Search This Blog

Wednesday, November 24, 2010

பிகார் தேர்தல் சொல்லும் சேதி

ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போட்டி முறைகேடுகள் போன்ற செய்திகள்தான் பத்திரிகைகளில் அதிகமாக இடம் பிடித்து வருகின்றன. இதனிடையே பிகாரில் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கும், பொதுமக்களின் அதிகபட்ச பங்களிப்புடனும், வன்முறைகள் இன்றியும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற மாவோயிஸ்டுகளின் மிரட்டலுக்கு அஞ்சாமல் பிகார் மக்கள் வாக்களித்துள்ளனர். அதிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 5 சதவீதம் கூடுதலாக வாக்களித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் தெரிவிக்கிறது.   
                               
அக்டோபர் 21 முதல் நவம்பர் 20-ம் தேதி வரை 6 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் முதல் கட்டத் தேர்தலில் பிகார் தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 54 சதவீத வாக்குகள் பதிவாயின.அடுத்த கட்டத் தேர்தல்களிலும் 50 சதவீதத்துக்கும் குறையாமல் வாக்குப் பதிவு இருந்தது. 6-வது, இறுதிக் கட்டமாக மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இங்கும் 51 சதவீத வாக்குகள் பதிவாயின.மக்களை அச்சுறுத்தும் வகையில் மாவோயிஸ்டுகள் குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய போதிலும் தொடர்ந்து அச்சமின்றி மக்கள் தேர்தலில் பங்கேற்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.தேர்தல் சுமுகமாக நடைபெற துணை ராணுவப் படையினரின் பங்களிப்பையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர்களின் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளால்தான் தேர்தலைச் சீர்குலைக்க மாவோயிஸ்டுகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளன.   

பிகாரில் தேர்தல் என்றால் மாவோயிஸ்டுகளின் அட்டூழியத்துக்கு நடுவே அரசியல் கட்சியினரின்  வன்முறைகளும் அரங்கேறும். வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது, வாக்குப் பதிவு இயந்திரங்களை அபகரித்துச் செல்வது போன்ற அடாவடிகளும் பிகார் தேர்தலின் போது நடைபெறும். ஆனால் துணை ராணுவத்தினரின் பாதுகாப்பு ஏற்பாடுகளால் அரசியல்வாதிகளும் அடக்கியே வாசித்துள்ளனர்.ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி, காங்கிரஸ், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம்- ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி என்று பிகார் பேரவைத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவியது. 

 இன்று அறிவித்த பிகார் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் நிதீஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்ததன் மூலம் மாவோயிஸ்டுகளுக்கு தங்களது ஆதரவு இல்லை என்பதை பிகார் மக்கள் தெளிவாக உணர்த்திவிட்டனர். எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடைபெறும் நமது மாநிலத்தில் கூட பலர் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்கச் சோம்பேறித்தனம் காட்டும் நிலையில், மாவோயிஸ்டுகளின் மிரட்டல்களை புறம் தள்ளி பிகார் மக்கள் பெருவாரியாக வாக்களித்துள்ளனர்.இதன் மூலம், "மாவோயிஸ்டுகள் மக்களின் பிரதிநிதிகள்', "மாவோயிஸ்டுகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது' என்று கூறுபவர்களின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. 

வன்முறையையும், வன்முறையாளர்களையும் மக்கள் என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை என்பது மீண்டும் தெளிவாகியுள்ளது.பதிவான வாக்குகள் ஒவ்வொன்றும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரானவை. அவர்களை தாங்கள் ஆதரிக்கவில்லை என்பதை நாட்டுக்கு உணர்த்துபவை.தேர்தலின்போது கண்ணிவெடித் தாக்குதல் போன்ற ஒரு சில அசம்பாவிதச் சம்பவங்கள் நிகழ்ந்திருந்த போதிலும், தேர்தலைச் சீர்குலைக்க மாவோயிஸ்டுகள் மேற்கொண்ட முயற்சிகள் முற்றிலுமாகத் தோல்வியடைந்து விட்டன. மக்களின் உண்மையான மனநிலை (மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு இல்லை என்பது) வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான், தேர்தலை நடத்த விடாமல் மாவோயிஸ்டுகள் குண்டுவெடிப்பு போன்ற தாக்குதல்களை நடத்தினர்.

மக்கள் தங்கள் பக்கம் உள்ளார்கள் என்ற நம்பிக்கை மாவோயிஸ்டுகளுக்கு இருந்தால்,  தேர்தலைப் புறக்கணியுங்கள் என்று கூறினால் மட்டுமே போதுமானது. கொடூரமான தாக்குதல்களை நடத்தி மக்களை அச்சுறுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்று பிகார். அங்கு பல கிராமங்களில் மின்சார வசதிகிடையாது. சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் போதிய அளவு இல்லை. வேலைவாய்ப்பு தேடி அம்மாநில மக்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நிலையும் உள்ளது. இதுவும் நக்ஸல் இயக்கத்தில் இளைஞர்கள் சேருவதற்கு முக்கியக் காரணம். இந்தப் பிரச்னைகளை அரசியல்வாதிகள் தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை காப்பது அரசியல்வாதிகளின் கடமை!

முன்பு ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும், இதே போன்று பயங்கரவாதிகளைப் புறக்கணித்து மக்கள் பெருவாரியாக வாக்களித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பின், மக்களை மறந்து தங்கள் நிலையை வளப்படுத்திக் கொள்ள ஆட்சியாளர்கள் முயற்சித்ததால் அங்கு மீண்டும் பிரச்னைகள் தலை தூக்கி, முன்பை விட அதிகமாக வன்முறைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அரசியல்வாதிகள் மக்களை மறந்து சுயநலத்துடன் செயல்பட்டால் காஷ்மீரில் இப்போது நிலவுவது போன்ற அமைதியற்ற சூழ்நிலை பிகாரிலும் ஏற்படும். மாவோயிஸ்டுகள் மீண்டும் தங்கள் ஆதிக்கத்தை அதிகரித்துக் கொள்ளவும் இது வாய்ப்பை அளித்துவிடும்.

1 comment: