ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கு, சன் தொலைக்காட்சி வசதிக்காகத் தங்கள் வீட்டில்
பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பகத்தை நடத்தியது போன்ற விவகாரங்களில்
கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்துவரும்
கலாநிதி - தயாநிதிமாறன் சகோதரர்களுக்கு மற்றொரு தலைவலியாக வந்து
சேர்ந்திருக்கிறது. சமீபத்தில் கல் (Kal) கேபிள்ஸ் நிறுவன வழக்கில்
நீதியரசர் ராமசுப்பிரமணியம் கொடுத்த
தீர்ப்பு. தொடர் சோதனைகள் காரணமாக சகோதரர்கள் கடந்த 25 ஆண்டுகளாகக் கட்டி
எழுப்பிய சன் குழும சாம்ராஜ்யம் சடசடவென சரிந்து விடுமோ என்ற சந்தேகம்
தொழில்- வர்த்தக வட்டாரங்களில் படபடக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 33 தொலைக்காட்சிகள்,
பல்வேறு இந்திய மொழிகளில் 45 பண்பலை வானொலி நிலையங்கள், மூன்று தினசரிகள்,
சன் டி.டி.ஹெச், 53 விமானங்களை இயக்கும் ஸ்பைஸ் ஜெட், சன் பிலிம்ஸ், சன்
ரைசர்ஸ் கிரிக்கெட் அணி, ஆறு வாரப் பத்திரிகைகள் என்று கட்டியாளும் சன்
குழுமத்
தலைவர் கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு 16,000 கோடி என்று அரசுக்குக்
கணக்கு காட்டப்பட்டாலும், உண்மையான சொத்து மதிப்பு 40,000 கோடிக்கும் மேல்
என்கிறது தொழில்
வட்டாரம்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் அமரும்போதும் மத்திய அரசில்
தி.மு.க. செல்வாக்கு கொடிகட்டி பறந்தபோதும் சன் குழுமம் விரைவுப் பாதையில்
வளர்ச்சியைக் கண்டது. அதிலும்
தயாநிதி மாறன் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த காலம்
சன் குழுமத்தின் பொற்காலம் என்று கூடச் சொல்லலாம். அரசியல் ஆதரவும், அரசின்
ஆதரவும் ஒருங்கே பெற்று உயர்நிலையை
அடைந்த இந்தக் குழுமம், இன்று இவையிரண்டும் இல்லாத நிலையில் சரிவைச்
சந்தித்து நிற்கிறது.
முதலில் தொடங்கிய ‘பூமாலை’ வீடியோ பத்திரிகை சரியாகப் போகவில்லை. அதன்பின்
சில காலம் அமைதியாக இருந்த சகோதரர்கள் 1993-ல் ஜெயலலிதா ஆட்சியில்
தொடங்கியதுதான்
சன் தொலைக்காட்சி. 1996ல் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர, சன்
தொலைக்காட்சியின் பிரசார பங்களிப்பும் முக்கிய காரணம். அதன்பின் சன்
தொலைக்காட்சி வீறுநடை
போட்டது. பிறகு சுமங்கலி கேபிள் நிறுவனம் உருவானது. அதுவரை கேபிள் டி.வி.
தொழிலில் முக்கிய இடத்தில் இருந்த ஹாத்வே நிறுவனம் அதிகார துஷ்பிரயோகத்தால்
விரட்டப்பட்டது. இந்தச் சூழலில்தான் தந்தை முரசொலி மாறன் மறைந்தார்.
குடும்பத்தின் அரசியல் வாரிசாக தயாநிதிமாறன் நாடாளுமன்றத் தேர்தலில் களம்
இறக்கப்பட்டார். மத்திய சென்னையில் வென்ற மாறன் மத்திய தகவல் தொழில் நுட்ப
அமைச்சராக்கப்பட்டார். தில்லியில் தி.மு.க.வின் பிரதிநிதியாகவே வலம்
வந்தார் தயாநிதி.
அவருக்கு இந்தி தெரிந்திருப்பதை ஒரு தகுதியாகச் சொன்னார் கருணாநிதி. அந்தச்
சமயத்தில் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக செல்போனின் பயன்பாடு வேகமாக
உயர்ந்து கொண்டிருந்தது. செல்போன் நிறுவனங்கள், தங்கள் வர்த்தகத்தை
விரிவுபடுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வந்தன. சிவசங்கரன் என்பவரால் தமிழகத்தில் நடத்தப்பட்டு வந்த ஏர்செல் நிறுவனமும்,
14 தொலைத்தொடர்பு வட்டங்களில் தமது சேவையைத் தொடங்க உரிமம் கோரியது.
ஆனால் இங்கேதான் தயாநிதி தமது ஆட்டத்தைத் தொடங்கியதாகச் சொல்கிறது சி.பி.ஐ.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குற்றப் பத்திரிகை. மலேசியாவில் செயல்படும் மேக்ஸிஸ் குழுமத்துக்கு ஏர்செல் நிறுவனத்தை
விற்றுவிட வேண்டும் என்று சிவசங்கரன் மிரட்டப்பட்டார். விளைவு ஏர்செல்லின்
74 சதவிகிதப் பங்குகள் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு
மாற்றப்பட்டு, நிறுவனம் கைமாறியது. உடனே, செல்போன் உரிமங்கள்
ஏர்செல்லுக்குக் கொடுக்கப்பட்டன. மேக்ஸிஸ் நிறுவனத்துக்குச் செய்த
உதவிக்குப் பிரதிபலனாக அந்த நிறுவனம், சன்
டி.டி.ஹெச். நிறுவனத்தில் 599 கோடியை முதலீடு செய்ததாகவும் சொல்கிறது
குற்றப் பத்திரிகை.
சுப்பிரமணியம் சுவாமி மற்றும் மீடியாக்களின் தொடர் முயற்சி காரணமாக 2011ல்
ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கில் முதல்தகவல் அறிக்கையை சி.பி.ஐ. பதிவு செய்தது.
தயாநிதி பதவி விலகினார். இந்தக் காலகட்டத்தில் மாறன் சகோதரர்களின்
போட்ஹவுஸ் மாளிகையில் சன் தொலைக்காட்சியின் மேம்பாட்டுக்காக
பி.எஸ்.என்.எல். 323 லைன்கள்
கொண்ட அதி நவீன தொலைபேசி இணைப்பும் நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்குத் தொலைத்தொடர்பு உயரதிகாரிகளும் உடந்தையாக இருந்தார்கள்.
தொலைத்தொடர்பு ஊழியர் சங்கங்கள்
இந்த விவகாரத்தை முழுமையாக வெளியே கொண்டு வந்தன. ஆடிட்டர் குருமூர்த்தி மீடியாவில் ஆதாரபூர்வமாக குற்றம் சாட்டியது
மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டு போனார். மாறன்
சகோதரர்கள் நடத்திய இந்தத்
தொலைபேசி இணைப்பகத்தால் அரசுக்கு 440 கோடி நஷ்டமாம். சி.பி.ஐ. இந்த
விவகாரத்திலும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்திருக்கிறது. எந்த
நேரத்திலும் குற்றப் பத்திரிகை
பதிவாகலாம். தயாநிதி மாறன் அதிகாரத்தில் இருந்தபோது ரத்தன் டாடாவையும்
மிரட்டி அவரது நிறுவனத்தின் பங்குகளை சன் குழுமத்துக்குக் கேட்டதாகவும்
செய்திகள் அடிபட்டன.2011ல் ஏர்செல் - மேக்ஸில் நிறுவன விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு
செய்யப்பட்டாலும் சி.பி.ஐ. விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காரணம்
ஐ.மு. அரசு இருந்ததுதான். 2014ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் சி.பி.ஐ. இந்த விஷயத்தில் ஆலோசனை
கேட்டு அரசு தலைமை வழக்கறிஞரை அணுகியது. குற்றப் பத்திரிகை தாக்கல்
செய்யலாம் என்று
தலைமை வழக்கறிஞர் சொல்லிவிடவே நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையைத்
தாக்கல் செய்தது சி.பி.ஐ. மேக்ஸிஸ் நிறுவனம் இயங்கும் மலேசியாவில் முழு
விசாரணை நடக்கவில்லை; எனவே
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது" என்ற தயாநிதி மாறனால் போடப்பட்ட
மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரம் சூடு பிடித்துக் கொண்டிருந்த போதுதான் மத்திய அரசு கல்
கேபிள் நிறுவனத்தின் உரிமத்தை ‘பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்ற
காரணத்தைச் சொல்லி
ரத்து செய்தது. இதை எதிர்த்து நீதிமன்றம் போனார் கலாநிதி. மத்திய அரசின்
உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தாலும் நீதியரசர் தெரிவித்த ஒரு கருத்து சன்
குழுமத்தைக் கலக்கியிருக்கிறது.
‘பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கேபிள் நிறுவன உரிமம் ரத்து என்றால்,
தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் இந்த வரையறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
ஒன்றுக்கொன்று தொடர்புடைய இந்த
இரு அமைப்புகளுக்கும் வெவ்வேறு பாதுகாப்பு வரையறைகள் இருக்க முடியாது.
பதவியைத் தவறாகப் பயன்படுத்துவதும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலே’
என்று சொல்லியிருக்கிறார்
நீதியரசர். இந்த அடிப்படையில் சன் தொலைக்காட்சிகளுக்கும் உரிமம் ரத்தாகும்
வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.நஷ்டத்தில் ஓடும் சன் குழுமத்தின் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கும் ஆபத்து
வந்துகொண்டிருக்கிறது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 50 சதவிகித பங்குகள்
கலாநிதி குடும்பத்திடம் இருக்கின்றன. ஸ்பைஸ் ஜெட்
நிறுவனம் ஊழியர்களிடம் வசூல் செய்த வருமான வரியை அரசுக்குச் செலுத்தவில்லை.
தவிர அந்த நிறுவனத்தை கலாநிதி வாங்கியதே அலைக்கற்றை ஊழல் பணத்தில்தான்.
இது தொடர்பாக
முழு விசாரணை தேவை.
No comments:
Post a Comment