‘வெள்ளை
அரிசியை ஒதுக்குங்கள், பிரவுன் அரிசிதான் பெஸ்ட்’ - ஆரோக்கிய
விரும்பிகளின் அட்வைஸ் இது. பிரவுன் (பழுப்பு) அரிசியா? வெள்ளை அரிசியா
எதைச் சாப்பிடுவது?
பிரவுன் அரிசியும் வெள்ளை அரிசியும் வெவ்வேறு ரகமோ,
வெவ்வேறு இடங்களில் விளைபவையோ இல்லை. பிரவுன் அரிசி என்பது தவிடு நீக்காத
அரிசி. நாம் தற்போது சாப்பிடும் அரிசி, தவிடு நீக்கப்பட்டு, வெள்ளை
நிறத்துக்காக, நன்றாக பாலீஷ் செய்யப்பட்டது. பிரவுன் அரிசி எனப்படும் தவிடு
நீக்காத அரிசியில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. அரிசியை பாலீஷ்
செய்யும்போது, இந்தச் சத்துக்கள் நீக்கப்படுகின்றன.
பிரவுன் அரிசி யாருக்கு ஏற்றது?
அனைவருக்குமே ஏற்றது. வெள்ளை அரிசியைக் காட்டிலும் அதிக
நார்ச்சத்து கொண்டது பிரவுன் அரிசி. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள்,
அதிக உடல் உழைப்புள்ள வேலைகளைச் செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள்,
ஜிம்மில் வொர்க் அவுட் செய்பவர்கள் ஆகியோருக்கு மிகவும் நல்லது. இந்த
அரிசியில் செலினியம் அதிகம் இருப்பதால், இதயநோய், கீல்வாதம், புற்றுநோய்
போன்றவற்றை வரவிடாமல் தடுக்கிறது. உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக்
கரைப்பதற்கும், நரம்புமண்டலங்கள் சீராக செயல்படுவதற்கும் மக்னீசியம்
அவசியம். நாள் ஒன்றுக்குத் தேவையான மக்னீசியத்தில் 80 சதவிகிதம் ஒரு கப்
பிரவுன் அரிசியில் கிடைத்துவிடுகிறது.
பிரவுன் அரிசி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாக
ஏற்றும். இந்த அரிசியின் கிளைசமிக் குறியீட்டு எண், வெள்ளை அரிசியைவிடவும்
குறைவு. எனவே, சர்க்கரை நோயாளிகள், ப்ரீ டயாபடீஸ் நிலையில் இருப்பவர்கள்,
உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் வெள்ளை அரிசியைத் தவிர்த்து, பிரவுன்
அரிசியைச் சாப்பிடலாம். குழந்தைகளுக்குச் சிறு வயதில் இருந்தே பிரவுன்
அரிசியைக் கொடுத்துப் பழக்குவது நல்லது. உடலில் வளர்சிதை மாற்றம் சீராக
நடக்கவும், தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவும் பிரவுன் அரிசி வழிவகை
செய்கிறது. செரிமானத்திறன் பிரச்னை உள்ளவர்கள், வயிற்றுப்போக்கால்
அவதிப்படுபவர்கள் பிரவுன் அரிசியைத் தவிர்ப்பது நல்லது.
பிரவுன் அரிசியை எப்படிச் சாப்பிடவேண்டும்?
பிரவுன் அரிசியை வெள்ளை அரிசியைக் காட்டிலும் அதிக
நேரம் வேகவைத்துப் பயன்படுத்த வேண்டும். பிரவுன் அரிசியை சாம்பார் சாதம்,
தயிர் சாதம் போன்ற கலவை சாதங்களுக்குப் பயன்படுத்தலாம். சுவையும் பலனும்
கூடுதலாக இருக்கும்.
பிரவுன் அரிசியை மாவாக அரைத்து, எண்ணெய் சேர்க்காமல்
தோசையாகச் சுட்டு சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். வேகவைத்த அரிசி
சாதத்தை, அப்படியே விழுங்கக் கூடாது. நன்றாக மென்று சாப்பிடவேண்டும்.
வெள்ளை அரிசி யாருக்கு ஏற்றது?
நோயாளிகள், ஜீரணக்கோளாறு உடையவர்கள், பற்கள்
இல்லாததால், மென்று சாப்பிட முடியாமல் அவதிப்படுபவர்கள் போன்றோருக்கு,
வெள்ளை அரிசி ஏற்றது. வெள்ளை அரிசியில் சில சத்துக்கள் குறைவே தவிர,
அனைவரும் பயன்படுத்தலாம்.
பிரவுன் அரிசியும் சிவப்பு அரிசியும் ஒன்றா?
சிவப்பு அரிசியும், பிரவுன் அரிசியும் வேறு வேறு ரகம்.
அனைத்து ரக அரிசியிலும் தவிடு நீக்கப்படாத அரிசியே பிரவுன் அரிசி
என்கிறோம். தவிடு நீக்காத சிவப்பு அரிசியை பிரவுன் -சிவப்பு அரிசி
என்கிறோம். கேரளாவில் தான் சிவப்பு அரிசி அதிகளவு பயன்படுத்துகிறார்கள்.
தமிழகத்தில் பெரிய அளவில் புழக்கத்தில் கிடையாது. பிரவுன் அரிசியை மெஷின்
மூலம் தவிடு நீக்கிவிட்டு மேலும் மேலும் பாலீஷ் செய்யப்பட்டு கடைகளில்
கிடைப்பது தான் நாம் தற்போது உணவாக பயன்படுத்தும் வெள்ளை அரிசி.
- எஸ்.ஷோபனா, உணவியல் நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்
No comments:
Post a Comment