கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல்லெறியக்கூடாது என்ற சொற்றொடர் பாரதிய ஜனதா கட்சிக்கு இப்போது நன்றாகவே பொருந்தும். மும்பையில் ஆதர்ஷ் வீடுகள் தொடர்பாக முழுவீச்சில் களத்தில் இறங்கி, அந்த மாநில முதல்வர் பதவி விலக வேண்டிய சூழலை உருவாக்கிய பா.ஜ.க.வினருக்கு, தற்போது கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவும் இதே சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பது, மிகவும் தர்மசங்கடமான நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பையில் எத்தகைய முறைகேடு நடைபெற்றதோ அதற்கு இணையான, அதைவிடவும் மிகவும் மோசமான முறைகேடுகள் கர்நாடகத்திலும் நடைபெற்று இருக்கின்றன.முதல்வர் பதவியில் இருப்பவர் தனது அதிகாரத்தைத் தன் சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்தக்கூடாது. அதை மீறுவது பதவிப் பிரமாணத்தை மீறிய குற்றம். ஆனாலும் அதிகாரம் கண்களை மறைக்கிறது. குடும்பத்தை மட்டுமே முன்நிறுத்துகிறது. இதற்கு எந்த மாநிலமும், எந்த முதல்வரும், ஏன், அரசியலில் இருக்கும் பெரும்பான்மையான தலைவர்கள் பலரும் விதிவிலக்கல்ல என்று தெரிகிறது.
எடியூரப்பா, அவரது மகன் பங்குதாரராக உள்ள நிறுவனத்துக்கு விதிகளை மீறி நிலம் ஒதுக்கீடு செய்துள்ளார். பெங்களூர் நகர வளர்ச்சி ஆணையத்தின் "ஜி' பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் தன் மகன், மகள் உறவினர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த முறைகேட்டில் தான் தப்பிக்க முடியாது என்கிற நிலையில், தன் மகள், மகன் மற்றும் உறவினர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை அவர்கள் திருப்பித் தந்துவிடுவார்கள் என்று கூறித் தப்பிக்க முயற்சிக்கிறார் எடியூரப்பா.திருடியதைக் கொடுத்து விடுகிறேன் என்றால், திருடன் அல்ல என்றாகிவிடுமா, என்ன? இப்போது இன்னும் வேகமாக அவர் மீதான குற்றச்சாட்டுகள் அள்ளி வீசப்படுகின்றன. இவர் மீது மட்டுமல்ல, எடியூரப்பாவின் அமைச்சரவையில் மின்துறை அமைச்சராக உள்ள ஷோபா கரந்தலஜே மீதும் நிலமோசடிப் புகார்கள் எழுந்தன. வீட்டுவசதித் துறை அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு, அவரது மகன் (மாநகராட்சிக் கவுன்சிலர்) கட்டா ஜகதீஷ் மீதும் நிலமோசடிப் புகார்கள் எழுந்துள்ளன. இத்தகைய முறைகேடு, கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர்கள் ராமகிருஷ்ண ஹெக்டேயில் தொடங்கி குமாரசாமி வரை இருக்கிறது.
எடியூரப்பாவின் நிலமோசடி ஊழல் மறுக்க முடியாத அளவுக்கு நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பதுதான் தற்போது பா.ஜ.க.வுக்கு இருக்கும் நெருக்கடி. நியாயமாகப் பார்த்தால், எடியூரப்பா தார்மிக அடிப்படையில் தனது பதவியிலிருந்து விலகி இருக்க வேண்டும். அதுதான் அவருக்கு மரியாதை சேர்த்திருக்கும். ஆனால் அதைச் செய்யத் தவறிவிட்டார் எடியூரப்பா. தனது கட்சியினர் ஆட்சி செய்யும் மாநிலத்தில் இப்படியொரு ஊழலை வைத்துக் கொண்டு, நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து ஸ்தம்பிக்கச் செய்யும் பா.ஜ.க.வின் போக்கு தற்போது அனைவரின் விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது.
முதலில் கர்நாடகத்தில் உள்ள ஊழலுக்கு பதில் சொல்லிவிட்டு அடுத்தவர் ஊழலைப் பற்றிப் பேசுங்கள் என்று காங்கிரஸ் சொல்கிற அளவுக்கு ஆகிவிட்டது. ஏனென்றால், காங்கிரஸ் கட்சி யாரெல்லாம் ஊழல் புகாரில் சிக்கினார்களோ அவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து, பதவியிலிருந்து நீக்கிக் கொண்டே வருகிறது என்கிற தார்மிக பலம்தான் காரணம். சசி தரூர், மும்பையில் முந்தைய முதல்வர், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கல்மாடி மற்றும் அவரது நண்பர்கள் என்று அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் பா.ஜ.க.வால் இதுவரை எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்க முடியவில்லை.
தன்னை முதல்வர் பதவியிலிருந்து நீக்கினால் கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சியை உடைப்பேன் என்று அவர் சொல்வதாக மேலிடத்துக்குத் தகவல் பறக்கிறது. தென்னகத்தில் தனது சக்தி கேந்திரம் என்று பா.ஜ.க. கருதும் கர்நாடக அரசை இழக்க அந்தக் கட்சி தயாராக இல்லை. அவரது சவாலைச் சகித்துக்கொண்டு சமாதானம் பேச தில்லிக்கு வரச் சொன்னால் புட்டபர்த்திக்குப் போகிறார் எடியூரப்பா. பா.ஜ.க.வால் ஒன்றுமே செய்ய இயலவில்லை.
ஏற்கெனவே இரண்டு முறை எடியூரப்பாவின் முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்தது. அதை ஒருவழியாகச் சமாளித்து வெளியே வந்த நிலையில் மூன்றாவது ஆபத்தில் சிக்கிக்கொண்டுள்ளார் அவர். ஆட்சியைவிடக் கட்சியின் கௌரவம்தான் முக்கியம் என்று பாஜக கருதுவதாகத் தெரியவில்லை. தனது பதவியைவிட கட்சியின் நன்மதிப்புதான் பெரியதென்று எடியூரப்பாவும் கருதுவதாகத் தெரியவில்லை.
எடியூரப்பா என்ன செய்யப்போகிறார் என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த நில மோசடி என்பது இந்தியா முழுவதிலும் அரசியல்வாதிகளின் தொழிலாகவே ஆகிவிட்டது. அரசு அதிகாரிகள், நீதிபதிகள், ஆட்சிக்கு நெருக்கமான தோழமைக் கட்சித் தலைவர்கள், ஆளும் கட்சிப் பிரமுகர்களின் பினாமிகள், உறவினர்கள், ஏன், அரசுக்குச் சாதகமாக இருக்கும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலருக்கு சிறப்பு ஒதுக்கீடு என்கிற பெயரில் வீட்டுமனைகள் வழங்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
ஓர் அரசு தனிநபருக்கு நிலத்தை வழங்குகிறது என்றால், அது குறித்து அரசு கெசட்டில் வெளியாக வேண்டும். ஆனால் இந்த விவரங்கள் வெளியானாலும்கூட, பலன்பெறும் நபர்கள் யார் என்கிற விவரம் தொடர்புடைய சிலருக்கு மட்டுமே தெரியும் என்பதால், அரசு கெசட்டில் வெளியானாலும்கூட யாருக்கும் தெரியாமலேயே போகிறது. யாரோ ஒரு நபருக்கு 30 ஆண்டுகளுக்குக் குத்தகை என்பதாகவும், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்கிற பெயரிலும் அரசு நிலம் மிகக் குறைந்த விலைக்குக் கைமாறுகிறது. இதைச் செய்யும் அரசியல்வாதிகள் கோடிகோடியாய் லாபம் அடைகிறார்கள்.
இதில் அரசியல்வாதிகளை மிஞ்சும் மாவட்ட ஆட்சியர்களும்கூட இருக்கிறார்கள். முக்கியமான கோடைவாசஸ்தலங்கள் உள்ள பகுதிகளில் எந்தெந்த மாவட்ட ஆட்சியர்களின் பணிக்காலத்தில் யாருக்கெல்லாம் சலுகை விலையில் மனைகள், புறம்போக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டன என்ற புள்ளிவிவரத்தை எடுத்து, விசாரித்தால் இன்னும் பல பூதங்கள் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கிளம்பும்.
லியோ டால்ஸ்டாய் எழுதிய "6 அடி நிலம்' சிறுகதையை இவர்களுக்கு யார் படித்துக் காட்டுவது?
- தினமணி
Machi.. please post that leo talstoy story...
ReplyDeletell try
ReplyDelete