Search This Blog

Saturday, July 04, 2015

தோனி - கேப்டன் குழப்பம்!



2015 உலகக்கோப்பைக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது தோனி டெஸ்ட் அணியில் இருந்து திடீரென ஓய்வுபெற்று பாதியில் ஆடுவதை நிறுத்தினார். அதற்குக் காரணம் அவரது விருப்பத்துக்கு எதிராக பந்துவீச்சு மற்றும் களத் தடுப்பு பயிற்சியாளர்களை நீக்கி, ரவி சாஸ்திரியை அணி இயக்குநராக கிரிக்கெட் வாரியம் நியமித்ததுதான். ஒரு பக்கம் தோனியின் காட்ஃபாதரான ஸ்ரீனிவாசன் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை இழந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டில் தோனியும் லேசாய் சிக்கி இருந்தார்.

இன்னொரு பக்கம் அணிக்குள் விராட் கோலி-சாஸ்திரி அணி வலுவாகிவிட தோனி திக்குமுக்காடிப் போனார். இந்தக் கட்டத்தில் தேர்வாளர்கள் தோனியிடம் அவர் உலகக்கோப்பை முடிந்ததும் ஒருநாள் அணியில் இருந்தும் ஓய்வுபெற வேண்டும் என்று தீர்மானமாகக் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அம்முடிவை தள்ளிப்போட்டபடியே வருகின்றனர். இந்தியா உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடி அரையிறுதிவரை வந்து தோற்றது. ஆனால் அதற்குப்பின் அடுத்த உலகக்கோப்பை வரை இந்தியாவுக்கு தோனி தலைமை தாங்குவாரா என்பது தெளிவில்லை.

இந்தக் குழப்பங்கள் காரணமாய் சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச ஒருநாள் தொடரை இந்திய அணி கேவலமாய் ஆடி இழந்தது. இதற்கு அணியின் ஒற்றுமையின்மையே காரணம் எனக் கூறப்பட்டது. கோலி ஒரு பக்கம் தோனிக்கு எதிராக பூடகமான குற்றச்சாட்டுகளை மீடியாவில் வைத்தார். தோனியின் முன்னாள் பயிற்சியாளர் “இந்திய அணிக்குள் தோனிக்கு எதிராக் குழு அரசியல் நடக்கிறது” என்றார்.

தோனியும் “அணித் தோல்விக்குப் பொறுப்பேற்று தான் பதவி விலகத் தயார்” என்றார். ஒரு பழைய படத்தில் என்.எஸ் கிருஷ்ணனின் வீட்டுக்கு யாரோ ஒரு குழந்தை வந்து அவரை அப்பா என்று அழைக்கும். அவர் குழம்பிக் கொண்டிருக்கையில் நிஜ அப்பா வந்துவிடுவார். இருவரையும் மாறி மாறி பார்த்த குழந்தை சொல்லும்: “ஹை எனக்கு ரெண்டு அப்பா.”

இப்போது இந்திய அணி வீரர்களும் இவ்வாறே தமக்கு யார்தான் தலைவர் எனத் தெரியாமல் குழம்புகிறார்கள். விராட் கோலியை ஆதரித்தால் டெஸ்ட் அணியில் இடம் பெறலாம். தோனி இன்னும் ஒன்றிரண்டு வருடங்களே ஒருநாள் அணியின் தலைவராக இருப்பார் என்பதால் அவரை ஆதரித்தால் அக்காலம்வரை அணியில் இடம் உறுதி. அதனால் அவர்கள் இருவரையும் ஆதரிக்கிறார்கள். இரு குழுவிலும் இருக்கிறார்கள்.

ஒரு பேட்டியில் ரஹானே, கோலியின் தலைமையை மிகவும் புகழ்ந்து பேசிவிட்டு கூடுதலாக “தோனியும் நல்ல கேப்டன்தான்” என்றார். அஷ்வின் ஒரு பேட்டியில் “நான் தோனிக்காக உயிரையும் கொடுப்பேன்” என்று கூறிவிட்டு, “கோலிக்காகவும்தான் கொடுப்பேன்” என்கிறார். இப்படி இப்போது இந்திய அணி வீரர்களுக்கு ரெண்டு அப்பா.

மீடியாவிலும் ரசிகர்கள் மத்தியிலும் தோனி - கோலி இடையே மோதல், பிணக்கு என்று செய்திகள் பரவலாகப் பேசப்பட ஆரம்பித்தவுடன், அப்படி இல்லை என்று மறுப்புகளும் வர ஆரம்பித்திருக்கின்றன. ரவி சாஸ்திரி, “தோனி, விராட் கோலி இடையே எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை,” என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஆனால், அடுத்து நடைபெற இருக்கிற ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தின்போது ஒரு புது அணி தோனியின் தலைமையில் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. வழக்கமான குழப்பங்களின் தொடர்ச்சியாக இப்போது ரஹானே தலைவராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். ரஹானேவுக்கு ஒருநாள் ஆட்டத்தில் சரியாய் மட்டையாட வருவதில்லை எனக் கூறி தோனி அவரை அணியில் இருந்து சமீபத்தில் நீக்கி இருந்தார்.

ஒரே வாரத்தில் ரஹானே ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்குத் தலைவராக்கப்பட்டவுடன், தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பட்டேலிடம் மீடியா, தோனியின் விமர்சனம் பற்றி கேள்வி கேட்டது. அதற்குப் பதிலளிக்க மறுத்த அவர் “ரஹானேவுக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு” என்று பொதுவாகக் கூறினார். ஆனால் என்னதான் அவர் இத்தொடரில் சிறப்பாய் ஆடினாலும் ஆறு மாதங்களுக்குப் பிறகு நடக்கப்போகும் ஒருநாள் தொடரில் தோனியின் தலைமையிலான இந்திய அணியில் ரஹானே இடம் பெறுவது சிரமம்தான். அணியில் இடம் ஸ்திரமில் லாதவர் எப்படி அணித்தலைவராக உறுதியுடன் செயல்பட முடியும்?

வேறு சில அடிப்படையான கேள்விகளும் எழுகின்றன:

1) தோனிக்கு அடுத்த ஆறு மாதங்கள் ஓய்வுள்ள சந்தர்ப்பத்தில் அவர் இத்தொடரில் பங்கேற்றிருக்கலாமே. அவர் ஏன் ஆடவில்லை?

2) தோனியும் கோலியும் ஓய்வுகொள்ளும் பட்சத்தில் ரோஹித் ஷர்மாவை தலைவர் ஆக்கியிருக்கலாமே? அவர் கோலிக்குப் போட்டியாக வந்து விடக்கூடாதே என்கிற பதற்றமா?

3) ஏன் இந்திய அணிக்கு இன்னும் பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை? ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக்குவதற்கு தோனி எதிர்ப்பு தெரிவிக்கிறாரா?

4) ஜிம்பாப்வேவுக்கு செல்லும் இந்திய அணியில் அனுபவம் குறைந்த வீரர்கள் அதிகம் என்பதால் ஒரு பயிற்சியாளர் அவசியம் எனும்போது, ஏன் பயிற்சியாளர் இல்லாமல் அணி செல்கிறது?

5) தேர்வு செய்யப்பட்டுள்ள மாற்று அணியின் சராசரி வயது 30. இவ்வீரர்கள் அடுத்த உலகக் கோப்பையின் போது 34 வயதை எட்டி விடுவார்கள். 35 வயதான ஹர்பஜனும் அணியில் இருக்கிறார். இந்த வயதான வீரர்கள் தான் இந்தியாவின் எதிர் காலமா?

இப்படி பல இடியாப்பச் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி! நடக்கப் போவது என்ன? பொறுத் திருந்து பார்ப்போம்.

ஆர். அபிலாஷ்

No comments:

Post a Comment