குமாரன்’ என்றால் ‘பிள்ளை’ என்றே அர்த்தம். பாரததேசம் முழுவதிலும் குமாரன், குமாரஸ்வாமி என்றால் பார்வதி-பரமேசுவரர்களின்
இளையபிள்ளையாகிய சுப்பிரமணியரையே குறிப்பிடும். தமிழிலும் ‘குமரக் கடவுள்’ என்கிறோம். ஆனால், அவரைக் ‘குமரனார்’ என்பதில்லை;
‘குமரன்’ என்றுதான் சொல்வார்கள். மூத்த பிள்ளைக்கே மரியாதை தோன்றப் ‘பிள்ளையார்’ என்று பெயர் தந்திருக்கிறோம்.
முதல் பிள்ளை இவர்; குழந்தை ஸ்வாமி. ஆனாலும் இவரே எல்லாவற்றுக்கும் ஆதியில் இருந்தவர். பிரணவம்தான் எல்லாவற்றுக்கும் முதல்.
பிரணவத்திலிருந்துதான் சகல பிரவஞ்சமும் ஜீவராசிகளும் தோன்றின. அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார். அவரது ஆனைமுகம்,
வளைந்த தும்பிக்கை இவற்றைச் சேர்த்துப் பார்த்தால் பிரணவத்தின் வடிவமாகவே தோன்றும்.
குழந்தையாக இருந்துகொண்டே ஆதிமுதலின் தோற்றமாக இருக்கிற பிள்ளையார் குழந்தைபோல் தோன்றினாலும், பக்தர்களை ஒரேயடியாகத்
கைதூக்கி உயர்த்தி விடுவதிலும் முதல்வராக இருக்கிறார். ஔவைப் பாட்டி ஒருத்தியின் உதாரணமே போதும். ஔவையார் பெரிய கணபதி
உபாஸகி. பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப் புருவமத்தியில் தியானித்துக்கொண்டு, ஔவையார் யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கியதான
‘விநாயகர் அகவலை’ப் பாடியிருக்கிறாள். அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும்.
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
No comments:
Post a Comment