உலகெங்கும் வாழும் மலையாள மக்களால் கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகை ஓணம்.
‘காணம் வித்தாவது ஓணம் உண்’ என்பது பழமொழி. பண்டிகை செலவுக்குப் பணம்
இல்லாவிட்டாலும் பெண்கள் கழுத்தில் இருக்கும் பொட்டுத் தாலியையாவது விற்று
ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டுமாம். இங்கே ‘காணம்’ என்பது மாங் கல்யத்தைக்
குறிக்கிறது.
அதாவது ஓணப்பண்டிகை எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொண்ட பண்டிகை என்பதற்காக
இந்தப் பழமொழி சொல்லப்பட்டுள்ளது.
மலையாள ஆண்டின் முதல் மாதம் சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி
திருவோணம் நட்சத்திரம் வரை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதைத்தான்
‘அஸ்தம் தொட்டு பத்தோணம் வரை’ என்பர். இதை கேரளாவின்
அறுவடைத் திருநாள் என்றும் அழைப்பர். தமிழ் மாதத்தின் படி ஆவணி மாதம் வரும்
அஸ்தம் நட்சத்திரம் முதல் திருவோண நட்சத்திரம் வரை பத்து நாட்கள் ஓணம்
கொண்டாடப்படுகிறது. சங்க காலத்தின் போதே ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வந்துள்ளதாக செய்திகள்
உள்ளன. பத்துப்பாட்டில் மதுரைக் காஞ்சியில் பாண்டிய நாட்டு மக்கள் எவ்வாறு
ஓணம் கொண்டாடினார்கள் என்பதை
மாங்குடி மருதனார் விளக்குகிறார். மகாபலி என்ற மன்னன் கேரளாவை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். தானம்,
தர்மம் செய்வதில் சிறந்து விளங்கிய மன்னன் மகாபலி ஒரு முறை வேள்வி செய்யும்
போது திருமால் மூன்றடி
உயரம் கொண்ட வாமன அவதாரத்தில் வந்து மூன்றடி நிலம் கேட்டார். மன்னன்
மகாபலியோ ‘தாங்களே அளந்து எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார். முதல் அடியால் பூமி முழுவதையும் அளந்தவர் இரண்டாவது அடியால் விண்ணையும்
அளந்தார். மூன்றாவது அடியை நான் எங்கே வைப்பது என்று திருமால் கேட்டதற்கு,
மன்னன் மகாபலி தன்
தலையைத் தந்தான். மகாபலியின் கொடை குணத்தைக் கண்ட திருமால் மகாபலியை தன்
காலால் பூமிக்குள் தள்ளி முக்தி அளித்தார். ‘தன் மக்கள் மீது மிகுந்த
அன்பு கொண்ட மன்னன்
மகா பலி, வருடம் ஒரு முறை இதே நாளில் வந்து தன் நாட்டு மக்கள் இன்று போல்
என்றும் மகிழ்ச்சியாக வாழ்வதை நான் பார்க்க வேண்டும்’ என்று வரம் கேட்டார்.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும்
திருவோணம் அன்று மன்னன் மகாபலி நாட்டு மக்களை காண வருவதாக ஐதிகம். எனவே
கேரள மக்கள் ஓணம் திருநாளின் போது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என
மகிழ்ச்சிக் கடலில்
மூழ்கியிருப்பர். கேரளாவில் ஆனி, ஆடி மாதம் மழைகாலம். எனவே செடிகள் நன்கு வளர்ந்து ஆவணி
மாதத்தில் பூக்கள் அதிகமாக பூக்கும் காலம். மன்னன் மகா பலியை வரவேற்கும்
பொருட்டு வாசலில் பூக்களால் ஆன கோலம் (அத்தப்பூ கோலம்) வரைந்து
வரவேற்கிறார்கள்.
முதல் நாள் அஸ்தம் நட்சத்திரம் அன்று ஒரு வகை பூக்கள் கொண்டும் இரண்டாம்
நாள் இரண்டு வகைப் பூக்கள் கொண்டும் மூன்றாம் நாள் மூன்று வகை பூக்கள்
என்று பத்தாம் நாள் பத்து வகை
பூக்களால் கோலம் வரைந்து மன்னன் மகாபலியை வரவேற்கிறார்கள். கோலத்தின்
அளவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
மேலும் பெண்கள் பத்து நாளும் அதிகாலை எழுந்து குளித்து மகாவிஷ்ணுவிற்குப்
தினம் ஒரு பாயசம், பொங்கல் செய்து படைத்து வழிபடுவர். அருகிலுள்ள விஷ்ணு
கோயிலுக்குச் சென்று
வழிபடுவர். பத்து நாளும் விருந்தினர்கள் வந்த வண்ணம் இருப்பர். பத்தாவது
நாள் திருவோணத்தன்று எல்லோரும் புத்தாடை அணிவார்கள். உறவினர்களுக்கும்
புத்தாடைக் கொடுப்பர் அதை ஓணப்படை என்பர்.
பெண்கள் ஓணப்புடவை அணிவர். ஜரிகை பார்டர் போட்ட வேட்டி, நேரியலை புடவையாக
கட்டுவர். தற்போது முழு புடவையாக உள்ளதையும் வாங்கி கட்டுகிறார்கள். இதை
ஓணப்புடவை என்று
அழைப்பர். தங்க நகைகளை அணிந்து கோயிலுக்குச் சென்று வருவர். இனிப்பு
வகைகள் செய்து உறவினர்கள், நண்பர்களுக்குக் கொடுத்து மகிழ்வர். மேலும்
அன்று ‘ஓணசத்யா’ என்ற விருந்து தடபுடலாக
நடைபெறும். தலைவாழை இலை போட்டு, இருபத்தோரு வகையான கூட்டு செய்து
பரிமாறுவார்கள். இதில், முக்கியமாக அடை பிரதமன், அவியல், எரி சேரி,
உப்பேரி, உப்பிலிகறி, தோரன் போன்றவை அடங்கும். இளம் பெண்கள் ‘கைக்கொட்டுக்களி’ என்னும் நடனம் ஆடி மகிழ்வர். விஷ்ணு
மற்றும் மகாபலி பற்றிய பாடல்கள் இடம் பெறும், இதில் 8, 10, 12.. என்று
பெண்கள் இரட்டைப்படையில் சேர்ந்து ஏதேனும் பாடலை தேர்ந்தெடுத்து
பயிற்சிசெய்து திருவோணத்தன்று
ஆடி மகிழ்வர். அப்போது ஓணப் புடவை அணிந்திருப்பர், அதுபோல் தோட்டத்தில்
ஊஞ்சல் கட்டி சிறியவர் முதல் பெரியவர் வரை ஆடி மகிழ்வர். ஆண்கள் கதகளி ஆட்டம், புலிக்களி ஆட்டம், நடைபெறும். இதைப் பார்க்க மக்கள்
ஆங்காங்கே கூடுவர். படகுப் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்படும்.
கோயில்களில் விஷேச வழிப்பாடுகள்
நடைபெறும். யானைகளுக்கு நெற்றிப்பட்டம் கட்டி அலங்கரித்து ஊர்வலமாக
அழைத்து வருவர். கேரள மாநிலமே விழாக் கோலம் பூண்டு ஒளி வெள்ளத்தில் மூழ்கி
இருக்கும்.
வணக்கம்
ReplyDeleteநல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.. ஓணம் பண்டிகை பற்றி அறிய வாய்ப்பாக இருந்தது தங்களின் பதிவு பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-