''அரசியலுக்கு
வர்றதா இருந்தா நிச்சயம் வருவேன். அப்படி நான் அரசியலுக்கு வந்தா சும்மா
அறிக்கை விடுறது, பேசுறது... இதெல்லாம் பிடிக்காது. இறங்கின முதல் நாளே
முழு வேகத்துல இறங்கணும். அப்படி இறங்கி நின்னு வேலை பார்க்கப்
பிரியப்படுறவன் நான்’ - தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை தொடங்குவதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு முன் விஜயகாந்த் தனக்குத்தானே போட்டுக்கொண்ட சபதம்
இது. இதோ... அவர் கட்சி தொடங்கி 10-வது ஆண்டு தொடங்கவிருக்கிறது. சபதம்
அப்படியேதான் இருக்கிறது. ஆனால் 'கடமைக்கே’ என்று அறிக்கை மட்டுமே விட்டு
கட்சி நடத்தியதால், 10-வது ஆண்டின் தொடக்கத்திலேயே கட்சி
தேய்ந்துகொண்டிருக்கிறது!
2005-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி, அரசியல் கட்சித்
தலைவராக அரங்கத்துக்கு வந்தார் விஜயகாந்த். அதற்கு முந்தைய 30 ஆண்டு காலம்
அரிதாரம் பூசி, பல்வேறு அவதாரங்களை தமிழ் சினிமாவில் காட்டி, வாங்கிய
பேரும் புகழும் அவர் கட்சி ஆரம்பித்தபோது கை கொடுத்தது. ஏதோ ஒரு கட்சியில்
இருந்து பிரிந்துவந்து இந்தக் கட்சியை விஜயகாந்த் தொடங்கவில்லை. யாரோ
ஆரம்பித்து வளர்த்து எடுத்த கட்சியில் இணைந்து, அதனை அவர் தன்
வசப்படுத்திவிடவும் இல்லை. அவரே ஆரம்பித்த கட்சி இது. அந்த வகையில்
சுயம்புவான கட்சி இது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, கருப்பையா மூப்பனார்...
ஆகிய மூவருடனும் நெருக்கம் பாராட்டியும், தமிழ், தமிழர் விவகாரங்களில்
கருத்துச் சொல்லியும் தனது அடையாளங்களைத் தொடர்ந்து வெளிச்சம் போட்டுக்
காட்டி வந்தவர்தான் விஜயகாந்த். அதே சமயம் எந்தக் கட்சியிலும் சேராத
ரஜினிகாந்துக்குத் தரப்பட்ட அதிகப்படியான முக்கியத்துவம், விஜயகாந்த்தை
யோசிக்கவைத்தது. அதுவே தனது ரசிகர் மன்றங்களுக்கு என பிரத்யேகக் கொடியை
அறிமுகப்படுத்தியாகவேண்டிய ஆசைக்கு அடித்தளம் அமைத்தது.
விழுப்புரத்துக்கு ஒரு திருமணம் நடத்திவைக்கப் போனார் விஜயகாந்த்.
சென்னையில் இருந்து விழுப்புரம் வரை சுமார் 220 இடங்களில், கொடி ஏற்றிவைக்க
கம்பங்கள் தயாராக இருந்தன. '150 கி.மீ தூரத்துக்குள் இத்தனை ஆயிரம்
ரசிகர்களா...’ என்று கணக்குப்போட்ட விஜயகாந்த், அடுத்த ஐந்து ஆண்டுகளில்
கட்சிக்கு அச்சாரம் போட்டார். தே.மு.தி.க-வைத் தொடங்கும்போது தமிழகத்தில்
அ.தி.மு.க ஆட்சி. அதுவும் ஆட்சி முடியும் கட்டம். 2006-ல் தி.மு.க ஆட்சி
மலர்ந்துவிட்டது. எந்த கருணாநிதியை தன் நெஞ்சில் தாங்கி விஜயகாந்த்
வளர்ந்தாரோ, அதே கருணாநிதியைக் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்யவேண்டிய
நிர்பந்தம்.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழ்த் திரையுலகம் சார்பில் கருணாநிதிக்கு
திரையுலக பொன்விழாவை கடற்கரையில் நடத்திக்காட்டிய விஜயகாந்த், தன்னை
சிவந்த கண்களோடு எதிர்ப்பார் என்று கருணாநிதியும் கற்பனை செய்யவில்லை.
விஜயகாந்த் என்றோ, தே.மு.தி.க என்றோ குறிப்பிடாமல் 'நடிகர் கட்சி’ என்றே
முரசொலியும் கருணாநிதியும் கொச்சைப்படுத்தினார்கள். எம்.ஜி.ஆரையுமே ஒரு
காலகட்டம் வரை அப்படித்தானே அழைத்தார்கள்.நடிகர் கட்சி என்றபோது, 'நடிக்க முயன்று நடிப்பு வராமல் தோற்றுப்போன
காகிதப் பூ கதாநாயகன் அல்ல நான்’ என்று கருணாநிதியை விமர்சித்தார்
விஜயகாந்த். 'பகுதிநேர அரசியல்வாதி’ என்று அழைக்கப்பட்டார். '24 மணி
நேரமும் கருணாநிதி அரசியல் செய்கிறார் என்றால், இத்தனை படங்களுக்கு எப்படி
கதை-வசனம் எழுதினார்?’ என்று கேட்டார் விஜயகாந்த். ஆனாலும், விஜயகாந்தை
தலைவராகவோ, தே.மு.தி.க-வை ஒரு கட்சியாகவோ மதிக்கவே இல்லை கருணாநிதியும்
தி.மு.க-வும்.
தி.மு.க ஒருவரைக் கொச்சைப்படுத்துகிறது என்றால், அ.தி.மு.க அவரை
அரவணைக்கும். அந்த விதியும் விஜயகாந்தைப் பொறுத்தவரை உல்ட்டா ஆனது.
2006-2009-ம் ஆண்டு காலகட்டங்களில் பெரும்பாலும் போயஸ் கார்டனுக்குள்
ஜெயலலிதா முடங்கியே கிடந்தார். 'கறுப்பு எம்.ஜி.ஆர்’ என்று விஜயகாந்த்
சுற்றிச்சுழன்று வந்தார். கிராமப்புற எம்.ஜி.ஆர் ரசிகர்கள், இவர் பக்கம்
லேசாகச் சாயத் தொடங்கினார்கள். இடைத்தேர்தல்களை ஜெயலலிதா புறக்கணிக்க,
விஜயகாந்த் அதில் கணிசமான வாக்குகளை வாங்கி முன்னேறிக்கொண்டிருந்தார்.
தி.மு.க-வுக்கு மாற்று தே.மு.தி.க-வாக மாறலாம் என்ற நிலைமை நெருங்க
ஆரம்பிக்கும்போதுதான், 'குடிகாரர்’ என்ற அஸ்திரத்தை அம்மா ஏவினார்.
'இவருக்கு எப்படித் தெரியும்? பக்கத்துல உட்கார்ந்து ஊத்திக் கொடுத்தாரா?’
என்று விஜயகாந்த் கேட்ட கேள்வி, அவரது துணிச்சலின் அடையாளம். அடுத்த பதில்
ஜெயலலிதாவிடம் இருந்து வரவே இல்லை. அ.தி.மு.க மேடைகளில் விஜயகாந்த்
விமர்சனங்கள் ஆரம்பமாகின.பாலஸ்தீனத்தை இஸ்ரேல் அங்கீகரிக்கலாம்; தமிழீழத்துக்கு ராஜபக்ஷே தலை
ஆட்டலாம்; ஆனால், விடுதலைச்சிறுத்தைகளை பா.ம.க. ஏற்காது. இருப்பினும்
விஜயகாந்த் விஷயத்தில் தொல்.திருமாவளவனும் கோ.க.மணியும் கைகோத்து, வட
மாவட்டங்களில் தே.மு.தி.க-வின் பாய்ச்சல் பொறுக்கமுடியாமல் பரிதவித்து
அறிக்கைவிட்டார்கள். இப்படி எல்லாக் கட்சிகளும் சேர்ந்து எதிர்க்கும்
கட்சியாக தே.மு.தி.க-வை வளர்த்தெடுத்த பெருமை விஜயகாந்த்துக்கு மட்டுமே
உண்டு!''தமிழ்நாட்டில் எனது முகத்தைப் பார்க்க லட்சோபலட்சம் மக்கள் இன்றைக்கும்
ஆர்வமாக உள்ளனர் என்பதே எனக்குக் கிடைத்த மாபெரும் சொத்து. பணம், பிரியாணி
பொட்டலம், பான வகைகள்... என பல வகைகளில் செலவழித்தும், மக்கள், சிலரைக்
கண்டால் எரிச்சல் அடைகிறார்கள். அந்த நிலை எனக்கு இல்லை'' என்று விஜயகாந்த்
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு 2009-2011 காலகட்டம் அவரை உச்சத்தில்
ஏற்றியது.
'குடிகாரர்’ என்று கொச்சைப்படுத்தப்பட்ட விஜயகாந்த்துக்காக, சட்டமன்றத்
தேர்தல் சமயம் இரண்டு மாதங்கள் காத்திருந்து 41 தொகுதிகளைத்
தூக்கிக்கொடுத்தார் ஜெயலலிதா. 'நடிகருக்காக’ முரசொலியில் வெளிப்படையாக
அறிவிப்புகளைக் கொடுத்தார் கருணாநிதி. பகுதி நேர அரசியல்வாதியான
விஜயகாந்தைச் சந்திக்க மு.க.ஸ்டாலின் காத்திருந்தார். 'தி.மு.க கூட்டணிக்கு
வாருங்கள்’ என்று திருமாவளவன் தாம்பூலம் வைத்தார். நாடாளுமன்றத் தேர்தலில்
விஜயகாந்த் சேர்ந்த பா.ஜ.க கூட்டணியை விட்டுவிடக் கூடாது என்று
பா.ம.க-வும் ஓடிவந்து ஒட்டிக்கொண்டது. உதாசீனப்படுத்தியவர்கள் அனைவரும்
உறவு கொண்டாடத் துடிக்கும் அளவுக்கு அரசியலில் பிரமிப்பான வளர்ச்சி
அடைந்தார் விஜயகாந்த்!2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 8.5 சதவிகித வாக்குகளைத் தனித்துப்
பெற்றவர், 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 11 சதவிகித வாக்குகளை
அள்ளினார். தி.மு.க., அ.தி.மு.க. தயவு இல்லாமல் தனிப்பட்ட ஒரு கட்சி
சட்டமன்றத் தேர்தலில் 8 சதவிகித வாக்குகளைத் தாண்டுவது தே.மு.தி.க-வுக்கு
மட்டுமே வசப்பட்டது. இவை அனைத்தையும்விட, தமிழ்நாடு சட்டமன்ற
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தேடி வந்தது. ஆனால், அந்த மகுடம்
சூட்டப்பட்டதைவிட, 60 ஆண்டுகள் பாரம்பர்யமிக்க, ஐந்து முறை ஆட்சியில்
இருந்த தி.மு.க பின்னுக்குத் தள்ளப்பட்டு தே.மு.தி.க முன்னுக்கு
வந்திருந்தது. அதுதான் சாதனை!ஆனால், அந்தச் சாதனையைக் கொண்டாட முடியாத அளவுக்கு உடனே சரியத் தொடங்கியதே,
தே.மு.தி.க எதிர்கொண்ட சிக்கல். தெய்வத்தோடும் மக்களோடும் கூட்டணி அமைத்து
அடைந்த புகழையும், அ.தி.மு.க-வுடன் கைகோத்துப் பெற்ற வெற்றியையும் ஓரிரு
மாதங்கள்கூட விஜயகாந்தால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. சட்டமன்றத்தில்
அவர் முகத்தைப் பார்க்கவே, ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை. அம்மாவுக்குப்
பிடிக்காவிட்டால் ஆண்டவனையே எதிர்க்கக்கூடிய அ.தி.மு.க-வினர், இவரைப்
பார்த்தாலே கூச்சல் எழுப்பியது ஜனநாயக ஒழுங்கீனம். ஆனால், அதற்காக சபைக்கே
வராமல் விஜயகாந்த் 'பாய்காட்’ செய்தது ஜனநாயகத்தையும் மக்களையும்
அவமானப்படுத்தியதற்குச் சமம்.எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு என்பது அரசு வாகனம், மூவர்ணக் கொடி,
அவையில் முதலாவது இருக்கை... என்பன மட்டுமல்ல, மக்கள் மன்றத்தில்
எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுவதும்கூட! அப்படியாவது விஜயகாந்த்
இயங்கினாரா? எதிர்க்கட்சி அந்தஸ்தே இல்லாத தி.மு.க-தான், வெளியேற்றப்பட்ட
தே.மு.தி.க- வினருக்கும் சேர்த்து 'ஜனநாயகம் படும்பாடு’ என்ற பேச்சுக்
கச்சேரியை நடத்தியாக வேண்டும் என்றால், 'எதிர்க்கட்சி அந்தஸ்துடன்’
தே.மு.தி.க என்ற கட்சி எதற்கு? இத்தனை எம்.எல்.ஏ-க்கள் எதற்கு? ஆட்சிக்கு
எதிராக எந்தப் போராட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்துவதும் இல்லை;
விஜயகாந்த் பங்கேற்பதும் இல்லை. நிருபர்கள் எந்தக் கேள்வியைக் கேட்டாலும்,
'என்கிட்டதான் கேட்பீங்களா? அந்தம்மாகிட்ட போயிக் கேளுங்கய்யா. நான்தான்
இளிச்சவாயனா?’ என்று கேட்கிறார் விஜயகாந்த். அதாவது நானும் ஜெயலலிதாவைப்போல
கேள்விகளுக்கு அப்பாற்பட்டவன் என்பது அவரது எண்ணம்.
இதே பந்தாவை கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்களிடம் காட்டியதால்தான்
ஒவ்வொருவராக கம்பி நீட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இத்தனை எம்.எல்.ஏ-க்கள்
விலகி நிற்பதும், அவர்களை இத்தனை மாதங்கள் கடந்த பிறகும் விலக்காமல்
வைத்திருப்பதும், விஜயகாந்த் பலவீனத்தின் உதாரணங்கள். தன்னைத் தவிர
மற்றவர்கள் தேவை இல்லை என்பது அவரது மனோபாவமாக இருக்குமானால், அவரது இத்தனை
ஆண்டு உழைப்பும் வீணாகும் நாள் தூரத்தில் இல்லை!
''நான் சினிமாவில் இருந்து வந்தவன். ஒரு படம்
ஜெயிக்கும், அடுத்த படம் அடிவாங்கும். அடுத்தது எதிர்பாராமல் தூக்கிவிடும்.
மாறி மாறி நடந்த இந்தப் போராட்டத்தில் மனம் பழகிவிட்டது'' என்று ஒரு முறை
விஜயகாந்த் சொன்னார். அரசியல் என்பது தனித்தனி சினிமா அல்ல; ஒரே படம்தான்.
ஒவ்வொரு காட்சியிலும் எப்படி ஆக்ஷன் காட்டுகிறோம் என்பதை வைத்தே, அடுத்த
காட்சிக்கு மக்களைத் தக்கவைக்க முடியும். கடந்த மூன்று ஆண்டு காலமாக
விஜயகாந்த் தியேட்டரில் கூட்டம் குறைந்துகொண்டே வருகிறது.
ஆகவே, கேப்டன் உஷார்!
ப.திருமாவேலன்
வணக்கம்
ReplyDeleteஅரசியல் என்பது ஒரு சாக்கடை... உண்மை பொய்யாகலாம் பொய் உண்மையாகலாம்இவர்களுக்கு இவைஎல்லாம் கைவந்த கலை. நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-