பொதுவாகவே பணத்தின் ‘டச்’ (ஸ்பரிசம்) வந்துவிட்டால் அதோடு ஒரு காரியத்தில் அநேகக் கெடுதல்களும் வந்துவிடும். பொதுத் தொண்டு செய்யப் புறப்படுகிறவர்கள் பணவிஷயத்தில் ரொம்பவும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். நல்ல ஆதரவு திரவிய ஸஹாயமாகவும் நம் கார்யத்துக்குக் கிடைத்தால் கூட அதனால் Over - enthusiastic ஆகி (அதீத உத்ஸாஹம் அடைந்து), இப்போது இந்தியா கவர்மென்ட் செய்கிற மாதிரி ambitious planning (அதி ஆசைத் திட்டம்) போட்டு நிறைய பணம் ‘கலெக்ட்’ பண்ண ஆரம்பிக்கக் கூடாது. இப்படி ஆரம்பித்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது. இதனாலே பரோபகாரம் என்கிற அன்பு எண்ணத்தையும், அதில் அங்கமாகச் செய்கிற தேவாலய கைங்கர்யங்களின் பக்தி எண்ணத்தையுங்கூட ‘வசூல் எண்ணம்’ முழுங்கிவிடும்.
எப்போது பார்த்தாலும் ரசீது புஸ்தகமும் கையுமாக அலைவதும், ‘பேப்பர்காரர்களைப் பிடித்து அப்பீல் பண்ணலாமா, அட்வர்டைஸ்மென்ட் பிடித்து ஸோவனீர் போடலாமா?’ என்பதே சிந்தையாகத் தவித்துக் கொண்டிருக்கும்படியும் ஆகும். நிறைய பணம் சேர்ந்து அதைக் கையாள வேண்டியிருக்கும் போது நாமே எப்படி மாறிப் போய்விடுவோமோ என்ற பயம் ஸதாவும் இருக்கணும்.
அதுவுமில்லாமல், ரொம்பவும் பணம் சேர்ந்தால் ஊரிலிருப்பவர்களுக்கும் அது ஸரியாகப் பிரயோஜனமாகிறதா என்ற ஸந்தேஹம் எழும்பும். இதோடுகூட, சற்றுமுன் சொன்ன மாதிரி, இஷ்டமில்லாதவனையும் நிர்ப்பந்தப்படுத்தி வாங்குவதும், இப்படி வாங்கி விட்டதால் அப்புறம் அவனிடம் பவ்யப்பட்டு நிற்பதும் நம் பணியையே அசுத்தம் செய்துவிடும். ஆனதால் எந்த நல்ல காரியமானாலும் ‘அதி’யாக அதைக் கொண்டுபோய் விடாமல் அவசியத்தோடு நிறுத்திக்கொண்டு, செட்டும் கட்டும் சிக்கனமுமாகவே அதற்கான வரவு செலவுகளை நிர்வஹிக்க வேண்டும்.
No comments:
Post a Comment