Search This Blog

Sunday, March 08, 2015

கால்குலேட்டர்கள்!

யாரிடமாவது குறிப்பிட்ட இரண்டு எண்களைச் சொல்லி, அவற்றைக் கூட்டச் சொன்னால், மனக்கணக்காகக் கூட்டி, சரியான விடையைச் சொல்லிவிடுவார்கள். ஆனால், ஆறு இலக்கங்கள் கொண்ட ஓர் எண்ணை, 4 இலக்கங்கள் கொண்ட இன்னொரு எண்ணால் பெருக்கச் சொன்னால், திக்குமுக்காடிப் போவார்கள். ஆனால், கையில் ஒரு கால்குலேட்டர் இருந்தால், அரை நொடியில் சரியான விடையைக் கண்டுபிடித்துவிட முடியும்.
 ஆதிகாலத்தில் நுட்பமான கணக்கு அளவுகளை எல்லா சமூகத்து மக்களும் வைத்திருந்தனர். தங்கத்தைக் குந்துமணிக் கணக்கில் அளப்பதில் இருந்து, சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரையிலான நாழிகைக் கணக்குகள் வரை பல கணக்குகளை ஆச்சர்யப்படும் வகையில் கண்டுபிடித்து வைத்திருந்தனர். இந்தக் கணக்குகள் எல்லாமே பிற்காலத்தில் வழக்கொழியத் தொடங்கின. மனித உழைப்புக்கு மாற்றாக இயந்திரங்கள் தோன்றியபின்பு, கணக்குகளைப் போட மனிதன் கால்குலேட்டர்களைக் கண்டுபிடித்தான்.

இரண்டு பெரிய எண்களைக் கூட்டி, கழித்து, வகுப்பது தொடங்கி, வட்டி விகிதங்களைக் கண்டறிவது வரை பலவகையான கணக்குகளை கண்மூடித் திறப்பதற்குள் செய்துமுடிக்க கால்குலேட்டர்கள் பேருதவியாக இருக்கின்றன.


முதலில், பேட்டரியில் இயங்கும் கால்குலேட்டரை மனிதன் உருவாக்கினான். இன்றைக்கு சூரிய ஒளியில் இயங்கும் கால்குலேட்டர்கள்கூட வந்துவிட்டன. தனியொரு கருவியாக இருந்தாலும், இன்றைக்கு எல்லா செல்போனிலும் இடம்பெற்றுவிட்டன இந்த கால்குலேட்டர்கள்.

இன்று, கடன் வாங்கினால் எவ்வளவு இஎம்ஐ கட்ட வேண்டும் என்பது தொடங்கி, மாத குடும்ப பட்ஜெட் போடுவதுவரை, அனைத்தையுமே துல்லியமாகச் செய்துமுடிக்க அதிநவீன கால்குலேட்டர்கள் வந்துவிட்டன. மனிதன் இன்றைய காலவளர்ச்சிக்கேற்ப நிறைய யோசிக்கவேண்டி இருப்பதால், கணக்கு வழக்கு களை கணநேரத்தில் செய்துமுடிக்க இந்த கால்குலேட்டர் கள் அவசியம் என்றாகிவிட்டன.

இதனால் ஏற்பட்ட பாதகமான அம்சம் என்னவெனில், மனிதன் மனக்கணக்குப் போடும் பழக்கத்தை அறவே மறந்துவிட்டான். ஒரு சிறிய கணக்கைப் போடக்கூட கால்குலேட்டர் இருந்தால்தான் முடியும் என்கிற அளவுக்கு மனிதமூளை கால்குலேட்டருக்கு அடிமை யாகிக் கிடக்கிறது. என்றாலும், கால்குலேட்டர் என்கிற இயந்திரம் கண்டுபிடிக்கப்படாமல் போயிருந்தால், நம் வாழ்க்கையில் கணிசமான நேரம் கணக்குப் போடுவதிலேயே கழிந்திருக்கும்!


No comments:

Post a Comment