Search This Blog

Friday, August 01, 2014

இஷாந்த் ஷர்மா, முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்குமார், அஜிங்கியா ரஹானே

கிரிக்கெட்டின் தாயகமான லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி, 28 ஆண்டுகளுக்குப் பின் பெற்ற டெஸ்ட் வெற்றி, நிச்சயம் இந்திய அணியின் அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சி!

சச்சின், கங்குலி, ராகுல் டிராவிட், வீரேந்திர ஷேவாக்... என அசுர ஜாம்பவான்கள் இல்லாமல், அவர்கள் இருந்தபோதுகூட சாத்தியமாகாத வெற்றி இப்போது நம் வசம்.

இப்போதைய இந்திய அணியில் நிறைய மாற்றங்கள். முன்பெல்லாம் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வீரர்களே, டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவார்கள். ஆனால், 20/20, ஐ.பி.எல் போட்டிகள் அதிகரித்த பிறகு, நிதானித்து ஆடும் திறன் பல வீரர்களிடம் குறைய, டெஸ்ட் போட்டிகளுக்கு என்று பிரத்யேக வீரர்களைத் தயார்படுத்த வேண்டிய சூழ்நிலை. டெஸ்ட் கிரிக்கெட்டில் தேர்ச்சி காட்டும் வீரர்கள்தான், பின்னாட்களில் கிளாசிக் அந்தஸ்து பெறுவார்கள். அப்படி, இப்போதைய அணியில் எதிர்கால நம்பிக்கைகளாக ஜொலிக்கிறார்கள் இஷாந்த் ஷர்மா, முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்குமார், அஜிங்கியா ரஹானே ஆகிய ஐவர்.

பௌன்சர் பாய்!

அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானின் இடத்தை யார் நிரப்புவது என்பது தீராச் சிக்கலாக இருந்தது. அந்தக் குறையைத் தீர்த்து வெளிநாட்டு மைதானத்தில் வேகப்பந்து வீச்சை முன்னின்று நடத்தி அசத்தி இருக்கிறார் இஷாந்த் ஷர்மா. கடந்த காலத் தோல்விகளில் இருந்து நிறையவே பாடம் கற்றிருக்கும் இஷாந்த், இந்த முறை டெக்னிக்கலாகப் பந்து வீசி மிரட்டினார். இந்தியத் தொடருக்கு முன் விளையாடிய ஆஷஸ் தொடரில் பௌன்சர்களால் அடிவாங்கி விக்கெட்களைக் கோட்டைவிட்டது இங்கிலாந்து அணி. அந்த வியூகத்தை அப்படியே பிடித்துக்கொண்டார் இஷாந்த். கை மேல் பலனாக ஏழு விக்கெட்களை அள்ளி, வெற்றி நாயகனானார். இனி மற்ற அணிகள் இஷாந்தைச் சமாளிக்க பிரத்யேக வியூகம் வகுக்க வேண்டும்!

 

பலமான அஸ்திவாரம்!

'அதிரடிக்கு மட்டுமே லாயக்கு. நிலைத்து நின்று ஆடுவது இல்லை!’ என்ற தன் மீதான நெகட்டிவ் விமர்சனத்தை இரண்டே போட்டிகளில் மாற்றிவிட்டார் முரளி விஜய். தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் இருந்து புறக்கணிக்கப்பட்ட முரளி விஜய், தன்னை ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனாக மாற்றிக்கொண்டார். களத்தில் நீண்ட நேரம் தாக்குப்பிடிப்பதற்காக ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வரும் பந்துகளை அடிக்காமல் விடும் பயிற்சியில் கவனம் செலுத்தினார். ஸ்டம்ப்புகளை நோக்கி வரும் பந்துகளை மட்டும் எதிர்கொண்டால், களத்தில் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கலாம் என்ற நுணுக்கம் அவரை இப்போது வெற்றிகரமான டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆக்கியிருக்கிறது. வி.வி.எஸ். லக்ஷ்மணின் இடத்தை நிரப்புவதற்கான நம்பிக்கை அளிக்கிறார். ஓப்பனிங் இறங்கி புதிய பந்துகளை நம்பிக்கையாக எதிர்கொள்வது, கூடுதல் ப்ளஸ்!

நம்பர் 1 ஆல் ரவுண்டர்!

உலகின் சிறந்த ஆல் ரவுண்டர்கள் வரிசையில், முதல் இடத்தில் இருப்பவர் ரவீந்திர ஜடேஜா. 100 ஒருநாள் போட்டிகளில் ஆடிய ஜடேஜா, டெஸ்ட் போட்டிகளில் இன்னும் கத்துக்குட்டிதான். இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியிருப்பவர், இப்போதுதான் தனது முதல் டெஸ்ட் அரை சதத்தை விளாசி இருக்கிறார். அதுவும் போட்டியை ஜெயிக்கக் காரணமான அரை சதம். இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சுக்குச் சாதகமாக ஆடுகளம் துடிப்புடன் இருந்தபோது, 57 பந்துகளில் அவர் விளாசிய 68 ரன்களே இந்திய அணிக்கு வெற்றிக்கான வியூகங்களை வகுக்கும் நம்பிக்கை அளித்தன. பந்துவீச்சிலும் எதிர்பாராத தருணத்தில், திடமான பார்ட்னர்ஷிப்பைக் குலைக்கும் திறனை கைவரப் பெற்றவர். இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்தி, இந்திய அணியின் வெற்றிக்கணக்கைத் தொடக்கியவரும் இவரே. பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் கலக்கும் ஜடேஜா, கொஞ்சம் மெனக்கெட்டால் கங்குலியின் இடத்தை எட்டிப் பிடிக்கலாம்!

சூப்பர் ஸ்விங்கர்!

காற்றில் திசை மாறி சரியாக ஸ்டம்ப்புக்குள் திரும்பும் ஸ்விங் பந்துகளை இந்திய அணியில் வீச யாருமே இல்லை என்ற அவப்பெயரை, அழிக்க முயல்கிறார் புவனேஷ்குமார். வேகமான ஓட்டம், கொஞ்சம் ஹை ஜம்ப், பலமான வீச்சுத் திறன், வேகம் மற்றும் பௌன்ஸ் என ஷான் பொல்லக்கின் ஸ்டைலில் பந்து வீசுவது புவனேஷ் குமாரின் பலம். இவருடைய அனைத்துப் பந்துகளுமே ஸ்டம்ப்புகளைக் குறிவைத்து வீசப்படுபவை. இதனால் அவரது பந்துகளையுமே பேட்ஸ்மேன் தடுத்தோ அல்லது அடித்தோ ஆடியாகவேண்டும். அதுதான் அவருக்கு விக்கெட்களைக் குவிக்கிறது. அதே சமயம் கடைசி பேட்ஸ்மேனாக களம் இறங்கி, முதல் இரண்டு டெஸ்ட்களின் நான்கு இன்னிங்ஸ்களில் மூன்று அரை சதங்கள் குவித்திருக்கிறார், 'பந்து வீச்சாளர்’ புவனேஷ்குமார். இரண்டாவது டெஸ்ட் வரை கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ரன்களைவிட புவனேஷ்குமார் குவித்த ரன்கள் அதிகம்!

ஐந்தாவது தூண்!

ஐந்தாவது பேட்ஸ்மேனாகக் களம் இறங்கும் ரஹானே, இப்போது இந்திய டெஸ்ட் அணியின் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேன். லார்ட்ஸ் மைதானத்தில் நிதானமாகவும் அதே சமயம் மிகத் துல்லியமான ஷாட்கள் மூலமாகவும் அவர் அடித்த சதம், அவருடைய பொறுமையையும், எத்தகைய பந்துவீச்சையும் சமாளித்து ஆடும் திறனையும் வெளிப்படுத்தியது. டெஸ்ட் போட்டிகளில் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா என யாராலும் நிரப்ப முடியாத  ஐந்தாவது பேட்ஸ்மேனின் இடத்தைக் கச்சிதமாக நிரப்பிஇருக்கிறார் ரஹானே. டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது அல்லது ஆறாவது பேட்ஸ்மேனாகக் களம் இறங்கும்போது பெரும்பாலும் புதிய பந்து வீசப்படும். அதற்கு மற்ற பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள். ஆனால் ரஹானே, உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடிவருவதால், இந்த ஐந்தாவது இடம் அவருக்குப் பிரச்னையாக இல்லை. ராகுல் டிராவிட்டின் உறுதியும் அவரைவிட கொஞ்சம் அதிக அதிரடியும் காட்டுபவராக உருவாகிவருகிறார் ரஹானே!
எந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இல்லாத சமயம், சாதனை வெற்றி மூலம் முத்திரை பதித்திருக்கிறது இந்திய இளம் அணி. வெற்றி ஓட்டத்தைத் தக்கவைத்தால், உலகின் எந்த அணிக்கும் சவால்விடக்கூடிய அணியாக இது உருவாகும்

 சார்லஸ்



3 comments:

  1. சிறப்பான அலசல்... கட்டுரை...

    ReplyDelete
  2. வணக்கம்

    நல்ல திறனாய்வு.. பகிர்வுக்கு நன்றி
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அலசல் அருமை! அதற்குள் கண்பட்டுவிட்டது! மூன்றாவது டெஸ்டி ல் செம அடி வாங்கி இருக்கிறது இந்தியா!

    ReplyDelete