Search This Blog

Friday, September 19, 2014

வாய்ப் புண்


உலகத்தில் ஐந்தில் ஒருவர் வாய்ப் புண்ணால் அவதிப்படுகிறார் என்கிறது புள்ளிவிவரம். aphthous stomatitis என மருத்துவரீதியாகக் குறிக்கப்படும் வாய்ப் புண் பற்றிய சந்தேகங்களுக்குப் பதில் காண்போமா?

வாய்ப்புண் ஏற்படக் காரணம் என்ன?

வாயின் உட்புறம் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் உள்ள திசுத் தோல் பாதிப்படைந்து காயம் ஏற்படந்தைத்தான் வாய்ப்புண் என்கிறோம். உதடு, நாக்கு, கன்னங்களின் உட்புறம் மற்றும் தொண்டைப் பகுதியில் வாய்ப்புண் வரலாம். இதனால், ஏற்படும் வலி காரணமாக பேசவோ, உணவு உட்கொள்ளவோ சிரமமாக இ்ருக்கும்.

பித்தம் அதிகரித்தால், வாய்ப்புண் வரும் என்கிறது சித்த மருத்துவம். ஜீரணக் கோளாறு, உடல் சூடு, மன அழுத்தம், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் சி, பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற உயிர்ச்சத்துக் குறைவு, உணவு மற்றும் மருந்துகள் ஒவ்வாமை, புகை, மதுப்பழக்கம், ஹார்மோன் மாறுபாடு, பற்கள் மற்றும் வாய் சுத்தமின்மை, ஹெர்ப்பெஸ் (Herpes) வைரஸ் மற்றும் பாரம்பரியம் காரணமாகவும் வாய்ப்புண் வரலாம். வாய்ப்புண்கள் 7 முதல் 10 நாட்களில் குணமாகிவிடும். நீண்ட நாட்கள் ஆறாத புண்கள், புற்றுநோயாகவும் மாறலாம்.

வாய்ப்புண் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

  மலச்சிக்கல் மற்றும் ஜீரணக் கோளாறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  உடல் குளிர்ச்சியாக இருக்க, அதிக அளவு தண்ணீர், இளநீர் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.  
  பற்கள் மற்றும் வாயினை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.
  மன அழுத்தம் ஏற்படாதவாறு தியானம் மற்றும் யோகா் பயிற்சி செய்ய வேண்டும்.

வாய்ப்புண் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
  நெல்லி இலைகளை வேகவைத்த நீரில் அடிக்கடி வாய் கொப்பளித்து வர, வாய்ப்புண் ஆறும்.    
  கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த திரிபலா சூரணத்தினால் வாய் கொப்பளிக்க புண் ஆறும். இதனை உள்ளுக்கும் சாப்பிட்டு வரலாம்.
  மணத்தக்காளி இலையினை வாயில் போட்டு மென்று சிறிது நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கலாம். முற்றின தேங்காயையும் உபயோகிக்கலாம்.
  பாலில் சிறிது தேன் கலந்து அருந்த, வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.
  வாய்ப்புண் மீது தேன் அல்லது பசு வெண்ணெய் தடவிவர, நல்ல பலன் கிடைக்கும்.  
  மாசிக்காயை பாலில் அரைத்து தேனில் குழைத்துத் தடவலாம்.  
  பச்சரிசி, பயத்தம் பருப்பு, 1 ஸ்பூன் வெந்தயம், உரித்த 1 முழுப்
 பூண்டு இவற்றை குக்கரில் வைத்து வெந்தவுடன், கெட்டியான தேங்காய்ப் பால் கலந்து சாப்பிட்டால் சரியாகும்.
  மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரையை தேங்காய் சேர்த்து பொரியலாகச் செய்து சாப்பிடலாம்.  
  மணத்தக்காளிக் கீரை, வெங்காயம், தக்காளி, மிளகு, சீரகம், உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்துச்சாறாகக் குடிக்க வாய்ப்புண், வயிற்றுப்புண் மற்றும் வாயுத் தொல்லையும் நீங்கும்.
  ஒரு துண்டு கடுக்காயை வாயில் அடக்கிவைத்திருக்க, வாய்ப்புண் ஆறும்.
  காலையில் வெறும் வயிற்றில் சிறுதுண்டு மஞ்சள் சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் குணமாகும். மஞ்சள் தூளை தேனில் குழைத்துப் புண்ணின் மீதும் தடவலாம்.
  துளசி இலையினை வாயிலிட்டு வாய்ப்புண் பகுதியில் படும்படி மென்று, மென்றதை விழுங்கிவிட வேண்டும்.
  புதினா இலைச்சாறு தடவினால், எரிச்சல், வலி குணமாகும்.
  துவர்ப்புத்தன்மை கொண்ட வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு நல்லது. இதனை வேகவைத்து சூப் செய்து குடிக்கலாம்.
  நன்கு பழுத்த நாவல் பழத்தை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் குணமாகும்.


காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது?

காலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது  விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள்  வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது, காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை முட்டை குடிப்பது என்று அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச் செய்கிறார்கள். உண்மையில் காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது?
 
உடலின் பல நோய்கள் நம் வயிற்றுப் பகுதியில்தான் ஆரம்பிக்கின்றன. மலச்சிக்கல், வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் எனச் சாதாரணமாகத் தொடங்கும் பிரச்னைகள்கூட பல மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். பொதுவாக, முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட்ட உணவின் மீதமோ, அதன் தாக்கமோ மறுநாள் காலை வரை நம் வயிற்றில் இருக்கும். மேலும் 'ஹைட்ரோகுளோரிக் அமிலம்’, காலை நேரத்தில்தான் சற்று அதிகமாகச் சுரக்கும். இதனுடன், முதல் நாள் சாப்பிட்ட உணவின் மீதம் சேரும்போது அசிடிட்டி பிரச்னை ஏற்படும். முறையான சில ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். நம் உடல், ஒரு நாள் முழுக்க எப்படி இயங்கப்போகிறது என்பதே நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. இந்த உணவானது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும்தான் இருக்க வேண்டுமே த‌விர, அட்டவணைப்படி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
 
தண்ணீர் 

ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். சிலர், வெந்நீர் அருந்துவார்கள். ஆனால், குளிர்ந்த நீர் குடிப்பதுதான் சிறந்தது. ஏனெனில், குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியைக் குறைக்கும் தன்மை, வெந்நீரைக் காட்டிலும் அதிகம்.

தண்ணீரானது, அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து, வயிற்றைச் சீராக இயக்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீர் குடித்து வருவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாகக் குறைக்க முடியும். மேலும், இதனால் உடலின் ஒரு நாளைய வளர்சிதை மாற்றத்தில் 24 சதவிகிதம் அதிகரிக்கிறது. முக்கால் லிட்டர் நீரையும் முழுமையாகக் குடிக்க முடியாதவர்கள் 5 நிமிட இடைவெளியில் நான்கு டம்ளராகப் பிரித்துக் குடிக்கலாம்.

 
வெந்தயத் தண்ணீர்   
 
சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களுக்கு நல்ல தடுப்பணை வெந்தயம். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும் அருமருந்தும் இதுதான். வெந்தயத்தை, முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில்  ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும். வாயில் வெந்தயத்தை அப்படியே போட்டுத் தண்ணீர் குடிப்பது, மோருடன் சேர்த்துக் குடிப்பது கூடவே கூடாது. வெந்தயத்தை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதைச் சுற்றியுள்ள மேல் உறை செரிமானத்தைத் தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். வெந்தயம், மோர் இரண்டுமே குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால், உடனடியாகச் சளி பிடிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. சில சமயங்களில் இந்த காம்பினேஷன் வயிற்றுப் போக்குக்கும் வழிவகுத்துவிடும் என்பதால் கவனம் தேவை. 

அருகம்புல் சாறு   
 
அல்சருக்கு அருமருந்தே வெறும் வயிற்றில் பருகும் அருகம்புல் சாறுதான். ஆனால், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அருகம்புல் பொடி, நம் உடலுக்கு உகந்தது அல்ல. அருகம்புல் தாவரத்தின் இலை மற்றும் தண்டுப் பகுதியின் கலவைதான் இது. அருகம்புல் தண்டு மட்டும்தான் மருத்துவக் குணமுடையது. இந்த இலையின் ஓரங்களில் உள்ள வெள்ளையான சுனைப் பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால், வயிற்றுப்போக்கைத் தூண்டிவிடும் அபாயம் கொண்டது. எனவே அருகம்புல் செடியை வீட்டிலே அரைத்து சாறு எடுத்து, வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.

வெள்ளைப்பூசணி  சாறு 
 
வெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடித்து வந்தால் தொப்பை, ஊளைச்சதை விரைவில் குறையும். கூடவே, இதனுடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடிப்பதற்கான முழுப் பலனும் கிடைக்கும். ஆனால், இது மிகவும் குளிர்ச்சி என்பதால் 7 மாதத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தவிர்க்கவேண்டியது அவசியம்.

 
இஞ்சிச் சாறு இஞ்சியின் தோல் பகுதி நச்சுத்தன்மை வாய்ந்தது. இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும். ஆனால், வாய்ப்புண், வயிற்றுப்புண், ஆசனப்்புண் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
 
நீராகாரம்
காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவது இன்றும் கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். இதனால், உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. நீராகாரத்துடன் கடைந்த மோர் சேர்த்துக் குடிப்பது நல்லது. மோரில் உள்ள லாக்டோபேசில்லஸ்  என்னும் பாக்டீரியா, உடலுக்கு நன்மை செய்வதுடன், வயிற்றில் வைட்டமின்கள் உற்பத்திக்கும் உதவுகிறது.

நெல்லிக்காய்ச் சாறு
தினமும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதில், 'ஆன்டிஆக்சிடன்ட்ஸ்’ அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்றுநோய்களுக்கும் மிகவும் சிறந்தது. இதில், சிறிதளவே, அமிலத்தன்மை இருந்தாலும் எலுமிச்சை அளவுக்கு வலிமையான அமிலம் இல்லை. எல்லா வயதினரும், வெறும் வயிற்றில் தாராளமாகக் குடிக்கலாம்.

இளநீர்
இளநீர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லதுதான் என்றாலும் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் அதன் அதிகப்படியான குளிர்ச்சியூட்டும் தன்மையால், தூங்கி எழுந்தவுடன் சற்று சூடாக இருக்கும் நம் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கூட அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. மேலும், வெறும் வயிற்றில் குடிக்கும்போது, இளநீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், குளுக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல் சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம். எனவே, உணவு இடைவேளையில்தான் இளநீர் அருந்தவேண்டும். அதுவும் வெட்டிய உடன் இளநீரைக் குடித்துவிட வேண்டும், இல்லையெனில் ஃபுட் பாய்ஸன் ஆகிவிடும்.

எலுமிச்சைச் சாறு
பல் துலக்கியதும், எலுமிச்சைச் சாறுடன் தேன், வெந்நீர்் கலந்து ஒரே மூச்சில் குடிக்கும் டெக்னிக்தான், உடல் எடையைக் குறைக்கும் என்று பலரும் நினைக்கின்றனர்.  இதனால், எடை குறைந்தாலும் வெறும் வயிற்றில் எலுமிச்சைச் சாறு அருந்துவது அவ்வளவு நல்லதல்ல. எலுமிச்சையில் அதிகமாக இருக்கும் சிட்ரிக் அமிலம், நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் சேர்ந்து அசிடிட்டியை அதிகரித்துவிடும். ஆனால் தேன் மற்றும் வெந்நீர் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பதால் எடை குறைவதுடன், வயிற்றின் அமிலத் தன்மையும் சமன்செய்யப்படுகிறது. எனவே, எலுமிச்சை சேர்க்காமலேயே எளிதாக எடையைக் குறைக்கலாம்!

ச்சை முட்டை
ஒல்லியாக இருப்பவர்கள், 'ஜிம்’ பாடியாக மாற ஈஸியான வழியைத் தேர்ந்தெடுப்பது, விடிகாலை வெறும் வயிற்றில் பச்சை முட்டைதான். உண்மையில் இது மிகப் பெரிய தவறு. பச்சை முட்டை செரிமானமாகக் குறைந்தது 8 மணி நேரமாவது ஆகும். இதனால், நம் வயிற்றில் உள்ள உள்ளுறு குடலுறிஞ்சிகளால், செலீனியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் போன்ற நுண்சத்துகளை உறிஞ்ச முடிவது இல்லை. இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் முட்டையில் உள்ள புரதமும் (வெள்ளைப்பகுதி) மஞ்சள் கருவும், காலையில் வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் சேரும்போது வாயுத்தொல்லை ஏற்பட்டு, நாள் முழுவதும் மந்தமான உணர்வு ஏற்படுத்திவிடும். எனவே, வேகவைத்த முட்டையாக இருந்தாலும் காலை மற்றும் மதிய உணவின்போது மட்டுமே சாப்பிட வேண்டும். 


 டாக்டர்.வேலாயுதம்

 




மனநோய்க்கு என்ன மருந்து?

 
உடம்புக்கு நோய் வந்தால் மருந்து மாத்திரைகளைக் கொடுத்து தீர்த்துக் கொள்ளலாம். ஆனால், மனசுக்கு நோய் வந்தால் என்ன செய்வது? அதற்கும் அற்புதமான மருந்து உண்டு என்கிறார் சுவாமி சின்மயானந்தா.
 
முதலில் மனநோய் வந்ததற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். அகங்காரம் என்ற விஷக்கிருமிதான் பெரும்பாலான, மாசுபட்ட மனங்களுக்குக் காரணமாக அமைகிறது. இந்த அகங்காரம் மனசின் மீது மட்டுமில்லாமல், அறிவு, ஆரோக்கியத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தி உடல் நலத்தையும் கெடுக்கிறது. இந்தக் கிருமியை அழிக்க மனசை மாசு என்னும் பிணியிலிருந்து காக்க வைத்தியம் உண்டு. அருமையான மருந்தும் உண்டு. என்ன மருந்து அது?
 
விசுவாசம்-11 கிராம், ஒழுங்கு-10 கிராம், நேர்மை- 8 கிராம், உறுதி - 9 கிராம், முயற்சி -7 கிராம், அன்பு உதவும் மனப்பாங்கு- 6 மி.லிட்டர், சுத்தம்-3 மி.லிட்டர் என்ற அளவில் இந்த குணாதிசய மருந்துகளை அறிவு என்னும் பாட்டிலில் போட்டு ஒன்றாகக் குலுக்குங்கள். இந்த மருந்தை உட்கொண்ட பிறகு மன அடக்கம் என்ற மூடியைப் போட்டு, பாட்டிலை இறுக மூடி விடுங்கள். இதனுடன் வேறு சில குறிப்புகளையும் நீங்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
 
*‘அவதூறு’ வம்பைச் சிறிதும் ருசிக்க விரும்பாதீர்கள். அந்த ஆசை வரும் போது ‘ஓம்’ என்ற ஜபத்தை அதிகமாகப் பருகுங்கள்.
* மிருக இச்சை, காம உணர்வு போன்ற பாதைகளில் செல்லாதீர்கள்.
* தியானத்தில் ஓய்வெடுங்கள். ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளுங்கள்.
* தினமும் ஒரு வேளை ‘உபநிஷத்’ என்னும் ‘சூப்’பைப் பருகுங்கள்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு நாளும் மூன்று முறை இரண்டு பத்தி ‘பகவத் கீதை’யைப் பருகுங்கள். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இந்த மருந்தை உட்கொள்ள வேண்டும். அப்புறமும் மனநோய் அறிகுறி தொடர்ந்து இருக்குமானால் இந்த மருந்தைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும் - என்று மனநோய்க்கு இந்த மருத்துவச் சிகிச்சையை அளித்தவர்- சுவாமி சின்மயானந்தா அவர்களே!

ஆர். சந்திரிகா,
 

Thursday, September 18, 2014

அலசியா மொன்டானா - 800 மீட்டர் ஓட்டப்பந்தயம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் அது. முன்னணி வீராங்கனைகள் பலர் கலந்துகொண்ட அந்தப் போட்டியில் வெற்றிபெற்ற பெண்ணைவிட மற்றொரு பெண்ணைப் பார்த்து பார்வையாளர்கள் அனைவரும் அதிசயித்தனர். காரணம், அந்தப் பெண் ஓடியது, தனது எட்டு மாதக் கர்ப்பத்தோடு!

அந்தப் பெண், அலசியா மொன்டானா.  அமெரிக்காவின் அதிவேகப் பெண்மணி.

அலசியாவுக்கும் தடகள ஓட்டத்துக்கும் அமெரிக்காவில் ஒரே அர்த்தம்தான். நான்கு வருடங்களில் 800 தேசியப் பதக்கங்கள் பெற்றவர். தெற்கு கலிபோர்னியாவில் 1986-ம் ஆண்டு பிறந்த அலசியா, பள்ளிப் படிப்புக்காக கென்யான் பள்ளியில் சேர்ந்தார். அங்கு நடந்த போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். ஒன்று, இரண்டு பரிசுகள் வெல்ல ஆரம்பித்ததும், தடகளத்தின்மீதான காதல் அரும்ப ஆரம்பித்தது. சுவாசப் பயிற்சி மற்றும் கட்டுக்கோப்பான உடற்பயிற்சி என இரண்டிலும் சரியாக இருந்தால் மட்டுமே பிரகாசிக்கக்கூடிய 800 மீட்டர் தொடர் ஓட்டத்தை, அலசியா சின்ன வயதிலேயே தேர்ந்தெடுத்தார்.  


2007-ம் ஆண்டு அமெரிக்கத் தடகள வீராங்கனைகளுக்கான போட்டியில் கலந்துகொண்டு தங்கம் தட்டியபோது, அமெரிக்கா எங்கும் பிரபலம் ஆனார். அமெரிக்கத் தேசியச் சாதனையான 1:57:34 விநாடிகளில் 800 மீட்டர் தூரத்தைக் கடந்து, 2010-ம் ஆண்டு உலகப் பிரபலம் ஆனார்.

2008-ம் ஆண்டு பயிற்சியின்போது கீழே விழுந்ததில் அலசியாவுக்குக் கால்களில் கடும் பாதிப்பு. நிற்கவே முடியாத நிலைமை. இனி போட்டிகளில் எப்படிக் கலந்துகொள்வார் என எல்லோருக்கும் சந்தேகம். அலசியா, ஸ்டேடியத்துக்குச் சக்கர நாற்காலியில் வந்தார். ''நான் இதை ஓர் அனுபவமாக எடுத்துக்கொள்கிறேன்!'' என்று அவர் அறிவித்தபோது, அமெரிக்காவே உணர்ச்சிவசப்பட்டது. அடுத்த தேசியப் போட்டியிலேயே மீண்டும் தங்கம் வென்று காட்டியபோது, அத்தனை பேரும் அண்ணாந்து பார்த்தார்கள். அலசியாவின் தனிப்பட்ட அடையாளங்களில் ஒன்று... அவர் தலையில் சூடும் டெய்சி பூ. எந்தவொரு போட்டியில் அலசியா பங்கேற்றாலும், தலையில் நிச்சயம் பெரிய சைஸ் டெய்சி பூ ஒன்றைச் சூடியிருப்பார். இதனால் அமெரிக்கர்கள் அவரைச் செல்லமாக  'பறக்கும் பூ’ என்றே கூப்பிடுகிறார்கள்.

அலசியா 2011-ம் ஆண்டு லூயிஸ் என்பவரை மணம் முடித்தார். தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றுவந்தாலும், கடந்த ஜூன் மாதம் வயிற்றில் குழந்தையோடு ஓடிய அந்த 800 மீட்டர் ஓட்டம், அலசியாவை உலகப் பிரபலம் ஆக்கிவிட்டது. ''வயிற்றில் குழந்தையுடன் போட்டியில் பங்கேற்றது, நான் மட்டும் எடுத்த முடிவு அல்ல.. என் பயிற்சியாளர் மற்றும் கணவர் இருவரும் நம்பிக்கையுடன் எனக்கு அனுமதி கொடுத்தார்கள். கருவில் இருக்கும் எட்டு மாதக் குழந்தையோடு ஓடியதைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள். அதற்கு நான் எடுத்த பயிற்சிகள்தான் காரணம். சரியான உடற்பயிற்சியின் மூலம் எனக்கும், என் குழந்தைக்கும் எந்தப் பாதிப்பும் வராத அளவுக்கு உடலைப் பார்த்துக்கொண்டேன். அதனால், என்னால் இதைச் சாதிக்க முடிந்தது. மற்ற தாய்மார்களும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தால் அவர்களும் கர்ப்பக் காலத்தில் ஆரோக்கியமான உடலைப் பெறலாம்!' என அலசியா மெசேஜ் சொல்ல, இப்போது அமெரிக்க ஜிம்களில் கர்ப்பிணிகளின் கூட்டம். கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி குழந்தையை ஆரோக்கியமாகப் பிரசவித்துவிட்டார் அலசியா. தன் குழந்தையின் படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர, உலகமே சந்தோஷமாக வாழ்த்தியது. நீங்கள் இந்தச் செய்தியைப் படிக்கும் சமயம், அந்தப் பறக்கும் பூ, அமெரிக்காவின் ஏதேனும் ஒரு களத்தில் 2016-ம் ஆண்டு நடக்கவிருக்கும் ரியோ ஒலிம்பிக்கிற்கான பயிற்சிகளில் வியர்வையைச் சிந்திக்கொண்டிருக்கும்!


Wednesday, September 17, 2014

நவராத்திரி - 9 நாட்கள்

Tuesday, September 16, 2014

நவராத்திரி விரத பலன்...

அகில உலகங்களையும் படைத்து ரட்சிக்கும் ஜகன் மாதாவான பராசக்தி, கருணை கொண்டு உயிர்களுக்கெல்லாம் அருட்கடாட்சம் அற்புதமான காலம்தான் நவராத்திரி.  

நவராத்திரி விரத காலம்...

ஸ்ரீமத் தேவிபாகவத புராணத்தில், ஸ்ரீவியாச முனிவரிடம் நவராத்திரி காலத்தின் மகத்துவத்தையும், அந்த விரதத்தை அனுஷ்டிக்கும் விபரங்களையும் கேட்கிறான் ஜனமஜேயன் (நவராத்ரே து ஸம்ப்ராப்தே கிம் கர்தவ்யம் த்விஜோத்தம...). அதற்கு வியாச மகரிஷி, 'நவராத்திரி இரண்டு வகை. ஒன்று வஸந்த ருதுக் காலத்தில் (சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு 9 நாட்கள்) கொண்டாடப்படும் வஸந்த நவராத்திரி. மற்றொன்று சரத் காலத்தில் (புரட்டாசி அமாவாசைக்குப் பிறகு 9 நாட்கள்) கொண்டாடப்படும் சரத் நவராத்திரி’ என்று விளக்குகிறார்.

இவை இரண்டும் எமதருமனின் இரண்டு கோரைப் பற்கள் போன்றவை என்பதால், இந்தக் காலங்களில் அனைத்து பிராணிகளுக்கும் தீயவை ஏற்பட வாய்ப்பு உண்டு. நோய்கள், இயற்கை சீற்றங்கள், மனக் குழப்பங்கள் போன்றவையும் ஏற்படலாம். ஆகவே இந்த காலங்களில் புத்திமான்களும், நல்லதையே விரும்புபவர்களும் சண்டிதேவியை ஆராதனம் செய்ய வேண்டும் என்று வியாசர் கூறுகிறார்.


'கலௌ சண்டி விநாயகௌ’ என்ற வாக்கின்படி இந்தக் கலி காலத்தில், நமது இன்னல்கள் யாவற்றையும் விலக்கி நன்மை களைப் பெற்றிட விநாயகர் வழிபாடும், சண்டிகையின் வழிபாடும் நமக்கு உதவும் என்பது முன்னோர் வாக்கு.

அருள் தரும் நவராத்திரி!

'நவ’ எனில் ஒன்பது; 'ராத்ரீ’ எனில் இரவு. ஆக 'நவ ராத்ரீ’ (நவ ராத்திரி) எனில், 9 இரவுகள் கூடிய நாட்கள். 'நவ’ எனில் 'புதுமையான’ என்றும் பொருள் உண்டு. ஆக, இந்த நாட்களில் நாம் கடைப்பிடிக்கும் பூஜைகளினால் நமக்குப் புதுமையான புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அதுமட்டுமா? நவகிரகங்களினால் ஆபத்து ஏற்படாமல் இருக்க இந்த நவராத்திரி காலங்களில் அனைவரும் அம்பிகையை வழிபடுதல் வேண்டும்.
அவள்தானே உலகுக்கெல்லாம் மூல கரு ('விச்வஸ்ய பீஜம்’). அவளை வழிபடுவதால், நம் உலகம் என்றில்லை; இந்த பிரபஞ்சம் முழுக்க வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை உண்டாகும் என்பது நிச்சயம்.


விரத நியதிகள்...
ஆச்வின மாதம் அதாவது, புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்த நாளை (பிரதமை முதல்) நவராத்திரியின் துவக்க நாளாகக் கொள்ள வேண்டும் என்கிறது ஸ்கந்த புராணம்.

நவராத்திரி வழிபாடு செய்யும் வழிமுறைகளை தேவி பாகவதம் நமக்கு அழகாகச் சொல்லித் தருகிறது.

புரட்டாசி அமாவாசை அடுத்த பிரதமை துவங்கி 9 நாட்கள் நவராத்திரி அனுஷ்டிக்க வேண்டும். நவராத்திரிக்கு  முதல் நாள், அதாவது அமாவாசை தினத்திலேயே பூஜைக்கு வேண்டியவற்றை சேகரிக்க வேண்டும். அன்றைய தினமே பூஜையறையைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

பூஜையறையில் பூஜை மண்டபம் அமைப்பதற்கான இடம் மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக இருக்க வேண்டும். அதை பசுஞ்சாணத்தால் மெழுகி, கோலமிட்டு செம்மண் இட வேண்டும். அந்த இடத்தின் நான்கு மூலைகளிலும் 16 முழம் உயரத்துடன் தூண்கள் நட்டு, தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். தூண்களில் அம்பாள் உருவம் உள்ள சிவப்புக் கொடி கட்டுவது சிறப்பு.

பூஜை இடத்தில் மையமாக நான்கு முழம் நீளஅகலமும், ஒரு முழம் உயரமும் கொண்ட ஒரு பீடம் (மேடை) அமைக்க வேண்டும்.

பிரதமை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, பூஜைக்குத் தயாராக வேண்டும். (இயன்ற வரையில் தகுந்த அந்தணர்களை வரவழைத்து, வழிபாடுகள் நடத்தி வைக்கச் சொல்வது சிறப்பு).

பூஜை மேடையில் வெண்பட்டு விரித்த ஆசனம் இட்டு, அதன் மீது சங்குசக்கரம், கதை மற்றும் தாமரை ஏந்திய நான்கு கரங்களுடன் திகழும் தேவியின் திருவுருவம் அல்லது 18 கரங்கள் கொண்ட அம்பாளின் திருவடிவத்தை வைத்து தூய ஆடை ஆபரணம், மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.


அருகில் அம்பிகைக்கான கலச பூஜைக்காக கலசம் வைத்து அதில் நீர் நிரப்பி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றைப் போட்டு, மாவிலைகளை மேலே வைத்து மங்கல இசை முழங்க, வேத கோஷம் ஒலிக்க, பூஜையைத் துவங்க வேண்டும்.

''தாயே... உன்னைப் பிரார்த்தித்து நவராத்திரி பூஜை செய்யப் போகிறேன். அது நல்லபடியாக நிறைவேற உன்னருள் வேண்டும். பூஜையில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பினும் பொறுத்துக்கொண்டு, உனது அனுக்கிரகத்தை எங்கள் வீட்டில் நிறையச் செய்ய வேண்டும்'' என்று மனதார வேண்டிக்கொண்டு
பூஜிக்க வேண்டும். பலவிதமான பழரசங்கள், இளநீர், மாதுளை, வாழை, மா, பலா முதலானவற்றையும், அன்னத்தையும் (சித்ரான்னங்கள்) நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

இப்படி தினமும் மூன்று கால பூஜை செய்தல் வேண்டும். 9 நாட்களும் விரதம் இருப்பவர்கள் பூஜை முடித்து, ஒரு வேளை உண்ண வேண்டும். தரையில் படுத்துத் தூங்க வேண்டும்.

9 நாட்கள் விரதம் இருக்க இயலாதவர்கள் என்ன செய்யலாம்?

சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்கள் விரதமிருந்து வழிபடலாம். அதுவும் இயலவில்லை எனில், அஷ்டமி தினத்தில் அம்பாளை பூஜித்து வழிபட்டு அருள் பெறலாம். இந்த தினத்தில்தான் தட்ச யாகத்தை அழித்த அம்பாள், அநேக கோடி யோகினியருடன் தோன்றினாள். அதனால் இந்த தினம் விசேஷமானது.

எவரொருவர் இந்த விரதத்தைத் தொடர்ந்து 9 நாட்கள் கடைப்பிடிக்கிறார்களோ, அவர்களுக்கு தேவர்களுக்கும் கிட்டாத இன்பமும், பிணியின்மையும் வரமாகக் கிட்டும்; சத்ருக்கள் தொல்லையும் நீங்கும்.

விரிவான பூஜை இயலாதெனில்...

சரி... இந்த விரதத்தை சந்தனம், புஷ்பம், தூபதீபம், நைவேத்தியம் கூடிய உபசாரங்களுடன் தான் ஆராதிக்க வேண்டுமா? இதுபோன்று செய்ய முடியாதவர்களும் இந்த விரதத்தில் பங்குகொள்ள ஏதேனும் வழி உண்டா?

இதற்கு  மிக அருமையாக பதில் சொல்கிறது பவிஷ்ய புராணம். 'இதுபோன்ற உபசாரங்கள் இல்லை என்றாலும், பூவும் நீரும் அளித்தாலே போதும்; அதுவும் இல்லையென்றாலும் உண்மையான பக்தியுடன், 'அம்மா என்னைக் காப்பாற்று’ என்று சக்தியைச் சரணடைந்தாலே போதும்; நாம் கேட்டதை மட்டுமின்றி, நமக்கு நன்மையானவை அனைத்தையும் அளிக்க எல்லாம் வல்ல அன்னை காத்துக் கொண்டிருக்கிறாள்’ என்கிறது அந்த புராணம்.

உலகில் உயர்ந்த தெய்வம் தாய்தானே! அந்த தாய் என்ற தெய்வத்துக்கு எல்லாம் மூலமான தாயை (''யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரூ ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:'') வணங்கித் தொழுதல் நமது கடமை அல்லவா!

நவராத்திரி விரத பலன்...

நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள்.

தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம்.

குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும்.
படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம்.

ஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் காப்பாள். அதேபோன்று, மூல நட்சத்திரம் அல்லது நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல், அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்துதல் சிறப்பு.

நவராத்திரி ஒன்பது நாட்களும் பெண் குழந்தைகளை... குமாரி முதலாக 9 வடிவங்களாக பாவித்து வழிபடுவதும் உண்டு.



 பி.சந்திரமெளலி

Monday, September 15, 2014

ஏர்செல்-மேக்ஸி - மாறன் சகோதரர்கள்

 
ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கு, சன் தொலைக்காட்சி வசதிக்காகத் தங்கள் வீட்டில் பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பகத்தை நடத்தியது போன்ற விவகாரங்களில் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்துவரும் கலாநிதி - தயாநிதிமாறன் சகோதரர்களுக்கு மற்றொரு தலைவலியாக வந்து சேர்ந்திருக்கிறது. சமீபத்தில் கல் (Kal) கேபிள்ஸ் நிறுவன வழக்கில் நீதியரசர் ராமசுப்பிரமணியம் கொடுத்த தீர்ப்பு. தொடர் சோதனைகள் காரணமாக சகோதரர்கள் கடந்த 25 ஆண்டுகளாகக் கட்டி எழுப்பிய சன் குழும சாம்ராஜ்யம் சடசடவென சரிந்து விடுமோ என்ற சந்தேகம் தொழில்- வர்த்தக வட்டாரங்களில் படபடக்கிறது.
 
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 33 தொலைக்காட்சிகள், பல்வேறு இந்திய மொழிகளில் 45 பண்பலை வானொலி நிலையங்கள், மூன்று தினசரிகள், சன் டி.டி.ஹெச், 53 விமானங்களை இயக்கும் ஸ்பைஸ் ஜெட், சன் பிலிம்ஸ், சன் ரைசர்ஸ் கிரிக்கெட் அணி, ஆறு வாரப் பத்திரிகைகள் என்று கட்டியாளும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு 16,000 கோடி என்று அரசுக்குக் கணக்கு காட்டப்பட்டாலும், உண்மையான சொத்து மதிப்பு 40,000 கோடிக்கும் மேல் என்கிறது தொழில் வட்டாரம்.  

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் அமரும்போதும் மத்திய அரசில் தி.மு.க. செல்வாக்கு கொடிகட்டி பறந்தபோதும் சன் குழுமம் விரைவுப் பாதையில் வளர்ச்சியைக் கண்டது. அதிலும் தயாநிதி மாறன் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த காலம் சன் குழுமத்தின் பொற்காலம் என்று கூடச் சொல்லலாம். அரசியல் ஆதரவும், அரசின் ஆதரவும் ஒருங்கே பெற்று உயர்நிலையை அடைந்த இந்தக் குழுமம், இன்று இவையிரண்டும் இல்லாத நிலையில் சரிவைச் சந்தித்து நிற்கிறது. 
 
முதலில் தொடங்கிய ‘பூமாலை’ வீடியோ பத்திரிகை சரியாகப் போகவில்லை. அதன்பின் சில காலம் அமைதியாக இருந்த சகோதரர்கள் 1993-ல் ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கியதுதான் சன் தொலைக்காட்சி. 1996ல் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர, சன் தொலைக்காட்சியின் பிரசார பங்களிப்பும் முக்கிய காரணம். அதன்பின் சன் தொலைக்காட்சி வீறுநடை போட்டது. பிறகு சுமங்கலி கேபிள் நிறுவனம் உருவானது. அதுவரை கேபிள் டி.வி. தொழிலில் முக்கிய இடத்தில் இருந்த ஹாத்வே நிறுவனம் அதிகார துஷ்பிரயோகத்தால் விரட்டப்பட்டது. இந்தச் சூழலில்தான் தந்தை முரசொலி மாறன் மறைந்தார். குடும்பத்தின் அரசியல் வாரிசாக தயாநிதிமாறன் நாடாளுமன்றத் தேர்தலில் களம் இறக்கப்பட்டார்.  மத்திய சென்னையில் வென்ற மாறன் மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சராக்கப்பட்டார். தில்லியில் தி.மு.க.வின் பிரதிநிதியாகவே வலம் வந்தார் தயாநிதி. அவருக்கு இந்தி தெரிந்திருப்பதை ஒரு தகுதியாகச் சொன்னார் கருணாநிதி. அந்தச் சமயத்தில் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக செல்போனின் பயன்பாடு வேகமாக உயர்ந்து கொண்டிருந்தது. செல்போன் நிறுவனங்கள், தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வந்தன. சிவசங்கரன் என்பவரால் தமிழகத்தில் நடத்தப்பட்டு வந்த ஏர்செல் நிறுவனமும், 14 தொலைத்தொடர்பு வட்டங்களில் தமது சேவையைத் தொடங்க உரிமம் கோரியது. ஆனால் இங்கேதான் தயாநிதி தமது ஆட்டத்தைத் தொடங்கியதாகச் சொல்கிறது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குற்றப் பத்திரிகை. மலேசியாவில் செயல்படும் மேக்ஸிஸ் குழுமத்துக்கு ஏர்செல் நிறுவனத்தை விற்றுவிட வேண்டும் என்று சிவசங்கரன் மிரட்டப்பட்டார். விளைவு ஏர்செல்லின் 74 சதவிகிதப் பங்குகள் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டு, நிறுவனம் கைமாறியது. உடனே, செல்போன் உரிமங்கள் ஏர்செல்லுக்குக் கொடுக்கப்பட்டன. மேக்ஸிஸ் நிறுவனத்துக்குச் செய்த உதவிக்குப் பிரதிபலனாக அந்த நிறுவனம், சன் டி.டி.ஹெச். நிறுவனத்தில் 599 கோடியை முதலீடு செய்ததாகவும் சொல்கிறது குற்றப் பத்திரிகை.
 
சுப்பிரமணியம் சுவாமி மற்றும் மீடியாக்களின் தொடர் முயற்சி காரணமாக 2011ல் ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கில் முதல்தகவல் அறிக்கையை சி.பி.ஐ. பதிவு செய்தது. தயாநிதி பதவி விலகினார். இந்தக் காலகட்டத்தில் மாறன் சகோதரர்களின் போட்ஹவுஸ் மாளிகையில் சன் தொலைக்காட்சியின் மேம்பாட்டுக்காக பி.எஸ்.என்.எல். 323 லைன்கள் கொண்ட அதி நவீன தொலைபேசி இணைப்பும் நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குத் தொலைத்தொடர்பு உயரதிகாரிகளும் உடந்தையாக இருந்தார்கள். தொலைத்தொடர்பு ஊழியர் சங்கங்கள் இந்த விவகாரத்தை முழுமையாக வெளியே கொண்டு வந்தன.  ஆடிட்டர் குருமூர்த்தி மீடியாவில் ஆதாரபூர்வமாக குற்றம் சாட்டியது மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டு போனார். மாறன் சகோதரர்கள் நடத்திய இந்தத் தொலைபேசி இணைப்பகத்தால் அரசுக்கு 440 கோடி நஷ்டமாம். சி.பி.ஐ. இந்த விவகாரத்திலும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்திருக்கிறது. எந்த நேரத்திலும் குற்றப் பத்திரிகை பதிவாகலாம். தயாநிதி மாறன் அதிகாரத்தில் இருந்தபோது ரத்தன் டாடாவையும் மிரட்டி அவரது நிறுவனத்தின் பங்குகளை சன் குழுமத்துக்குக் கேட்டதாகவும் செய்திகள் அடிபட்டன.2011ல் ஏர்செல் - மேக்ஸில் நிறுவன விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டாலும் சி.பி.ஐ. விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காரணம் ஐ.மு. அரசு இருந்ததுதான். 2014ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் சி.பி.ஐ. இந்த விஷயத்தில் ஆலோசனை கேட்டு அரசு தலைமை வழக்கறிஞரை அணுகியது. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்று தலைமை வழக்கறிஞர் சொல்லிவிடவே நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது சி.பி.ஐ. மேக்ஸிஸ் நிறுவனம் இயங்கும் மலேசியாவில் முழு விசாரணை நடக்கவில்லை; எனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது" என்ற தயாநிதி மாறனால் போடப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரம் சூடு பிடித்துக் கொண்டிருந்த போதுதான் மத்திய அரசு கல் கேபிள் நிறுவனத்தின் உரிமத்தை ‘பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்ற காரணத்தைச் சொல்லி ரத்து செய்தது. இதை எதிர்த்து நீதிமன்றம் போனார் கலாநிதி. மத்திய அரசின் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தாலும் நீதியரசர் தெரிவித்த ஒரு கருத்து சன் குழுமத்தைக் கலக்கியிருக்கிறது. 
 
‘பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கேபிள் நிறுவன உரிமம் ரத்து என்றால், தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் இந்த வரையறை கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஒன்றுக்கொன்று தொடர்புடைய இந்த இரு அமைப்புகளுக்கும் வெவ்வேறு பாதுகாப்பு வரையறைகள் இருக்க முடியாது. பதவியைத் தவறாகப் பயன்படுத்துவதும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலே’ என்று சொல்லியிருக்கிறார் நீதியரசர். இந்த அடிப்படையில் சன் தொலைக்காட்சிகளுக்கும் உரிமம் ரத்தாகும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.நஷ்டத்தில் ஓடும் சன் குழுமத்தின் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கும் ஆபத்து வந்துகொண்டிருக்கிறது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 50 சதவிகித பங்குகள் கலாநிதி குடும்பத்திடம் இருக்கின்றன. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஊழியர்களிடம் வசூல் செய்த வருமான வரியை அரசுக்குச் செலுத்தவில்லை. தவிர அந்த நிறுவனத்தை கலாநிதி வாங்கியதே அலைக்கற்றை ஊழல் பணத்தில்தான். இது தொடர்பாக முழு விசாரணை தேவை.

ஞான விளக்கு!

லோகத்தில் அடைகிற இந்திரிய ருசிகளும், விஷய வாஸனையும் தான் ஜனங்களுக்கு இஷ்டமாயிருக்கின்றன. இந்த வழியிலேயே போய் ஜனங்கள் பாபத்தையும் துக்கத்தையும் பெருக்கிக் கொள்ளும் போது மஹான்கள் அவர்களை ரக்ஷிக்க உபதேசம் பண்ணுகிறார்கள். அந்த உபதேசம் விளக்கெண்ணெயாகத்தான் தோன்றும். ஆனால், அதுதான் உண்மையில் விளக்கும் எண்ணெய். ‘பல் விளக்குவது’, ‘பாத்திரம் விளக்குவது’ என்று ஸாதாரண ஜனங்கள் சொல்லுவதில் நிரம்ப அர்த்தம் இருக்கிறது.

ஒன்றிலே இருக்கிற அழுக்கைத் தேய்த்துப் போக்கிவிட்டால் அது சுத்தமாகி, விளக்கம் பெற்றுவிடுகிறது என்பதைத்தான் இப்படிச் சொல்கிறார்கள். வயிற்றில் இருக்கிற அழுக்குகளை அலசிப் போக்கி சுத்தமாக்கி வைப்பதே விளக்கெண்ணெய். மஹான்களின் உபதேசம் மனஸில் உள்ள அழுக்குகளைத் தேய்த்து அலம்பி விளக்கி வைத்து ஞான விளக்கை ஏற்றி வைப்பது.

கொட்டையூர் என்று சொன்னேனே, அது ரொம்பவும் பூர்வ காலத்தில் ஊராகவே இல்லாமல் ஆமணக்கங்காடாகத்தான் இருந்ததாம். ஏதோ ஒரு ஸந்தர்ப்பத்தில் அங்கே ஒரு கொட்டைமுத்துச் செடியின் கீழ் பரமேச்வரன் லிங்கமாக ஆவிர்பவித்தார். அப்புறம் காடு ஊராயிற்று. புண்ய ஸ்தலமாயிற்று. ஆமணக்கின் கீழ் இருந்து ஸ்வாமி வந்ததால் அதற்கு கொட்டையூர் என்றே பெயர் ஏற்பட்டது. இப்போதும் அங்கே ஸ்தல விருக்ஷம் ஆமணக்குத்தான்.

இந்த ஊரில்தான் அந்த ஓகு பஹபூ காலமாகத் தபஸ் பண்ணிக் கொண்டிருந்தார். அதனால் ’கொட்டையூர்க்காரர் என்றே அர்த்தம் தருகிற ’ஏரண்டகர்’என்ற பெயரை அவருக்கு ஜனங்கள் வைத்து விட்டார்கள். பிற்காலத்தில் அந்த பெயர் அவருக்கு இன்னொரு விதத்திலும் பொருந்தி விட்டது. ஆமணக்கு எப்படி தன்னையே பிழிந்துகொண்டு எண்ணெயாகி ஜனங்களுக்கு உபகரிக்கிறதோ அப்படித் தன்னையே லோகோபகாரமாக இந்த ஏரண்டக ரிஷியும் தியாகம் செய்துகொண்டார். அந்தக் கதையைச் சொல்லத்தான் ஆரம்பித்தேன். உயிர்த் தியாகிகள், Martyrs என்று ஏதேதோ சொல்கிறார்களே, அந்தத் தத்வம் ஸமீப காலத்து தேசபக்தியில்தான் தோன்றியதென்றில்லை; ததீசியிலிருந்து எத்தனையோ மஹரிஷிகள் கூட ஆதியிலிருந்து ஜனஸமூகத்தின் கே்ஷமத்துக்காக உயிரையே கொடுத்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் காட்ட நினைத்துத்தான் ஏரண்டகர் கதை ஆரம்பித்தேன்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

என்ன பயன்? - ஜன் தன்: காப்பீடு + கடன் தரும் திட்டம்

அரசு   மானியம்  பெறுகிறவர்களில் பலருக்கு வங்கிகளில் சேமிப்புக் கணக்கு இல்லை. இதனால்  அந்த மானியம் மக்களுக்குப் போய்ச் சேராமலே இருக்கிறது. எனவே, 7.5 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்துத் தரும் ஜன் தன் யோஜனா திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்தத் திட்டத்தால் என்ன  பயன்?
 
பிரதமர் துவக்கி வைத்த அனைவருக் கும் நிதிச் சேவை திட்டத்தின் கீழ் இதுவரை வங்கிக் கணக்கு இல்லாத வர்கள் வங்கிக் கணக்கை ஆரம்பிக்க முடியும். இதில் ரூபே டெபிட் கார்டு இலவசமாக வழங்கப்படும். இதனுடன் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள விபத்து காப்பீடும் இலவசமாகக் கிடைக்கும். மேலும், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள லைஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜ் வழங்கப்படுகிறது. சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர் மரணம் அடைந்தால் இந்தத் தொகை கிடைக்கும்.
 
இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு துவங்குபவர்களுக்கு குறைந்தபட்ச இருப்பு தொகை எதுவும் கிடையாது. அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம். அதற்குமேல் இருப்பு வைத்தால், அந்த நபரின் வங்கிக் கணக்கு வழக்கமான வங்கிக் கணக்காக மாறிவிடும்.

 

அனைவருக்கும் வங்கிச் சேவை திட்டத்தின் கீழ் கணக்கு துவங்குபவர் களுக்கு கேஒய்சி (உங்கள் வாடிக்கை யாளர்களை புரிந்து கொள்ளுங்கள்) விதிமுறைகள் எளிமைப்படுத்தப் பட்டுள்ளன. அதாவது, ஆதார் அட்டை மட்டும் இருந்தாலே கணக்கு துவங்க முடியும். அதேபோல வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ரேஷன் கார்டு, கிராம நிர்வாக அதிகாரி யிடம் வாங்கிய சான்று என எதாவது ஒரு சான்று தந்து  வங்கிக் கணக்கு துவங்க முடியும்.இந்தக் கணக்கில் ஃபிளெக்ஸி ஆர்டி துவங்கலாம். வைப்பு நிதி, பண பரிமாற்றம் ஆகியவற்றை செய்துகொள்ள முடியும். ஆனால், ஒரு நாளைக்கு அதிக பட்சம் ரூ.10 ஆயிரத்துக்கு மட்டும்தான் பரிவர்த்தனை செய்ய முடியும். இந்தச் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வங்கிக் கணக்கில் அவர்கள் செய்யும் பரிவர்த்தனைகளின் அடிப்படையில் ரூ.5 ஆயிரம் வரை ஓவர் டிராப்ட்-ஆக (ஓ.டி) கடன் பெற முடியும்.

ஏற்கெனவே வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு துவங்க முடியாது. ஆனால், வேலை காரணமாக இடம் மாறும்போது, அங்குள்ள சேமிப்புக் கணக்கு இருந்தால், அதை இந்த ஊருக்கு மாற்றிக்கொள்ள லாம். அது முடியவில்லையெனில், தற்போது வசிக்கும் முகவரியை அடிப்படையாக வைத்து, இந்தக் கணக்கைத் துவங்கலாம். ஆனால், இப்போது இருக்கும் ஊரில் சேமிப்புக் கணக்கு இருக்கக்கூடாது
 

ஆப்பிள் ஐபோன் 6 & 6+

வருடந்தோறும் செப்டம்பர் 9-ம் தேதி சில புதிய தயாரிப்புகளை வெளியிடுகிற ஆப்பிள் நிறுவனம், இந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் 6 மற்றும் 6+ என இரு ஐபோன்களை வெளியிட்டது.

ஐபோன் 6 மற்றும் 6+ ஆகியவற்றுக்கு திரை அளவு முறையே 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச் என்ற அளவில் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதேபோல், 6.9 mm அடர்த்தியில் ஐபோன் 6 மற்றும் 7.1 mm அடர்த்தியில் ஐபோன் 6+ம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் ரெட்டினா HD டிஸ்ப்ளே 1334x750 (~326 pixels per inch) மற்றும் 1920x1080 (401 pixels per inch) திறனுடன்  உருவாக்கப்பட்டுள்ளது.


வீடியோ பதிவில் ஒரு நொடிக்கு 240 பிரேம் என்ற அளவில் முழு நீள HD வீடியோவை பதிவு செய்யலாம். ஆப்பிள் A8-Dual-core 2 GHz பிராசஸரைக் கொண்டு இயங்கும். மேலும், இதன் இன்டர்னல் மெமரி 16 GB-யில் தொடங்கி, 128 GB என்ற அளவில் வெளியிட்டுள்ளது. இதன் கேமரா  நவீன கேமராக்களில் உள்ள டிஎஸ்எல்ஆர் தொழில்நுட்பத்துக்கு இணையான தரத்தில் புகைப்படங்களைத் தரக்கூடியது. இதில் ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 8ஐ ஆபரேட்டிங் சிஸ்டமாகப் பயன்படுத்தியுள்ளது.

இன்டர்னல் மெமரியைப் பொறுத்து இதன் விலை மாறுபடும். ஐபோன் 6-ன் விலை  ரூ.40,000 - 50,000 என்ற அளவிலும், ஐபோன் 6+ன் விலை ரூ.45,000- 60,000 என்கிற அளவில் இருக்கும் என்கிறார்கள்.  செப்டம்பர் 12-ம் தேதி முதல் விற்பனைக்கான முன்பதிவு உலக அளவில் ஆரம்பமாகிறது. இந்தியாவில் இந்த ஐபோன்கள் வரும் அக்டோபர் 17-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. மற்ற ஐபோன்களைக் காட்டிலும் இவை 84 மடங்கு கிராபிக்ஸ் திறனும், 50 மடங்கு பேட்டரி திறனும் கொண்டதாக இருக்குமாம்.
 

மோகன் பிரபாகரன்

Monday, September 08, 2014

மோட்டோ ஜிக்கு போட்டியாக ஸியோமி ரெட்மி 1S

அதிகமான தொழில்நுட்பம், அகலமான ஸ்கிரீன், துல்லியமான கேமரா மற்றும் குறைந்த விலை, இதுதான் இன்றைய ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்களின் புதிய யுக்தி. அந்த வகையில் சீனாவின் ‘ஸியோமி’ நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டாவது ஸ்மார்ட் போனான ‘ரெட்மி 1S’(Xiaomi Redmi 1S) - ஐ வெளியிடவுள்ளது.

பார்ப்பதற்கு எளிமையாகவும் ரெட் கலர் தீம் லுக்கில் இருக்கும் இந்த ‘ரெட்மி 1S’ 4.7 இன்ச் அகலமான IPS தொடுதிரையைக் கொண்டுள்ளது. இந்த IPS டிஸ்ப்ளே 729x1280 பிக்ஸல்ஸ் (~ 313 pixels per inch) திறனைக் கொண்டுள்ளது. மேலும், இந்தத் தொடுதிரை கீறல்களை சமாளிக்க ‘AGC Dragontrail 2 glass (scratch-proof)' என்ற கண்ணாடியைக் கொண்டுள்ளது.


ரெட்மி 1S 1.6GHz Quadcore Qualcomm Snapdragon 400 MSM8228 மற்றும் Adreno 305 கிராபிக்ஸ் பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. மேலும், 1GB ரேம்மை கொண்டு இயங்கும் ரெட்மி 1S-ன் இன்டர்னல் மெம்மரி 8GB ஆகும். மேலும், SD கார்டு மூலம் 64GB வரை மெம்மரியை விரிவுபடுத்தலாம். பேட்டரி வசதியைப் பார்க்கும்போதும் ரெட்மி 1S 2000mAH பேட்டரியைக் கொண்டுள்ளது. 8 மெகா பிக்ஸல் LED ப்ளாஷ் வசதியோடு வரும் பின்புற கேமராவையும் 1.6 மெகா பிக்ஸல் முன்புற கேமராவையும் கொண்டுள்ள இந்த ரெட்மி 1S மூலம் முழு நீள HDயில் வீடியோவை  பதிவு செய்யலாம்.

ரெட்மி 1S ஆண்ட்ராய்டு 4.3-ல் இயங்குகிறது. ஸியோமி நிறுவனத்தின் பிரத்யேகமான UI ‘miui’யும் இந்த OSயோடு அடங்கும். ஓஎஸ் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாகவும், பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரெட்மி 1S, 9.9mm அடர்த்தியும் 158g எடையும் கொண்டுள்ளது.

ரெட்மி 1S இந்திய விலையில் Rs. 5,999. ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் மட்டும் பிரத்யேகமாக செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியாகும். ரெட்மி 1S ‘மோட்டோ ஜி’க்கு பலத்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
செ.கிஸோர் பிரசாத் கிரண் 

Saturday, September 06, 2014

ஓணம் பண்டிகை

உலகெங்கும் வாழும் மலையாள மக்களால் கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகை ஓணம். ‘காணம் வித்தாவது ஓணம் உண்’ என்பது பழமொழி. பண்டிகை செலவுக்குப் பணம் இல்லாவிட்டாலும் பெண்கள் கழுத்தில் இருக்கும் பொட்டுத் தாலியையாவது விற்று ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டுமாம். இங்கே ‘காணம்’ என்பது மாங் கல்யத்தைக் குறிக்கிறது. அதாவது ஓணப்பண்டிகை எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொண்ட பண்டிகை என்பதற்காக இந்தப் பழமொழி சொல்லப்பட்டுள்ளது. 
மலையாள ஆண்டின் முதல் மாதம் சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதைத்தான் ‘அஸ்தம் தொட்டு பத்தோணம் வரை’ என்பர். இதை கேரளாவின் அறுவடைத் திருநாள் என்றும் அழைப்பர். தமிழ் மாதத்தின் படி ஆவணி மாதம் வரும் அஸ்தம் நட்சத்திரம் முதல் திருவோண நட்சத்திரம் வரை பத்து நாட்கள் ஓணம் கொண்டாடப்படுகிறது.  சங்க காலத்தின் போதே ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வந்துள்ளதாக செய்திகள் உள்ளன. பத்துப்பாட்டில் மதுரைக் காஞ்சியில் பாண்டிய நாட்டு மக்கள் எவ்வாறு ஓணம் கொண்டாடினார்கள் என்பதை மாங்குடி மருதனார் விளக்குகிறார். மகாபலி என்ற மன்னன் கேரளாவை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். தானம், தர்மம் செய்வதில் சிறந்து விளங்கிய மன்னன் மகாபலி ஒரு முறை வேள்வி செய்யும் போது திருமால் மூன்றடி உயரம் கொண்ட வாமன அவதாரத்தில் வந்து மூன்றடி நிலம் கேட்டார். மன்னன் மகாபலியோ ‘தாங்களே அளந்து எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார். முதல் அடியால் பூமி முழுவதையும் அளந்தவர் இரண்டாவது அடியால் விண்ணையும் அளந்தார். மூன்றாவது அடியை நான் எங்கே வைப்பது என்று திருமால் கேட்டதற்கு, மன்னன் மகாபலி தன் தலையைத் தந்தான். மகாபலியின் கொடை குணத்தைக் கண்ட திருமால் மகாபலியை தன் காலால் பூமிக்குள் தள்ளி முக்தி அளித்தார். ‘தன் மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்ட மன்னன் மகா பலி, வருடம் ஒரு முறை இதே நாளில் வந்து தன் நாட்டு மக்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ்வதை நான் பார்க்க வேண்டும்’ என்று வரம் கேட்டார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் திருவோணம் அன்று மன்னன் மகாபலி நாட்டு மக்களை காண வருவதாக ஐதிகம். எனவே கேரள மக்கள் ஓணம் திருநாளின் போது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருப்பர். கேரளாவில் ஆனி, ஆடி மாதம் மழைகாலம். எனவே செடிகள் நன்கு வளர்ந்து ஆவணி மாதத்தில் பூக்கள் அதிகமாக பூக்கும் காலம். மன்னன் மகா பலியை வரவேற்கும் பொருட்டு வாசலில் பூக்களால் ஆன கோலம் (அத்தப்பூ கோலம்) வரைந்து வரவேற்கிறார்கள். முதல் நாள் அஸ்தம் நட்சத்திரம் அன்று ஒரு வகை பூக்கள் கொண்டும் இரண்டாம் நாள் இரண்டு வகைப் பூக்கள் கொண்டும் மூன்றாம் நாள் மூன்று வகை பூக்கள் என்று பத்தாம் நாள் பத்து வகை பூக்களால் கோலம் வரைந்து மன்னன் மகாபலியை வரவேற்கிறார்கள். கோலத்தின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
மேலும் பெண்கள் பத்து நாளும் அதிகாலை எழுந்து குளித்து மகாவிஷ்ணுவிற்குப் தினம் ஒரு பாயசம், பொங்கல் செய்து படைத்து வழிபடுவர். அருகிலுள்ள விஷ்ணு கோயிலுக்குச் சென்று வழிபடுவர். பத்து நாளும் விருந்தினர்கள் வந்த வண்ணம் இருப்பர். பத்தாவது நாள் திருவோணத்தன்று எல்லோரும் புத்தாடை அணிவார்கள். உறவினர்களுக்கும் புத்தாடைக் கொடுப்பர் அதை ஓணப்படை என்பர். பெண்கள் ஓணப்புடவை அணிவர். ஜரிகை பார்டர் போட்ட வேட்டி, நேரியலை புடவையாக கட்டுவர். தற்போது முழு புடவையாக உள்ளதையும் வாங்கி கட்டுகிறார்கள். இதை ஓணப்புடவை என்று அழைப்பர். தங்க நகைகளை அணிந்து கோயிலுக்குச் சென்று வருவர். இனிப்பு வகைகள் செய்து உறவினர்கள், நண்பர்களுக்குக் கொடுத்து மகிழ்வர். மேலும் அன்று ‘ஓணசத்யா’ என்ற விருந்து தடபுடலாக நடைபெறும். தலைவாழை இலை போட்டு, இருபத்தோரு வகையான கூட்டு செய்து பரிமாறுவார்கள். இதில், முக்கியமாக அடை பிரதமன், அவியல், எரி சேரி, உப்பேரி, உப்பிலிகறி, தோரன் போன்றவை அடங்கும்.  இளம் பெண்கள் ‘கைக்கொட்டுக்களி’ என்னும் நடனம் ஆடி மகிழ்வர். விஷ்ணு மற்றும் மகாபலி பற்றிய பாடல்கள் இடம் பெறும், இதில் 8, 10, 12.. என்று பெண்கள் இரட்டைப்படையில் சேர்ந்து ஏதேனும் பாடலை தேர்ந்தெடுத்து பயிற்சிசெய்து திருவோணத்தன்று ஆடி மகிழ்வர். அப்போது ஓணப் புடவை அணிந்திருப்பர், அதுபோல் தோட்டத்தில் ஊஞ்சல் கட்டி சிறியவர் முதல் பெரியவர் வரை ஆடி மகிழ்வர். ஆண்கள் கதகளி ஆட்டம், புலிக்களி ஆட்டம், நடைபெறும். இதைப் பார்க்க மக்கள் ஆங்காங்கே கூடுவர். படகுப் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்படும். கோயில்களில் விஷேச வழிப்பாடுகள் நடைபெறும். யானைகளுக்கு நெற்றிப்பட்டம் கட்டி அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வருவர். கேரள மாநிலமே விழாக் கோலம் பூண்டு ஒளி வெள்ளத்தில் மூழ்கி இருக்கும்.

Friday, September 05, 2014

உறைந்து போகும் கடல்கள்!


பூமியின் தென் துருவம் அண்டார்டிகா கண்டத்தில் அமைந்துள்ளது. அண்டார்டிகா பெரிய நிலப்பகுதி. ஆனால் வட துருவம் கடல் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு கடல் நீர் உறைந்து பனிக்கட்டியாக இருந்ததால் ஒருசமயம் அமெரிக்கக் கடற்படை வீரர்கள் நின்றபடி போட்டோ எடுத்துக் கொண்டார்கள். வட துருவப் பகுதிக்கு அவர்கள் சென்ற விதமே அலாதியானது. ஸ்கேட் என்னும் அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் (சப்மரீன்) 1959ம் ஆண்டில் வட துருவத்தையொட்டிய கடல் பகுதியில் நீரில் மூழ்கியபடி சென்று கொண்டிருந்தது. வட துருவ முனையை எட்டியதும் அந்த நீர்மூழ்கிக் கப்பலானது அங்கு கடலை மூடியபடி இருந்த உறைபனிக் கட்டியைப் பொத்துக்கொண்டு மேலே வந்தது. கடலை மூடியிருந்த பனிக்கட்டியின் தடிமன் சுமார் 2 அடி அளவுக்கே இருந்ததால் பனிக்கட்டியைப் பொத்துக்கொண்டு மேலே வருவது பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. பனிக்கட்டியைப் பொத்துக்கொண்டு வட துருவத்துக்குச் சென்ற முதல் நீர்மூழ்கிக் கப்பல் அதுவே. 

இதிலிருந்து ஒன்று தெரிகிறது. கடல் பனிக்கட்டியால் மூடப்பட்டாலும் அந்தப் பனிக்கட்டிக்கு அடியில் கடலானது கடலாகத்தான் இருக்கும். கடலின் மேற்புறம் பனிக்கட்டியால் மூடப்படும்போது அங்கு மேலிருந்து அடிமட்டம் வரை கடல் நீர் உறைந்து போய்விடுவதில்லை. இது இயற்கையில் அதிசயங்களில் ஒன்று. துருவப் பகுதியில் குளிர் நிலைமை பூஜ்ய டிகிரிக்கும் மிகக் குறைவாக இருக்கலாம். ஆனால் கடல் நீரை மூடி நிற்கும் பனிக்கட்டியானது வெளியே நிலவும் குளிர் அடியே இருக்கும் நீரைப் பாதிக்காதபடி தடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.குளிர்காலம் கடுமையாக இருந்தால் அமெரிக்காவின் வடஎல்லையில் உள்ள பெரிய ஏரிகளும் உறைந்து போவதுண்டு. இங்கிலாந்தில் லண்டன் நகரில் தேம்ஸ் நதி உறைந்து போனதுண்டு.ஆர்ட்டிக் பகுதியில் கடல் நீர் உறைந்தாலும் உறைந்த பனிக்கட்டிக்கு அடியில் கடல்வாழ் விலங்குகள் பாதிக்கப்படுவதில்லை. அதேபோல ஆர்ட்டிக் பகுதியில் வாழும் பிரபல துருவக் கரடிகளும் இடம்பெயர்ந்து விடுவதில்லை.துருவக் கரடிகளுக்கு ஒரு வகை சீல்தான் பிரதான உணவு. சீல்கள் பனிக்கட்டிக்கு அடியில் உள்ள நீரில் வாழ்பவை. நீருக்குள் வாழும் மீன்கள் போன்றவை நீரில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக்கொள்ளும். ஆனால் சீல்கள் அவ்வப்போது நீருக்குள்ளிருந்து வெளியே வந்து காற்றை சுவாசிப்பவை. பெரிய பரப்பளவை பனிக்கட்டி மூடியிருந்தாலும் சீல்கள் தங்களது நகங்களால் உள்ளே இருந்தபடி தலைக்கு மேலே உள்ள பனிக்கட்டியில் ஓட்டை போட்டுவிடும். பனிக்கட்டியில் போட்ட ஓட்டைகள் வழியே அவ்வப்போது தலையை நீட்டி காற்றை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றுவிடும்.சீல்கள் போட்ட ஓட்டைகளுக்கு அருகே துருவக் கரடிகள் காத்துக் கொண்டிருக்கும். சீல்கள் தலை காட்டியதும் ஒரே பாய்ச்சலில் சீல்களைப் பிடிக்க முயற்சி செய்யும். சீல்கள் ஒரு கணம் ஏமாந்தால் துருவக் கரடிகள் அவற்றைக் கவ்வி உணவாக்கிக் கொள்ளும்.

துருவப் பகுதி குறித்து கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் அங்குதான் ஐஸ்பெர்க் எனப்படும் பனிக்கட்டி மலைகள் தோன்றுகின்றன. கிரீன்லாந்து எனப்படும் பெரிய நிலப்பகுதி துருவப் பகுதியில்தான் உள்ளது. கிரீன்லாந்தின் 81 சதவிகிதப் பகுதி பனிக்கட்டியால் மூடப்பட்டது. இந்த வட்டாரத்தில் மேலும் சில தீவுகளும் உள்ளன. இவையும் பனிக்கட்டியால் மூடப்பட்டவை.குளிர் காலத்தில் மேலும் மேலும் பனிக்கட்டிகள் சேருகின்றன. அவ்வித நிலையில் கரையோரமாக உள்ள பனிக்கட்டிப் பாளங்கள் பிதுங்கிக் கொண்டு கடலில் வீழ்ந்து மிதக்க ஆரம்பிக்கின்றன. இயல்பாக இவை தெற்கு நோக்கி அதாவது அட்லாண்டிக் கடலை நோக்கிச் செல்ல முற்படுகின்றன.மிதக்கும் பனிக்கட்டிகள் வடிவில் பிரமாண்டமானவை. இவற்றை மிதக்கும் பனிமலைகள் என்றே கூற வேண்டும். மிகுந்த எடை காரணமாக மிதக்கும் பனி மலைகளின் பெரும்பகுதி கடல் நீரில் மூழ்கியிருக்கும். சிறு பகுதிதான் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். அதாவது பத்தில் ஒரு பங்குதான் கடல் நீருக்கு மேலே நீட்டிக் கொண்டிருக்கும். கப்பல்கள் மீது மிதக்கும் பனி மலைகள் மோத நேர்ந்தால் ஒரு பெரிய குன்று வந்து மோதியது போல கப்பல் மூழ்க வேண்டியதுதான்.உடையவே உடையாது என்று வருணிக்கப்பட்ட டைட்டானிக் கப்பல் மீது மிதக்கும் பனிமலை மோதியபோது அந்தக் கப்பலில் இருந்த பயணிகளில் 1500 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் 1912ம் ஆண்டில் நிகழ்ந்தது. அந்தக் காலத்தில் ராடார் என்ற கருவி கிடையாது. ஆகவே எதிரே மிதக்கும் பனிமலை வந்ததை கப்பல் மாலுமிகளால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. இப்போதெல்லாம் எல்லா கப்பல்களிலும் ராடார் கருவிகள் உள்ளன. கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் இருந்தாலும் மிதக்கும் பனிமலைகள் இருப்பதை இந்தக் கருவிகள் கண்டுபிடித்துக் கூறிவிடும்.வட அமெரிக்கக் கண்டத்துக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் அட்லாண்டிக் கடலின் வடபகுதியானது கப்பல் போக்குவரத்து அதிகம் உள்ளதாகும். மிதக்கும் பனிமலைகள் எங்காவது தென்படுகின்றனவா என்று வானிலிருந்து கண்காணித்து தகவல் கூறும் ஏற்பாடும் இப்போது உள்ளது.மிதக்கும் பனிமலைகள் மேலும் மேலும் தெற்கு நோக்கி வரும் போது சூரிய வெப்பம் காரணமாக உருகிக் கடல் நீரில் கரைந்து விடும். கடல் நீரில் மிதந்து வந்தாலும் மிதக்கும் பனிமலை முழுவதும் உப்பு இல்லாத நல்ல நீராகும்.அண்டார்டிகா சுற்றியுள்ள கடலிலும் இவ்விதம் கடல் நீர் பனிக்கட்டியால் மூடப்படுகிறது. அங்கும் நிறைய பனிமலைகள் தோன்றுகின்றன. அவை வடக்கு நோக்கி வருகின்றன. ஆனால் அவை நடமாடும் கடல் பகுதிகளில் கப்பல் போக்குவரத்து அதிகமில்லை.

என்.ராமதுரை

சங்கடம் உண்டாகும்போது உதவுவது எது?

 
ஏரண்டகர் என்று ஒரு ரிஷிக்குப் பெயர். ‘ஏரண்டம்’ என்றால் ஆமணக்கு. ஆமணக்குக் கொட்டையிலிருந்துதான் விளக்கெண்ணெய் எடுப்பது. இந்த ரிஷியின் பெயருக்கு ‘விளக்கெண்ணெய் சாமியார்’ என்று அர்த்தம். கேலிப்பெயர் மாதிரி த்வனிக்கிறது. மஹான்கள் தங்களுக்கு ஊரும் பெயரும் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். அநாமதேயமாகக் கிடப்பார்கள், திரிவார்கள். ஜனங்கள் அவர்களைப் போற்றிப் பட்டம் கொடுத்தாலும் சரி, தூற்றிப் பரி ஹாஸப் பேர் வைத்தாலும் சரி, இரண்டும் அவர்களுக்கு ஒன்றுதான்.
 
ஏரண்டகருக்கு அப்பா, அம்மா வைத்த பெயரென்னவோ யாருக்கும் தெரியாது. ஏரண்டகர் என்பது ஜனங்களாக வைத்த பெயர்தான். அதற்குக் காரணம் உண்டு. கும்பகோணத்துக்கு மேற்கே இரண்டு மைலில் ஸ்வாமி மலைக்குப் போகிற வழியில் கொட்டையூர் என்று ஒரு ஸ்தலம் இருக்கிறது. கொட்டையூர் என்று ஏன் பேர்? எத்தனையோ கொட்டைகள் இருகின்றன. இருந்தாலும் கொட்டை என்று இரண்டுதான் முக்கியமாக சொல்லப்படுகின்றன. ஒன்று ஆத்மார்த்தமானது - ருத்ராக்ஷத்தைக் கொட்டை என்றே சொல்வார்கள். சிவ தீகை்ஷ செய்து கெண்டு ருத்ராக்ஷம் போட்டுக் கொண்டிருப்பவர்களைக் ‘கொட்டைக்கட்டி’ என்பார்கள். இந்தக் கொட்டை மனஸில் சேருகிற அழுக்குகளை எடுப்பது.  

இன்னொரு கொட்டை வயிற்றில் சேருகிற அழுக்குகளை, கெடுதல்களை எடுக்கிற ஆமணக்குக் கொட்டை. முத்துக்கொட்டை, கொட்டை முத்து என்றும் சொல்வார்கள். அதை ஆட்டித்தான் விளக்கெண்ணெய் எடுப்பது. வயிற்று அடைசலைப் போக்குவதோடு இன்னும் பல தினுசிலும் தேஹாரோக்யத்துக்குப் ப்ரயோஜனப்படுவது. வயிறு லேசாகி, தேஹம் ஆரோக்கியமாக இருந்தால்தான மனஸும் லேசாகி ஈச்வரபரமாக நிற்கும். ஆனதால் ஆமணக்கு ஆத்மார்த்தமாகவும் நல்லது செய்வதே. ருசியும் வாஸனையும் ஸஹிக்காவிட்டாலும் ‘நல்ல ருசி, நல்ல வாசனை’ என்று நாம் தின்றதுகளால் ஸங்கடம் உண்டாகும்போது உதவுவது ஆமணக்குத்தான்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

திட்டக் கமிஷனைக் கலைப்பது சரியா?

 
பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்று தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் திட்டக் கமிஷனைக் கலைத்துவிட அரசு முடிவு செய்துவிட்டது என்பதான அறிவிப்பு. அதற்கு அடுத்த நாள் திட்டக் கமிஷனுக்குப் பதிலாக வேறு எந்த மாதிரி அமைப்பை ஏற்படுத்தலாம் என்பது பற்றி பொது மக்களின் கருத்தை வரவேற்பதாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. திட்டக் கமிஷனுக்கு என்ன வந்தது? 
 
1950-ல் தான் பிரதமர் நேரு திட்டக் கமிஷன் என்ற அமைப்பை உருவாக்கி அதன் நோக்கங்கள் என்ன என்பதையும் அறிவித்தார். இந்தியாவின் முன்னேற்றத்துக்குப் பொருளாதார வளர்ச்சி அவசியம் என்றும் அந்தப் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பெருக்க வேண்டும் என்றும் நேரு தெரிவித்தார். அதன்படி சாலை வசதிகள், போக்குவரத்துத் துறையில் முன்னேற்றம், இந்தியாவிலுள்ள அனைத்துத் துறைமுகங்களிலும் மேம்பாடுகள், தொழில் துறைக்குத் தேவையான மின்சார உற்பத்தியை அதிகப்படுத்துவது, விவசாய அபிவிருத்திக்கு நதிநீரின் வளத்தை முற்றிலுமாகப் பயன்படுத்தத் தேவையான இடங்களில் அணைகள் கட்டுதல் - இந்த மாதிரி பல அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் குறிக்கோளுடன் திட்டங்கள் தீட்டி அந்தத் திட்டங்களை நிறைவேற்றும் பணிகளைத் தொய்வில்லாமல் செயல்படுத்துதல் - இவை திட்டக் கமிஷனின் முக்கியமான பொறுப்புகள். இந்தத் திட்டத்தின்படி பஞ்சாபில் கட்டி முடிக்கப்பட்ட பக்ராநங்கல் அணையைப் பார்த்துவிட்டு நேரு இவைதான் நான் வணங்கும் தெய்வம்" என்று பெருமிதப்பட்டார்.
 
சென்ற 64 ஆண்டுகளில் இதுவரை 12 ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இப்போது 13வது ஐந்தாண்டுத் திட்டத்தின் மத்தியில் நாம் இருக்கிறோம். இந்தத் திட்டக் கமிஷன் உறுப்பினர்களாக கடந்த காலங்களில் பல பொருளாதார வல்லுநர்களும், பொறியாளர்களும், விவசாயத் துறையைப் பற்றி நன்கு அறிந்த பல அறிஞர்களும் இருந்திருக்கிறார்கள்.
 
முன்னாள் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கும் ஒரு காலகட்டத்தில் திட்டக் கமிஷன் அங்கத்தினராக இருந்தார். திட்டக் கமிஷனின் செயல்பாடுகளில் இதுவரையில் பெரும் குறைகள் இருந்ததாகச் சொல்ல முடியாது. அதற்கு மாறாக திட்டக் கமிஷன் வகுத்த பல முன்னேற்றத் திட்டங்களினால்தான் இந்தியப் பொருளாதார அடிப்படையிலும் தொழில் மற்றும் விவசாய வளர்ச்சியிலும் நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. நாட்டில் மின்சார உற்பத்தி அதிகமாக இருக்கிறது. பல துறைமுகங்கள் நல்ல முறையில் சீர்படுத்தப்பட்டுச் செயல்படுகின்றன. தகவல், தொழில் நுட்பம், சட்டத் துறை நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது.இந்த 64 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட 12 ஐந்தாண்டு திட்டங்களுக்கான செலவு செய்யப்பட்ட தொகை சுமார் 200 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம். திட்டங்களை நிறைவேற்றும்போது ஏற்படும் சேதாரங்களைத் தள்ளிவிட்டுப் பார்க்கும் போது நம் நாட்டின் செல்வம் சுமார் 150 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.திட்டக் கமிஷனைக் கலைக்கும் முடிவு சரியான தல்ல. இன்றைய அரசு பழைய ஆட்சியின் ஒரு அம்சம் என்று திட்டக் கமிஷனைக் கருதினால் புதிய அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அதன் அங்கத்தினர்களாக அரசியல்வாதிகள் யாரும் இருக்கக்கூடாது. தொழில்துறையின் முன்னேற்றத்தில் சாதித்தவர்கள், பொருளாதார நிபுணர்கள், வெவ்வேறு துறைகளில் திறன் பெற்ற பொறியாளர்கள், விஞ்ஞானிகள் இப்புதிய அமைப்பில் இடம்பெற வேண்டும். ஐந்து ஆண்டு காலம் என்பதற்குப் பதில் ஒவ்வொரு ஆண்டுக்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டும். எந்த மாதிரி திட்டங்கள்? அதற்கான மதிப்பு என்ன? எந்தக் காலகட்டத்துக்குள் அவை நிறைவேற்றப்படும் என்பதையெல்லாம் தெளிவாகத் தெரியப்படுத்த வேண்டும். ஆண்டின் இறுதியில் இதைப் பற்றிய ஒரு நிறைவேற்ற அறிக்கை வெளியிட வேண்டும். குறைகள் இருந்தால் அதற்கான காரணங்களைத் தெரியப்படுத்த வேண்டும்.

Wednesday, September 03, 2014

தேவைதானா இந்த ‘ஐஸ் பக்கெட்’?

ஐஸ் பக்கெட் சேலஞ்ச்  இணையதளத்தில் இதுதான் வைரல் ஹிட். அமெரிக்க அதிபர் ஒபாமா தொடங்கி நம் ஊர் ஹன்சிகா, சானியா மிர்ஸா வரை ஆளாளுக்குப் பக்கெட்டும் கையுமாகத் திரிந்தார்கள். ஏன்?
 
ஒரு வாளி நிறைய குளிர்ந்த அல்லது ஐஸ்கட்டி நிறைந்த நீரை எடுத்து, அப்படியே தலையில் கவிழ்க்கவேண்டும். அதை வீடியோவும் எடுத்து சமூக வலைத் தளங்களில் வெளியிடவேண்டும். ''நான் ஊத்தியாச்சு. நீ போட்டிக்கு ரெடியா? டீலா, நோ டீலா?' என்று நண்பர்களிடம் சவால் விட வேண்டும். சவாலை ஏற்றுக் கொண்டவர்கள், வெற்றிகரமாக ஒரு பக்கெட் குளிர்ந்த நீரைத் தலையில் ஊற்றிக்கொண்டு அடுத்தவர்க ளிடம் சவாலை பாஸ் செய்ய வேண்டும். இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு வெற்றிகரமாக பக்கெட்டைக் கவிழ்த்தவர்கள் 'அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்கெலரோசிஸ்’ (ஏ.எல்.எஸ்) என்ற நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு 10 டாலர் நன்கொடையாகத் தர வேண்டும். சவாலை ஏற்காமல் அப்பீட் ஆகிறவர்கள், 100 டாலர் நன்கொடை தரவேண்டும். இதுதான் இந்தப் போட்டியின் விதிமுறை.
 
உலகின், பெரும் பணக்காரர் பில்கேட்ஸ் முதல் நம் ஊர் பாடகி ஸ்ரேயா கோஷல் வரை இந்த சேலஞ்சை வெற்றிகரமாகக் கடந்திருக்கிறார்கள்.

அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்கெலரோசிஸ்
 
'நம் மூளையில் கோடிக்கணக்கான நரம்பு செல்கள் இருக்கின்றன. இதில் மோட்டார் நியூரான் என்பதும் ஒன்று. இது மூளையில் இருந்து முதுகெலும்புத் தண்டுவடம் வழியாக தசைகளைச் சென்றடைகிறது. இந்த செல் கொஞ்சம் கொஞ்சமாகச் செயல் இழந்து அதன் இயக்கத்தை நிறுத்தும் போது உடலின் இயக்கம் பாதித்து, தசைகளை முடக்குகிறது.

இந்த நோயை 1869ல் ஃபிரான்ஸைச் சேர்ந்த ஜோன் மார்ட்டின் சோர்கோட் கண்டறிந்தார். இந்தப் பாதிப்பு ஏற்பட்டால், கைகள், கால்கள் தளர்ச்சியடையும். நடையில் தடுமாற்றம், பேசுவது மற்றும் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். தலையைக்கூட உயர்த்த முடியாத நிலை ஏற்படும்.

இதில் இரண்டு வகை உள்ளன. மூளையில் 'முகுளம்’ என்ற பகுதியைத் தாக்குவது ஒருவகை. இந்த பாதிப்பு இருந்தால் மூன்று ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழ்வது கடினம். சீனாவின் மாசெதுங்குக்கு இந்த பாதிப்பு இருந்தது. மற்றொன்று முதுகுதண்டு வடத்தைப் பாதிப்பது. இவர்கள் உரிய மருத்துவ வசதி இருந்தால் நீண்ட காலத்துக்கு உயிர் வாழலாம். புகழ்பெற்ற விஞ்ஞா னியான ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு இந்த வகை நோய் இருக்கிறது.

 

இது ஏன் ஏற்படுகிறது என்று கண்டறியப்படவில்லை. ஒரு சிலருக்கு மரபியல் ரீதியாக இந்தப் பாதிப்பு வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மோட்டார் நியூரான் செயல் இழப்பைத் தடுத்து, மீண்டும் ஆரோக்கியமான நிலையை ஏற்படுத்த தற்போதைக்கு மருந்து இல்லை. ஆனால், ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வரும்போது, நியூரான் செயல் இழப்பைத் தாமதப்படுத்த முடியும்.
இந்தியாவில் இந்த நோய் பாதிப்பு மிகக்குறைவு. பாதிப்பு இல்லை என்றே சொல்லலாம். புற்றுநோய் உள்ளிட்ட மிகப் பெரிய அளவில் உயிர்க் கொல்லிகளுக்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள அதிக அளவில் நிதி கிடைக்கிறது. ஆனால், ஒரு சிலரையே பாதிக்கும் இதுபோன்ற நோய்களைத் தடுக்க மருந்து கண்டுபிடிக்க அந்த அளவுக்கு நிதி கிடைப்பது இல்லை. அதனாலேயே ஐஸ் பக்கெட் போன்று நடத்தி விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டி உள்ளது.


 

Sunday, August 31, 2014

ஹென்றி ஃபோர்டு

எல்லோருக்குமே காரில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், இவருக்கோ எல்லோரும் காரில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை! அப்படிப்பட்ட ஆசைதான் இவர் மிகப் பெரிய கார் நிறுவனத்தை உருவாக்க காரணமாக இருந்தது. ஹென்றி ஃபோர்டு எனும் அந்த மனிதர் இந்தச் சாதனையை செய்வதற்குமுன், தாண்டிவந்த தடைகள் பல ஆயிரம்.

ஹென்றி ஃபோர்டு 1863-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள மிச்சிகனில் பிறந்தார். சிறுவயதில் இவரது தந்தை, பண்ணையில் வேலைக்குச் செல்வது பிடிக்காமல், இவரே ஒரு மோட்டார் கம்பெனியில் வேலைக்குச் சென்றார். மோட்டார் கம்பெனியில் வேலை பார்க்க உனக்குத் தகுதியில்லை என ஃபோர்டை சிறிது காலத்திலேயே அந்த நிர்வாகம் வெளியேற்றியது. அடுத்தடுத்த வாய்ப்புகளும் இவருக்குத் தோல்வியைத்தான் கொடுத்தன. ஆனால், ஃபோர்டுக்கு இயந்திரங்கள் மீதும், மோட்டார்கள் மீதும் இருந்த காதல் குறையவே இல்லை.


ஒரு கண்காட்சியில் பெட்ரோலில் இயங்கும் நீராவி பம்பை பார்த்தார். இதனை ஏன் வாகனங்களில் பொருத்தக்கூடாது என்று யோசித்தார். உதிரிபாகங்கள், பழைய உலோகங்களையும் கொண்டு அவரது வீட்டிலேயே ஒரு வாகனத்தை வடிவமைத்தார். இந்த வாகனத்தை ஓட்டி பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்க, கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து வீட்டின் சுவற்றை இடித்துத் தள்ளி வேகமாகத் தன் வாகனத்தை இயக்கினார்.

எளியவர்களுக்கும் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் டி மாடல் காரை தயாரித்தார். அமெரிக்காவில் குறைந்த விலையில் கார்களை விற்று, கார் இல்லாதே அமெரிக்கரே இல்லை என்ற நிலையை உருவாக்க முதல் முயற்சியை வெற்றிகரமாக எடுத்தார்.

கார் தயாரிப்பில் அடுத்தடுத்து பலபேர் சேர்ந்து ஒவ்வொரு பகுதியாக இணைக்கும் அதிவேக அசெம்ப்ளி லைன் முறையின் மூலம் பல லட்சம் கார்களை உருவாக்கி சாதித்தார். இதன் மூலம் மற்ற நிறுவனங்களைவிட குறைந்த விலையில், குறைந்த நேரத்தில் கார்களை தயாரித்து அளிக்க முடிந்தது.

கோடி கோடியாக பணத்தை சேர்த் தவர், ஃபோர்டு அறக்கட்டளையை நிறுவி மக்களுக்கு உதவினார். உங்கள் கனவும் விடாமுயற்சியும் பலமாக இருந்தால் ஹென்றி ஃபோர்டு மாதிரி, நீங்களும் தடைகளைத் தாண்டி வரலாற்றில் நிலைத்து நிற்கலாம்!

மோடியின் 100 நாட்கள்!

மோடியின் தலைமையிலான அரசின் 100 நாள் செயல்பாட்டைப் பற்றி இப்போது எல்லோரும் பேசுகிறார்கள். ஓர் அரசாங்கத்தின் செயல்பாடுகள் பற்றி சரியானதொரு முடிவினை எடுக்க 100 நாட்கள் என்பது நிச்சயம் போதாது. மோடி அரசின் செயல்பாடுகள் பற்றி சொல்லப்படுகிற கருத்துகள் அனைத்தும் தனிமனிதர்களின் விருப்பு, வெறுப்பு அடிப்படையிலேயே  அமைந்திருக்கிறது. விருப்பு, வெறுப்புகளைத் தாண்டி மோடி அரசின் செயல்பாட்டை கணிப்பதே இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். 

மோடி பதவியேற்றபின், கடந்த மூன்று மாத காலத்தில், நாட்டின் ஜிடிபி வளர்ச்சி மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. நிதிப் பற்றாக்குறை கணிசமாகக் குறைந்திருக்கிறது. பணவீக்கமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. தொழில் துறை முக்கியஸ்தர்கள் பலரும் இனி வளர்ச்சி நிச்சயம் என்று நம்பிக்கையாக இருக்கிறார்கள்.  இதுநாள் வரை கிடப்பில் கிடந்த பல மசோதாக்களை சட்டமாக மாற்றும் நடவடிக்கைகள் வேகமாக நடக்கின்றன. அதிகார வர்க்கத்துக்கு முன்னுரிமை தருவதன் விளைவாக, அரசியல்வாதிகளின் முக்கியத்துவம் குறைந்திருக்கிறது. அரசு நிர்வாக மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார் மோடி.
 
கடந்த 100 நாட்களில் இப்படி பல நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும், நலிந்துகிடக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்த  இவை மட்டுமே போதாது. நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்த தெளிவான திட்டம் எதையும் இந்த அரசு இதுவரை முன்வைக்கவில்லை. உள்கட்டமைப்புத் துறையில் குறைந்தபட்சமாக செய்துமுடிக்கப்பட வேண்டிய வேலைகள்கூட ஆரம்பித்ததற்கான அறிகுறிகள் தென்படவில்லை. விவசாயத் துறை யில் உற்பத்தி பெருக்குவதாகட்டும், தொழில் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதாகட்டும், அடுத்த ஓராண்டு காலத்திலாவது பெரிய மாற்றம் ஏற்படுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. என்றாலும் இனிவரும் நாட்களிலும் இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் இப்படியே இருந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. கடந்த ஆட்சியின் மோசமான நிர்வாகத்தினால் சீர்குலைந்துபோன பொருளாதாரத்தை சீர்செய்துவிட்டுதான் மீண்டும் வளர்ச்சியைக் கொண்டுவர வேண்டிய நிர்பந்தம் இந்த அரசாங்கத்துக்கு இருப்பதை மறுக்க முடியாது.

நாட்டை நிச்சயம் முன்னேற்றுவார் என்கிற மக்களின் நம்பிக்கையை மோடி இன்னும் இழந்துவிடவில்லை. ஓர் அரசாங்கம் மக்களின் நம்பிக்கையிலேதான் நடக்கிறது என்று கூறும் மோடி, மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் நம்பிக்கை அவநம்பிக்கையாக மாற வெகுகாலமாகாது என்பதை உணரும் நேரமிது!  

சாம்சங் கேலக்ஸி ஆல்பா!

ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட் போனான     ‘ஐபோன் 6’-ஐ  வரும் செப்டம்பர் முதல் வாரம் வெளியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிைலயில் ஆப்பிளுக்கு கடும் போட்டியைத் தந்துவரும் சாம்சங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் போனான ‘சாம்சங் கேலக்ஸி ஆல்பா'வை (Samsung Galaxy Alpha)’ வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

மெட்டாலிக் லுக்கில் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும் இந்த ‘கேலக்ஸி ஆல்பா’ 4.7 இன்ச் அகலமான ‘SUPER AMOLED’ தொடுதிரையைக் கொண்டுள்ளது. இந்த ‘SUPER AMOLED’ டிஸ்ப்ளே 720x1280 பிக்சல்ஸ் (~ 312 pixels per inch) திறனைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஆல்பா Octa-core processor (1.3 GHz Cortex-A7 + 1.8GHz Cortex-A15) மற்றும் Exynos 5 Octa 5430 chipset ஆகிய அதிவேக பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. மேலும், 2GB ரேமை கொண்டு இயங்கும் சாம்சங் கேலக்ஸி ஆல்பாவின் இன்டர்னல் மெமரி 32GB ஆகும். இதுதவிர, ‘Mali-T628MP6’ என்ற கிராபிக்ஸ் பிராசஸரும் சாம்சங் கேலக்ஸி ஆல்பாவில் அடங்கும்.


பேட்டரி வசதியைப் பார்க்கும்போதும் சாம்சங் கேலக்ஸி ஆல்பா 1860mAH பேட்டரியைக் கொண்டுள்ளது. 12 மெகா பிக்ஸல் LED ப்ளாஷ் வசதியோடு வரும் பின்புற கேமராவையும் 2.1 மெகா  பிக்ஸல் முன்புற கேமராவையும் கொண்டுள்ள இந்த சாம்சங் கேலக்ஸி ஆல்பா மூலம் 2160p-ல் வீடியோவை ரிக்கார்டு செய்யலாம்.

சாம்சங் கேலக்ஸி ஆல்பா ஆண்ட்ராய்டு 4.4-ல் இயங்குகிறது. சாம்சங் நிறுவனத்தின் பிரத்யேகமான UI ‘TouchWiz’-ம் இந்த      OS-ல் அடங்கும். இதயத் துடிப்பினை அளவெடுக்கும் ‘Heart-rate monitor’ மற்றும் ‘Finger Print Scanner’ சாம்சங் கேலக்ஸி ஆல்பாவின் சிறப்பம்சங்கள்.

LTE நெட்வொர்க்கில் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ள சாம்சங் கேலக்ஸி ஆல்பா, குறைந்த 6.7mm அடர்த்தியும் 115g எடையும் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஆல்பா சுமார் ரூ.42,000 என்கிற விலையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 செ.கிஸோர் பிரசாத் கிரண்

Saturday, August 30, 2014

அருள்வாக்கு பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு


‘நமஸ்கார மாஹாத்ம்யம்’ ஸவிஸ்தாரமாகச் சொல்லிவிட்டேன். இந்த ‘டாபிக்’ எதற்காக எடுத்துக் கொண்டேனென்றால், வர வர ஜனங்களிடம் விநய குணம், பணிவு, பவ்யம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. அப்படி ரொம்ப வருத்தப்படும்படியாக இன்றைக்கு ஒருத்தர் ஒன்று சொன்னார். அதைப் பற்றியும், அதற்கு மாற்று மருந்து பற்றியும் யோஜனை போயிற்று. அதைத்தான் தெரிவிக்க நினைத்துப் பேசினேன்.
 
என்னவென்றால்: ஸமத்வம், ஸ்வதந்திரம், ஸ்வய மரியாதை என்றெல்லாம் ரொம்பவும் முழக்க ஆரம்பித்த நாளாகவே விநய ஸம்பத்துக்கு ஹானி ஏற்பட ஆரம்பித்து இப்போது ஒரே முரட்டுத்தனத்திலும் அடங்காமையிலும் கொண்டுவிட்டிருக்கிறது. Right, right என்று கிளம்பியதில் ஒரே fight ஆகியிருக்கிறது! ஸமூஹ வாழ்க்கை, பொருளாதாரம் என்று பார்த்தால் இந்தப் புதுக் கொள்கைகளிலும் ஓரளவு ந்யாயம் இல்லாமலில்லை. இதை ஆகே்ஷபிக்காமல் ஒப்புக் கொள்கிறேன். ஆனாலும், எதற்கும் ஒரு அளவு, வரம்பு இல்லையா? அந்த அளவு மீறாமல் வரம்பு கட்டிப் புதுக் கொள்கைகளை அமல்படுத்தினால் எல்லாம் அதனதன் இடத்தில் சீராக இருந்து, இப்போதுள்ள ஓயாத வர்க்கப் போராட்டங்கள் ஓய்ந்து லோகத்தில் சாந்தியும் ஸௌஜன்யமும் ஐக்கியமும் ஏற்படும்.
 
எப்படி அளவுபடுத்துவது, வரம்பு கட்டுவது என்றால் ஸமூஹம் முழுவதிலும் மறுபடி விநயஸம்பத்தை விருத்தி பண்ணுவதால்தான். பொருளாதாரம் மட்டும் ஒரு வாழ்க்கைக்குப் பூர்ணத்வம் தந்துவிடுமா என்ன? ஒரு நாளும் இல்லை. அருளாதாரத்தைப் பிடித்து அதனால் இதை அளவுபடுத்தினால்தான் பூர்ண வாழ்வின் நிறைவு ஏற்படும். அந்த அருளாதாரத்தைப் பிடிக்க வழி விநயந்தான். விநயத்தை வர வழைக்க வழி? அது வேண்டும் என்ற ‘பேஸிக்’ எண்ணத்தோடு பெரியவர்களாக இருக்கப்பட்டவர்களைத் தேடிப் போய் விழுந்து நமஸ்காரம் பண்ணுவதுதான். இந்த க்ரியையே ‘பேஸிக்’காக, பேஸ்மென்டாக அடிமட்டத்தில் இருந்ததைப் பெரிய மாளிகையாக எழுப்பிக் கொடுத்து விடும்.
 
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Thursday, August 28, 2014

கணபதியே சரணம்!

 
'கணபதி வழிபாடு கைமேல் பலன்’ என்பது அவ்வையின் வாக்கு. ஆமாம்! ஒரே ஒரு கணம், கணபதியை மனதால் தியானித்து முறையிட்டால் போதும்; நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும். வேண்டியது வேண்டியபடி நிறைவேறும்.
 
நாம் அவரைத் தேடிப் போக வேண்டியது இல்லை. அவரே, நம்மை நாடி வந்து அருளும் பொருட்டு, நாம் இருக்கும்- புழங்கும் இடங்களுக்கு அருகிலேயே... தெருக்கோடியிலும், மரத்தின் அடியிலும், நதிகளின் கரைகளிலுமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.
 
அவரது அருட்கருணையை விளக்கும் ஞானநூல்கள் சில,  'இன்னின்ன இடங்களில் அருளும் பிள்ளையாரை வழிபட இன்னின்ன பலன்கள் கிடைக்கும்’ என்றும் விவரிக்கின்றன:
 
அரச மரத்தடி விநாயகரை வணங்கினால், குழந்தைப் பேறு வாய்க்கும். வன்னி மரத்தடியில் அருளும் விநாயகரை வழிபட கிரக தோஷங்கள் நீங்கும். ஆலமரத்தடி விநாயகரைத் தரிசித் தால் தீய சக்திகள் விலகியோடும். வேப்ப மரத்தடி விநாயகரை வழி படுவதால் நாள்பட்ட நோய்கள் அகன்று நிம்மதி கிடைக்கும். ஆலயங்களின் கோஷ்டத்தில் அமர்ந்திருக்கும் விநாயக ரூபத்தை வழிபட்டால், சகல தெய்வங்களின் திருவருளும் ஒருங்கே கிடைக் கும் என்கின்றன புராணங்கள். இந்த வரிசையில், ஸ்ரீதோரண விநாயகரை வணங்கி வழிபட்டால், 'ருணம்’ எனும் கடன் தீரும்!
 
யார் இந்த தோரணர்? இவர் எங்கு அமர்ந்து அருள்பாலிப்பார்?!
 
சக்தி தேவியர் தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத் தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, அம்பிகைக்கு வலப் புறமாக சந்நிதி கொண்டிருப்பார். ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச- பாசமும், கீழ் இரு கரங்களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், ஸ்ரீதோரண கணபதி. ஸ்ரீதோரண கணபதி, தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள ருணம் எனும் கடன்களை தீர்த்து அருள்கிறார் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன.

சக்தி மேகல்வாசம் சகல கல்யாண மூர்த்திம்
அங்குச பாச ஹஸ்தம் கிரீட மகுட தாத்ரீம்
அஷ்ட லக்ஷ்மீ சகிதம் தோரண கோபுர நேத்ரம்
ருணமோசன கணேசம் நௌமி ஸதா ப்ரசன்னம்!
மூல ஆலயத்திலிருந்து பார்க்கும்போது, இவர் அமர்ந்திருக்கும் இடம் பிரம்ம ஸ்தானமாக அமைவதால், கடனைத் தீர்ப்பதில் இவர் கறாராக இருக்கிறார். 

தாமரை பீடத்தில் அமர்ந்தவராக, அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமிகடாட்சத்தைக் கொடுக்கிறார்!

தோரண கணபதியை வழிபடும்முறை:

மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று கடன்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும்.  இவற்றில் மானுட கடனைத் தீர்க்க, ஸ்ரீதோரண கணபதி வழிபாடு கை கொடுக்கும்.

செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை வழிபடலாம். இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ஆறு வாரங்கள்... குறிப்பிட்ட கிழமைகளில் ஸ்ரீதோரண விநாயகரைத் தரிசித்து, அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். அத்துடன் கணபதியின் மேகலை - பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐவகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும்.

ஸ்ரீதோரண கணபதி மந்திரம்:
 
'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.

மேலும், ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் தோரண கணபதி சந்நிதிக்குச் சென்று, அவருடைய சந்நிதிக்குப் பின்புறம் மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, ஐவகை பழங்கள் படைத்து, பிள்ளையார் துதிப் பாடல்களைப் பாடி, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், வராக் கடன்களும் விரைவில் வசூலாகும்.

கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தில் ஸ்ரீசாரதாம்பாள் சந்நிதியில் காப்பு கணபதியாக அருள்கிறார் ஸ்ரீதோரண கணபதி. தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வடதேசத்தில் வாரணாசி ஆகிய தலங்களில் தோரண கணபதி வழிபாடு உண்டு.

சென்னையில் குன்றத்தூர் முருகன் கோயில் (மலைக்கு) அருகில், திருநீர் மலை சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீசக்தி கார்த்தியாயினி ஆலயம். இங்கே கோபுரத்தின் அருகிலுள்ள தோரண வாயிலில் காப்பு தெய்வமாக அருள்கிறார் ஸ்ரீதோரணகணபதி.

இங்கே அம்பிகையைத் தரிசிக்க வரும் பக்தர்கள் ஸ்ரீதோரண கணபதியையும் வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள்.

இந்தக் கோயிலில் மாதம்தோறும் வளர்பிறை சதுர்த்தியில் மாலை 6 மணிக்கு, கடன் நிவாரண ஹோமம் மற்றும் விசேஷ பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெறுகின்றன. சங்கடஹர சதுர்த்தி திருநாட்களில், அன்று மாலை 6 மணியளவில்...வலம்புரிச் சங்கு மூலம் கணபதி பெருமானுக்கு பாலபிஷேகம் நடக்கும். அத்துடன்  விசேஷ மூலமந்திர திரிசதி நாம வழிபாடும் நடைபெறுகிறது. சாதாரண நாட்களிலும் இங்கு வரும் பக்தர்கள் விநாயகர் திருமுன் அமர்ந்து 'பிரசன்ன ஸ்துதி’யை பாராயணம் செய்து வழிபட்டுச் செல்கிறார்கள்.


 

Tuesday, August 26, 2014

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி வருகிறது. இதற்காக, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழகம் சார்பில் 'கணபதி தரிசனம்’ என்ற பெயரில் சென்னை, அண்ணாசாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளில் சில... உங்கள் பார்வைக்காக!

(விலை குறிப்பிடப்படாத சிங்க கணபதி, ஹேரம்ப கணபதி, ஏகரட்சக கணபதி, மும்முக கணபதி, சிருஷ்டி கணபதி உள்ளிட்ட 32 கணபதி சிலைகள் அடங்கியது ஒரு செட். இதன் விலை 5,71,725)

 

5)

Monday, August 25, 2014

சரியான பாத்திரத்தில் தான் சமைக்கிறீர்களா?

தினமும் சாப்பிடும் உணவு, சரிவிகிதத்தில் இருக்கிறதா, சத்தானதா என்று யோசிக்கும் நாம், அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள் சரியானவைதானா என்று யோசிப்பது இல்லை. அவசரகதியில் இதற்கெல்லாம் ஏது நேரம் என்று, சமைக்கவும் சாப்பிடவும் தொடங்குகிறோம். சமையலறையில் குக்கரில் தொடங்கி, கடாய், தவா, பால் பாத்திரம் எனச் நான் ஸ்டிக் பொருட்கள் நிறைந்துகிடக்கின்றன. மண் பானை, இரும்பு, ஈயச்செம்பு, பித்தளை சாமான்களை இனி அருங்காட்சியகத்தில்தான் பார்க்க முடியும் என்ற நிலை.  


 

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் நவீனமான பாத்திரங்களில் ஒளிந்து இருக்கும் ஆபத்துக்கள் என்ன, எந்த வகைப் பாத்திரங்கள் பாதுகாப்பான சமையலுக்குத் தேவை, அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம்?

மண் பாத்திரம் 

மண்பாத்திரங்களில் சமைக்கும்போது உணவின் மீது வெப்பம் மெதுவாக, ஒரே சீராகப் பரவுகிறது. மேலும், மண்பாத்திரங்களில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவியும், காற்றும் உணவில் ஊடுருவி, சரியான முறையில் சமைக்க உதவுகின்றன. இதனால், அதில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப்போன்ற தன்மையைப் பெறுகிறது. இதனால், சமைத்த உணவு பல மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். மண் பாத்திரத்தில் சமைக்கும்போது அதிக எண்ணெய் பயன்படுத்தத் தேவை இல்லை. உணவில் உள்ள  அமிலத்தன்மையைச் சமப்படுத்தும். உப்பு, புளிப்புச் சுவையுள்ள உணவுகளைச் சமைக்கும் போது, தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்தாது.  மண் பாத்திரங்களை, அவ்வப்போது கழுவி வெயிலில் காயவைத்துப் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

இரும்புப் பாத்திரம்
பல காலமாக சமையல் பாத்திரங்கள் செய்யப் பயன்படுத்தப்பட்டு வரும் இரும்பு, சமையலுக்கு ஏற்றது. இதில், சமைக்கும்போது வெப்பம் சீராகப் பரவுவதோடு, நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும். கொஞ்சம் இரும்புச் சத்து உணவோடு கலந்து உடலில் சேரும். ரத்தசோகையைக் குணப்படுத்தும்.  ஆனால், துவர்ப்புச் சுவையுடைய பொருட்களை இரும்புக் கடாயில் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். இரும்பு, துவர்ப்புச் சுவையுடன் வினை புரிந்து உணவுப்பொருள் கருப்பு நிறமாக மாறுவதுடன், சுவையும் வேறுபடும். விரைவில் கெட்டு விடவும் வாய்ப்புகள் அதிகம்.  இரும்புப் பாத்திரத்தில் சமைக்கலாமே தவிர, அதில் நீண்ட நேரம் உணவை வைக்கக் கூடாது. சமைத்து முடித்தவுடன் அதை வேறு பாத்திரத்துக்கு மாற்றிவிடுவது நல்லது.

வெண்கலப் பாத்திரம்
வெண்கலப் பாத்திரத்தில் சமைத்து உண்டால், உடல் சோர்வு நீங்கி, நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருப்பதை உணரலாம். இதில் சமைத்த பொருட்கள் சீக்கிரத்தில் கெட்டுப்போகாது.  ஆனால் வெண்கலப் பாத்திரத்தை சரியாகக் கழுவி, வெயிலில் காய வைத்துதான் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் நாம் அடுத்த முறை சமைக்கும்போது களிம்புப் படலம் உண்டாகி உணவின் தன்மையே நச்சாக மாறிவிடும். இதனால்தான் வெண்கலப் பானையில் வைத்த பொங்கல், சில சமயங்களில் நிறம் மாறிவிடுவதைக் காணலாம்.

செம்புப் பாத்திரம்
செம்புப் பாத்திரத்தில் சமைத்த உணவுக்குப் பித்த நோய், கண் நோய், சூதக நோய், சுவாசக் கோளாறுகள் போன்ற அனைத்தையும் குணமாக்கும் ஆற்றல் உண்டு. செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை வைத்திருந்தால் அதில் உள்ள நுண்ணுயிரிகள் எல்லாம் நீங்கிவிடும். 

ஈயப் பாத்திரம்
ஈயம், நம் உடலுக்கு உகந்ததல்ல. ஈயப் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவை உட்கொண்டால் வயிறு தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உண்டு. சளி, இருமல் இருப்பவர்கள் ஈயப் பாத்திரத்தில் சமைத்ததைத் தொடர்ந்து சாப்பிட்டால், வயிறு உப்புசம் ஏற்படலாம். ஈயத்துக்குப் பதிலாக வெள்ளீயப் பாத்திரங்கள் பயன்படுத்தலாம். நாம் காலங்காலமாகப் பயன்படுத்தி வந்த‌ ஈயச்சொம்பு என்பது வெள்ளீயத்தினால் செய்யப்பட்டது. இந்தக் கலவைதான், ஈயச்சொம்பில் சமைக்கும் ரசம் நல்ல மணத்துடன் இருப்பதற்குக் காரணம்.

பீங்கான் பாத்திரம்
பீங்கானும் காலங்காலமாகப் பயன்பாட்டில் இருப்பதுதான். பீங்கான் சமைப்பதற்கு ஏற்றது என்றாலும், பீங்கான் பாத்திரம் உயர்தரத்தில் ஆனதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காரணம், மலிவு விலை பீங்கான்கள், அவற்றைத் தயாரிக்கத் தேவைப்படும் உயர்ந்தபட்சக் கொதிநிலையில் உருவாக்கப்படுவது இல்லை. இத்தகைய மலிவு விலை பீங்கான்களை, அலங்காரப் பொருட்களாகப் பயன்படுத்தலாம். ஆனால் அதில் சமைத்தால் உணவில் நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் இருக்கிறது.

அலுமினியப் பாத்திரம்
ஒவ்வொரு முறையும் அலுமினியப் பாத்திரத்தைக் கழுவும்போது, அதில் கருப்பாக ஒரு கலவை படியும். அலுமினியம்தான் அது.  இந்தக் கலவை உணவில் கலந்து, உடலிலும் சேர்ந்து மூளையில் உள்ள நியூரான்களை அழிக்கும் ஆபத்து ஏற்படலாம். மேலும், தொடர்ந்து பயன்படுத்தும்போது ஆஸ்துமா, காசநோய் போன்ற சுவாசக் கோறுகளும் அல்சர் பாதிப்பும் ஏற்படலாம். அலுமினியம் ஒரு கடின உலோகமாக ((Heavy metal) இருப்பதால்,  அமிலத்தன்மை கொண்ட தக்காளி போன்ற உணவுப் பொருட்களுடன் வினைபுரிந்து, உடலுக்குள் எளிதாகச் சென்று, தசை மற்றும் சிறுநீரகங்களில் படிய ஆரம்பிக்கும். அலுமினியத்தைத் தவிர்க்க முடியாதவர்கள் சமையல் வேலை முடிந்தவுடன் உணவை வேறு பாத்திரத்துக்கு மாற்றி விடுவது நல்லது.

நான் ஸ்டிக் பாத்திரம் 

சமைக்க எளிமையானதாக இருந்தாலும், இதைச் சூடுபடுத்தும்போது வெளிவரும் 'பர்ஃப்ளூரினேட்டட் காம்பவுண்ட்’ (Perfluorinated compounds) என்னும் நச்சுப் பொருள் பல்வேறு விதமான உடல் நலக் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பதைத் தவிர்க்க
முடியாது என்பவர்கள், அதனை மிதமான சூட்டில் சமைப்பது நல்லது. 

டாக்டர் ஆர்.எஸ்.ராமசுவாமி
சென்னை  மத்திய அரசு சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநர் 







ஐ.டி ரிட்டர்ன்... கெடு தேதி தவறினால்.. என்னென்ன பாதிப்புகள்?

மாதச் சம்பளக்காரர்கள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31. இந்த தேதியை பல்வேறு காரணங் களுக்காகப் பலரும் தவறவிட்டிருப் பார்கள். அவர்கள் இனி வரிக் கணக்குத் தாக்கலை எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

ஜூலை 31-ம் தேதிக்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யாதவர்கள், 2015 மார்ச் வரை வரிக் கணக்குத் தாக்கல் செய்யலாம். அபராதம் எதுவும் கிடை யாது. இதை ஆங்கிலத்தில் காலதாமதமாக ரிட்டர்ன் தாக்கல் (Belated Return) செய்வது என்பார்கள்.

 பாதிப்புகள் என்னென்ன?

வருமான வரி எதுவும் கட்ட வேண்டும் எனில், மாதத்துக்கு 1% வட்டி கணக்கிட்டு கட்ட வேண்டும்.

ஜூலை 31-ம் தேதிக்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லை எனில், ரீஃபண்ட் கிடைக்க வேண்டி இருந்தால் தாமதம் ஏற்படும்.


மூலதன ஆதாய இழப்பு மற்றும் வணிக இழப்பு ஏதும் இருந்தால், அதனை அடுத்துவரும் ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்படும்.

உங்கள் வரிக் கணக்கில் ஏதாவது தவறு இருந்தால், அதனை சரிசெய்து மீண்டும் வரிக் கணக்குத் தாக்கல் செய்ய முடியாது.

வெளிநாட்டுக்கு செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்கும்பட்சத்தில், வீட்டுக் கடன் / கார் கடனுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், கடந்த மூன்றாண்டுகளின் வருமான வரிக் கணக்குத் தாக்கல் விவரத்தைக் கேட்பார்கள். எனவே, சரியான நேரத்தில் வரிக் கணக்குத் தாக்கல் செய்திருப்பது அவசியம்.

ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகு வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்கள் மிகவும் கவனத்துடன் வரிக் கணக்கு விவரங் களைத் தாக்கல் செய்ய வேண்டும். காரணம், இதில் ஏதாவது தவறு இருந்தால் சரிசெய்துகொள்ள வாய்ப்புக் கிடையாது.

எனவே, படிவம் 16-ல் உள்ள விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், வரிச் சலுகைக்கான முதலீடு மற்றும் செலவு விவரங்களை மிகச் சரியாக ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவும்.


Sunday, August 24, 2014

க்ளவுட் ஸ்டோரேஜ் சேவைகள்... எங்கேயும், எப்போதும் தீர்வு !

பென்-டிரைவ், மெமரி கார்ட், ஹார்ட்டிஸ்க் போன்றவற்றை நாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் எடுத்து செல்வது கஷ்டமான விஷயம்தான். வங்கியில் நம் சேமிப்புக் கணக்கில் பணம் போட்டு, ஏதாவது ஒரு ஏடிஎம் மூலம் பணம் எடுக்கிற மாதிரி, நம் புகைப்படங்கள், வீடியோகள், ஃபைல்ஸ் போன்றவற்றை நம் ‘க்ளவுட் ஸ்டோரேஜ்’ அக்கவுன்ட்டில் சேமித்துவிட்டு, எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எந்தக் கருவியின் மூலமும் பயன்படுத்திக்கொள்வதுதான் ‘க்ளவுட் ஸ்டோரேஜ் சேவைகள் (Cloud Storage Services)’. சில சிறந்த ‘க்ளவுட் ஸ்டோரேஜ்’ சேவைகளை இனி பார்ப்போம்.
 
1. கூகுள் டிரைவ் (Google Drive)
ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தும்  சேவை இது. ஜிமெயில் அக்கவுன்ட்டைக் கொண்டு இயங்கும் இந்த க்ளவுட் ஸ்டோரேஜ்ஜில் 15GB வரை இலவசமாகச் சேமிக்கலாம். 100 GB அளவை பயன்படுத்த மாதத்துக்கு 1.99.


2. ட்ராப் பாக்ஸ் (Drop Box)
விண்டோஸ், ஆப்பிளின் ஐ ஓஎஸ், மேக் ஓஎஸ், கூகுளின் ஆண்ட்ராய்ட் போன்ற ஓஎஸ்களைத் தாண்டி லினக்ஸ் மற்றும் ப்ளாக்பெர்ரி ஓஎஸ்களுக்கும் சேவையைத் தரும் ஒரே க்ளவுட் ஸ்டோரேஜ் இது. இலவசமாக, 2GB வரை சேமிக்கலாம். 100GB வரை பயன்படுத்த மாதம் 6 யூரோக்கள் செலவாகும்.

3. மைக்ரோசாஃப்ட் ஒன் டிரைவ் (Microsoft One Drive)

15GB வரை இலவசமாகச் சேமிக்கலாம். மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் சாஃப்ட்வேர் பயன்படுத்துபவர்களுக்கு இது சிறந்த சேவை.

4. பாக்ஸ் (Box)

 இதில்10GB வரை இலவசமாக சேமிக்கலாம். ஆனால், ஒரு ஃபைலின் அளவு 250MB-க்கு மேல் இருக்கக் கூடாது. ஒரு மாதத்துக்கு 7 யூரோக்கள் கொடுத்தால், 100GB வரை சேமித்துக்கொள்ளலாம். அப்போது ஒரு ஃபைலின் அளவு 5GB வரை இருக்கலாம்.