ஐஸ் பக்கெட் சேலஞ்ச் இணையதளத்தில் இதுதான் வைரல் ஹிட். அமெரிக்க அதிபர்
ஒபாமா தொடங்கி நம் ஊர் ஹன்சிகா, சானியா மிர்ஸா வரை ஆளாளுக்குப் பக்கெட்டும்
கையுமாகத் திரிந்தார்கள். ஏன்?
ஒரு வாளி நிறைய குளிர்ந்த அல்லது ஐஸ்கட்டி நிறைந்த நீரை எடுத்து, அப்படியே
தலையில் கவிழ்க்கவேண்டும். அதை வீடியோவும் எடுத்து சமூக வலைத் தளங்களில்
வெளியிடவேண்டும். ''நான் ஊத்தியாச்சு. நீ போட்டிக்கு ரெடியா? டீலா, நோ
டீலா?' என்று நண்பர்களிடம் சவால் விட வேண்டும். சவாலை ஏற்றுக் கொண்டவர்கள்,
வெற்றிகரமாக ஒரு பக்கெட் குளிர்ந்த நீரைத் தலையில் ஊற்றிக்கொண்டு
அடுத்தவர்க ளிடம் சவாலை பாஸ் செய்ய வேண்டும். இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு
வெற்றிகரமாக பக்கெட்டைக் கவிழ்த்தவர்கள் 'அமையோட்ரோபிக் லேட்டரல்
ஸ்கெலரோசிஸ்’ (ஏ.எல்.எஸ்) என்ற நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு 10 டாலர்
நன்கொடையாகத் தர வேண்டும். சவாலை ஏற்காமல் அப்பீட் ஆகிறவர்கள், 100 டாலர்
நன்கொடை தரவேண்டும். இதுதான் இந்தப் போட்டியின் விதிமுறை.
உலகின், பெரும் பணக்காரர் பில்கேட்ஸ் முதல் நம் ஊர் பாடகி ஸ்ரேயா கோஷல் வரை இந்த சேலஞ்சை வெற்றிகரமாகக் கடந்திருக்கிறார்கள்.
அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்கெலரோசிஸ்
'நம் மூளையில் கோடிக்கணக்கான நரம்பு செல்கள்
இருக்கின்றன. இதில் மோட்டார் நியூரான் என்பதும் ஒன்று. இது மூளையில்
இருந்து முதுகெலும்புத் தண்டுவடம் வழியாக தசைகளைச் சென்றடைகிறது. இந்த செல்
கொஞ்சம் கொஞ்சமாகச் செயல் இழந்து அதன் இயக்கத்தை நிறுத்தும் போது உடலின்
இயக்கம் பாதித்து, தசைகளை முடக்குகிறது.
இந்த நோயை 1869ல் ஃபிரான்ஸைச் சேர்ந்த ஜோன் மார்ட்டின்
சோர்கோட் கண்டறிந்தார். இந்தப் பாதிப்பு ஏற்பட்டால், கைகள், கால்கள்
தளர்ச்சியடையும். நடையில் தடுமாற்றம், பேசுவது மற்றும் விழுங்குவதில்
சிரமம் ஏற்படும். தலையைக்கூட உயர்த்த முடியாத நிலை ஏற்படும்.
இதில் இரண்டு வகை உள்ளன. மூளையில் 'முகுளம்’ என்ற
பகுதியைத் தாக்குவது ஒருவகை. இந்த பாதிப்பு இருந்தால் மூன்று ஆண்டுகளுக்கு
மேல் உயிர்வாழ்வது கடினம். சீனாவின் மாசெதுங்குக்கு இந்த பாதிப்பு
இருந்தது. மற்றொன்று முதுகுதண்டு வடத்தைப் பாதிப்பது. இவர்கள் உரிய
மருத்துவ வசதி இருந்தால் நீண்ட காலத்துக்கு உயிர் வாழலாம். புகழ்பெற்ற
விஞ்ஞா னியான ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு இந்த வகை நோய் இருக்கிறது.
இது ஏன் ஏற்படுகிறது என்று கண்டறியப்படவில்லை. ஒரு
சிலருக்கு மரபியல் ரீதியாக இந்தப் பாதிப்பு வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மோட்டார் நியூரான் செயல் இழப்பைத் தடுத்து, மீண்டும் ஆரோக்கியமான நிலையை
ஏற்படுத்த தற்போதைக்கு மருந்து இல்லை. ஆனால், ஆரம்ப நிலையிலேயே
சிகிச்சைக்கு வரும்போது, நியூரான் செயல் இழப்பைத் தாமதப்படுத்த முடியும்.
இந்தியாவில் இந்த நோய் பாதிப்பு மிகக்குறைவு. பாதிப்பு
இல்லை என்றே சொல்லலாம். புற்றுநோய் உள்ளிட்ட மிகப் பெரிய அளவில் உயிர்க்
கொல்லிகளுக்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள அதிக அளவில் நிதி கிடைக்கிறது.
ஆனால், ஒரு சிலரையே பாதிக்கும் இதுபோன்ற நோய்களைத் தடுக்க மருந்து
கண்டுபிடிக்க அந்த அளவுக்கு நிதி கிடைப்பது இல்லை. அதனாலேயே ஐஸ் பக்கெட்
போன்று நடத்தி விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டி உள்ளது.
No comments:
Post a Comment