தமிழ்நாடு முழுவதும்  மழை பெய்து கொண்டிருக்கிறது. அதிலும், கனமழை. ஆனால் இந்த மழை நீர் வீணாகிக்  கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இவற்றைத் தேக்கி வைக்கும் ஏரிகள் இன்று  தூர்ந்து போய்விட்டன. அல்லது வீட்டுமனைகளாகவும், போக்குவரத்துப்  பணிமனைகளாகவும், புதிய பேருந்து நிலையங்களாகவும் மாறிவிட்டன.
மழை  கொட்டும்போது நகரத்தில் வாழும் மனிதர்கள் பெரும்பாலானோர் சொல்லக் கூடியது  இதுதான். ""எதுக்கு நகரத்தில் மழை பெய்யணும்?, கிராமத்துல பெய்தாலும்  பயனுள்ளதாக இருக்கும்''. இதற்குக் காரணம், கிராமத்தில் விவசாயம்  தழைக்கட்டுமே என்ற நல்ல எண்ணம் போலத் தோன்றினாலும், அங்கே ஏரி  நிரம்பினால்தான் இவர்களுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு வராது என்கிற  எண்ணம்தான் இந்த கூற்றுக்கு அடிப்படை. நகரங்களின் குடிநீர்த் தேவை  எல்லாமும் நகருக்கு வெளியே உள்ள ஊரகப் பகுதிகளில் இருக்கும் ஏரிகளில்   இருந்துதான் பெறப்படுகிறது.
சென்னை மாநகரை மட்டுமே எடுத்துக்  கொண்டால், குடிநீர் தேவையின் 80 சதவீதம் தண்ணீர் மாநகருக்கு  வெளியிலிருந்துதான் கொண்டுவரப்படுகிறது. அப்படிக் கொண்டு வந்து  கொடுத்தும்கூட பற்றாக்குறை உள்ளது. சென்னை மாநகரில் ( 174 சதுர கிலோமீட்டர்  பரப்பளவு) ஆண்டுக்கு சுமார் 60 நாள்களுக்கு மட்டுமே மழை பெய்கிறது. இந்த  மழையின் அளவு 1,200 மிமீ. இந்த மழை நீரை முறையாகச் சேமிக்க முடிந்தால்,  நாள்தோறும் 5 பேர் உள்ள குடும்பத்துக்கு 125 லிட்டர் தண்ணீர் கிடைக்கும்.மழைநீர்  சேமிப்புத் தொட்டி ஒவ்வொரு கட்டடத்திலும் இருக்க வேண்டும் என்று அரசு  சட்டம் கொண்டுவந்தது. அவற்றை அனைத்து வீடுகளும் அமைக்கவும் செய்தன. இந்த  அமைப்பு நிலத்தடி நீர் அளவு மேம்பட உதவுகிறது என்பதில் சந்தேகமே இல்லை.  ஆனால் அவை உண்மையில் மழைநீர் சேமிப்புத் தொட்டி அல்ல. 
மழைநீர் சேமிப்பு  அமைப்பு மட்டுமே.சிங்கப்பூர், டோக்கியோ நகரங்களிலும் ஜெர்மனியிலும்  புத்திசாலித்தனமான மழைநீர் சேமிப்பு முறைகளைக் கையாள்கிறார்கள். கடந்த  தலைமுறையில் நமது பாட்டிமார்கள் நம் வீட்டு முற்றத்தில் அண்டா உள்ளிட்ட  பாத்திரங்களில் மழைநீரைச் சேமித்து வைத்து, அந்தத் தூய்மையான நீரை ஒரு  வாரம் சமையலுக்குப் பயன்படுத்திய அதே பாணிதான். ஆனால் இவர்கள் கட்டடங்களில்  அமைக்கப்பட்ட தொட்டிகளில் மழைநீரைச் சேமித்து வைக்கிறார்கள்.
சிங்கப்பூர்  விமான நிலைய கட்டடத்தின் மேற்பரப்பிலும், சுற்றுப் பகுதியிலும் பெய்யும்  மழையைத் தரைதளத் தொட்டிகளில் சேமித்து வைக்கிறார்கள். இதன் பெரும் பகுதி  கட்டடத்தைப் பராமரிப்பதிலும், கழிவறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மழை  நீர் விமான நிலையத்துக்கு ஒர் ஆண்டுக்குத் தேவைப்படும் தண்ணீரில் மூன்றில்  ஒரு பகுதியைச் சமாளிக்க உதவுகிறது. இதனால் அவர்களுக்கு ஆண்டுக்கு 4 லட்சம்  டாலர் சேமிப்பு.இதே முறை வானுயர் கட்டடங்களிலும் பயன்படுகிறது.  சிங்கப்பூரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் அனைத்திலும் மழைநீர்த்  தொட்டி உள்ளன. அவர்கள் இந்த நீரைக் குடிநீருக்காக ஒரு பகுதியையும், மீதியை  பிற தேவைகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர்.     
ஜெர்மனியில் உள்ள வீடுகள்  மழைநீர்த் தொட்டியை கருவூலம் போலக் காக்கின்றனர். ஏனென்றால், அங்கே  தொழில்துறை மாசு அதிகம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்துக்குக்  கட்டணம் அதிகம். ஆகவே அவர்கள் மழை நீரை வீட்டின் அடியில் பெரிய தொட்டிகளில்  சேமித்து வைத்து, அதைக் குடிக்கவும் சமையலுக்கும் பயன்படுத்துகிறார்கள். சென்னை  மாநகரில், 1,800 சதுர அடி கட்டட மேற்பரப்பு (அல்லது மொட்டைமாடி) உள்ள  வீட்டில் மழைநீர்த் தொட்டியைப் பெரியதாகத் தரைக்குக் கீழே அமைக்க  முடிந்தால், தற்போது பெய்யும் மழையளவுப்படி 58 நாளில் 1,00,800 லிட்டர்  மழைநீரைச் சேமிக்க முடியும். இந்த நீர் தூய்மையானது. 6 நபர்கள் உள்ள ஒரு  குடும்பம் இந்த நீரை ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம். தற்போது  சுத்திகரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் 20 லிட்டர் போத்தல் நீரின் விலை  குறைந்தபட்சம் | 40. அப்படியானால் இந்த மழை நீரில் பாதியைச் சேமிக்க  முடிந்தாலும் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய்  மிச்சப்படுத்த முடியும். 
இலங்கையில் ஊரகப் பகுதிகளிலும் மலைப்பாங்கான  இடங்களில் அமைந்துள்ள வீடுகளுக்கும் இந்த மழைநீர் தொட்டிகள் மூலம்தான்  குடிநீர் கிடைக்கிறது. ஜெர்மன் அரசு இத்தகைய மழைநீர்த் தொட்டிகள் கட்டும்  வீடுகளுக்கு அதன் அளவுக்கு ஏற்ப மானியமும் வழங்குகிறது.ஆனால் நாம்  செய்துகொண்டிருப்பது என்ன? தற்போது வெறுமனே வீடுகளில் அரை மீட்டர் அகலம்  உள்ள சதுரத் தொட்டி அமைத்து, ஒரு மீட்டர் ஆழம் வரை சரளைக் கற்கள், மணல்  போட்டு, சில இடங்களில் 15 மீ ஆழத்துக்குத் துளையிட்டும் வைப்பதால் நிலத்தடி  நீர் பெருகுகிறது, அவ்வளவே. ஆனால், அந்த குடும்பத்துக்குக் கிடைக்கக்கூடிய  குடிநீர் கிடைக்க தற்போதைய மழைநீர் சேகரிப்பு அமைப்பு பயன்படுவதாக இல்லை.ஒவ்வொரு  வீட்டிலும் மழைநீர்த் தொட்டி இருக்குமானால், சென்னை மாநகர மக்களின்  தண்ணீர்த்தேவை கணிசமாக ஈடுகட்டப்படுமே? அரசாங்கம் ஊரக ஏரிகளை நகரத்தின்  குடிநீர்த் தேவைக்காக எடுத்துக் கொண்டுவிட்டது. நகர மக்களையும் உருப்படியாக  மழைநீரைச் சேமித்து வைக்கச் சொல்லித் தரவில்லை. கட்டாயப்படுத்தவில்லை.  இதைப்பற்றி எல்லாம் கவலைப்படவும் இல்லை.கனமழை பெய்துகொண்டே  இருக்கிறது மாநகர வீதிகளிலும், மொட்டை மாடிகளிலும்... நதிநீர்தான் வீணாகக்  கடலில் கலக்கிறது என்றால் மழைநீரும்கூடப் பயன்படுத்தப்படாமல் வீணாகிறது.  வருமானத்தை ஊதாரித்தனமாகச் செலவிட வைப்பதன் மூலம்தான் பொருளாதரம் வளமாக  இருக்கும் என்கிற தவறான தத்துவத்தைப் பரப்புவதுடன் நிறுத்திக் கொண்டு,  மக்களின் அடிப்படைத் தேவையான மழைநீரைச் சேமிப்பதை ஊக்குவிக்க வேண்டும் 
நமது  ஆட்சியாளர்கள்.இனியாவது, விழித்துக்கொள்ளலாமே...




 
 
No comments:
Post a Comment