நாம் எல்லோரும் இந்தியர்கள் என்று
சொல்வதை விட, இனி டிஜிட்டல் இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். அந்த
அளவுக்கு இந்தியாவில் டெக்னாலஜியின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.
இன்று இந்தியர்களில் பெரும்பாலானவர்களின் கையிலும் ஸ்மார்ட்போன். இந்த
கையடக்கக் கருவி இணையம் வாயிலாக உலகத்தையே கண்முன் கொண்டு வந்து
நிறுத்திவிடுகிறது என்பதே நிதர்சணமான உண்மை.
இன்றைய நிலையில் தனிநபர் முதல் இந்திய அரசாங்கம் வரை எல்லோரும் டிஜிட்டலாக அப்டேட் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதற்கு மூன்பாகவே தனது பிரசாரத்தை டிஜிட்டலாக ஆரம்பித்தார். ஆட்சியில் அமர்ந்த பிறகும் டிஜிட்டல் என்கிற விஷயத்தில் தன்னையும், தனது செயல்பாடுகளையும் இன்னும் வேகப்படுத்தி வருகிறார். அதில் குறிப்பிடப்படும்படியான விஷயம்தான் டிஜிட்டல் இந்தியா திட்டம்.
இப்படி எண்ணற்ற டிஜிட்டல் விஷயங்களை நமது அரசாங்கம் மேற்கொண்டு வரும் இந்த சமயத்தில், அவர்களின் நடவடிக்கைகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள அரசின் அப்ளிகேஷன்கள் அவசியமாகிறது.
அரசு சார்ந்த வேலைகளை எதுவாக இந்தாலும் நீண்ட வரிசையில் காத்திருந்து அல்லது நீண்ட நாட்கள் பொறுத்திருந்துதான் முடிக்க முடியும் என்கிற நிலையை, பிரதமர் நரேந்திர மோடி மாற்ற முயற்சிக்களை மேற்கொண்டு வருகிறார்.
அரசு துறைச் சார்ந்த சில நிறுவனங்கள் தங்களை டிஜிட்டலாக அப்டேட் செய்து கொண்டு அப்ளிகேஷன்களை வெளியிட்டிருக்கின்றன. ஆனால் அதை நம்மில் எத்தனை பேர் பயன்படுத்துகிறோம் என்பதுதான் இப்போதைய கேள்விக்குறி. இனி அப்படியில்லாமல், நமது ஸ்மார்ட்போன்களுக்குள் இந்த அரசின் அப்ளிகேஷன்களும் இடம்பெற வேண்டும்.
என்னென்ன ஆப்ளிகேஷன்கள் என்பதை இனி பார்க்கலாம்.
மைகவர்ன்மென்ட் (MyGov)
இந்த அப்ளிகேஷனின் மிக முக்கிய நோக்கம் அரசின் திட்டங்களின் இந்திய குடிமக்களை இணைப்பதுதான். இந்த அப்ளிகேஷன் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும் அரசின் நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனைகளையும், கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளலாம்.
மத்திய அரசின் நடவடிக்கைகள் அல்லது மற்ற எந்த துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்தும் இதில் கருத்து மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க முடியும். உதாரணத்துக்கு டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த கருத்து அல்லது ஆலோசனைகளை இதில் பதிவு செய்யலாம். ஒரு செயல் குறித்து விவாதிக்கலாம்.
தற்போதைய நிலையில் இந்த ஆப்ஸை 1,000-5,000 பேர் மட்டுமே டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.
இன்க்ரெடிபில் இந்தியா (Incredible India )!
நமது நாட்டின் சுற்றுலாத் தளங்களை மேம்படுத்த சுற்றுலாத் துறை, நடவடிக்கைகள் எடுத்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. வெளிநாட்டினர் நம் நாட்டில் மெற்கொள்ளும் சுற்றுலாவின் மூலம் நம் நாட்டிற்கு வருமானம் அதிகரித்து வருவதால், சுற்றுலாத் துறை கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறது.
இந்த துறை, சுற்றுலாவுக்குச் செல்லும் உள்நாட்டு பயணிகள் மற்றும் வெளிநாட்டிலிருந்து சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் பயன்பெரும் வகையில் Incredible !ndia என்கிற அப்ளிகேஷனை வெளியிட்டிருக்கிறது. இந்த அப்ளிகேஷன் மூலம் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா சேவைகளை வழங்குபவர்களின் விவரங்கள், நாடு முழுவதிலுமுள்ள சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள், டிராவல் எஜென்ட்கள் ஏமாற்றுவேலை குறித்த எச்சரிக்கை போன்ற விவரங்களை வழங்குகிறது.
தற்போதைய நிலையில் இந்த அப்ளிகேஷனை 5,000- 10,000 பேர் டவுண்லோடு செய்து பயன்படுத்தி வருகிறார்கள். பயன்படுத்துபவர்களில் பலர் நன்றாக இருக்கிறது என்று சொன்னாலும், இன்னும் அப்கிரேடு செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஸ்வச் பாரத் அபியான் (Swachh Bharat Abhiyaan)!
கடந்த 2014-ம் வருடம் அக்டோபர் 2-ம் தேதி ஸ்வச் பாரத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார். நம் நாட்டின் சுற்றுச்சூழல் சுத்தமாகவேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த திட்டத்தின் கீழ் இப்போது ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அப்ளிகேஷன் மூலம், கணக்கு ஆரம்பித்து குறிப்பிட்ட ஏரியாவை சுத்தம் செய்ய சவால்களை ஒருவருக்கொருவர் விட்டுக் கொள்ளலாம்.
இந்த ஆப்ளிகேஷனில் ஏரியா தூய்மைக்காக அவரவர்களின் நண்பர்களை அழைக்கவும் முடியும். சுத்தம் செய்ய இருக்கும் ஏரியாவை சுத்தம் செய்வதற்கு முன்பாக புகைப்படம் எடுத்தும், சுத்தம் செய்த பிறகு புகைப்படம் எடுத்தும் இதில் பதிவு செய்யலாம். இந்த ஆப்ஸ் மூலம் ஒரே நேரத்தில் எங்கெல்லாம் ஸ்வச் பாரத் திட்டம் நடைபெறுகிறது என்பதை இணையம் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
சுத்தம் என்பதே நம் நாட்டு மக்களுக்கு பிடிக்காத விஷயமாக இருக்கும் போல, இதுவரை 500-1,000 பேர் மட்டுமே இந்த ஆப்ஸ்களை டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகிறார்கள் என்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்.
நரேந்திர மோடி (Narendra Modi)!
நரேந்திர மோடி என்கிற பெயரிலேயே இந்த அப்ளிகேஷன் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆண்டுராய்டு பயனாளர்கள் இந்த ஆப்ஸை டவுண்லோடு செய்து கொள்வதன் மூலம், பிரதமரின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும்.
பிரதமரின் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தொடர் குறித்த விவரங்கள், பிரதமர் வானொலியில் பேசும் உரையாடல்கள் (நேரடி ஒலிப்பதிவு உள்பட), நாட்டு நடப்புகள் குறித்த அரசின் வாக்கெடுப்பு விவரங்கள் (இந்த அப்ளிகேஷன் மூலம் அந்த வாக்கெடுப்பில் பங்குபெறவும் முடியும்) ஆகிய அனைத்து விவரங்களையும் அவ்வப்போது தெரிந்துகொள்ள முடியும்.
தற்போதைய நிலையில் இந்த அப்ளிகேஷனை 1,00,000-5,00,000 பேர் டவுண்லோடு செய்து பயன்படுத்தி வருகிறார்கள். பயன்படுத்தி வருபவர்களில் அதிகமான பேர், இந்த ஆப்ஸின் செயல்பாடுகளுக்கு ஐந்து நட்சத்திர புள்ளிகளை வழங்கியிருக்கிறார்கள்.
வெளிவிவகார பயன்பாட்டு அமைச்சகம் (MEAIndia )!
வெளிவிவகார பயன்பாட்டு அமைச்சகம் MEAindia என்கிற பெயரில் அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்த அப்ளிகேஷன் மூலம் அமைச்சகத்தின் சேவைகள் குறித்தும், அதன் நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்துகொள்ள முடியும்.
அதுமட்டுமில்லாமல், அமைச்சகத்திலிருந்து வெளியிடும் பத்திரிக்கை விவர வெளியீடுகள் (press releases), லோக்சபா நடவடிக்கைகள், டெண்டர் அறிவிப்புகள் மற்றும் பாஸ்போர்ட் சேவைகள் என அனைத்து விவரங்களையும் அவ்வப்போது தெரிந்துகொள்ள முடியும். இந்த ஆப்ஸில் தேவையான விவரங்களை பயனாளர்கள் எடுத்து பயன்படுத்திக் கொள்ளும்படியாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது.
தற்போதைய நிலையில் இந்த அப்ளிகேஷனை 10,000-50,000 பேர் டவுண்லோடு செய்து பயன்படுத்தி வருகிறார்கள். பயன்படுத்தி வருபவர்களில் அதிகமான பேர், இந்த ஆப்ஸின் செயல்பாடுகளுக்கு ஐந்து நட்சத்திர புள்ளிகளை வழங்கியிருக்கிறார்கள்.மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து அப்ளிகேஷன்களும் கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது.
இந்திய மக்களின் வேலையை எளிமைப் படுத்த இது போன்ற எண்ணற்ற ஆப்ஸ்களை மத்திய அரசாங்கம் மட்டுமல்லாமல், மாநில அரசாங்கங்களும் உருவாக்கி வெளியிட்டால் நன்றாக இருக்கும்தானே!
-செ.கார்த்திகேயன்
No comments:
Post a Comment