‘கும் கும்’ என்று எதிராளிகளைக் குத்துச் சண்டையில் குத்திக் கலக்குபவர் மேரி கோம்! லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலமும், ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கமும் கைப்பற்றிய குத்துச்சண்டை வீராங்கனையான இவரது வாழ்க்கை வரலாறு, ‘மேரி கோம்’ என்ற பெயரிலேயே ஹிந்தியில் தயாராகி வெளியிடப் பட்டது. நடிகை பிரியங்கா சோப்ரா நடித்த இந்தப் படம் வசூலிலும் வெற்றி பெற்றுள்ளது. கிரிக்கெட்டைத் தாண்டியும் விளையாட்டுகள் பல உள்ளன என்று பெரும்பாலான இந்தியர் களுக்குத் தெரிய வைக்க இது போன்ற திரைப்படங்களும் பயன்படும்தான்!
தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நம் நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரர்கள் லியாண்டர் பயஸ், ரோகன் போபண்ணா, சோம்தேவ் தேவவர்மன் ஆகியோர் பங்கேற்கவில்லை. அந்தப் போட்டிகளில் பங்கேற்றால் உலகத் தர வரிசைப் பட்டியலில் முன்னேற முடியாது என்பதுதான் காரணமாம். இந்திய அரசின் பல்வேறு சலுகைகள், நிதி ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டிருக்கும் முன்னணி வீரர்களே இப்படிப் பங்கேற்காதது பெரும் அதிருப்தியை உண்டு செய்துள்ளது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில், “அங்கீகரிக்கப்பட்ட அனைத்து நட்சத்திர வீரர்களும்,தேவைப்படும் நேரத்தில் உடனடியாக எந்தக் காரணமும் சொல்லாமல் இந்தியாவிற்காகப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்” என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால், இந்திய டென்னிஸ் சங்கமோ, “தர வரிசைப் பட்டியலும் மிக முக்கியம். அப்போதுதான் சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ள முடியும்” என்று பதில் கூறியுள்ளது.
2008-ம் ஆண்டு சீனாவில் நடந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் தனி நபர் பிரிவில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவை ஞாபகம் இருக்கிறதா? சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் (ISSF)வீரர்கள் கமிட்டித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நிர்வாகக் குழு உறுப்பினராகவும் ஆக்கப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் நபர் பிந்த்ரா தான். மகிழ்ச்சியான செய்தி தானே?!
"Playing is my way' என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாறை சச்சின் டெண்டுல்கர் எழுதியுள்ளார். அதன் முதல் பிரதியை தனது தாயாரிடம் கொடுத்து ஆசி பெற்றுள்ளார் டெண்டுல்கர். ஈன்ற பொழுதினும் பெரிதுவந்த தாயார், மகிழ்ச்சியுடன் ஆசியளித்துள்ளார். பெற்றோரின் ஆசிகளை விடப் பெரிய சந்தோஷம் எதுவும் இருக்கிறதா என்ன?
விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது அல்லவா? இந்தோனேஷியாவில் நடந்த கால்பந்துப் போட்டியின் தகுதிச் சுற்றில் ஓர் அணியில் 5 தடவை ‘ஸேம் சைடு கோல்’ அடிக்கப்பட்டது. கால் பந்து ஆட்டங்களில் இது மிகவும் கேவலமாகக் கருதப்படும். அந்தச் சுற்றில் வெற்றி பெற்றால் அரை இறுதியில் மோதப் போகும் அணி பெரிய தாதாக்களின் ‘ஆசி’ பெற்ற அணியாம். தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று, அரை இறுதியில் போய் அவர்களிடம் உதை வாங்குவதை விட, கால் பந்தைத் தங்கள் பக்கமே உதைத்துத் தோற்றுப் போவோம் என்று முடிவெடுத்திருந்திருக்கிறார்கள் போலிருக்கிறது!
தென் கொரியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான ‘பாரா’ ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பெங்களூருவைச் சேர்ந்த ஷரத் கெய்குவாட், நீச்சல் போட்டிகளில் ஆறு பதக்கங்கள் வென்றார். 1986-ம் ஆண்டு ‘தங்க மங்கை’ பி.டி.உஷா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 5 பதக்கங்கள் வென்றதே இதுவரை சாதனையாக இருந்தது. ஷரத் அதனை முறியடித்து ‘தங்க மகன்’ பட்டம் பெறுகிறார். வாழ்த்துவோம் ஷரத்தை!
No comments:
Post a Comment