நான்
இல்லாவிட்டால் என் குடும்பத்தைக் காப்பாற்றுவார் யார் - எதற்குமே
அஞ்சாதவர்கூட இந்தக் கேள்வியைக் கேட்டு மிரண்டுபோவது உண்டு. இன்னும்
சிலருக்கு, தீவிபத்து, வெள்ளம், பொருட்கள் திருடு போவது என ஏதாவது ஓர்
அசம்பாவிதத்தினால் செய்யும் தொழிலில் நஷ்டம் வந்தால், என்ன செய்வது என்கிற
பயம். இதுமாதிரியான அத்தனை பயங்களுக்கும் மனிதன் கண்டுபிடித்த ஓர் எளிய
தீர்வுதான், இன்ஷூரன்ஸ் திட்டங்கள்.
கி.மு 3 மற்றும் 2-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட
காலத்தில் சீன மற்றும் பாபிலோனிய வணிகர்கள் தங்களது வர்த்தகத்தில்
பாதுகாப்புக் குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க, கடன் வாங்குபவரிடம் ஒரு
குறிப்பிட்ட தொகையைச் செலுத்தும் வழக்கம் இருந்திருக்கிறது. பொருட்களைக்
கொண்டு செல்லும்போது பாதி வழியில் திருடு போனாலோ, இயற்கைச் சீற்றத்தால்
அழிந்துபோனாலோ ஏற்படும் இழப்பிலிருந்து மீண்டுவர இந்த ஏற்பாடு மிகவும்
உதவியாக இருந்தது.
14, 15-ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவிலிருந்து உலகம்
முழுக்க வணிகம் செய்ய வர்த்தகர்கள் கிளம்பியபோதுதான் பொருட்களுக்குப்
பாதுகாப்பு தரும் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. ஆனால், 19-ம்
நூற்றாண்டில்தான் தனிநபர்களுக்கான மருத்துவக் காப்பீடு அறிமுகமானது.
தனிநபர்களுக்கு வரும் நோய்களுக்கான இன்ஷூரன்ஸ் வசதி உருவானபோது தான்,
திடீரென ஏற்படும் மருத்துவச் செலவை எப்படி சமாளிப்பது என்கிற பயம்
பலருக்கும் நீங்கத் தொடங்கியது.
இன்றைக்கு மோட்டார் இன்ஷூரன்ஸ் எல்லோருக்கும்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் தானாகவே முன்வந்து ஆயுள்காப்பீட்டு
பாலிசிகளை எடுக்கின்றனர். தொழில் துறை சார்ந்தவர்கள் பொருட்களை
அனுப்பும்போது அதற்கான இன்ஷூரன்ஸை எடுக்காமல் அனுப்புவதே இல்லை என்கிற
அளவுக்கு நிலைமை முன்னேறி இருக்கிறது.
சில பிரபலங்கள் தங்கள் உடல் உறுப்புகளைக் கூட
இன்ஷூரன்ஸ் செய்யும் வழக்கம் வளர்ந்த நாடுகளில் மட்டுமல்ல, நம் நாட்டிலும்
உருவாகி இருக்கிறது. பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்கம் தன்
கால்களையும், பாடகரான ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டன் தனது குரலையும் இன்ஷூரன்ஸ்
செய்தனர். நம்மூர் சச்சினும் தோனியும் இதுமாதிரி இன்ஷூரன்ஸ் செய்து
வைத்திருக்கின்றனர்.
திடீரென வரும் ஆபத்திலிருந்து தப்பிக்க 2000 வருடங்களுக்கு முன்பே மனிதன் சிந்தித்திருக்கிறான் என்பது ஆச்சர்யமான விஷயம்தான்!
ச.ஸ்ரீராம்
No comments:
Post a Comment