Search This Blog

Saturday, September 19, 2015

‘கபாலி’

 
‘அரசியலில் ரஜினி இல்லை, ஆனால் அரசியல், ரஜினி இல்லாமல் இல்லை’ என்று பெருமைபொங்கப் பேசுவார்கள் ரஜினி ரசிகர்கள். ரஜினி எதைப் பேசினாலும், செய்தாலும் அதைத் தமக்கேற்ப வளைத்து அர்த்தம் கற்பிக்க அரசியல் தலைவர்கள் முயற்சி செய்வார்கள் என்பது கடந்தகால வரலாறு. சமீபத்தில் இரண்டு விழாக்களில் ரஜினி கலந்து கொண்டு பேசிய பேச்சுக்கள் அதிரடி ரகம்!
 
முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் 90வது பிறந்தநாள் விழாவில் மிக இயல்பாகப் பேசினார் ரஜினி. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த திரைப் படங்களை உருவாக்கிய ஆர்.எம்.வீ.யின் தயாரிப்பில் தமக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததைப் பெருமை பொங்கப் பேசியவர், அவரது அசாத்திய திரைக்கதை திறமையை மெச்சினார். “ ‘பாட்ஷா’ படத்தில் அப்பாத்திரம் எப்போது வெளிப்பட வேண்டும் என்பதைப் பற்றி, ஆர்.எம்.வீ. சொன்ன ஆலோசனையே அதன் வேகத்துக்குக் காரணமாயிற்று. ‘கபாலி’, ‘பாட்ஷா’வை மிஞ்சுமா என்று கேட்கிறார்கள். ஒரு ‘பாட்ஷா’தான். ‘கபாலி’ அதன் அருகேகூட வர முடியாது” என்றார் ரஜினி.

இந்தக் கூட்டத்தில்தான், தான் மருத்துவமனையில் படுத்திருந்தபோது அடைந்த வேதனையை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார் ரஜினி. “ஆர்.எம்.வீ. மருத்துவமனைக்கே சென்றதில்லை என்பார்கள். அது எவ்வளவு பெரிய பாக்கியம். நான் மருத்துவமனைக்குப் போனவன், அதன் சிரமங்கள் அறிந்தவன்,” என்றபோது, அதன் நகைச்சுவைக்குப் பின்னே இருந்த வலியை எல்லோரும் புரிந்துகொள்ள முடிந்தது. ஐம்பது வயதுக்குப் பிறகு அனைவரும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது ரஜினி அட்வைஸ்.

அடுத்த கூட்டம்தான் இன்னும் சுவாரசியமானது. நீதிபதி பி.எஸ்.கைலாசத்தின் நூற்றாண்டு விழாவில் பேசிய ரஜினி, “அரசியல்வாதிங்க கெட்டுப்போனா கூட நாடு உருப்படும். ஜனங்க கெட்டுப் போனாகூட நாடு உருப்படும். ஆனா நீதிமன்றங்கள் கெட்டுப் போனா மட்டும் நாடு உருப்படாது,” என்று பேசியிருந்தார். எளிமையான, மனத்தைத் தொடும் இந்தப் பேச்சுதான் விதவிதமான அர்த்தங்களுக்கு ஆளாகியிருக்கிறது.

“அவருடைய இந்தப் பேச்சு ஆழமான, அர்த்தச் செறிவான பேச்சு மட்டுமல்லாமல், இன்றைய சூழலில் மிகவும் பொருத்தமான பேச்சும் ஆகும்,” என்று கருணாநிதி தமது கேள்வி பதிலில் குறிப்பிட்டு நீதிமன்றங்கள் பற்றிய தன்னுடைய கருத் தையும் சேர்த்துப் பதிவு செய்தார். மற்றொருபுறம் டாக்டர் ராமதாஸ், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கோடு ரஜினி பேச்சைத் தொடர்புபடுத்தியே தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்தார்.

ஒவ்வொரு முறை சட்டசபைத் தேர்தல் நெருங்கும்போதும் ரஜினியின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வியும் அவரது ரசிகர்கள் அதன்படியே வாக்களிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவிவருகிறது. ஆனால், 1996க்குப் பின்னர் அவருடைய கருத்து வெளிப்படையாக இருந்ததில்லை. மேலும் ‘இன்னாருக்கு வோட்டு போடுங்கள்’ என்று அவர் நேரடியாக கைகாட்டியதும் இல்லை.

ரஜினியை விமர்சிக்கும் அறிவுஜீவிக் குழு ஒன்று உண்டு. அவரது ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும் போதும், அதன் பப்ளிசிட்டிக்காக, ரஜினி ஏதேனும் பேசுவார். அதையொட்டி எழும் ஆதரவு - எதிர்ப்பலைகளில், படம் தப்பித்துக்கொள்ளும் என்பது இவர்களது தப்புக்கணக்கு. இப்போது ரஜினி வெளியே வந்து பேசத் தொடங்கியிருப்பதும் தமது அடுத்த படமான ‘கபாலி’க்கான புரமோஷனுக்குத்தான் என்பது இவர்களது கருத்து. ரஜினியின் வெற்றியை முனை மழுங்கச் செய்யச் சொல்லப்படும் நொண்டிச் சாக்கு இது என்பது ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.
இன்றைக்கும் தியேட்டர் முதலாளிகள் மத்தியில் ரஜினி படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. அதுவும் ‘மெட்ராஸ்’ புகழ் பா.ரஞ்சித் இயக்கம், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பு என்றவுடன் ‘கபாலி’ யின் மார்க்கெட் வேல்யு பன்மடங்குக் கூடிவிட்டது.

இந்நிலையில் எதிர்த்தரப்பு விமர்சனங்கள், வளைத்தல்களைத் தாண்டி, ரஜினி ஆத்மார்த்தமாகச் சொல்ல விரும்பிய விஷயங்கள் காணாமலேயே போய்விட்டன. ஆர்.எம்.வீ. போன்ற மூத்த சினிமா தயாரிப்பாளர்களைக் கொண்டாடுவது மிக முக்கியம் என்பதை உணர்ந்தே ரஜினி அன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கக் கூடும். இன்றைக்குப் பெயர் சொல்லத்தக்க வெற்றிகர மான தயாரிப்பாளர்கள் என்ற குழு காணாமலே போய்விட்ட நிலை. தயாரிப்பாளர்களுக்கு இருக்க வேண்டிய கூர்ந்த மதிநுட்பம், கதைப் பற்றி, காட்சிகளைப் பற்றிய புரிதல், மக்கள் பல்ஸை உணர்ந்திருப்பது ஆகியவையே ரஜினி பேச்சின் சாரம்.

அதேபோல், நீதித்துறையின் நேர்மை குறித்த சாதாரண மக்களின் நம்பிக்கையே ரஜினி வார்த்தைகளில் வெளிப்பட்டது. எந்த நிறுவனம் பழுதுபட்டாலும் தாங்கிக்கொள்ளக்கூடிய மக்கள், நீதித்துறையின் சரிவுகளை ஏற்பதில்லை.

பொதுவாக ரஜினி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. கலந்துகொள்ளும் சந்தர்ப்பங்களில் பளிச்சென்று பேசத் தவறுவதில்லை. அவர் பேசிவிட்டு போன பின்னர் மற்றவர்கள் அதைப் பற்றிக் கொள்வார்கள். மேலும் விவாதிப்பார்கள். இந்த முறையும் அதுதான் நடைபெற்றது. பல்வேறு தொலைக்காட்சிகளும் சமூக ஊடகங்களும் கடந்த சில நாட்களாக ரஜினியின் பேச்சை அலசித் தீர்த்தன.

அவர் வாய்ஸ் எடுபட்டுக்கொண்டே இருப்பதின் மர்மம், மக்கள் விரும்பும் சாய்ஸ்களையே அவர் எடுத்துப் பேசுவதால்தானோ!

துளசி
 

No comments:

Post a Comment