சமீபத்தில் நடந்துமுடிந்த இலங்கை சுற்றுப் பயணத்தின்போது இறுதி டெஸ்டில் இஷாந்த் ஷர்மா விக்கெட் வீழ்த்தியபின் மிகவும் உணர்ச்சிகரமான வகையில் தன் தலையை கையால் அடித்துக் கொண்டதால் ஐ.சி.சி.யால் ஒரு டெஸ்ட் ஆட்டத்துக்குத் தடைசெய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணி என்ன?
இஷாந்தின் எதிர்வினை டி.வி.யில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டது. இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் எதிரணித் தலைவர் மேத்யூஸ் ஒரு புது உத்தியை பயன்படுத்தினார். பந்து சற்றே பழசானது, அது மட்டையாளர்களுக்கு ஆட எளிதானது. இதைத் தடுப்பதற்கும் எதிரணியினரை காயப்படுத்துவதற்கும் அவர் வேகவீச்சாளர்களை மட்டையாளனைச் சுற்றி வந்து (Round the wicket) உடம்பில் படும்படியாய் எல்லா பந்துகளையும் உயரப் பந்துகளாய் வீச வைத்தார். இது ஆபத்தானது மட்டுமல்ல. எதிர்மறையான ஆட்டமும்கூட. கிரிக்கெட்டில் இப்படியான பந்து வீச்சுக்கு Bodyline பந்து வீச்சு என்று பெயர். உண்மையில் இதுதான் கிரிக்கெட்டின் கண்ணியத்துக்கு (Spirit of the game) எதிரான ஒன்று.
இப்படியான ஆபத்தான உத்தி பயன்படுத்தப்பட்டால் நடுவர்கள் அதைத் தடை செய்யலாம் என ஒரு விதிமுறை உள்ளது. ஆனால் இம்முறை நடுவர்கள் தம் கடமையில் இருந்து தவறினார்கள்.
இந்த ஆட்டத்தில் இஷாந்த் வீசிய உயரப்பந்தால் அப்போது மட்டையாடிக் கொண்டிருந்த இலங்கை வீச்சாளர் தமிக்க பிரசாதின் கையில் காயம்பட்டது. பிரசாத் பந்து வீசும் போது இஷாந்த் மட்டையாட வந்தார். அப்போது பிரசாத் அனைத்து பந்துகளையும் உயரப்பந்துகளாய் வீசியது மட்டுமில்லாமல் ஒவ்வொரு முறையும் முறைக்கவும் செய்தார். அது மட்டுமில்லாமல் இஷாந்தைத் தொடர்ந்து அச்சுறுத்து வதற்காய் ஓவரை நீட்டிக்கும் பொருட்டு அவர் வேண்டுமென்றே நோ பால் போட்டார். இதை நடுவர் கண்டித்தார்.
ஒரு கட்டத்தில் பொறுக்கமுடியாத இஷாந்த் பிரசாதிடம் சென்று தன் தலையில் நேரடியாய் பந்து வீசும்படி கேட்டார். இதை அடுத்து தினேஷ் சந்திமல் ஓடிவந்து இஷாந்திடம் வம்புக்கிழுத்தார். அவர் வேண்டுமென்றே இஷாந்தை இடித்தபடி கடந்தார். அது மட்டுமல்ல, இஷாந்த் அவுட் ஆகி வெளியேறியதும் அவரைத் தொடர்ந்து பிரசாத் பின்னாலே ஓடினார். டிரெஸ்ஸிங் ரூமின் அருகே அவர் இஷாந்தைச் சந்தித்து மோதலைத் தொடர முயல இரு அணி நிர்வாகிகளும் தலையிட்டு சமாதானப்படுத்தினர்.
இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியதும் மிகுந்த கோபத்துடன் பந்து வீச வந்த இஷாந்த் தன் களைப்பையும் உடல்வலியையும் மறந்து பழிவாங்கும் வெறியும் உச்சவேகத்தில் வீசினார். தன் உத்தி சொதப்பியதை உணர்ந்த மேத்யூஸ் மட்டையாட வந்ததும் இஷாந்திடம் கனிவாகப் பேசி இறுக்கத்தைத் தளர்த்தினார். இஷாந்தின் பந்து வீச்சில் இருந்த வெறித்தனமும் மூர்க்கமும் குறைந்து போயிற்று. ஆனால் அடுத்த நாளே இஷாந்த் ஒரு டெஸ்ட் ஆடத் தடை செய்யப்பட்டார். அவரைத் தூண்டிய பிரசாத்தும் நேரடியாய் உடலில் மோதிய சந்திமலும் சொற்ப தண்டனைகளுடன் தப்பித்தனர்.
இப்பிரச்சனைக்கு மூன்று தீர்வுகள். ஒன்று இலங்கைப் பயன்படுத்திய பாடிலைன் பந்து வீச்சு தடைசெய்யப்பட வேண்டும். இரண்டு, கோபமாய் எதிர்வினையாற்றும் ஒரு வீரரைத் தண்டிக்கும்முன் அவரை அவ்வாறு தூண்டியவர்களையும் அதே போல் தண்டிக்க வேண்டும். மூன்றாவது இது போன்ற எதிரணித் தந்திரங்களை எப்படி கையாள்வது என வீரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆர்.அபிலாஷ்
No comments:
Post a Comment