Search This Blog

Monday, November 08, 2010

பீகார்?

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவு தங்கள் கட்சிக்கு ஒரு 'கிங்'கை உண்டாக்கித் தர சான்ஸே இல்லை என்று காங்கிரஸ§க்குத் தெரியும். ஆனால், 'கிங் மேக்கர்' ஆவதற்காக காத்திருக்கிறது அந்தக் கட்சி. 243 சட்டசபைத் தொகுதிகளுக்கான இந்தத் தேர்தலில், தேசிய முற்போக்குக் கூட்டணியின் முக்கியக் கட்சியான காங்கிரஸ், யாருடனும் சேராமல் சவாலை சந்திக் கிறது. லாலுவுக்கு இந்தத் தேர்தல் 'வாழ்வா... சாவா...' என்றாகிவிட்டது. இதே பிரச்னைக்காக, ராம்விலாஸ் பாஸ்வானும் லாலுவுடன் சேர்ந்து விட்டார். இங்கு பி.ஜே.பி. கூட்டணியுடன் ஆட்சி செய்யும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமாருக்கும் கடந்த முறையைப்போல், இந்தத் தேர்தல் எளிதாக இல்லை. பீகார் தேர்தலில் லாலு மற்றும் நிதிஷ்குமாருக்கு இடையில் 'இரு முனை போட்டி' நிலவினாலும், இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ்தான் இருவருக்கும் பொது எதிரியாக இருக்கிறது. 

காங்கிரஸ§டன் கூட்டணி வைத்ததால்தான் பீகாரில் லாலுவால் மூன்று முறை ஜெயிக்க முடிந்தது. நான்காவது முறை அவரைக் கழற்றிவிட்டுத் தனித்து நின்று போட்டியிட்டதன் விளைவால், தேசிய முன்னணியின் கூட்டணி வெற்றி பெற்று நிதிஷ்குமார் முதல்வரானார். எனவே, இந்த முறை முடிவுகளில் ஒருவேளை தொங்கு சட்டசபை ஏற்பட்டால், காங்கிரஸ§க்கு கிங் மேக்கராகும் வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது. இது புரிந்தோ என்னவோ, காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்தாலும் லாலுவும் தேர்தலுக்குப் பின் அதனுடன் கூட்டுவைக்கத் தயாராகி வருகிறார்.

ராப்ரிதேவி போட்டியிடும் இரு தொகுதிகளிலும் தனது வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்தாமல் தவிர்த்துவிட்டது. பீகாரின் எதிர்க் கட்சிகளும் காங்கிரஸ் மற்றும் லாலுவுக்கு இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாகத் தேர்தல் மேடைகளில் புகார் கூறி வருகிறது.
இதை காங்கிரஸ் மறுத்தாலும், தேர்தல் முடிவுகளுக்குப் பின் நிலவும் சூழலைப் பொறுத்து லாலுவுக்கு ஆதரவு தருவதைத் தவிர, அதற்கு வேறு வழி இல்லை. ஆனால், துணை முதல்வருடன் ஆட்சியில் பங்கு என அதிகமாகப் பேரம் பேசிக் கூட்டணி ஆட்சிக்கு ஒரு முன் உதாரணத்தை ஏற்படுத்த முயல்வதாக ஒரு பேச்சு உலவுகிறது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வட்டாரத்தில், அதிகாரபூர்வமாகப் பேச மறுக்கின்றனர்.


'கடந்த ஆட்சியில் பிரதமர் பதவி வரை பேசப்பட்ட லாலு, தற்போது சொந்த மாநில அரசியலைத் தக்க வைத்துக் கொள்வதற்கே போராடுகிறார். அவர், இந்தத் தேர்தலில் சரிந்துவிட்டால் மீண்டும் எழுவது மிகவும் கடினம். லாலுவின் சரிவை, எங்களைப்போல் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் ஆர்வத்தோடு எதிர்நோக்குகிறது. இதனால்தான், லாலுவின் கூட்டு பரஸ்பர லாபம் என்றபோதும், அதற்கு நம் தலைமை முயலவில்லை. மேலும், பீகாரில் பி.ஜே.பி. நிலை இந்த முறை பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. அதற்கு, நிதிஷ்குமாரையே மையமாக வைத்து ஓட்டுக் கேட்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை தேர்தல் முடிவுக்குப் பிறகு பி.ஜே.பி-யுடன் பிரச்னை ஏற்பட்டால்.... நிதிஷ், காங்கிரஸ§டன் கைகோக்கவும் வாய்ப்புள்ளது...''

கடந்த வருடம் பீகாருக்கு வந்த ராகுல் காந்தி திடீர் என நிதிஷின் ஆட்சியை மனம் திறந்து பாராட்டியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் 

No comments:

Post a Comment