லோகம் முழுக்க ஒரு நாடகம்; பகவான் கபட நாடக சூத்திரதாரி என்று மகான்கள்
சொல்கிறார்கள். சர்வ தேசத்திலும் மகாகீர்த்தி வாய்ந்த நாடகாசிரியர்
ஷேக்ஸ்பியர். அவர்கூட ஓர் இடத்தில், ‘லோகம் முழுதுமே ஒரு
நாடக மேடைதான்; எல்லா ஸ்த்ரீ - புருஷர்களும் அதிலே வரும் நடிகர்கள்தான்’
என்று சொல்கிறார்.
ஸ்வாமி நடத்துகிற இந்தப் பெரிய நாடகத்தில் மநுஷ்யனும் ‘நாடகம்’ என்று ஒரு
கலையை உண்டாக்கியிருக்கிறான். அநாதி காலமாக இலக்கியத்தில் இது ஒரு
முக்கியமான
அங்கமாக இருந்து வந்திருக்கிறது. வேதங்களிலே ஆங்காங்கே சம்பாஷணை ரூபத்தில்
இரண்டு பேர் பேசிக் கொள்கிற மாதிரியான மந்திரங்கள் இருக்கின்றன.
ஆராய்ச்சிக்காரர்கள் இதுதான் நாடகக்
கலையின் தோற்றுவாய் (Origin) என்று சொல்கிறார்கள். தமிழிலும் இயல், இசை,
நாடகம் என்று சொல்கிறார்கள். ‘கத்யம்’ (Prose) என்பதை ‘இயல்’,
‘பத்யம்’(Poetry) என்பதை ‘இசை’ என்று சொல்லி, ‘நாடகம்’ என்பதற்கு மட்டும்
அதே வார்த்தையையே தமிழிலும் வைத்துக் கொண்டிருக்கிறோம். ‘கூத்து’ என்பதே
நாடகத்திற்கான தமிழ் வார்த்தை.
ஸம்ஸ்கிருதத்தில் கவி சிரேஷ்டர்கள் என்று தலை மேல் வைத்துக் கொண்டு
கொண்டாடக்கூடிய காளிதாஸன், பவபூதி காலத்திலிருந்து நாடக இலக்கியம்
மகோன்னதமாக வளர்ந்திருக்கிறது. காளிதாஸன், பவபூதி இருவருமே
கவிகள் (Poets) என்பதைவிடப் பெரிய நாடகாசிரியர்களாக ( Dramatist)
இருந்திருக்கிறார்கள். இன்னும் பாஸன், விசாகதத்தன் முதலான பல பேரும்
நாடகாசிரியர்களாக
இருந்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment