Search This Blog

Friday, February 06, 2015

பன்றிக் காய்ச்சல்...

சில ஆண்டுகளுக்கு முன்பு, உலகையே பீதிக்கு ஆளாக்கிய பன்றிக்காய்ச்சல், இப்போது மீண்டும் தமிழகத்துக்குள் நுழைந்துள்ளது. சென்னையில் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக ஒருவரைக் கண்டறிந்த நிலையில், சென்னையை அடுத்த மறைமலைநகரில் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொஞ்சம் பாதுகாப்பாக இருந்தால், பன்றிக்காய்ச்சலைத் தவிர்க்க முடியும், ஒருவருக்குப் பன்றிக்காய்ச்சல் வந்தாலும் சரிப்படுத்த முடியும்.
 
சாதாரண வைரஸ் காய்ச்சல் மூன்று நாட்களில் சரியாகிவிடும். ஆனால், பன்றிக் காய்ச்சல் மூன்று நாட்களுக்குப் பிறகுதான் தீவிரமாகும். இருமல், தும்மல் அதிகமாக இருக்கும். தலைவலி, தொண்டை வலி, உடல் வலி, கண்களில் எரிச்சல் என்று, பாதிப்புகள் தொடர்ச்சியாக வரும். சிலருக்கு இடைவிடாத வாந்தி, வயிற்றுப்போக்கும் வரலாம். இருமல் அதிகமாகி எந்த மருந்துக்கும் கட்டுப்படாது. இருமலை அலட்சியப்படுத்தினால், நுரையீரலின் தசைகள் ஆரோக்கியத்தை இழந்து, சுருங்க ஆரம்பித்துவிடும்.

இருமல், சளி இருப்பவர்கள் இரண்டு மூன்று முறையாவது சோப் போட்டுக் கை கழுவ வேண்டும். நோய் உள்ளவர்களின் கை, கால், வாய்ப் பகுதிகளை மற்றவர்கள் தொடக் கூடாது. சளி, இருமல் தொடர்ந்து இருந்தால், அதை அலட்சியப்படுத்தாமல், உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பரிசோதனையில் ‘பாசிட்டிவ்’ என்று வந்தால், சிகிச்சைக்காக உடனே அவரைத் தனிமைப்படுத்த வேண்டும்.

காய்ச்சல் வந்தவர்கள் தும்மும்போதும் இருமும்போதும் துணியால் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். கண்ட இடங்களில் எச்சில் துப்புவதும் சளி சிந்துவதும் கூடாது.

வாஷ்பேசினில் எச்சில் துப்பினால், தண்ணீரால் வாஷ்பேசினை நன்கு கழுவிவிட வேண்டும். சளி சிந்திவிட்டு, கிருமிநாசினியைப் பயன்படுத்திக் கைகளைக் கழுவ வேண்டும். பன்றிக்காய்ச்சல் உள்ளவர்கள் வெளி இடங்களுக்குச் செல்லக் கூடாது. கூட்டம் கூடுகிற இடங்களுக்குச் சென்றால், அவரால் மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்பு அதிகம். அதேபோல், நோயாளிகள் உபயோகப்படுத்திய பொருட்களை, மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. குறிப்பாக, நோயாளியின் எச்சில்பட்ட டம்ளர், தட்டு போன்றவற்றை, மற்றவர்கள் தொடக் கூடாது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை, இது எளிதில் தாக்கும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆஸ்துமா, கல்லீரல், நுரையீரல், ரத்த சம்பந்தமான குறைபாடு உள்ளவர்கள், நரம்பியல் கோளாறுகள், சர்க்கரைக் குறைபாடு உள்ளவர்கள், ஹெச்.ஐ.வி. பாதிப்பு உள்ளவர்களுக்கு வர சாத்தியங்கள் அதிகம். அதேபோல், பன்றிக் காய்ச்சல் இருப்பவர் உங்கள் அருகில் இருந்தால், அது உங்களைத் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். கவனம் தேவை!

கருணாநிதி, பொது மற்றும் சர்க்கரை நோய் மருத்துவர்

No comments:

Post a Comment