பூமியின் தென் துருவம் அண்டார்டிகா கண்டத்தில் அமைந்துள்ளது. அண்டார்டிகா
பெரிய நிலப்பகுதி. ஆனால் வட துருவம் கடல் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு
கடல் நீர்
உறைந்து பனிக்கட்டியாக இருந்ததால் ஒருசமயம் அமெரிக்கக் கடற்படை வீரர்கள்
நின்றபடி போட்டோ எடுத்துக் கொண்டார்கள். வட துருவப் பகுதிக்கு அவர்கள்
சென்ற விதமே
அலாதியானது. ஸ்கேட் என்னும் அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்
(சப்மரீன்) 1959ம் ஆண்டில் வட துருவத்தையொட்டிய கடல் பகுதியில் நீரில்
மூழ்கியபடி சென்று கொண்டிருந்தது. வட துருவ
முனையை எட்டியதும் அந்த நீர்மூழ்கிக் கப்பலானது அங்கு கடலை மூடியபடி இருந்த
உறைபனிக் கட்டியைப் பொத்துக்கொண்டு மேலே வந்தது. கடலை மூடியிருந்த
பனிக்கட்டியின் தடிமன்
சுமார் 2 அடி அளவுக்கே இருந்ததால் பனிக்கட்டியைப் பொத்துக்கொண்டு மேலே
வருவது பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. பனிக்கட்டியைப் பொத்துக்கொண்டு வட
துருவத்துக்குச்
சென்ற முதல் நீர்மூழ்கிக் கப்பல் அதுவே.
இதிலிருந்து ஒன்று தெரிகிறது. கடல் பனிக்கட்டியால் மூடப்பட்டாலும் அந்தப்
பனிக்கட்டிக்கு அடியில் கடலானது கடலாகத்தான் இருக்கும். கடலின் மேற்புறம்
பனிக்கட்டியால்
மூடப்படும்போது அங்கு மேலிருந்து அடிமட்டம் வரை கடல் நீர் உறைந்து
போய்விடுவதில்லை. இது இயற்கையில் அதிசயங்களில் ஒன்று. துருவப் பகுதியில்
குளிர் நிலைமை பூஜ்ய டிகிரிக்கும் மிகக்
குறைவாக இருக்கலாம். ஆனால் கடல் நீரை மூடி நிற்கும் பனிக்கட்டியானது வெளியே
நிலவும் குளிர் அடியே இருக்கும் நீரைப் பாதிக்காதபடி தடுக்கிறது என்பது
குறிப்பிடத்தக்கது.குளிர்காலம் கடுமையாக இருந்தால் அமெரிக்காவின் வடஎல்லையில் உள்ள பெரிய
ஏரிகளும் உறைந்து போவதுண்டு. இங்கிலாந்தில் லண்டன் நகரில் தேம்ஸ் நதி
உறைந்து போனதுண்டு.ஆர்ட்டிக் பகுதியில் கடல் நீர் உறைந்தாலும் உறைந்த பனிக்கட்டிக்கு அடியில்
கடல்வாழ் விலங்குகள் பாதிக்கப்படுவதில்லை. அதேபோல ஆர்ட்டிக் பகுதியில்
வாழும் பிரபல
துருவக் கரடிகளும் இடம்பெயர்ந்து விடுவதில்லை.துருவக் கரடிகளுக்கு ஒரு வகை சீல்தான் பிரதான உணவு. சீல்கள் பனிக்கட்டிக்கு
அடியில் உள்ள நீரில் வாழ்பவை. நீருக்குள் வாழும் மீன்கள் போன்றவை நீரில்
உள்ள ஆக்சிஜனை
எடுத்துக்கொள்ளும். ஆனால் சீல்கள் அவ்வப்போது நீருக்குள்ளிருந்து வெளியே
வந்து காற்றை சுவாசிப்பவை. பெரிய பரப்பளவை பனிக்கட்டி மூடியிருந்தாலும்
சீல்கள் தங்களது நகங்களால் உள்ளே
இருந்தபடி தலைக்கு மேலே உள்ள பனிக்கட்டியில் ஓட்டை போட்டுவிடும்.
பனிக்கட்டியில் போட்ட ஓட்டைகள் வழியே அவ்வப்போது தலையை நீட்டி காற்றை
இழுத்துக் கொண்டு உள்ளே சென்றுவிடும்.சீல்கள் போட்ட ஓட்டைகளுக்கு அருகே துருவக் கரடிகள் காத்துக்
கொண்டிருக்கும். சீல்கள் தலை காட்டியதும் ஒரே பாய்ச்சலில் சீல்களைப்
பிடிக்க முயற்சி செய்யும். சீல்கள் ஒரு கணம் ஏமாந்தால்
துருவக் கரடிகள் அவற்றைக் கவ்வி உணவாக்கிக் கொள்ளும்.
துருவப் பகுதி குறித்து கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் அங்குதான்
ஐஸ்பெர்க் எனப்படும் பனிக்கட்டி மலைகள் தோன்றுகின்றன. கிரீன்லாந்து
எனப்படும் பெரிய
நிலப்பகுதி துருவப் பகுதியில்தான் உள்ளது. கிரீன்லாந்தின் 81 சதவிகிதப்
பகுதி பனிக்கட்டியால் மூடப்பட்டது. இந்த வட்டாரத்தில் மேலும் சில தீவுகளும்
உள்ளன. இவையும் பனிக்கட்டியால் மூடப்பட்டவை.குளிர் காலத்தில் மேலும் மேலும் பனிக்கட்டிகள் சேருகின்றன. அவ்வித நிலையில்
கரையோரமாக உள்ள பனிக்கட்டிப் பாளங்கள் பிதுங்கிக் கொண்டு கடலில் வீழ்ந்து
மிதக்க ஆரம்பிக்கின்றன.
இயல்பாக இவை தெற்கு நோக்கி அதாவது அட்லாண்டிக் கடலை நோக்கிச் செல்ல
முற்படுகின்றன.மிதக்கும் பனிக்கட்டிகள் வடிவில் பிரமாண்டமானவை. இவற்றை மிதக்கும்
பனிமலைகள் என்றே கூற வேண்டும். மிகுந்த எடை காரணமாக மிதக்கும் பனி மலைகளின்
பெரும்பகுதி கடல் நீரில் மூழ்கியிருக்கும்.
சிறு பகுதிதான் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். அதாவது பத்தில் ஒரு
பங்குதான் கடல் நீருக்கு மேலே நீட்டிக் கொண்டிருக்கும். கப்பல்கள் மீது
மிதக்கும் பனி மலைகள் மோத நேர்ந்தால் ஒரு பெரிய குன்று
வந்து மோதியது போல கப்பல் மூழ்க வேண்டியதுதான்.உடையவே உடையாது என்று வருணிக்கப்பட்ட டைட்டானிக் கப்பல் மீது மிதக்கும்
பனிமலை மோதியபோது அந்தக் கப்பலில் இருந்த பயணிகளில் 1500 பேர் கடலில்
மூழ்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் 1912ம் ஆண்டில் நிகழ்ந்தது. அந்தக் காலத்தில் ராடார் என்ற
கருவி கிடையாது. ஆகவே எதிரே மிதக்கும் பனிமலை வந்ததை கப்பல் மாலுமிகளால்
கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. இப்போதெல்லாம் எல்லா கப்பல்களிலும் ராடார் கருவிகள் உள்ளன. கண்ணுக்குத்
தெரியாத தூரத்தில் இருந்தாலும் மிதக்கும் பனிமலைகள் இருப்பதை இந்தக்
கருவிகள் கண்டுபிடித்துக்
கூறிவிடும்.வட அமெரிக்கக் கண்டத்துக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் அட்லாண்டிக் கடலின்
வடபகுதியானது கப்பல் போக்குவரத்து அதிகம் உள்ளதாகும். மிதக்கும் பனிமலைகள்
எங்காவது தென்படுகின்றனவா
என்று வானிலிருந்து கண்காணித்து தகவல் கூறும் ஏற்பாடும் இப்போது உள்ளது.மிதக்கும் பனிமலைகள் மேலும் மேலும் தெற்கு நோக்கி வரும் போது சூரிய வெப்பம்
காரணமாக உருகிக் கடல் நீரில் கரைந்து விடும். கடல் நீரில் மிதந்து
வந்தாலும் மிதக்கும்
பனிமலை முழுவதும் உப்பு இல்லாத நல்ல நீராகும்.அண்டார்டிகா சுற்றியுள்ள கடலிலும் இவ்விதம் கடல் நீர் பனிக்கட்டியால்
மூடப்படுகிறது. அங்கும் நிறைய பனிமலைகள் தோன்றுகின்றன. அவை வடக்கு நோக்கி
வருகின்றன. ஆனால் அவை
நடமாடும் கடல் பகுதிகளில் கப்பல் போக்குவரத்து அதிகமில்லை.
என்.ராமதுரை
வணக்கம்
ReplyDeleteநன்றாக எழுதியுள்ளீர்கள் அறியாத விடங்கள் அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-