!



 ஒரு மனோபாவத்தை வெளிப்படுத்துவதற்காகச் செய்கிற சரீர க்ரியையே தலைமுறை தலைமுறையாகப் பலபேர் அப்படிப் பண்ணுகிறபோது மரத்தில் வஜ்ரம் பாய்கிற மாதிரி ஒரு உள்பலத்தைப் பெற்று விடுகிறது. அப்புறம் இந்த க்ரியையே அந்த மனோபாவத்தை பலப்படுத்தி விருத்தி செய்து கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. அடிப்படையில் அந்த மனோபாவத்தை நாம் நினைத்து அந்த க்ரியையைச் செய்தால், க்ரியையே நினைப்பை ஆழப்படுத்தி பாவத்தை வளர்த்துக் கொடுக்கும். அப்படி இந்த ஸாஷ்டாங்க, பஞ்சாங்க நமஸ்காரங்கள் விநய ஸம்பத்து என்ற உசந்த (சிரித்து) தாழ்மையாலேயே உசரமான பாவத்தை போஷித்துக் கொடுக்க உதவியாயிருக்கின்றன.


ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Sunday, November 02, 2014

எரிக் வெய்ஹன்மேயர்!

இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம்தான் உலகின் மிகப் பெரிய சிகரம் என்பது அனைவருக்கும் தெரியும். சாகசம் செய்ய நினைப்பவர்கள் இதன் உச்சியை அடைய வேண்டும் என்று நினைப்பார்கள். 

அப்படிநினைப்பவர்களுக்கு எரிக் வெய்ஹன் மேயர் ஓர் உதாரணம். பலர் சாதனை செய்திருந்தாலும் எரிக்கின் சாதனை பாராட்டப்பட வேண்டியது. ஏனெனில், எரிக் பார்வையற்றவர். இந்தச் சாதனையைச் செய்ய அவர் சந்தித்த சவால்கள் ஏராளம்.

எரிக் அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் பகுதியில் 1968-ம் ஆண்டு பிறந்தார். சிறுவயதில் இருந்தே சுறுசுறுப்பாகவும், துணிச்சலான காரியங்களையும் செய்யும் எரிக், தனது 13-வது வயதில் ரெட்டினோசிஸிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கண் பார்வையை இழந்தார். இதனால்  தன்னம்பிக்கையை இழந்து எதிலும் ஈடுபாடு காட்டாமல் ஒதுங்கியே இருப்பார் என எல்லோரும் நினைத்தபோது, நம்ப முடியாதச் செயல்களை  திறமையாகச் செய்யத் துவங்கினார்.


குத்துச்சண்டையில் சிறப்பாக பயிற்சி பெற்ற எரிக், அமெரிக்காவின் தேசிய அணிக்காக பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்றார். 1993-ல் பட்டப் படிப்பைப் பூர்த்தி செய்த எரிக், பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியாற்றத் துவங்கினார். இதற்கிடையில் மலையேறுதல் மற்றும் காடுகளுக்குள் பயணித்தல் போன்ற செயல்களை துணிச்சலாகச் செய்து வந்தார். அமெரிக்காவின் மவுன்ட் மெக்கென்லி, தென் ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ ஆகிய மலைகளில் ஏறிய அனுபவம் அவருக்கு இருந்தாலும், எவரெஸ்ட் சிகரத்தை அடைவதை தன் லட்சியமாக உணர்ந்தார்.


எரிக்கின் இந்த ஆசை நிறைவேறுமா என பலரும் சந்தேகத்துடன் பார்த்தனர். ஆனால், மற்றவர்களின் அபிப்ராயங்களைப் பற்றி சற்றும் கவலைப்படாத எரிக், தனது 14 பேர் கொண்ட குழுவோடு பயணிக்கத் துவங்கினார். வழியெங்கும் சரியான குழுக் கூட்டங்கள், நிதானமான திட்டமிடல் என அனைத்தையும் சரியாகச் செய்து தனது லட்சிய இலக்கான எவரெஸ்ட் சிகரத்தை மே 25, 2001 அன்று அடைந்தார். இவர்தான் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பார்வையற்றவர் என்ற பெருமையையும் பெற்றார்.

இது எனக்கு வராது, என்னால் இதைச் செய்ய முடியாது எனக் கூறி, ஒரு வேலையை தள்ளிப்போடும் அனைவருக்கும் எரிக் வெய்ஹன்மேயரின் சாதனை ஒரு பாடம்.

கேட்ஜெட் : லெனோவா யோகா 2

டிஸ்ப்ளே:


இந்த டேப்லெட், முழு ஹெச்டி டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இந்த 8 இன்ச் IPS டிஸ்ப்ளே ஒரே நேரத்தில் பத்து விரல்களை சென்ஸ் செய்யும் விதத்தில் அதிநவீன தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளது. 1920x1200 பிக்ஸல் ரெஸல்யூஷன் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவான மற்றும் கூர்மையான டிஸ்ப்ளேயாக அமையும்.

வடிவமைப்பு:

கவர்ச்சியான லெனோவா யோகா 2 டேப்லெட், ஒரு மெட்டாலிக் லுக்கை கொண்டது. சில இடங்களில் மெட்டலால் செய்யப்பட்டாலும், சிறிது பிளாஸ்டிக்கும் இந்த டேப்லெட்டின் வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வடிவமைப்பைப் பொறுத்தவரை, எந்தக் குறையும் இல்லை. அனைத்தும் பிளஸ்தான். மேலும், ‘கிக்-ஸ்டாண்ட்’ என்ற துணைக் கருவியை டேப்லேட்டின் பின்புறத்தில் காணலாம். இது டேப்லேட்டை பல ஆங்கிள்களில் பயன்படுத்த உபயோகமாக இருக்கும். தவிர, இந்த கிக்-ஸ்டாண்ட் மூலம் டேப்லெட்டை தொங்கவிட்டும் பயன்படுத்தலாம்.


சேமிப்பு:

3G மற்றும் 4G வசதியோடு வரும் இந்த லெனோவா யோகா 2 டேப்லெட், லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு இயங்குதளமான 4.4 கிட்கேட் தளத்தைக் கொண்டு இயங்குகிறது. ‘Dolby Audio’ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ள இந்த டேப்லெட், 16GB இன்டர்னல் மெமரியைக் கொண்டுள்ளது. 64GB வரை SD மூலம் விரிவுபடுத்தியும் கொள்ளலாம். லெனோவா யோகா 2 டேப்லெட், ‘Flipkart’ இணையதளத்தில் ரூபாய் 20,990 என்ற விலையில் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது.


கேமரா:

8 மெகா பிக்ஸல் பின்புற கேமராவும் 1.6 மெகா பிக்ஸல் முன்புற கேமராவும் கொண்டுள்ள இந்த யோகா 2 டேப்லெட், f2.2 ‘wide aperture’ லென்ஸ்களைக் கொண்டுள்ளது. இந்த லென்ஸ் அதிகத் தொழில் நுட்ப ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், சில டேப்லெட் களிலும் தற்போது பயன்படுத்தப்படுவது சிறப்பம்சம்.


பிராசஸர்:

தற்சமயம் பலரும் குவால்காம் பிராசஸர்களையே பயன்படுத்தினாலும், லெனோவா யோகா 2 டேப்லெட் ‘இன்டெல்’ நிறுவனத்தின் பிராசஸரையே பயன்படுத்துகிறது. 1.86GHz குவாட்-கோர் பிராசஸரான இது சாதாரணமான டேப்லேட்களைவிட நிச்சயமாக வேகமாக இயங்கும். இந்த வேகத்துக்கு பேட்டரி எந்த அளவுக்கு ஈடுகொடுக்கும் என்கிற கேள்வியும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


பேட்டரி:

6400 mAh லித்தியம்-ஐயான் பேட்டரியைக் கொண்டுள்ள யோகா 2 டேப்லெட்டானது, சாதாரண டேப்லெட்களைவிட சக்திவாய்ந்தது. கிட்டத்தட்ட 18 மணி நேரம் வரை உழைக்கும் என்று லெனோவா நிறுவனம் உறுதியளித்துள்ளது. ஒரு நாள் (8 மணி நேரம்) சராசரி கேமிங், பிரெளஸிங் மற்றும் பயன் பாட்டுக்கு இந்த பேட்டரி போதுமானதாக இருக்கும் என்று நம்பலாம்.