மாயைக்கு ஆளான ‘நான்’ என்பதன் சம்பந்தத்துக்கே இத்தனை ஆனந்தம் இருக்கிறது என்றால், எதிலும் சம்பந்தப்படாமல் பூரண ஞானமாக இருக்கின்ற அந்த வெறும் ‘நான்’ எத்தனை ஆனந்தமயமாக இருக்கும்! வெல்லம் போட்டால் கசப்பு பாகற்காக் கறியிலும் சிறிது தித்திப்பு இருப்பதை உணர்கிறோம். வெல்லத்தின் சம்பந்தத்துக்கே தித்திப்பு இருப்பதால், அசல் வெல்லம் தித்திப்பு மட்டுமே என்பதில் சந்தேகம் என்ன!
கசப்பான துக்க உலகத்தின் ‘நான்’ என்பதன் மாயக் கிரணங்கள் சம்பந்தப்படுகிறபோதே அதில் தித்திப்பு ஆனந்தத்தைப் பெறுகிறோம் என்றால், அந்த ‘நான்’ மட்டுமே ஸ்வச்சமாக நிற்கின்றபோது எத்தனை தித்திப்பாக, ஆனந்த மயமாக இருக்க வேண்டும்?
சிறிய பொத்தல்கள் கொண்ட ஒரு சட்டியால் ஒரு தீபத்தை மூடிவைத்தால் துவாரங்கள் வழியாக மெல்லிய ஒளிக்கிரணங்கள் வெளிவரும். மாயையால் மூடப்பட்ட ஆத்ம தீபத்திலும் இந்திரிய துவாரங்கள் வழியாகக் கொஞ்சம் கொஞ்சம் ஆனந்த ஒளியைப் பார்க்கிறோம். மாயச்சட்டியை உடைத்துவிட்டால் ஆனந்த ஜோதிர்மயமாகவே ஆகிவிடலாம். துவாரங்களின் அளவைப் பொறுத்து பல்வேறு அளவுகளில் ஒளி வெளிவந்தாலும் உள்ளேயிருப்பது ஏகஜோதி தான். நாம் மாயச் சட்டியை உடைத்துவிட்டால் உலகத்தில் பார்க்கும் வித்தியாசங்கள் எல்லாம் மறைந்து எல்லாம் ஒன்றான ஆனந்தரூபமாகவே தெரியும்.
No comments:
Post a Comment