2012-ல் நடந்த இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்துக்கு
முன் இரண்டுக்கு ஒன்று என்ற நிலையில் இங்கிலாந்து முன்னணியில் இருந்தது.
இப்போது
இங்கிலாந்தில் நடந்துவரும் தொடரிலும் அதே நிலைதான். ஒரே வித்தியாசம் 2012
தொடரில் பல இங்கிலாந்து வீரர்கள் அபாரமாக ஆடினர். இந்தத் தொடரில் இந்திய
வீரர்கள்
அதே அபாரத்தை மோசமாக விளையாடுவதில் காட்டி இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என்று ஊர் ஊராய் சென்றடைந்த
தோல்விகளும், கை நழுவிப்போன, ஜெயித்திருக்க வேண்டிய ஆட்டங்களும் தோனியின்
அணித் தலைமையை
கேள்விக்குட்படுத்தின. இந்தத் தொடரின் இரண்டாவது ஆட்டத்தை லார்ட்ஸில்
இந்தியா வென்றபோது, அணியின் ஒருங்கிணைப்பிலும், தோனியின் தலைமையிலும்
நல்லதொரு மாற்றம் நிகழ்ந்திருப்பதா
ஒருவார காலத்துக்கு அனைத்து ஊடகங்களும் முழங்கித் தள்ளின.
லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்து யுகங்கள் ஆகிவிட்டது
போன்ற மாயத்தோற்றத்தை அடுத்த இரண்டு ஆட்டங்களும் ஏற்படுத்தியுள்ளன.
லார்ட்ஸ் ஆட்டத்தில்
தென்பட்ட உத்வேகமும், தோனியின் அதிரடி அணுகுமுறையும் தெரியாமல் நிகழ்ந்த
விபத்தென அடுத்த ஆட்டங்கள் எண்ண வைக்கின்றன.
சௌரவ் கங்குலி தலைமை ஏற்பதற்கு முன் வெளிநாட்டுத் தொடர்களை ஆரம்பிப்பதற்கு
முன்பே இந்தியா தோற்றுவிடும். தொடர் போனாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாய்
தனிமனித சாகஸங்கள்
நிகழ்த்திக் கொண்டால் போதும் என்ற எண்ணத்திலேயே மொத்த அணியும் இயங்கும்.
தோனியின் தலைமை மெல்லமெல்ல அந்த நிலைக்கு இந்திய அணியைத் தள்ளியிருக்கிறது.இரண்டாவது டெஸ்டின் கடைசி இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர்கள் அரை
மணிநேரத்தில் தாமாகவே களமிழந்ததைப் பார்த்த தோனி, அடுத்த ஆட்டங்களில் வந்து
நின்றால்
போதும் என்று எண்ணியிருப்பார் போலும். மூன்றாவது டெஸ்டில் முதல் நாளில்
காலையில் விக்கெட்டுகள் விழாதபோது, முதல் இடைவேளைக்குப் பிறகு டிராவுக்கு
விளையாடினால் போதும்
என்றே தோனியின் தலைமை அமைந்திருந்தது ஆச்சர்யமாய் இருந்தது. இங்கிலாந்து
வீரரா பார்த்து ஆட்டமிழக்கும் வரை தோனி தன் பௌலர களை தட்டாமாலை சுற்றி
ஓவருக்கு ஒருமுறை
மனம் போன போக்கில் மாற்றியது ஒருவகையில் அவருடைய சுவாரஸியத்தைக் காட்டியது.
நான்காவது ஆட்டத்தில் 200-க்கு குறைவாக ரன்களுக்கு 6 விக்கெட் இழந்திருந்த
இங்கிலாந்தை மேலும் அதிரடியா தாக்காமல் இருந்த தோனி தற்காப்பான அணுகுமுறை
கொண்டவராய் என்று பார்த்தால்
அதுவும் இல்லை. மூன்றாம் நாளைத் தாக்குப்பிடித்தால் அடுத்த நாள் வருணபகவான்
கிருபை நிச்சயம் உண்டு என்ற நிலையிலும் அணியின் நலனைவிட மோயின் அலியை
அடித்து துவம்சம் செய்வதே முக்கியம் என்று
ஆட்டத்தை இழந்தார். இந்த இரண்டுங்கெட்டான் நிலையே வெளிநாட்டில் தொடர்
தோல்விகளுக்கு முக்கிய காரணம்.
அணித் தலைமை என்பது பெரும் அழுத்தம் தரக்கூடிய ஒன்று தான். அதனுடன் கூட
விக்கெட் கீப்பிங்கும் சீராகச் செய்ய முடியாதபட்சத்தில், மெய்க்குல்லம்,
சங்ககாரா போல கீப்பிங்கை யாவது
வேறொருவருக்கு விட்டுக்கொடுக்கலாம் தோனி. ஸ்டம்புக்குப் பின்னால் நின்றாலொழிய நான் ஒரு மோசமான ஃபீல்டர் என்று கூறிக்
கொள்வதில் உண்மை இருக்கலாம். அதனால் அணிக்கு எந்தப் பயனும்
இல்லை. முதல் ஸ்லிப்புக்கும் கீப்பருக்கும் இடையே செல்லும் பந்தை விக்கெட்
கீப்பர்தான் பிடிக்க முயல வேண்டும். இந்தத் தொடரில் அத்தகைய கேடுகளை தோனி
வேடிக்கைதான்
பார்க்கிறார்.
சுலபமான ஸ்டம்பிங்குகளை தவறவிட்டுள்ளார். தன்னுடைய மோசமான ஃபார்மின்
பிரதிபலிப்பாகவே ஜடேஜாவை லெக் ஸ்டம்புக்கு வெளியில் போடச்
சொல்லுதல், அஸ்வினுக்கு லாங் ஆன் ஃபீல்டரை வைத்து களம் அமைத்துக்
கொடுத்தல் போன்ற நெகட்டிவ் சூழல்களில் அணியைத் தள்ளுகிறாரோ என்று
தோன்றுகிறது.அறையில் தீட்டிய திட்டங்கள் செயலாக்கம் பெறும்போது கேப்டனுக்கு அதிகம்
வேலையில்லை. அந்தத் திட்டங்கள் தவறாகும்போது அணித் தலைவரின் பங்கு
அவசியமா கிறது. இந்தத் தொடரைப் பொறுத்தமட்டில், அணித் தேர்விலோ, ஃபீல்டிங்
களம் அமைப்பிலோ, பௌலிங் மாற்றங்களிலோ தோனியின் சமயோசிதம் சற்றும்
வெளிப்படவில்லை. எதிரணியின் தவறுகளுக்குக் காத்திருத்தல் மட்டுமே தன்
திட்டம் என்பது போல செயல்பட்டு வருவது கவலைக்குரியது. ஒருநாள் தொடர்களில்
கடைசி நிமிட
சாகஸங்களும், ஐ.பி.எல்.லில் வெளிநாட்டு வீரர்களின் ஆள்பலமும், உள்ளூரில்
முட்டிக்குமேல் எழும்பாத ஆடுகளங்களும் தோனியின் தலைமையை பிரம்மாண்டமாகக்
காட்டக்கூடும்.
உண்மையான உரைகல்லான டெஸ்ட் கிரிக்கெட் டில் இந்தியாவின் எந்த அணித் தலைவரை
விடவும் அதிகமாக வெளிநாட்டில் தோற்றவர் என்பது பெரும் கறை.
இதை தோனி குறைந்த பட்சம் ஆமோதிக்கவாவது செய்வாரா? அடுத்த கேப்டன் என்று
கட்டியம் கூறப்பட்ட விராத் கோலி சுமாராகவாவது இந்தத் தொடரில் ஆடியிருந்தால்
இந்நேரம் தோனியின் தலைமையை
மாற்ற வேண்டி கூச்சல்கள் வானைப் பிளந்திருக்கும். 2012-ஐ போலவே இப்போதும்
சரியான மாற்று இல்லாத ஒரே காரணத்தினால் தோனியின் தலைமை இன்னும் சில காலம்
தொடரக்கூடும். தோனியின் இடம் கிட்டத் தட்ட நிரந்தரம் ஆகிவிட்ட நிலையில்
அவருடைய ‘சித்தம்போக்கு சிவன் போக்கு’ அணுகுமுறை மாற அவரே ஏதாவது
செய்தால்தான் உண்டு.
லலிதாராம்
No comments:
Post a Comment